உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

 

 

அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப் போயிருக்கும் எந்தவொரு குழந்தையிடமும் கேட்டுப் பாருங்கள். தவறிழைத்தவர்கள் என்று உங்களால் அந்தக் குழந்தைகளில் ஒருவரைக்கூட சொல்லி விட முடியாது. ஆனாலும் அந்தக் கடவுள்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது எந்தவொரு கருணையும் காட்டவில்லை, அவர்களுக்கென்று எந்தவொரு உதவியையும் அனுப்பி வைக்கவுமில்லை. ஒரு குழந்தை அல்லது நாய்க்குட்டி ஏன் இவ்வாறு துயரத்திற்குள்ளாக வேண்டும் என்பதை விளக்க முடியாத கடவுளால் நிச்சயம் அந்த குழந்தைக்கு அல்லது நாய்க்குட்டிக்கு எந்தவொரு பயனும் இருக்கப் போவதில்லை – அந்தக் கடவுளுக்குமேகூட.

https://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2023/11/26/w900X450/Palestinian_Prisoner_Release.JPG?w=900&dpr=1.0
காஸாவிலிருந்து ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலியச் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியக் கைதிகளை ஏற்றிச் செல்லும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேருந்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில் சுற்றி வளைத்திருந்த கூட்டம் (2023 நவம்பர் 26)

ஏதோவொரு கட்டத்தில் – ஒருவேளை மரணத்திற்குப் பிறகாவது நிலைபேறான நீதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை தேவைப்படுகின்ற நமக்கு, மிகப் பெரிய தாடியுடன் உள்ள ஆண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மடிக்கணினி எதுவுமில்லாமல் இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருப்பதாக நம்புவது அதை விடக் கடினமான காரியமாகவே இருக்கும்.

பியர்-சைமன், மார்க்கி டி லாப்லேஸ் (1749-1827) மிகச் சிறந்த பிரெஞ்சு கணிதவியலாளர்கள், வானியல் இயற்பியலாளர்களில் ஒருவராவார். சூரிய குடும்பம் பற்றி உறுதியான ஆய்வை மேற்கொண்ட லாப்லேஸ் (கடந்த வெள்ளியன்று நெப்போலியன் திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் வெளியிட்டதிலிருந்து ஜோவாகின் பீனிக்ஸ் போலத் தோற்றமளிக்கத் தொடங்கியுள்ள) நெப்போலியனிடம் தனது கருதுகோளை முன்வைத்தார். அப்போது அவரிடம் அந்தக் கோட்பாட்டில் சூரிய குடும்பத்தை உருவாக்கியவரைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பது உண்மையா என்று நெப்போலியன் கேட்டதாகவும், ‘அதுபோன்ற கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை’ என்று லாப்லேஸ் பதிலளித்தார் என்றும் கூறப்படுகிறது.

பியர்-சைமன், மார்க்கி டி லாப்லேஸ்

கடவுளை அவ்வாறு லாப்லேஸ் மறுத்த பிறகு, அறிவொளிக் காலத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட மிகப் பெரிய அறிவியலாளர்கள் பலரும் நமது இருப்புக்கான மிக மிக அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாக கடவுள் என்பவர் இருக்கவில்லை என்று கூறி கடவுளை முழுமையாக நிராகரித்தனர். பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கத்தில் –ஒரு மோட்டார் காரின் இயக்கத்திலும்கூட – கடவுளின் பங்கு இருப்பதற்கான காரணத்தை பீட்டர் சிங்கர், சாம் ஹாரிஸ், யுவல் ஹராரி போன்ற சமகாலத்து சிந்தனையாளர்களாலும் காண இயலவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால், பீட்டர் சிங்கர் மனிதர்கள், விலங்குகள் மீது தேவையற்ற துயரத்தைச் சுமத்தி வருவதன் காரணமாகவே கடவுள் என்ற கருத்தை நிராகரிக்கிறார்.

ஆனாலும் நாம் கடவுளை அல்லது அவரைப் போன்று மனிதப் பண்புகளுடன் உள்ள ஒருவரை, தங்களுடைய இயல்பான வாழ்விடங்களால் வரையறுக்கப்படும் நிர்ப்பந்தங்களால் அடையாளம் காணப்படுவரை விடாமல் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக பாலைவனம் சார்ந்த ஆபிரகாமிய கடவுள்களும், அவர்களுடைய சந்ததியினரும் தாடி வைத்திருக்கின்றனர். அந்த அழகியலில் தண்ணீர் அல்லது தண்ணீரின் பற்றாக்குறையின் ஆதிக்கமே தெரிகிறது.

மறுபுறத்தில் முக்கியமான ஹிந்து கடவுள்கள் சுத்தமாக சவரம் செய்து கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் வற்றாத கங்கை நதிக்கே நன்றி சொல்ல வேண்டியிருக்கும். கிருஷ்ணனுக்கு மகாபாரதப் போர்க்களத்திலும்கூட முடிதிருத்தம் செய்பவரைக் கண்டு கொள்வதற்கான நேரம் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது. முகத்தோற்றம் குறித்த இந்த விவரங்களைப் புறந்தள்ளி விட்டு பார்த்தால் பெரும் ரத்தக்களரியை ஏற்படுத்திய குருசேத்திரத்தை கிருஷ்ணனால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றே தெரிய வருகிறது. அவனால் போர் நடைபெறாமல் தவிர்த்திடும் வகையில் பாண்டவர்களுக்கு ஒரு கிராமத்தை அல்லது ஒரு வீட்டைக் கொடுக்குமாறு துரியோதனனிடம் கேட்டுக் கொள்ளவும் முடியவில்லை. எந்த வகையில் அவன் சக்தி வாய்ந்த கடவுள்?

ராமாயணத்து ராமனாலும் போரின் அழிவுகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உண்மையில் ராவணன், அவனது அரக்கர்களுடன் ராமன் போரிடக் காரணமாக இருந்த சீதா இறுதியில் அவனை விட்டு விலகி வெளியேறி விடுகிறார். சீதாவைப் பொறுத்தவரை  ராமனுடன் இருப்பது போதும் போதுமென்றே ஆகியிருந்தது. அந்தப் போரில் குரங்கு மனிதர்களின் வலிமை, ஆதரவு தேவைப்படும் கடவுளாகவே ராமன் இருந்தான்.

ஆரம்பத்திலேயே ராமன் ஏன் ராவணனைச் சண்டைக்கு அழைத்து அந்தப் பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வந்திருக்கக் கூடாது, அவ்வாறு செய்வதை விடுத்து இவ்வளவு விரிவான கட்டமைவுகள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றன, அதற்கு உண்மையான காரணம்தான் என்ன என்று எழுந்த கேள்விகளால் சிறுவயதிலேயே நான் மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பைபிளைப் போல ராமாயணமும் ஒரு கதை என்பதாலேயே அது அவ்வாறிருக்கிறது. கதைகள் இல்லையேல் கடவுள்களும் கிடையாது. அப்படியென்றால் இந்தக் கதைகளை உருவாக்கியவர் யார்? அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்…

அந்த நிகழ்வுகளின் விளைவாக தங்கள் மீதான விசுவாசத்தைக் கட்டியெழுப்பிக் கொள்வதைத் தவிர, எதையும் கட்டுப்படுத்த முடியாதிருக்கும் கடவுள்களால் என்ன பயன்? குறிப்பிட்ட நிகழ்வுகளின் விளைவு நேர்மறையாக இருக்குமானால், அது தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் நிகழ்ந்தது என்று கருதப்படுகிறது. அவ்வாறு நிகழவில்லை என்றால், மீண்டுமொரு முறை நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கடவுள்களின் இருப்பு, நலம் எப்படியிருந்த போதிலும் உங்கள் வெற்றி அல்லது தோல்விக்கான காரணங்களாக அவர்கள் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. கடவுள்களுக்கான உத்தரவாதம் உங்கள் தலையெழுத்திலிருந்தே கிடைக்கிறது என்றாலும் ஏன் அவர்கள் நம்மைச் சுற்றி எப்போதும்  இருந்து வருகிறார்கள்? நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமா?

நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்காக பணம் வாங்கியது குறித்த மோசடி கடந்த மாதம் உச்சத்தில் பேசப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த மோசடியின் மையத்தில் இருந்த மஹுவா மொய்த்ரா துர்காதேவி வைக்கப்பட்டிருந்த பந்தலுக்குச் சென்றார். ஆக்ரோஷமான தோற்றத்துடன் அங்கே அமைக்கப்பட்டிஇருந்த காளியிடம் பிரார்த்தனை செய்து கொண்ட அவர் அதற்குப் பிறகு சமூக ஊடகத்தில் ‘மா காளி ஆட்சி செய்கிறாள்’ என்று பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அதே துர்கா பூஜை வாரத்தில் அதே கடவுளிடம் அதே அளவிற்கான பக்தியுடன் பிரார்த்தனை செய்து அவரது எதிரியான நிஷிகாந்த் துபே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழி வகுத்தது. பிரார்த்தனைகள் நம்மிடம் நேர்மையான தன்னம்பிக்கையை ஓரளவிற்கு ஏற்படுத்தித் தருகின்றன என்றாலும், எதிரிகளாக தங்களை வரித்துக் கொண்டிருக்கும் இருவர் ஒரே கடவுளிடம் முறையிடுவதில் உள்ள அபத்தம் அப்போது மிகத் தெளிவாகவே தெரிந்தது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஹிந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையிலான அவர்களின் முயற்சிகள் மிகம் முக்கியமாக தெய்வபக்தியையே நம்பியுள்ளன. ராமனுக்கு எதிராகச் செயல்படுவது ‘ராம ராஜ்ஜியத்திற்கு’ எதிரானது என்று மிக எளிதாகப் புரிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளது.

பக்தியுள்ள ஹிந்து என்று தன்னை பிறர் கருத வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை (எடுத்துக்காட்டாக கேதார்நாத் குகையில் அவர் மேற்கொண்ட தியானம் குறித்த புகைப்படத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) எதிர்க்கட்சிகளும், அவற்றின் சமூக ஊடக ட்ரோல்களும் கேலி செய்தன. ஆயினும் காங்கிரஸின் ராகுல் காந்தியும் அதையே திரும்பச் செய்து காட்டுகிறார். பிரதமர் சென்ற இடங்களுக்கு அவரும் செல்கிறார். ஒரே கல், மூடநம்பிக்கை கொண்ட இரண்டு எதிரிகள்.

C:\Users\Chandraguru\Pictures\176387-modi2.jpg

எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் தாராளவாதிகளாக இருந்தாலும், பிறர் தங்களை நாத்திகர்களாக அல்லது அஞ்ஞானவாதிகளாகப் பார்ப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கிடையிலான போட்டி பட்டினியில் இருக்கும் ஒரு குழந்தையைக்கூட காப்பாற்றிட முடியாத குறிப்பிட்ட வடிவிலான கல்லை கடவுள் என்று நம்புவதாகக் காட்டி நல்லவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்வதற்கான போட்டியாகவே இருக்கிறது. நம்ப முடியாத அற்புதங்களை நம்புவதற்கான மனிதர்களின் தேவையை எதுவொன்றாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அது ஒருவேளை அற்புதங்கள் வாழ்க்கையின் சாராம்சம் என்று கருதுகின்ற மனிதர்களின் இயல்பாக இருக்கலாம்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து பதினைந்து லட்சம் கிமீ தொலைவில் உள்ள இலக்கைச் சென்றடைந்தது. அந்த தொலைநோக்கியால் 1300 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவற்றைப் பார்க்க முடியும். சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பின் மூலம் பிரபஞ்சம் உருவான நேரம் உங்கள் நாய் ஓர் அணுவாகக் கூட தோன்றியிராத நேரம். படைப்பின், கடவுளின் ரகசியத்தை ஓரளவிற்கு ஆய்வு செய்துள்ள போதிலும் நம்மால் அவன்/அவள்/அது என்று எதுவும் இருப்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் காண முடியவில்லை. கடவுள் என்று யாருமில்லை என்பதே உண்மையில் அவரைக் காண முடியாததற்கான எளிய காரணமாக இருக்கிறது. நம்மைத் தவிர அங்கே அல்லது இங்கே வேறு யாரும் இருக்கவில்லை. அதுவே பசி, வறுமை, போருக்கு அப்பால் மனிதர்களிடம் பகுத்தறிவும், பரிவும் மேலோங்க வேண்டும் என்பதற்கான கூடுதல் காரணமாக இருக்கிறது.

https://www.newindianexpress.com/opinions/2023/nov/28/human-compassion-not-religion-the-answer-to-global-scourges-2636719.html

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *