தொடர் 43: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 43: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 

 

 

 

எண்ணெய் மாசு பாதிப்புகளும், இயற்கை,
மனித வாழ்வின் துயரங்களும்

சமீப மழை கால வெள்ளம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில், இயற்கை சூழல் பாழ்பட்டு, மக்கள் பாதிப்புகள் அடைந்த, துயர நிலை நாம் அனைவரும் அறிந்ததே!ஆனால், அதே நேரத்தில் சென்னைக்கு அருகில் உள்ள எண்ணுர் என்ற பகுதியில் கழிமுக சூழல் “எண்ணெய் மாசு ”வினால், முற்றிலும்  ஆபத்தான, பாதிப்புகள் அடைந்துள்ளது. சரி!மழை காரணம் கூறப்பட்டு, தொழிற்சாலை கழிவுகளும் அத்து மீறலாக, ஆற்றில் மழை நேரத்தில் வெளியேற்றப் பட்டியிருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறதுஎனினும் எண்ணெய் எப்போதும் நீருடன் கலப்பதில்லை, என்றாலும் அந்த அடர்த்தி உள்ள திரவம் இயற்கை நீர் ஆதார பரப்பில் முழுவதும் மறைத்து, நீர் வாழ் உயிரினங்கள், ஆக்சிஜன் பெற இயலாத நிலை ஏற்படுத்தி, அழிய செய்கின்றன.

மேலும், மீன்கள், நீர் பறவைகள் போன்றவை எண்ணெய் கலந்த படலம் அவற்றின் உடலில் பட்டு, பாதிக்கப்பட்டுள்ள தகவல் வேதனை அளிக்கிறது. எண்ணெய் மாசு வெளியேற்றம்,இயற்கை சூழலான, கடல் கழிமுக பகுதியில் நடந்திருப்பது, ஒரு சாதாரண பிரச்சனை அல்ல. அதனால் மீனவர்கள், பொதுமக்கள், வாழ்வாதாரம், பறி
போய்விட்டது. சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் பரிதாப நிலை வந்துள்ளது என்றால் மிகையாகாது. படகுகள், மீன் பிடி வலைகள், வீணாகி, பயனற்று போய்விட்டது. ஒரு தனி நபர் அல்லது குழு, நிறுவனம் அலட்சியத்தினாலோ, மற்றும் இயற்கை சீற்றத்தின் காரணமாக, ஏற்பட்ட பழுது, தொழில் நுட்ப கோளாறு விளைவுகள், இயற்கை சூழல் மாசுப்படுத்தி ஒட்டு மொத்த உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் நிலை தொடர்ந்து விட்டது.

எண்ணெய் மாசு, கடலில் கலந்து விடும், அபாயம் நிறைந்த விபத்துகள் உலக அளவில், பெட்ரோலிய, அகழ்வு பெட்ரோலிய எண்ணெய் கொள்கலன் சுமந்த கப்பல்கள் கடல் பயணத்தில் விபத்து, அல்லது போர் காரணமாக கடலில் பல மெட்ரிக் டன் எண்ணெய் கலந்த சம்பவங்கள் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து நிகழ்கிறது.

1967 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் டோரி கென்யான், 1978 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு கப்பல், அமோக்கோ கார்டிஸ்,12,23000 மெட்ரிக் டன் எண்ணெய் வெளியேற்றம் விபத்துகள் மற்றும் 1989 Exxon voldex விபத்து, சமீபத்தில்
மொரிஷியஸ் நாட்டில் நடந்த விபத்து, போன்றவை வரலாறு விபத்துகளாக மட்டும் எண்ணெய் மாசு பிரச்சனை பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மீனவ கிராமங்கள், அங்குள்ள மக்கள், உயிரினங்கள் எண்ணூர் அருகிலுள்ள அலையாத்தி காடுகள், அங்கு மட்டுமே வாழிடம் கொண்டு வசிக்கும், குறிப்பிட்ட சிற்றின மீன்கள், நண்டு, இறால் இனத்தொகை, முற்றிலும் பாதித்து விட்ட நிலை நம் மாநிலத்தில் நிகழ்ந்த எதிர்பாராத வேறுபட்ட விபத்து.

இந்த நிகழ்ச்சி மூலம் உருவாகும் இழப்புகள் கணக்கெடுப்பு செய்வது அவ்வளவு எளிது அல்ல. இன்றைய நேரடி பாதிப்புகளுக்கு மக்களுக்கு, சிறு நிவாரண உதவி வழியில் நிறைவு அடைந்து விடாது. தொடர்ந்து அங்கு மீன் பிடிக்கும் தொழில், வணிகம், நசிந்து விடும் நிலை உள்ளது. ஆனால் மீனவர்கள் கடலில் வெகு தொலைவு சென்று மீன் பிடிக்கும் நிலை வரலாம். அவர்கள் வாழ்க்கைமுறை மாறி விடும், பொருளாதார
நிலை ஏற்ற, இறக்கம் வருவது, தவிர்க்க இயலாது.

எண்ணெய் மாசுவிற்கு காரணமான நிறுவனங்கள் மீது முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது, ஒரு புறம் இருப்பினும், அந்த நிகழ்வுகளை தொடர்ந்து,
உரிய விழிப்புணர்வு அனைத்து பகுதி மக்களும் பெற வேண்டும். மாசு என்றால் ஏதோ சிறு கழிவு, அதனை குறிப்பிட்ட பகுதியிலிருந்து அகற்றிவிட்டால் பிரச்சனை முடிந்தது என்பது பலரும் எண்ணும் நிலை இங்கு உள்ளது. மனித உயிர் இழப்பு மட்டும் மிக அதிகம் ஆக இருந்தால் அந்த மாசு விபத்து பார்வையின் வீச்சு, சற்று அரசு, மக்கள்
அவர்களின் கவனத்தில் அக்கறை கூடுதல் கொண்டு இருக்கும் நிலை உள்ளது.

இயற்கை பகுதியில் பாதிப்பு என்பது, நெடுங்காலம் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு
இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்வுபூர்வ எண்ணங்களுடன் அணுக முயற்சி செய்யலாம். இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் போது வெளிப்
படையான உண்மைகள் அறிய,சுற்றுசூழல் நிபுணர்கள் அடங்கிய குழு, தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்து பாதிப்புகள் பற்றிய தகவல்களை அனைவரும் அறிய
செய்யவேண்டும். ஏனெனில் ஒரு பேரிடர் ஏற்படும் போது அது பற்றிய உரையாடல், செய்தி போன்றவை நம் சமூகத்தில், மிக குறைந்த காலம் மட்டும் மக்கள்
ஆர்வத்தினை ஈர்க்கும் தன்மை உடையவை ஆகிறது.

மேலும், இயல்பாக மறதி என்ற நிலை, மக்களுக்கும் அரசுத்துறைகளுக்கும், பிரச்சினையின் தீவிரத்தினை நீர்த்து போகும் அவலம், ஜனநாயகத்தின், விரும்பதகாத விளைவு ஆகும். எண்ணெய் மாசு அகற்றி விட மிதக்கும் பூம்கள், ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் வைக்கோல், சாம்பல், பாலிஸ்டர் மூலம் அகற்றும்
முறைகள் பின்பற்றப்படுகிறது.எனினும் நீரில் உள்ள எண்ணெய் படலங்கள் அகற்ற நேரடி முறை என்பது சற்று கடினமானது. மிகுந்த அகன்ற நீர் பரப்புகளுக்கு, இம்முறை நிச்சயம் ஒவ்வாதது. நெடுங்காலம், நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கு அறிவியல் பூர்வ தீர்வு முறை, விரைவில் எண்ணெய் மாசு நீக்கும் வழிகள் கண்டறிந்து
பின்பற்ற முயற்சி செய்யலாம்.

சுற்றுசூழல் பிரச்சனை என்பது, பாதிக்கப்பட்ட ஊர், காடு மனிதர்களுக்கு மட்டும் தான் என மற்ற பகுதியில் உள்ள மக்கள் நினைத்தும், பரிதாபங்கள் கொள்வதும் மட்டும் வழக்கம் ஆகும். சுற்று சூழல் அறிவியல் (ENVIRONMENTAL SCIENCE ) என்பது வெற்று அறிவியல் பாடமாக கண்டு அறிவது நம் கல்வி நிறுவனங்கள் பட்டத்திற்காக, உரிய கால அளவுக்கு மாணவர்களுக்கு வகுப்பறை பாடம் ஆகும்.

சுற்று சூழல் கல்வி (ENVIRONMENTAL EDUCATION )என்பது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும், அறிய வேண்டிய செயல்பாட்டு கல்வி ஆகும். குறிப்பாக, மாசு பிரச்சனை அபாயங்கள், நிகழும் வாய்ப்பு உள்ள தொழிற்சாலை அதிகம் உள்ள நகரங்களில் வசிக்கும் பொது மக்கள் சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு, எச்சரிக்கை, தற்காப்பு, செயல் நடவடிக்கை பற்றி அவ்வப்போது தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள், அரசு ஆதரவுடன் நிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் அனைவரும் இது பற்றி தொடர்ந்து அக்கறை, கவனம் கொள்ள செய்வது நன்று. மாசு கட்டுப்பாட்டு
வாரியங்கள், தங்கள் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்த வேண்டிய, அவசர நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் மாசு மட்டும் அல்ல, நீர் மாசு, நில மாசு, காற்று மாசு அனைத்தும் நேரடியாக சமூக பாதிப்பு ஏற்படுத்தும் என்பதும், உரிய முன் எச்சரிக்கை, தீர்வுகள் அறிதல், ஆகிய செயல்பாடுகளுக்கு அரசு துறைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இயற்கை பேரிடர் மூலம் வரும் பாதிப்பு, தவிர்க்க இயலாமல் போய் நிவாரணம் வழங்கலாம். ஆனால் மனித, நிறுவன தவறுகள், மூலம் ஏற்படும் சமூக, இயற்கை சூழல் பாதிப்பு இழப்புகள் தவிர்க்க, உரிய கவனம், அறிவியல் பூர்வ அணுகுமுறை, ஆக்க பூர்வ தீர்வுகள் தேவை என்பதை நாம் சிந்தித்து பார்ப்போமா?

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *