மனிதக் கொடுமையும், இரண்டு கர்ப்பங்களின் கதையும்
கேரளாவில் யானை ஒன்று இறந்தபோது நம்மிடம் மிகச்சரியாக இருந்த சீற்றமும் பச்சாத்தாபமும், இந்த கோவிட் காலத்தில், நெரிசலான சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஜாமியா மாணவரான சஃபூரா சர்கார் விஷயத்தில் எங்கே போய் விட்டது?
பெடபிரதா பெயின், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அறிவியலாளர். லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மும்பைக்கு இடையே வாழ்ந்து வருகிறார். விருது பெற்ற சிட்டகாங் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.
கர்ப்பிணி யானை ஒன்று ஆற்றின் நடுவே நின்று கொடூரமான மரணத்திற்குள்ளான செய்தியை நான் முதன்முதலாக சமூக ஊடகங்களில் பார்த்தேன் – குறிப்பாகச் சொல்வதென்றால் வாட்ஸ்ஆப்பில் பார்த்தேன். வெடிகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சிலர் வேண்டுமென்றே அந்த யானைக்கு உணவாக அளித்ததாக ஆரம்பத்தில் வெளியான செய்திகள் தெரிவித்தன.
அந்த செய்திகளின் அடிப்படையில், அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்களின் கோபமும் வருத்தமும் நிறைந்த பதிவுகள் உட்பட, அதற்கான எதிர்வினைகளுடன் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிந்தன. மனிதர்களால் அப்பாவி யானை ஒன்றிடம், அதுவும் கர்ப்பமாக இருந்த யானையிடம் எப்படி இந்த அளவிற்கு கொடூரமாக நடந்து கொள்ள முடிந்தது என்று கோபத்துடன், பதிவுகளுக்கு அடுத்து பதிவுகள் என்று குற்றவாளிகளாக் கருதப்பட்டவர்கள் மீது சமூக ஊடகங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஆனால் உண்மையில் நடந்திருந்த நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அன்னாசிப்பழத்தை யாரும் வேண்டுமென்றே அந்த யானைக்கு உணவாக அளிக்கவில்லை என்றே இப்போது தெரிய வந்திருக்கிறது. காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொறி, இவ்வாறான விபரீதமான விளைவை ஏற்படுத்தியிருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும். வெடி நிரப்பப்பட்ட பழங்களைப் பயன்படுத்தி காட்டுப்பன்றிகளை விரட்டுவது, தோட்டங்களில் வழக்கமான நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. தன்னுடைய வாழ்விடத்திலிருந்து வெளியே வந்து அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த துரதிர்ஷ்டவசமான யானை, தனக்கு ஒருபோதும் வழக்கமில்லாத அந்தப் பழத்தை உட்கொண்டது.
மனிதகுலம் இருக்கின்ற பகுதிகளில் இருக்கின்ற இயற்கை குழப்பமானதாகவும், கொடூரமானதாகவும் இருக்கிறது.
அது விபத்து அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்டது என்று விவரங்கள் எவ்வாறாக கூறப்பட்டாலும், அந்த கர்ப்பிணி யானையின் வேதனை நிரம்பிய மெதுவான மரணம், எந்தவொரு கண்ணியமான மனிதனின் இதயத்திலும் வருத்தத்தையும் வேதனையையும் நிரப்புவதாகவே இருக்கிறது. எல்லா சமூகங்களிலும், கர்ப்பம் என்பது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. புதியவர் ஒருவரின் வருகையை அறிவிப்பதாக இருக்கிற கர்ப்பம், நம்பிக்கை மற்றும் முன்னோக்கிய நகர்விற்கான அடையாளமாகவும் உள்ளது.
ஆனால் சஃபூரா சர்காரின் நிலைமை என்ன?
சஃபூரா சர்கார் யார் என்பதையோ அல்லது அவர் ஏன் முக்கியம் என்பதையோ வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகம் ஒருபோதும் நமக்குச் சொல்லாது. அவர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மாணவி. இப்போது தனது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் அவர் இருக்கிறார். இது அவரது கர்ப்ப காலத்தில் மிகமுக்கியமான காலமாகும்.
அகதிகள் இந்திய குடியுரிமையைப் பெறுவதைத் தடுக்கின்ற வகையில் மதத்தை அளவுகோலாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த, நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய, சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எந்தவொரு வன்முறைச் செயலிலும் ஈடுபட்டிருந்ததாகவோ, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாகவோ அல்லது கிரிமினல் வழக்கு அவர் மீது பதியப்பட்டு இருப்பதாலோ, சஃபூரா கைது செய்யப்படவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவுமே அவர் மீது இல்லை. மிகவும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்த்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டு, வேறு எந்த காரணமுமின்றி, குடியுரிமை சட்டத் திருத்தத்தை வெளிப்படையாக விமர்சித்தவர், அந்த சட்டத் திருத்தத்தை அமைதியான முறையில் எதிர்ப்பதற்காக மற்றவர்களை அணிதிரட்டினார் என்ற காரணங்களுக்காக மட்டுமே, தனக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திய அவர் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தன்னுடைய மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே சஃபூரா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு எதிரான ஒரே உறுதியான குற்றச்சாட்டாக, அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சாலையில் போக்குவரத்தைத் தடுக்க அவர் உதவியதாகவே டெல்லி காவல்துறையினரால் கயிறு திரிக்க முடிந்திருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் எந்த வன்முறையும் நிகழாத, அந்த ஆர்ப்பாட்டத்தை, அவருக்கு எந்தப் பங்கும் இல்லாத, அந்த இடத்துடனும், நேரத்துடனும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, டெல்லியில் நடத்தப்பட்ட கலவரத்திற்கான பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவையனைத்தும் இருப்பதாக காவல்துறை கூறியதால், அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் உள்ள அடக்குமுறை விதிகள், ஜாமீன் பெறுவதை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, இந்த தொற்றுநோய் காலத்தில் நெரிசலான சிறைச்சாலைக்குள் அடைத்து விட்டு ஜாமீனை மறுத்திருப்பது காட்டுமிராண்டித்தனமான செயலாகவே இருக்கிறது. கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற ஆபத்து அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர் என்பதாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கைது நடந்தேறியிருக்கிறது. ’உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும், வைரஸ் தொற்றுநோய்களுக்கான எதிர்வினையையும் கர்ப்பம் பொதுவாக மாற்றியமைக்கிறது. சிலசமயங்களில் மிகவும் கடுமையான நோய் அறிகுறிகளுடன் தொடர்புடையதாக அது இருக்கிறது, கோவிட்-19ஐப் பொறுத்த வரையிலும் அது அந்த மாதிரியாகவே இருக்கின்றது’ என்று இந்தியாவிலும் ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு வன்முறைச் செயலிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்காத போதிலும், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருக்கின்ற நிலையில், 2020 பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி வன்முறையின் போது, கையில் ஆயுதங்களுடன் பிடிபட்ட ஒருவருக்கு ஜாமீன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை என்பது நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்குகிறது. ஆயுதங்களுடன் பிடிபட்ட அந்த நபருக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட போது, இந்த பெரும் தொற்று நோய் இருப்பது கூடுதல் காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது, இப்போது முரண்பாடாகவும் இருக்கிறது.
ஜனவரி பிற்பகுதியில் தங்களுடைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ’துரோகிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று முழக்கமிட்ட போது, அது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிய முழக்கமாகவே இருந்தது. அவரது இந்த செயல் வன்முறையைத் தூண்டும் வகையில் தெளிவாக இருந்தபோதிலும், அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறிய காவல்துறை, அவருக்கு எதிராக. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு எங்கே தொடரப் போகிறது?
உள்ளூர் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் கனல் பறக்கும் பேச்சுக்கள் மற்றும் அவர் விடுத்த நேரடி வன்முறை அச்சுறுத்தல்களையும் ஒருவரால் இங்கே நினைவு கூர முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில், அவரும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்த முடிவை எடுக்குமாறு காவல்துறையிடம் கேட்ட, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக வந்த நீதிபதியிடம், மிஸ்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ’இது சரியான நேரமில்லை’ என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
எவரொருவரும் இவ்வளவு மோசமான கதையை, இதைவிடச் சிறப்பாக எழுதியிருக்க முடியாது. வன்முறையைத் தூண்டிய அமைச்சர், வெறுக்கத்தக்க பேச்சுக்களைத் தூண்டிய அரசியல்வாதி, கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட துப்பாக்கி கடத்தல்காரன் என்று இவர்கள் எல்லோரும் மிக வசதியாக வெளியே அமர்ந்திருக்கிறார்கள். நீதியைக் காப்பாற்ற முயற்சித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட அதே நேரத்தில் கருத்து வேறுபாட்டிற்கான தனது உரிமையைப் பயன்படுத்தியதற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவர், இந்த கோவிட் காலத்தின்போது, மிக அதிகமான நெரிசல் உள்ள சிறைக்குள் மிகக்கொடூரமாகத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்த கர்ப்பிணிப் பெண் விஷயத்தில் சீற்றமும் பச்சாத்தாபமும் ஏன் இப்போது காணப்படவில்லை? பிரபலங்களும் அரசியல்வாதிகளும் ஏன் அந்தப் பெண்ணிற்காக குரல் எழுப்பவில்லை? சமூக ஊடகங்கள் ஏன் நீதிக்கான கோபத்துடன் இந்த விஷயத்தைப் பார்க்கவில்லை? அதிகாரத்தில் இருப்பவர்களால் பழிவாங்கப்படுவோம் என்ற பயமா, அல்லது பிரதான ஊடகங்களின் திட்டமிட்ட மௌனமா அல்லது இந்த பிரச்சனை குறித்த சரியான பார்வை இல்லையா? ஒருவேளை இவையனைத்தும் சேர்ந்து இருக்கலாம்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், சமமாக வருத்தப்பட்டவர்கள் நிச்சயமாக என்னைப் போலவே, ஏராளமானோர் இருக்கிறார்கள். ஒருவேளை தவறான தகவல்கள் மூடி மறைத்ததால் அவர்களுடைய குரல்கள் கேட்காமல் போயிருக்கலாம். ஆனாலும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அதிகாரத்தில் இருப்பவர்களால் இவ்வாறு ’பாடம் கற்பிக்கப்படுவது’ குறித்து இருக்கின்ற இந்த பலத்த மௌனம், நாட்டிற்கு நல்லதல்ல. சமீப காலங்களில் சஃபூரா உள்ளிட்ட பலரின் கைதுகள் பற்றி கூறப்பட வேண்டியவை ஏராளம் உள்ளன என்றாலும், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காத்து நிற்க முடியாததொரு சமூகத்தை, இந்த நிலத்தில் வாழ்கின்ற மனிதர்கள், விலங்குகள் என்று ஒவ்வொரு உயிரினத்தையும் காட்டிக் கொடுக்கும் திறன் கொண்ட சமூகம் என்று மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.
https://thewire.in/rights/human-cruelty-and-a-tale-of-two-pregnancies
நன்றி: தி வயர் இணைய இதழ்
தமிழில்
தா.சந்திரகுரு
மிகக்கொடுமையான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான பல்வேறு உதாரணங்களில் சஃபூரா சர்கார் அவர்களின் கைது நடவடிக்கையும் ஒன்று. காலத்தை மாற்ற, வாய்ப்பிற்காகக் காத்திருப்போம். இப்படிப்பட்ட விசயங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளை அதிக மக்களைச் சென்றடைய நாம் முயற்சிக்க வேண்டும். முதலில், வாட்ஸ் ஆப்-க்கு ஆப்பு வைக்கனும்.