Subscribe

Thamizhbooks ad

அத்தியாயம் 29: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

 

 

 

பெண் விடுதலைக்கு அடிப்படையான தேவைகள்

பெண்ணடிமை முறை தொடர்வதற்கான அடிப்படையான காரணங்கள் வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஆணாதிக்க முறையில் அடங்கி இருக்கின்றன. வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஒரு பிரத்யேக ஏற்பாடாகப்ச் பெண்ணடிமை முறை இருக்கிறது.

1.வர்க்க சமூகத்தின் அடிப்படைத் தேவையான வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்காக, கணவன் என்ற ஆணின் சொத்தாக பெண் மாற்றப்பட்டிருக்கிறாள்.

2.தான் திருமணம் செய்துகொண்ட ஆணிற்காக அவனுடைய வாரிசுகளைப் பெற்றுத்தரும் இயந்திரமாகப் பெண் செயல்பட வேண்டியிருக்கிறது.

ஒருதார மணமுறை, வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கான குழந்தைப்பேறு, குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப உறுப்பினர்கள் பராமரிப்பு, வீட்டு வேலை, வீட்டு வேலைகளைத் தாண்டி சமூக உற்பத்தியில் பங்கேற்பது, சமூக உற்பத்தியில் ஈடுபட்டாலும் தொழிலாளர் என்ற முழுமையான அங்கீராமின்றி சுரண்டப்படுவது, அரசியலில், சமூகத்திற்கான கொள்கைகள் வடிவமைப்பில் பங்கேற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது -இவை எல்லாம் வர்க்க சமூகத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த ஏற்பாடுகள் எல்லாமே தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட வர்க்க சமூகத்தின் தேவையாக இருக்கின்றன.

எனவே, பெண்ணடிமைத்தனம் என்பது நிலவுகிற பொருளாதார அமைப்புக்குத் தொடர்பில்லாத ஒரு சுயேச்சையான முறை கிடையாது. இதை முதலில் உணராமல் பெண்களின் நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரவே முடியாது.

‘பெண்ணடிமைத்தனம் என்பது ஆணாதிக்க முறைக்கு அடிப்படையானது; இந்த ஆணாதிக்க முறை வர்க்க சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு அவசியமானது’ என்பதை உணர வேண்டும். இந்தப் புரிதல்தான் பெண் விடுதலைக்கான பாதையை உணர்வதில் முதல்படி.

“ஒருதார மணமுறை, அடிமைமுறையுடனும், தனிச்சொத்துடனும் சேர்ந்தாற் போலவே ஒரு சகாப்தத்தைத் துவக்கி வைத்தது; அந்தச் சகாப்தத்தில் ஒவ்வொரு முன்னேற்றமும், ஒப்பீட்டளவில் பின்னடைவாகவும் இருக்கிறது. ஒரு குழுவின் துன்பத்தையும், அடக்குமுறையையும் கொண்டே இன்னொரு குழுவின் நலமும் வளர்ச்சியும் பெறப்படுகின்றன. அந்த சகாப்தம் இன்று வரை நீடிக்கிறது” என்று ஏங்கெல்ஸ், ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

பெண்ணடிமைத்தனத்தால் குடும்பத்திலும், சமூகத்திற்கும் தேவையான குடும்ப/சமூக உறுப்பினர்கள் பராமரிப்பு ஜோராக நடக்கிறது. எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் வீட்டளவில் எஜமானர்களாக செயல்பட்டுப் பெண்களை அடக்கி, ஒடுக்கி பணிவிடைகளைப் பெற முடிகிறது.
வர்க்க சமூகத்தில் கலாச்சார ரீதியாக சலுகைகள் பெற்றவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். வீட்டளவில் பெண்கள் எவ்வளவுதான் மாடாய் உழைத்தாலும் அவர்களுடைய குடும்பத்திற்கு சொத்திருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை மறுக்கப்படும். இதுதான் வர்க்க சமுதாயத்தின் அடிப்படை அலகாக/கூறாக இருக்கும் குடும்பத்தின் கட்டமைப்பு.

வீட்டுக்கு வெளியிலான சமூகத்திலோ, சொத்து உடைய மனிதர்கள்- ‘உழைத்தால்தான் கஞ்சி’ என்ற நிலையில் இருக்கும் சொத்தில்லாத மனிதர்கள் – என்ற பிரிவினை இருக்கிறது. சொத்துடைய வர்க்கம் உழைக்காமல், சொத்தில்லாத உழைக்கும் வர்க்கத்தை காலந்தோறும் சுரண்டி, வஞ்சித்துப் பிழைப்பு நடத்துகிறது.

சமூகத்தின் பாட்டாளி மக்கள் அனைவரும் உழைத்து சமூகத்தின் சொத்துகளை/வளங்களை உருவாக்குகிறார்கள். உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உழைப்பின் பயனான சொத்துகள், வளங்கள், உற்பத்திக் கருவிகள், உபரி அனைத்தும் ஒரு சில தனிநபர்களின் கைகளில், தனிநபர் சொத்துகளாகக் குவிக்கப்பட்டிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக வர்க்க சமூகத்தில் நிலவும் சூழல், வர்க்க சமூகத்தின் அடிப்படைக் கூறாக இருக்கக்கூடிய குடும்பத்தின் சூழல்- இரண்டிலும் சில ஒற்றுமைகளைக் காண முடியும். ‘சமூகத்தில் நிலவும் முரண்பாடுகள் அனைத்தையும் நவீன காலக் குடும்பத்தில் சிறிய அளவில் காணமுடிகிறது’ என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

“நவீன காலக் குடும்பம் என்பது, அடிமை முறையை மட்டுமின்றி, பண்ணை அடிமை முறையையும் கரு அளவில் தன்னுள் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே அது விவசாய வேலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்குள்ளும், சமுதாயத்தின் அரசுகளுக்குள்ளும் விரிவடைந்த முரண்பாடுகள் அனைத்தையும் நவீன குடும்பம் தன்னுள் சிறிய வடிவத்தில் கொண்டிருக்கிறது” என்பது மார்க்ஸின் கருத்த்தை ஏங்கெல்ஸ் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு’ நூலில் பதிவுசெய்கிறார்.

பெண்ணடிமை முறை தகர்க்க மார்க்சியம் காட்டும் வழி

பெண்ணடிமை முறை தோன்றுவதற்கு அடிப்படைக் காரணியாக இருந்தது வர்க்க சமூகத்தின் தோற்றம் என்பதைத் தெளிவாகப் பார்த்துவிட்டோம். நவீன சமூகம் என்று வர்ணிக்கப்படுகிற இன்றைய சமூகத்திலும் பெண்ணடிமைத்தனம் தொடர்வதற்கான அடிப்படையான காரணம்-இன்றைக்கும் வர்க்க சமூக முறை தொடர்வதுதான். எனவே, வர்க்க சமூக முறையைத் தகர்ப்பதே பெண்ணடிமைத்தன முறையைத் தகர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டிய மிக அடிப்படையான காரியம்.

தனியுடைமை அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிற வர்க்க சமூகத்தை நொறுக்கித் தகர்த்திடாமல், வர்க்கங்கள் அற்ற புதிய பொதுவுடைமைச் சமூகத்தைக் கட்டமைக்காமல், வெறும் பெண்ணடிமைத்தனத்தை மட்டும் எந்த ஒரு சக்தியாலும் தனித்து ஒழித்துவிட முடியாது.

வர்க்க சமூக முறையைத் தகர்ப்பதுதான், மனிதரை மனிதர் சுரண்டும் முறையை, ஒடுக்கும் முறையை ஒழிப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் வர்க்கங்கள் என்ற பிரிவினையே இல்லாமல் போனால்தான், அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற நிலையை சமுதாயம் எட்ட முடியும்.

இந்த நிலையை எட்டுவதற்கு, தனி மனிதர்கள் சொத்துகளைப் பெற்றிருப்பது என்ற நிலையை – அதாவது, தனியுடைமையை ஒழித்திட வேண்டும். இதுதான் அடிப்படை. ஏனெனில், வர்க்க சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக தனியுடைமை இருக்கிறது.
சுரண்டலுக்கு அடிப்படையான தனியுடைமை முறையை ஒழித்து, உற்பத்திச் சாதனங்கள் எனப்படும் தொழிற்சாலைகள், உற்பத்தியகங்கள், நிலம் அனைத்துத்தையும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பொதுச்சொத்தாக, சமூகத்தின் பொது-உடைமையாக மாற்றிட வேண்டும்.

ஒட்டுமொத்த சமூகமும் உழைக்க வேண்டும்; உழைப்பின் பயனை ஒட்டுமொத்த சமூகமும் அடைய வேண்டும்.

வேலைவாய்ப்பு, கண்ணியமான வாழ்வுக்கு அடிப்படையான வீட்டுவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகளாகக் கிடைத்திட வேண்டும்.

கல்வி, மருத்துவம், உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படை மனித உரிமைகளாக அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்.

சிந்தனை மேம்பாடு, கேளிக்கைக்கான கலை, இலக்கிய அம்சங்கள் அனைத்து மனிதர்களுக்கும் வாய்த்திட வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் ‘வாழ்தல் என்பது வெறும் பிழைத்திருத்தல்’ என்ற இன்றைய நிலையை மாற்றி, ‘கண்ணியமான, பயனுடைய மானுட வாழ்வு’ என்பது அனைத்து மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு வேண்டும்.

இந்த ஏற்பாடுகள் எல்லாம் உறுதிசெய்யப்பட்ட சமூகம் தான் சோஷலிச சமூகம்.
தனிச்சொத்துரிமை ஒழிக்கப்பட்ட, சுரண்டல் இல்லாத புதிய சமுதாயத்தின் முதல் வடிவமாக இந்த சோஷலிச சமூகம் அமையும். சோஷலிச சமூகத்தின் உயர்ந்த வடிவமாக கம்யூனிச சமுதாயம் வளர்ச்சிபெறும்.

இதுவே, மனிதரை மனிதர் சுரண்டும் கொடிய முறையை வேரறுப்பதற்கும், மனிதத்தன்மை கொண்ட புதிய ஜனநாயக உலகத்தைப் படைப்பதற்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வளர்த்தெடுத்த மார்க்சிய தத்துவம் நமக்குக் காட்டும் பாதை.

சமுதாயத்தின் அடிப்படையையே மாற்றி அமைக்கிற புரட்சிகர மாற்றம் இது. இத்தகைய தலைகீழ் மாற்றம் சமுதாயத்தில் ஏற்படுவதை சொத்துடைய வர்க்கங்களும், அவற்றின் கருவியான அரசும் அனுமதிக்குமா?

நவீன வர்க்க சமூகத்தின் முதலாளித்துவ முறையும், முதலாளித்துவ வர்க்கமும், முதலாளித்துவ முறைக்கான அரசுகளும் இந்த மாற்றத்தை ஒருகாலும் அனுமதிக்காது. எனவே, இந்த மாற்றம் சமாதான முறையில் நிகழாது. அப்படி நிகழும் என எதிர்பார்த்தால் அது கற்பனைவாதம்.

பிறகு இந்த புரட்சிகர மாற்றம் எப்படித்தான் நிகழும்?

விஞ்ஞான சோஷலிசம்

“முதலாளித்துவ உற்பத்தி முறையானது, மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைப் பாட்டாளிகளாக முழுமையாய் மாற்றுகிறது.
அதேவேளையில், இந்தப் புரட்சியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் ஒரு சக்தியையும் அது தோற்றுவிக்கிறது… இந்தப் புரட்சியை நிறைவேற்றுதற்கான வழியையும் அதுவே சுட்டிக் காட்டுகிறது…
பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது…
ஆனால், இதைச் செய்வதன்மூலம், பாட்டாளி வர்க்கம் என்ற தனது வர்க்க நிலைக்கே பாட்டாளி வர்க்கம் முடிவுகட்டுகிறது.

அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் பாட்டாளி வர்க்கம் முடிவுகட்டுகிறது.

அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவுகட்டுகிறது.”
பாட்டாளி வர்க்கம் எப்படி சோஷலிச அரசை நிறுவி, வர்க்கங்களை, சுரண்டல்களை ஒழிக்கும் என்பதை ஏங்கெல்ஸ், கற்பனாவாத சோஷலிசமும், விஞ்ஞான சோஷலிசமும் என்ற பிரசுரத்தில் விவரிக்கிறார்.

மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தங்கள் வாழ்நாள் முழுக்க வளர்த்தெடுத்த விஞ்ஞான சோஷலிசம் இதுதான். இந்தப் புரட்சிகர மாற்றத்தை சுரண்டல்களுக்கு உள்ளாகும் பாட்டாளி வர்க்கத்தால்தான் நிறைவேற்ற முடியும் என்று இருவரும் அறுதியிட்டுச் சொன்னார்கள்.

“இதுநாள்வரை வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்த சமுதாயம் என்பதால், அந்தச் சமுதாயத்திற்கு அரசு தேவைப்பட்டது.

அதாவது, அந்தந்தக் காலகட்டத்தில் சுரண்டும் வர்க்கமாக இருக்கும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்துடைய நிறுவன அமைப்பு ஒன்று தேவைப்பட்டது.

அரசு என்கிற நிறுவன அமைப்பு, தற்போது இருக்கிற உற்பத்தி நிலைமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக வெளியிலிருந்து வரக்கூடிய எந்தவொரு தலையீட்டையும் தடுக்கும் நோக்கத்துக்காக தேவைப்படுகிறது.

இன்னும் முக்கியமாக, அடிமை முறை, பண்ணையடிமை முறை, கூலி-உழைப்பு முறை என்கிற அந்தந்த காலகட்டத்தின் உற்பத்தி முறைக்குப் பொருத்தமான, ஒடுக்குமுறை நிலையில் சுரண்டப்படும் வர்க்கங்களை பலவந்தமாக இருத்திவைக்கும் நோக்கத்துக்காகவும் ஒரு நிறுவன அமைப்பு தேவைப்பட்டது.”

இப்படி வர்க்க சமுதாயத்தில் அரசுக்கான தேவை குறித்து ஏங்கெல்ஸ் விளக்குகிறார்.
அடுத்து, அரசு என்ற கருவிக்கான தேவை மறையும் நிலைமைகள் குறித்து ஏங்கெல்ஸ்: “ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வர்க்கத்தின் அரசாக இருந்தவரை மட்டுமே, அரசு அவ்வாறு விளங்கியது.

பண்டைய காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்ட குடிமக்களின் அரசாகவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்தவரை மட்டுமே அரசு அவ்வாறு விளங்கியது.

இறுதியில் அரசு என்பது, சமுதாயம் முழுமைக்கும் உண்மையான பிரதிநிதியாக ஆகும்போது, அது தன்னையே தேவையற்ற அமைப்பாக ஆக்கிக் கொள்கிறது. இனிமேலும் எந்தவொரு சமூக வர்க்கத்தையும் கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய தேவை அதற்கு இல்லாமல் போகிறது.

வர்க்க ஆதிக்கம், உற்பத்தியில் தற்போதுள்ள அராஜகத்தின் காரணமாக நடைபெறும் தனிநபரின் பிழைப்புக்கான போராட்டம், அந்தப் போராட்டம் காரணமாக எழும் மோதல்கள், அத்துமீறல்கள் -இவை அனைத்தும் ஒழிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அடக்கி ஆள்வதற்கு எதுவுமே மிச்சமில்லை. அதனால், தனிச்சிறப்பான ஓர் அடக்குமுறை சக்தியாக இருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இனி இல்லை.
ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாக உண்மையாகவே தன்னை வரித்துக் கொண்ட பிறகு, அரசின் முதலாவது நடவடிக்கை, உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் பெயரில் உடைமையாக்கிக் கொள்வதாகும்.

அதேவேளையில், இந்த நடவடிக்கைதான், அரசு என்ற முறையில் அது சுயேச்சையாக மேற்கொள்ளும் இறுதி நடவடிக்கையும் ஆகும்.” என விளக்குகிறார் ஏங்கெல்ஸ்.
அடுத்து, சோஷலிச கட்டத்தில் இருந்து கம்யூனிச கட்டத்திற்கு சமுதாயம் எப்படிப் பரிணமிக்கும் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.

“சமூக உறவுகளில் அரசின் தலையீடு, அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாகத் தேவையற்றதாகி, பிறகு தானாகவே மறைந்துவிடுகிறது.

மனிதர்களை ஆளும் அரசாங்கம் என்பது மாற்றப்பட்டு, அந்த இடத்தில் விஷயங்களின் நிர்வாகம் செய்தல், உற்பத்திச் செயல்முறைகளை நடத்துதல் -போன்றவை இடம்பெறுகின்றன.

அரசு “ஒழிக்கப்படுவதில்லை”. அது மறைந்துவிடுகிறது. (It dies out!)” –
இவ்வாறு மார்க்சிய விஞ்ஞான கோட்பாட்டை, கம்யூனிச தத்துவத்தை ஏங்கெல்ஸ் விளக்குகிறார்.

தனியுடைமை ஒழிக்கப்பட்ட சமூகத்தில் பெண்கள்

‘வாரிசுரிமை’ பற்றிய கவலைகள், ஏற்பாடுகளுக்கான தேவையே இல்லாத ஒரு சமூகத்தில்தான் பெண்ணடிமைத்தனத்தை தகர்க்கும் நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன.

வாரிசுரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியமே இல்லாத சமூகம் எது? உற்பத்திச் சாதனங்களை தனிநபர்களின் தனிச்சொத்துகளாக வைத்திருக்காமல், ஒட்டுமொத்த சமூகத்தின் பொதுச்சொத்தாக வைத்திருக்கிற சோஷலிச சமூகம் மட்டுமே.

தொழிலாளர்கள் நடத்தும் சோஷலிசப் புரட்சி, உற்பத்திச் சாதனங்களை சமுதாயச் சொத்தாக மாற்றிவிடுகிறது; மரபுரிமையாகத் தொடரும் செல்வத்தின் பெரும்பகுதியை சமுதாயச் சொத்தாக மாற்றிவிடுகிறது.

ஆகவே, வர்க்க சமூகம் தோற்றம் பெற்றதில் இருந்து தொடர்ந்து வரும் பெண்ணடிமை/ஆணாதிக்க முறைகள் தகர்ப்படுவதற்கான அடிப்படைகள் சோஷலிச சமூகத்தில் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.

ஏங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு’ நூலிற்கு மீண்டும் செல்வோம்!
“நாம் ஒரு சமுதாயப் புரட்சியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதில் ஒருதார மணத்தின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும், ஒருதார மணத்தின் இணைபொருளாக இருக்கும் விபச்சாரத்தைப் போலவே மறைந்துபோகும்” எனக் குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ்.

“ஒரு நபரின் கையில் – ஓர் ஆணின் கையில் – கணிசமான அளவுக்குச் செல்வம் குவிந்தத்தில் இருந்துதான், இந்தச் செல்வத்தைப் பிற குழந்தைகளுக்கு அல்லாமல், தன் சொந்தக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்துதான், ஒருதார மணம் தோன்றியது.

இந்த நோக்கத்திற்குப் பெண் ஒருதார மணத்தில் இருப்பது அவசியம். ஆனால், ஆணுக்கு அப்படி அவசியமில்லை. எனவே, பெண்ணுக்கு உரிய இந்த ஒருதார மணம், ஆணுடைய வெளிப்படையான, பலதார மணத்துக்குத் தடையாக இருக்கவில்லை.
எனவே, வரவிருக்கும் சமுதாயப் புரட்சி என்பது, நிரந்தரமான மரபுரிமைச் செல்வத்தின் பெரும்பகுதியை – உற்பத்திச் சாதனங்களை – சமுதாயச் சொத்தாக மாற்றி விடுகிறது. இதன் மூலம், வாரிசுரிமை பற்றிய இந்தக் கவலைகளை எல்லாம் குறைத்துவிடுகிறது.” எவ்வளவு தெளிவான விளக்கம்!

‘பொருளாதாரக் காரணங்களில் இருந்து ஒருதார மணம் தோன்றியதால், இந்தக் காரணங்கள் மறையும்போது ஒருதார மணமுறை மறைந்துவிடுமா?’ இந்தச் சந்தேகம் நமக்கு எழுகிறது.

ஒருதார மண முறை என்பது நாம் காலங்காலமாக நாம் பார்த்து வருகிற, பழகியிருக்கிற திருமண முறை. ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்கிற விதியை ஏற்படுத்துகிற மணமுறை. இந்த ஒருதார மணம் சோஷலிச/கம்யூனிச சமூகத்தில் மறைந்துவிடுமா? இந்தக் கேள்வி பலருக்கும் இயற்கையாகவே எழுகிறது. வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படும் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்தச் சந்தேகம் எழுகிறது.

இந்தக் கேள்வியை ஏங்லெல்ஸே தன்னுடைய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு’ நூலில் முன்வைத்து, அதற்கான தர்க்கவியல் வாதத்தையும் நேர்த்தியாக முன்வைக்கிறார்.
“பொருளாதாரக் காரணங்களில் இருந்து ஒருதார மணம் தோன்றியதால், இந்தக் காரணங்கள் மறையும்போது அதுவும் மறைந்துவிடுமா?

“இதற்கு நியாயமான விடை அளிக்கலாம்: மறைவதற்குப் பதிலாக அது முழுமையடைத் தொடங்கும்.

“ஏனெனில், உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயச் சொத்தாக்கி விட்டதோடு, கூலி உழைப்பும், பாட்டாளி வர்க்கமும் மறைந்து போகின்றன.

“மேலும், இத்துடன் புள்ளிவிவரக் கணக்கீடு மூலம் அளவிடக்கூடிய எண்ணிக்கையிலான- பெண்கள் பணத்திற்காகத் தங்களை விற்பதற்கான அவசியமும் மறைந்துவிடுகிறது. விபச்சாரம் மறைகிறது.

“ஒருதார மணம் நலிந்து போவதற்குப் பதிலாக, இறுதியிலே ஆணுக்கும் சேர்த்து ஒரு யதார்த்தமாகிறது…”

இப்படித் தெள்ளத்தெளிவாகச் சிந்தித்து தனது அனுமானத்தை முன்வைக்கிறார்.
ஒருதார முறை மறைகிறதோ, இல்லையோ, சோஷலிச சமுதாயத்தில் ஆண்களின் நிலையும், சிந்தனையும், பெண்களின் நிலையும், சிந்தனையும், ஒட்டுமொத்த சமுதாயத்தில் நிலையும், சிந்தனையும் முற்போக்கான மாற்றத்தை அடைகின்றன. இதை சோஷலிச சமூகங்களின் வரலாற்றைத் திறந்த மனதுடன் ஆய்வுசெய்தால் உணர முடியும்.

இதோ ஏங்கெல்ஸின் விளக்கம்!

“எப்படி இருந்தபோதிலும், சோஷலிச சமுதாயத்தில் ஆணின் நிலைமை கணிசமாக மாறி விடுகிறது. பெண்ணின் நிலைமையும்- எல்லாப் பெண்களின் நிலைமையும், மிக முக்கியமான மாற்றமடைகிறது.

“உற்பத்திச் சாதனங்கள் பொதுச் சொத்தாக மாறுவதால், தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் அடிப்படைப் பொருளாதாரக் கூறாக இருந்துவரும் நிலைமையும் அறுபடுகிறது.

“தனிப்பட்ட வீட்டு நிர்வாகம் என்பது சமுதாயத் தொழிலாக, சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பாக மாற்றப்படுகிறது. குழந்தைப் பராமரிப்பு, கல்வி போன்றவை சமுதாயத்தின் பொது விவகாரங்கள் ஆகிவிடுகின்றன.

“மண உறவில் பிறந்தவர்களாயினும் சரி, மண உறவுக்கு வெளியே பிறந்தவர்களாயினும் சரி – எல்லாக் குழந்தைகளையும் சமுதாயம் சமமாகக் கவனித்துக்கொள்கிறது.

“எனவே, பெண்களுக்கு விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவை சோஷலிச சமுதாயத்தில் மறைகிறது.

“விளைவுகளைப் பற்றிய கவலைதான், தான் காதலிக்கும் ஒருவருக்குத் தன்னை சுதந்திரமாக ஒரு பெண் கொடுப்பதைத் தடுக்கிற அதிமுக்கியமான சமுதாயக் காரணியாக இருக்கிறது. ஒழுக்கநெறி மற்றும் பொருளாதாரம் சார்ந்த சமுதாயக் காரணியாக இந்தக் கவலைதான் செயல்படுகிறது.”

இவ்விதம் ஏங்கெல்ஸ் மிக நேர்த்தியாக, மிக நேர்மையாக சோஷலிச சமூகம் எப்படி பெண்கள் சந்தித்துவரும் அடிமைமுறையை தகர்க்கும் அடிப்படைகளை வகுக்கிறது எனத் தெளிவுபடுத்துகிறார்.

தங்கள் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? தனது பிழைப்புக்கு என்ன வழி? இந்தக் கவலைகள் இன்றி சோஷலிச சமுதாயத்தில் பெண்கள் தொழிலாளர்களாக சமூக உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். சம-அந்தஸ்து, சம-உரிமைகள் பெற்ற குடிமக்களாக சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். சோஷலிச சமுதாயத்தில் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஆண்களை மையப்படுத்திய குடும்பங்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை பெண்களுக்கு இல்லாமல் போகிறது.

சோஷலிசம் மலர்ந்தால் பெண்களின் நிலை மாறுமா?

ஏங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூல் முதன் முதலாக வெளியானது 1884 ஆம் ஆண்டில். 33 ஆண்டுகள் கழித்து தோழர் லெனின் தலைமையில் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்தது. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்த பிரம்மாண்ட சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு. எங்கெல்ஸின் நூல் வெளியாகி 48 ஆண்டுகள். ரஷ்யப் புரட்சி நடந்து முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர் ரஷ்யாவில் தான் கண்ட காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்:

நான் ரஷ்யாவில் பார்த்தேன். திருமணம் என்ற அமைப்பும், ஏற்பாடும் இல்லாமலேயே வாழமுடியும் என்பதை. இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். இந்த முறையும், அங்கு அமுலில் வைத்து இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது என்றால், அந்நாட்டு மக்கள் சோற்றைப் பற்றிக் கவலையில்லாமல் வாழ்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கை ஆண்-பெண் உறவிலும் நடத்துகிறார்கள். சொத்து வாரிசுரிமை இருப்பதால்தான் நம்முடைய சமுதாயத்தில் கட்டுப்பாடு உள்ள குடும்ப முறை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதைத்தான் உயர்ந்த முறை எனக் கூறி மதவாதிகள் வாழ்கிறார்கள். காதல் என்பதற்கும் கல்யாணம் என்ற ஏற்பாட்டிற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை.” இப்படிச் சொன்னது பெரியார்.

தொடரும்…

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

1 COMMENT

  1. கட்டுரை சிறப்பு… ஆனால் எல்லோரும் செய்யும் பழைய தவறுகள் மீண்டும் தொடா்கிறது…. 1. தற்போது பெண்கள் என்ன செய்ய வேண்டும்? 2. சோசலிசம் எப்போது வரும்….. இப்போது அரசியல் அரங்கில் புதிய ஜனநாயக புரட்சி என்ற இலக்கு தான் அனைத்து கட்சிகளுக்கு உள்ளது? அது எப்போது முடியும் ? இவை இரண்டும் சாதாரண கேள்விகளே.. 3. சற்று முக்கியமானது.. 3. ஆனால், இதைச் செய்வதன்மூலம், பாட்டாளி வர்க்கம் என்ற தனது வர்க்க நிலைக்கே பாட்டாளி வர்க்கம் முடிவுகட்டுகிறது.

    அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் பாட்டாளி வர்க்கம் முடிவுகட்டுகிறது.

    அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவுகட்டுகிறது.”
    பாட்டாளி வர்க்கம் எப்படி சோஷலிச அரசை நிறுவி, வர்க்கங்களை, சுரண்டல்களை ஒழிக்கும் என்பதை ஏங்கெல்ஸ், கற்பனாவாத சோஷலிசமும், விஞ்ஞான சோஷலிசமும் என்ற பிரசுரத்தில் விவரிக்கிறார். இதில் சோசலிச அரசை நிறுவி என ஏங்கல்ஸ் எங்கு சொல்லியுள்ளா்.. அடுத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் பாட்டாளி வர்க்கம் முடிவுகட்டுகிறது அவ்வாறு முடிவு கட்டியதும் பாட்டாளி என்ற வா்க்கம் இருக்காது பாட்டாளி வா்க்கம் இல்லாத போது பாட்டாளி வா்க்க அரசே அல்லது சோசலிச அரசோ எவ்வாறு இருக்க முடியும்.. அடுத்து சோசலிசத்திற்கு ரஷ்யா உதாரணமாக காட்டப்பட்டுள்ளது… ரஷ்யா சோசலிச நாடு என்றால் அங்கு கூலி விலை லாபம் எல்லாம் எப்போது இல்லாமல் போனது என்பதை கூற வேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here