“அனைத்து மனிதர்களும் சுதந்திர மனிதர்களாக சம-மாண்பு, சம-உரிமை பெற்ற மனிதர்களாகப் பிறக்கிறார்கள்” – ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10 அன்று பிரகடனப்படுத்திய, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் பிரிவின், முதல் வாக்கியம் இது. ‘பிறப்பிலேயே மனிதர்கள் சம-உரிமைகள் பெற்றவர்கள்; பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பாகுபடுத்த முடியாது; எந்த அடையாளத்தின் அடிப்படையிலும் மனிதர்களுக்கு உரிய உரிமைகள், மாண்புகளை யாரும் பறித்திட முடியாது’ என்பது இதன் பொருள்.
இதன் மூல ஆங்கில வரி: “All human beings are born free and equal in dignity and rights.” என்பது. உண்மையில், மனித உரிமைகள் பிரகடனத்தை வரைவதற்கான குழு தயாரித்த வரைவு ஆவணத்தில், ‘All men are born free and equal in dignity and rights’ என்ற வார்த்தைகளே இடம்பெற்றிருந்தன. ‘All men’ என்ற வார்த்தைகள், ‘All human beings’, ‘அனைத்து மனிதர்கள்’ என்று மாறுவதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் இடம்பெற்றிருந்த இந்தியப் பெண் பிரதிநிதி ஹன்சா மேத்தாவின் பங்களிப்பு முக்கியமானது. இதை ஐ.நா சபை அங்கீரித்து மனித உரிமை பிரகடனத்தின் வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது.
(இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த 15 பெண் பிரதிநிதிகளில் ஒருவராகவும் ஹன்சா இருந்தவர்)
ஆவணங்களின் வார்த்தைகளில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கே, பெண்கள் உழைப்பைச் செலுத்த வேண்டி இருக்கிறது என்பதைக் காண்கிறோம். காலங்காலமாக சமூகத்தின் நடைமுறைகளில் புரையோடிப் போயுள்ள பாலினப் பாரபட்சங்களைக் களைவது என்பது நீண்ட நெடிய போராட்டமாகத் தொடர்கிறது.
‘CEDAW – Convention on the Elimination of All Forms of Discrimination Against Women’ என்பது, பெண்கள் மீதான அனைத்து வகையான பாரபட்சங்களையும் களைவதற்கான இன்னொரு ஐ.நா பிரகடனம்.
இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் தங்கள் சமூகங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது; நிலவுகிற பாகுபாடுகளைக் களைவதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். இந்தியா 1980-ல் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
இதுபோக, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(1), ‘இந்திய அரசு, பால் அடிப்படையில் இந்தியக் குடிமக்களைப் பாகுபாடு பார்க்காது’ என உத்தரவாதம் அளிக்கிறது என்பதைப் பார்த்தோம்.
பாலினப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்ற சட்டங்கள், பிரகடனங்கள் எல்லாம் நாடுகள் அளவில், உலகளவில் இருக்கின்றன. ஆனால், ஏடுகளில் மட்டுமே இருக்கின்றன. இவை ஏன் அமல்படுத்தப்படுவதில்லை? இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதில் அரசுகளுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன?
‘சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும்’ என்ற உறுதியான நோக்கத்தை ஒரு ‘அரசு’ பெற்றிருப்பதற்கும், சமத்துவ சமூகத்தை உருவாக்கும் பாதையில் சமரசமின்றி ஒரு அரசு பயணிப்பதற்கும், அரசின் வர்க்கத்தன்மை அடிப்படையாக இருக்கிறது.
அது என்ன அரசின் வர்க்கத்தன்மை? இதை உணர்வதற்கு, ‘அரசு’ என்ற அமைப்பு மனித சமூகத்தில் எப்படித் தோற்றம் பெற்றது? அரசு என்ற அமைப்பு தோற்றம் பெற்றதற்கான அடிப்படைக் காரணிகள் என்ன? மனித சமூகத்தில் அரசு என்ற அமைப்பு வகிக்கும் பாத்திரம் என்ன? – என்ற அடிப்படைப் புரிதல்கள் நமக்கு அவசியமாகிறது.
