இந்திய மரபணுவியல் வித்தகர் Dr.குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumarasamy Thangaraj)
தொடர் 72 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
டாக்டர் குமாரசாமி தங்கராஜ் ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்குலர் பயாலஜி (Cellular and Molecular Biology) என்னும் CSIR ஆய்வு நிறுவனத்தில் மரபணுவியல் (Human Genetics) ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். அற்புதமான பல அடிப்படை கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர். தெற்காசிய நாட்டு மக்கள் தொகையில் தீவிரமாக ஆய்வு செய்து இந்த பிராந்தியத்துக்கு மட்டும் வரக்கூடிய நோய்களின் மரபணு சார்ந்த வரலாற்றை அறிவியல் ரீதியில் பதிவு செய்வதில் வெற்றி பெற்றவர்.
Dr.குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumarasamy Thangaraj) அவர்களின் முக்கிய ஆராய்ச்சி ஆர்வங்கள் நவீன மனிதர்களின் தோற்றம்.. தொடர்பான மரபணு கட்டு உடைப்பில் தொடங்கியது. இந்த துறை மிகவும் சிக்கலான அறிவியல் துறை ஆகும். தடயவியல் மரபியல் என்று இது அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் பாலின நிர்ணயம் எப்படி பரவலாக சாதிக்கப்படுகிறது என்பது குறித்த இவருடைய ஆய்வு முடிவுகள் உலகப் பிரசித்தி பெற்றவை. ஆண்களின் மலட்டு தன்மையும், இருதய நோய்களும் குறித்த இவருடைய மரபணு அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் மருத்துவதுறையையே உலுக்கி உள்ளன.

தடயவியல் மரபியல் என்பது மருத்துவ சட்ட நோக்கங்களுக்காக உயிரியல் உறவை உறுதிப்படுத்துதல் மற்றும் டிஎன்ஏ (DNA) கைரேகை சேவை ஆகியவைகளை வழங்கும் ஒரு துறையாக உள்ளது. ஒரு குழந்தைக்கு யார் பெற்றோர் என்று கண்டுபிடிக்கின்ற சவால்கள் இன்றைக்கு சட்டத்துறையில் நிறையவே நிலவுகின்றன.. இதைத் தவிர நடக்கின்ற பல வகையான குற்றங்களின் பின்னணியில் டிஎன்ஏ (DNA) கைரேகை சேவை என்பது டாக்டர் தங்கராஜ் போன்றவர்களின் தேவையை உணர வைத்துள்ளது. ஒருவரின் டிஎன்ஏ (DNA) விவரக்குறிப்பு என்பது சட்ட மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக டிஎன்ஏ (DNA) சுய விவரத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும் ஒருவரின் டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு முறைகள் தொழில்நுட்பத்திற்கு தொழில்நுட்பம் மாறுபடுகிறது.
நவீன டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வுவானது மக்கள் தொகைக்குள் உருவாக்கப்பட்ட சுயவிவரத்தின் விவரக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் பகுதி வாரியாக நாம் மக்களின் டி என் ஏ சுயவிபர குறிப்புகளை சேகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது இவற்றுக்கு DNA வங்கி என்று பெயர்.. இப்படி ஒன்றை நம் நாட்டில் உருவாக்குவதற்கு பங்களிப்பு அளித்த பிரதான விஞ்ஞானிகளில் ஒருவர்தான் Dr.குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumarasamy Thangaraj).

டாக்டர் தங்கராஜ் அவர்களின் அடுத்த முக்கிய கண்டுபிடிப்பு மானுடவியல் மரபணுவியல் (Human Genetics) என்னும் துறையைச் சார்ந்தது. இந்தியாவிற்கு அந்த வகையில் மிக அற்புதமான பங்களிப்பு ஒன்றை அவர் வழங்கியுள்ளார். அந்தமான் தீவுகளில் பழங்குடி இன மக்களின் மரபணு சோதனைகளை முறைப்படி மேற்கொண்டு 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து தெற்கு கடலோர பாதை வழியாக நம் நாட்டை நோக்கி இடம் பெயர்ந்த முதல் நவீன மனிதர்கள் அவர்கள் என்பதை கண்டுபிடித்து SCIENCE எனும் சர்வதேச இதழில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.
அதைத் தொடர்ந்து இன்றைய இந்திய மக்களின் இருவேறு பட் மரபணு குழுக்களை கண்டறிந்து அறிவித்தவர். அவர் சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்பக்கால மனிதர்கள் குறித்து பேசுகின்ற அவருடைய கட்டுரைகள் அந்த மூதாதையர்களின் தென்னிந்தியர்கள் என்பதை நிரூபித்ததோடு, நாம் இந்தியாவின் ஒரு பகுதி இந்திய மூதாதையர்கள் வட இந்தியர்கள் என்றும் அவற்றை பிரித்து அறிவித்தார். தென்னிந்தியர்களை அவருடைய மரபணு சார்ந்து ASI என்று குறிப்பிடும் அவருடைய கண்டுபிடிப்பு வட இந்திய மரபணு சார்ந்த இந்திய மக்களை ANI என்று குறிப்பிடுகிறது. இது தொடர்பான அவருடைய முக்கிய கண்டுபிடிப்புகள், உலக பிரசித்தி பெற்ற NATURE ஆய்விதழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. கடந்த 2000 முதல் 4000 ஆண்டுகளில் ASI மற்றும் ANI கலப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் டாக்டர் தங்கராஜின் மரபணுவியல் ஆய்வுகள் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தன. இது தொடர்பான மற்றொரு முக்கியமான ஆய்வுக்கட்டுரை நேச்சர் ஜெனடிக்ஸ் என்னும் இதழில் 2017 ஆண்டு வெளிவந்தது.

தடையவியல் மரபணுவியல் துறையிலும் மானுடவியல் மரபணுவியல் (Human Genetics) துறையிலும் தன்னுடைய முறையான பங்களிப்பை செலுத்திய Dr.குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumarasamy Thangaraj) இந்தியாவின் மருத்துவ மரபணுவியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அவருடைய ஆராய்ச்சி மையமானது மூலக் கூறு ஆய்வுகளை முறையாக மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டின் இன்னொரு பெரிய சாபக்கேடு குழந்தையின்மைக்கு எப்போதும் பெண்களை குறை கூறுவது ஆகும். இந்திய ஆண்களின் மலட்டுத்தன்மை இந்தியாவுக்கு என்றே உரிய பிரச்சனை என்று தங்கராஜ் நிரூபித்திருக்கிறார். நடு வயதுக்காரர்களின் இருதய நோய்கள் இந்தியாவின் மிகப்பெரிய சிக்கலாக கருதப்படும் பாலின நிர்ணயம் போன்றவைகளின் துறைகளில் அன்றாடம் அவருடைய கண்டுபிடிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குமாரசாமி தங்கராஜ் 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செய்யூரில் பிறந்தார். காஞ்சிபுரத்தில் தன்னுடைய இளம் கலை பட்டத்திற்கு உயிரியலை எடுத்து படித்தார். முதுகலை பட்டம் வென்ற பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டு மரபணுவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்குலர் பயாலஜி தலைமையகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றத் தொடங்கினார்.

Dr.குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumarasamy Thangaraj) பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். இந்தியன் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் மற்றும் தேசிய அறிவியல் அகாடமி ஆகியவற்றின் கௌரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டவர். ஜே.சி போஸ் பெல்லோஷிப் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர். ஹியூமன் ஜெனெடிக்ஸ் டெக்ஸ்ட் எனும் சர்வதேச இதழில் முதன்மை ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார். மிடோசொண்ட்ரியா என்று ஒரு சர்வதேச இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதன் முதன்மை ஆசிரியர் குழுவிலும் டாக்டர் தங்கராஜ் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் பிறந்த ஒரு அறிஞரின் அரிய மரபணுவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் போற்றும் தமிழக லேசர் இயற்பியல் விஞ்ஞானி டாக்டர். வடிவேல் மாசிலாமணி (Prof. Dr. Vadivel Masilamani)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Wonderful note on the achievements of Dr.Thangaraj sir in a nut shell.
Thanks sir for giving a chance to know about great scientists
அறிவியல் வரலாற்றில் மரபியல் என்ற சிறப்பு பிரிவு ஏற்பட்டு 160 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதிலும் மனித மரபணு என்ற துணைப்பிரிவு 1990 ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பெற்றது. ஆனால் அசுர வேகத்தில் வளர்ந்து இன்று இன்றியமையாததொன்றாக அமைந்து விட்டது. அந்தத்துறையில் பல மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த விஞ்ஞானி முனைவர் தங்கராஜ் அவர்களின் கண்டுபிடிப்புகளை எளிய நடையில் வழங்கியுள்ள அறிவியல் ஆசான் திரு ஆயிஷா நடராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நமக்கு இடுக்கண் வரும்போதெல்லாம் ‘நம் தலை எழுத்து’ என்று நொந்துகொள்வோம். இக்கட்டுரையைப் படித்தபின் தலை எழுத்து என்பது உண்மையில் நம் உடம்பில் ஒவ்வொரு மரபணுவிலும் நுண்ணியமாக பதிக்கப்பட்டுள்ளது என்பது புரியும்.
Pingback: விண்வெளி துறை இயற்பியலாளர் மவுமிதா தத்தா