மீண்டும் எங்கெல்ஸ் வாயிலாக அரசை அறிதல் எங்கெல்ஸ் இயற்றிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூல், மனிதசமூகத்தில் வர்க்கப் பிரிவினைகள் எப்படி, எந்தக் காலக்கட்டத்தில் உருவாகின? வர்க்கப் பிரிவினை உருவாவதற்கு அடிப்படையான உற்பத்தி நிலைமைகள் என்ன? வர்க்க சமூகத்தின் தேவையாக வாரிசுரிமை ஏன் இருக்கிறது? வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கான தேவையாக நவீன ஒருதாரக் குடும்ப முறை எப்படி தோற்றம் பெற்றது? பெண்கள் அதுவரை செலுத்தி வந்த உழைப்பு, ‘சமூக உழைப்பு’ என்ற அந்தஸ்தை இழந்து, தனிப்பட்ட குடும்ப ஊழியம்/‘அடிமை ஊழியம்’ என்ற நிலைக்கு எப்படி தாழ்த்தப்பட்டது? பெண்ணடிமைத்தன முறை எப்படித் தோற்றம் பெற்றது?… என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில் மனித சமூகத்தில் வர்க்கப்பிரிவினை ஏற்படுவதற்கு முந்தைய புராதணப் பொதுவுடைமைச் சமூகங்களில் நிலவிய உற்பத்தி முறைகள் எத்தகையவை, உற்பத்தியின் பலனை சமூகம் எப்படி அனுபவித்தது, பல்வேறு காலகட்டங்களின் உற்பத்தி முறைக்குத் தகுந்தவாறு நிலவிய குடும்ப அமைப்புகள், திருமண முறைகள் என்னென்ன, குடும்ப அமைப்புகள், திருமண முறைகள் எப்படித் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வந்திருக்கின்றன – என்பதைப் பற்றியெல்லாம் பார்த்தோம்.
இந்த அத்தியாயத்தில் ‘அரசு’ என்ற ஸ்தாபனம் எப்படி தோற்றம் பெற்றது என்ற வரலாற்றை எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து அரசு’ நூல் வாயிலாகத் தெரிந்துகொள்கோம்.
புராதணப் பொதுவுடைமைச் சமூகங்களின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு ‘அரசு’ என்ற ஸ்தாபனம் தேவைப்படவில்லை.
வர்க்க சமுதாயம், ஒருதார முறை தோன்றுவதற்கு முன்னர் பழங்குடி சமூகங்கள் கண சமூகங்களாக (Gentile Society) உருப்பெற்றிருந்தன என இத்தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில் பார்த்தோம். பழங்குடி சமூகத்தில் எந்தெந்த குலங்கள் (Clan), கணங்களுக்கு (Gen) இடையில் திருமணங்கள் நடக்கலாம், நடக்கக்கூடாது என்பதைப் பொறுத்து கணங்கள் கட்டப்பட்டிருந்தன. கணங்களின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும் பணியை கண அமைப்புகள் (Gentile Constitutions) செய்தன.
ஒட்டுமொத்த பழங்குடி சமூகமும் பல கணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கணங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள தனித்தனி கண அமைப்புகள் இருந்தன. ‘இந்த கண அமைப்பு’ குழந்தை போன்ற எளிமையான அமைப்பு’ என்று வர்ணிக்கிறார் எங்கெல்ஸ். இதில், ‘ராணுவப்படை வீரர்கள் இல்லை, காவல்துறை இல்லை, பிரபுக்கள் இல்லை, அரசர்கள் இல்லை, நீதிபதிகள் இல்லை, நீதிமன்ற வழக்குகள் இல்லை- எல்லாமும் அததற்குரிய வழிமுறைகளின்படி நடக்கும். அனைத்துச் சண்டைகளையும், சச்சரவுகளையும் ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட சமூகமும் – அதாவது கணம் அல்லது ஒட்டுமொத்த பழங்குடி சமூகமும் தீர்த்துவைக்கும்.’ -இப்படி அமெரிக்காவின் இரோகுவாய் பூர்வகுடி சமூகத்தின் கண நிர்வாக அமைப்பை எங்கெல்ஸ் நமக்கு விளக்குகிறார்.
ஒரு பூர்வகுடி சமூகம் பல்வேறு கணங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் போது, கணங்களின் கூட்டு நிர்வாகத்திற்காக ஒட்டு மொத்த பழங்குடி சமூகத்துக்குமான கூட்டமைப்பு (Confederacy) இருந்தது. சில இடங்களில் ஒரு சில பழங்குடி சமூகங்கள் ஒரே ஆதிக்குலத்தில் இருந்து தோன்றியிருக்கும் பட்சத்தில், அந்த பழங்குடிகளுக்கான மகாகூட்டமைப்பு (Confederacy of Tribes) இருந்தன. தேவை எழும் சந்தர்ப்பங்களில் இந்தக் கூட்டமைப்புகள், மகாகூட்டமைப்புகள் கூடி, சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்களைக் கவனிக்கும். புராதணப் பொதுவுடைச் சமூகங்களுக்கு இந்த நிர்வாக ஏற்பாடு போதுமானதாக இருந்தது.
நவீன கால அரசு மனித நாகரிகத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் அநாகரிக சகாப்தத்தில் மனித சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறியது. இந்தக் காலகட்டத்தில்தான் உபரி உற்பத்தி சாத்தியமானது. இந்தக் காலத்தில், பொதுவாகக் குழு நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றிய ஆண் நபர்களின் பராமரிப்பில்/மேலாண்மையில் இருந்த மந்தைகள் அவரவருடைய தனிப்பட்ட சொத்துகள் என்று மாறத்தொடங்கியது. சொத்து உடையவர்கள் – சொத்து இல்லாதவர்கள் என்ற வர்க்கப் பிரிவினை காலப்போக்கில் உருவாகி, நிலைப்பெற்றது. – இந்த சமூக மாற்றங்களையும் முதல் மூன்று அத்தியாயங்களில் பார்த்தோம்.
காலப்போக்கில், விவசாய மூலப் பொருட்கள் உற்பத்தி, கால்நடைப் பொருட்கள் உற்பத்தி, நெசவு, கைவினை, உலோகப் பொருட்கள் உற்பத்தி எனப் பலதரப்பட்ட உற்பத்திகள் சமூகத்தில் நடக்கத் தொடங்கின. ஒழுங்கமைப்பட்ட உற்பத்திகளாக இவை நடந்தன. வணிகம், பணப்பரிவர்த்தனை எல்லாம் தோன்றின.
ஏற்கனவே, உடல் உழைப்பில் ஈடுபடாமல் நிலம், கால்நடை வளங்கள், சிறுசிறு பட்டறைகள் உள்ளிட்ட சமூகத்தின் உற்பத்தி சாதனங்களை தங்களுடைய தனிப்பட்ட சொத்துகளாக ஒரு வர்க்கம் வைத்திருக்கிறது- இந்த சொத்துடைய வர்க்கத்தின் வசமிருந்த உற்பத்தியகங்களில், உழைத்தால் தான் நமக்குப் பிழைப்பு என்ற நிலையில், சொத்தில்லாத உழைக்கும் வர்க்கம் இருந்தது. இந்த இரண்டு வர்க்கங்களோடு மூன்றாவதாக ஒரு வர்க்கம் உருவானது. உழைப்பில் பங்கேற்காத, ஆனால் உற்பத்தி மேல் ஆதிக்கம் செலுத்துகிற வணிகர்கள் தான் அந்த முன்றாவது வர்க்கம். பக்கத்து, தூரப் பிரதேசங்களில் இருந்தும் வணிகர்கள் வந்தார்கள். அண்டைப் பிரதேசங்களுடன் நடத்திய போர்களில் தோல்வியை சந்தித்த தரப்பில் இருந்து அடிமைகள் உருவாக்கப்பட்டார்கள். முன்பிருந்த கண சமூகத்தில் அனைவருமே சொந்தபந்தங்கள். இப்போதைய புதிய சமூகத்தின் உறுப்பினர்களில் அயலார்கள், அடிமைகள் இருந்தார்கள்; ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளும் வர்க்கப் பிரிவினைகள் இருந்தன.
‘வாணிபப்பெருக்கம், பணம், கந்துவட்டி, நிலச்சொத்து, நில அடமானம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரு சிறு வர்க்கத்தின் கைகளில் செல்வம் குவிந்தது. இன்னொரு பக்கம் வறியவர்கள் திரள் பெருகுகிறது. இவர்களின் கட்டாய உழைப்பின் அடிப்படையில் புதிய சமூகம் வளர்ச்சியடைகிறது’ என எங்கெல்ஸ் விளக்கி இருக்கிறார். முன்பிருந்த கண சமூகங்களிலும் போர்கள் நடந்தன. ஆனால், புதிய வர்க்க சமூகத்தில் அந்நியப் பிரதேசங்களில் கொள்ளை அடிப்பதற்காகவே போர்கள் நடத்தப்பட்டன.
தனியுடைமை தோன்றியபோது முன்பிருந்த கண அமைப்பில் தலைமை நிர்வாகிகளாக செல்வாக்குடன் இருந்தவர்களிடம் செல்வம் கைமாறியது. காலப்போக்கில் புதிய சமுதாயத்தின் நிர்வாகம் இந்த செல்வாக்கு மிக்கவர்கள் கைக்குச் சென்றது. தந்தைவழியில் அவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்து தலைமைப்பொறுப்புக்கு வந்தார்கள். மன்னராட்சி, பிரபுத்துவ முறைக்கான அடிப்படைகள் தோற்றம் பெறுகின்றன.
கண வாழ்வின் அடிப்படை அம்சமே கணத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதுதான். புதிய சமூகத்தில் உடைமையாளர்கள், உடைமையற்றவர்கள், அடிமைகள், அந்நியர்கள் எல்லாம் அருகருகே வாழ்ந்தார்கள். உடைமையாளர்கள், உடைமையற்றவர்கள் எல்லாரும் ஒரே கணத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால், இவர்களுக்கு இடையே சர்ச்சைகளும் எழுந்தன. புதிய சமூகத்தில் இடம்பெற்றிருந்த பழைய கண சமூகத்து உறுப்பினர்களோடு, அந்நியர்கள், அடிமைகளை இணைத்து நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கு பழைய கண அமைப்புகள் பொருத்தமாக இல்லை.
முன்பிருந்த கண நிர்வாக அமைப்பு என்பது கணத்தின் சொந்த விவகாரங்களை சுதந்திரமாக நிர்வகிப்பதற்கான குலங்களின் ஸ்தாபனமாக விளங்கியது. அப்போதிருந்த கண சமூகத்திற்குள், பூர்வகுடி சமூகத்திற்குள் உள்விரோதங்கள் கிடையாது. எனவே, உள்விரோதங்களை அறிந்திராத ஒரு சமூகத்திற்குத் தேவைப்பட்ட நிர்வாக அமைப்பாகவே இந்த கண அமைப்பு செயல்பட்டது.
புதிதாக வந்த சமூகத்திலோ பொருளாதார நிலைமையின் காரணமாக உள்விரோதங்கள் நிறைய. முரண்பாடுகள் நிறைய. உடைமை உடையோர், இல்லாதவர், சுதந்திர மனிதர்கள், அடிமைகள் எனப் பிளவுகளின் அடிப்படையில்தான் புதிய சமூகமே உருவாகி இருந்தது. உண்மையில், இந்த பிளவுதான் நவீன சமூகத்தின் அடிப்படையான அம்சமாகவே திகழ்கிறது.
எனவே, பிளவுகளின் அடிப்படையில் உருவான இந்தப் புதிய சமூகத்துக்கு, ஒரு புதிய நிர்வாக ஸ்தாபனம் தேவைப்படுகிறது. அதனால், பழைய கண அமைப்பு இருந்த இடத்தில், புதிய சமூகத்துக்குத் தேவையான ‘அரசு’ ‘State’ என்ற அமைப்பு தோற்றம் பெறுகிறது. எனவே, ‘இந்த புதிய ஸ்தாபனமான ‘அரசு’ வெளியில் இருந்து முளைத்திடவில்லை; புதிய சமூகத்தின் முரண்பாடுகளை மேலாண்மை செய்யும் பணிக்காக முந்தைய கண அமைப்பு இருந்த இடத்தில் படிப்படியாகத் தோற்றம் பெருகிறது’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய சமுதாயத்தின் அடிப்படையே வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தான். இந்த வர்க்கங்களுக்கு இடையிலான விரோதங்களைத் தீர்த்திட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வர்க்கப் பிரிவினையை முற்றாக ஒழித்திட வேண்டும். ஆனால், வர்க்கப் பிரிவிணைகள் தோன்றியதால் உருவான முரண்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக உதித்த ‘அரசின்’ நோக்கம் எப்படி வர்க்கங்களை ஒழிப்பதாக இருக்க முடியும்? உண்மையில், ‘நவீன கால அரசுகளின் இயல்பே, வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்காமல் தீவிரப்படுத்துவதே!’ என்பதை நாம் உணர வேண்டும்.
சமூகத்தில் வர்க்கங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. ‘இந்த மோதிக்கொள்கிற வர்க்கங்களுக்கு மேலே இருக்கும் அமைப்பு’ என்ற ஒரு தோற்றத்தைத் தர வேண்டும். ஆனால், உண்மையில் சொத்துடைய உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனமாகவே செயல்பட வேண்டும். உடைமை வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தியே செயல்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால், சொத்துடைய வர்க்கத்தின் பலாத்காரக்காரக் கருவியாகச் செயல்பட்டு, உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கிட வேண்டும். சொத்தில்லாத உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை, சொத்துடைய வர்க்கம் உறிஞ்சி உபரியைப் பெருக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். அரசின் நிர்வாக எல்லைக்கு வெளியே உள்ள அண்டை அயலார்களைக் கொள்ளை அடித்து ஒடுக்குவதற்கான ஸ்தாபனமாக செயல்பட வேண்டும். இந்தக் காரியங்களை எல்லாம் செய்வதற்கான புதிய சமுதாயத்தின் அமைப்பு/ஸ்தாபனம் தான் ‘அரசு’.
வர்க்கங்களின் தோற்றத்தோடு இணைந்து ஒருதாரமணக் குடும்ப அமைப்பு தோன்றியது என நாம் இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே பார்த்தோம். புதிய சமூகத்தின் அடிப்படை அலகுகளாக நவீன ஒருதாரக் குடும்பங்கள் மாறின. “நவீன ஒருதாரக் குடும்பங்கள் வெளிப்படையாகவோ, அல்லது மறைமுகமாகவோ பெண்ணின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டவை; நவீன சமூகம் என்பது தனிக் குடும்பங்கள் என்ற அணுக்களைக் கொண்டு ஒன்று திரட்டப்பட்ட பெருந்திரள்”என்கிறார் எங்கெல்ஸ். இந்தப் புதிய சமூகத்தில் பெண்கள் எப்படி தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றப்பட்டார்கள் என்பதை நாம் ஏற்கனவே விரிவாகப் பார்க்க்துவிட்டோம்.
தனிக் குடும்பங்களின் பெருந்திரளாக இருக்கிற சமூகத்தில், ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத்தனம் குடும்ப அலகுகளின் அடிப்படை அம்சமாக இருக்கிறது. குடும்பம் என்கிற அலகைத் தாண்டி, சமூகத்தில் அரசு, அரசுகளின் நிர்வாக அமைப்புகளைக் கட்டமைப்பதிலும் ஆணாதிக்க சிந்தனை முறைக்கு பங்கிருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தையும் வர்க்கப் பிரிவினைகள் கட்டமைக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள்-ஒடுக்குபவர்கள்-சொத்துடைய உழைக்காத வர்க்கம்-சொத்தில்லாத உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில்தான் சமூகத்தில் உற்பத்தி நடக்கிறது. உபரி உற்பத்தி செய்யப்படுகிறது. உபரியின் பலனை உடைமை வர்க்கம் மட்டுமே அனுபவித்து, மூலதனப் பெருக்கம் நடக்கிறது.
இந்தப் புதிய சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை மேலாண்மை செய்வது, நிர்வகிப்பது அரசின் பிரதான கடமையாக இருக்கிறது எனப் பார்த்தோம். இந்தப் பணியை செய்வதற்கு அரசுக்கு இராணுவம், சட்டமியற்றி ஆட்சி செய்யும் முறைகள், நீதி முறை, சிறைச்சாலைகள் எல்லாம் தேவைப்படுகின்றன. நவீன சமத்துவமற்ற சமூகத்தில், சொத்துடைய வர்க்கங்கள் இயல்பாகவே ஆளும் வர்க்கங்களாக உருப்பெறுகின்றன. “வர்க்க விரோதங்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய அவசியத்தில் இருந்து அரசு தோன்றியதாலும், அதே சமயத்தில் வர்க்கங்களுக்கு இடையே நடந்து வந்த மோதல்களுக்கு இடையே தோன்றியதாலும், பொது விதியாகவே வலிமை மிக்க, பொருளாதார ரீதியிலாக ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாகவே அரசு உருவாகிறது” சமூகத்தின் வர்க்கப் பிரிவினைகள், அரசு உள்ளிட்ட ஏற்பாட்டை தத்துவரீதியாக நியாயப்படுத்தி கட்டிக்காக்கும் பணியை செய்வதற்காக மதங்களும், இந்த ஏற்பாட்டுக்கு உரிய தத்துவங்களும் வருகின்றன.
முன்பு கண சமூகத்தில் ஒட்டுமொத்த மக்களின் சித்தத்தை நிறைவேற்றும் சாதனங்களாக கண நிர்வாக அமைப்பு இருந்தது. நவீன அரசு சொந்த மக்களில் ஒரு பிரிவினரை அடக்கி ஒடுக்கி ஆட்சி செலுத்தும் பணியை மேற்கொள்கிறது.
அடிப்படையிலேயே இந்த நவீன அரசுகள் சுரண்டலை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ சமூகத்தில் தக்கவைப்பதற்காகவே இருக்கின்றன. வர்க்கங்களை ஒழிப்பதும், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை ஒழிப்பதும் நவீன கால அரசுகளின் இயல்புக்கு மாறான விஷயங்கள். நிலவுகிற சமூக முறையின் தேவைக்கு மாறான விஷயங்களாகவும் இருக்கின்றன.
நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் என நாகரிக சமூகம் உற்பத்தி முறைகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஒரு வளர்ச்சிக் கட்டம் முந்தைய கட்டத்தைவிட தன்மையில் முற்போக்கானது என்றாலும், எந்தக் கட்டத்திலும் சுரண்டல் முறைகள், அடிமைமுறை தகர்க்கப்படவே இல்லை. பல்வேறு வடிவங்களில் கட்டிக்காக்கப்பட்டே வருகின்றன. ஏன்? தனியுடைமை அடிப்படையில் இந்தச் சமூகம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு சுரண்டல் முறைகள் அவசியம். பெண்ணடிமை முறை உள்ளிட்ட அடிமை முறைகள் அவசியம். எனவே, இந்த சுரண்டல்முறைகளை வேரோடு ஒழிப்பது என்பது நவீன முதலாளித்துவ சமூகங்களின் அரசுக்கு அப்பாற்பட்ட அம்சம்.
வர்க்கப் பிரிவினைகளை, வர்க்க வேறுபாடுகளை, சமூகத்தின் சுரண்டல் முறைகளை, அடிமை முறைகளை ஒழிக்கும் நோக்கம் இல்லாத முதலாளித்துவ அரசுகளுக்கு பெண்ணடிமைத்தனத்தை மட்டும் ஒழித்திட எங்கிருந்து உறுதி வரும்?
நவீன காலத்தில் ‘அடிப்படை உரிமைகள்’ என சிலவற்றைப் பிரகடப்படுத்தி, ‘பால் வேறுபாடு உள்ளிட்ட வேறுபாடுகளை எல்லாம் நாங்கள் களைந்திடுவோம்’ எனப் பெயரளவில் வாக்குறுதிகள் அளிக்க வேண்டிய தேவை அரசுகளுக்கு உள்ளது. இல்லையேல் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திடம், மக்கள் பகுதியினரிடம் அதிருப்தி பெருகி நிலவுகிற சமூக அமைப்பிற்கே ஆபத்து வந்துவிடும். இதனாலே பிரகடனங்கள், சட்டங்கள் தொடர்கின்றன.
தொடரும்…
ஆதாரங்கள்:
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
https://www.un.org/en/observances/human-rights-day/women-who-shaped-the-universal-declaration
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.