ஹம்போல்ட் (Humboldt) Humboldt Avar Nesitha Iyarkai - நூல் அறிமுகம் - அறிவியல் (Science) - https://bookday.in/

ஹம்போல்ட் (Humboldt) – நூல் அறிமுகம்

ஹம்போல்ட் (Humboldt) – நூல் அறிமுகம்

ஓங்கில் கூட்டம் :

இப்பதிப்பகத்தார் வெளியிடும் புத்தகங்கள் எல்லாம் அறியாத பல மேதைகளின் வாழ்வை எளிய மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அமைந்திருக்கிறது. குழந்தைகள் வாசிக்கக்கூடிய சிறு புத்தகமாக இருந்தாலும் பெரியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பற்றி:

அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் ஹேமபிரபா அவர்கள் தமிழில் அறிவியல் கட்டுரைகள் , கதைகள், பிற படைப்புகளை எழுதி வருகிறார். இயற்கை அறிவியலாளர் ஹம்போல்டைப் பற்றி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய சிறு பத்தியிலான கட்டுரையையும், துளிர் அறிவியல் மலரில் இவர் எழுதி வெளிவந்த விரிவான கட்டுரையைப் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம்.

இனி நூல் பற்றி…..

பொதுவாக அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் , மேதைகள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பம் வைத்து இருக்கின்றோம் . கிட்டதட்ட 2.0 படத்தில் ரஜினிகாந்த் அறிவியல் கூடத்தில் இருந்து வெளியே வருவார் இல்லையா… , அது போன்று நீண்ட தலைமுடியுடனும் , வெளி உலக தொடர்பின்றி ஒரு அறைக்குள்ளும் வாழ்வது போல்.

ஆனால் , அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் ஓர் இயற்கை விரும்பி . புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அறைக்குள்ளே படிப்பதை விடுத்து, டெகேல்‌ ஃபாரஸ்ட் ( Tegel forest ) எனப்படும் காட்டுக்குள் ஒரு நடை பயணம் மேற்கொள்வாராம் . புத்தகத்தையே விரும்பாத இவரின் புத்தகங்களை வாங்குவதற்காக பின்னாளில் மக்கள் கூட்டம் அலை பாய்ந்தது என்றால் நம்ப முடிகிறதா..?

எல்லா தாயும் தன் மகன் நல்ல உத்தியோகத்தில், அதுவும் நிரந்தரமான வருமானத்தில் அமர வேண்டுமென்று ஆசை கொள்வார்கள் அல்லவா? . அதுபோலவே ஹம்போல்ட்டின் தாயாரும் விருப்பப்பட்டு அரசாங்க நிர்வாகம் குறித்தும், பொருளாதார அறிவைப் பெறவும் ஃப்ராங்க்பர்ட் நகரிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் ஹம்போல்ட்டின் ஆசையோ உலகைச் சுற்றிப் பார்த்து ஆய்வுப் பயணம் மூலம் கற்றுக் கொள்வதிலேயே இருக்கிறது. முதன் முறையாக ஆசையை நிறைவேற்றும் வகையில் நண்பருடன் இணைந்து ஐரோப்பாவை சுற்றுகிறார் . ஆய்வு பயணம் சார்ந்த பல புத்தகங்களை வாசித்து தன்னை நிரப்பிக் கொள்கிறார்.

பயணம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் பார்ப்பதை , கேட்டதை, ரசித்ததை , கண்டறிந்ததை என அனைத்தையும் பதிவு செய்கிறார் .‌ நம்மைப் போல சுற்றுலா சென்றால் இன்பமாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை. அவருடைய நோக்கமே வேறு..
அவ்வாறு தொகுத்தவற்றையெல்லாம் ஒரு நூலாக வெளியிடுகிறார். தன் தாயாரின் மறைவுக்குப் பிறகு கிடைத்த சொத்துப் பணத்தைக் கொண்டு நீண்ட ஆய்வுப் பயணம் செல்வதற்கு ஆயத்தமாகிறார்.

பயணத்தில் சில தடைகள் இருந்தாலும் தன் ஆய்வுக்குத் தேவையென கருதிய பொருட்களான நுண்ணோக்கி ,தொலைநோக்கி, திசைகாட்டி ,அழுத்தமானி, தாவரங்கள் , விதைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பெட்டிகளை சேகரித்துக் கொண்டு “பிஸாரோ” என கப்பலில் பயணத்தைத் தொடங்குகிறார். பகல் முழுவதும் காணும் கடல் வாழ் உயிரினங்கள் , பறவைகள் இவற்றை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் ,இரவு முழுதும் வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். கடல் பயணத்தில் ஏதேனும் கொள்ளை ஏற்படாமல் இருக்கவும், திருடர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் சிறு விளக்கைக் கூட பயன்படுத்தாமல் இருட்டுக்குள்ளே பயணம் மேற்கொள்கிறார்.

இமயமலையின் உயரம் என்னவென்று கேட்டால் கண்ணை மூடி சொல்லி விடுவோம் 8848 மீ என்று. ஆனால் அப்போதைய காலத்தில் இமயமலையின் உயரம் கணக்கிடப்படவில்லை. ஆகையால் 6400 மீட்டர் உயரம் உள்ள சிம்பரோசாதான் உயரமான மலை என்று நினைத்திருந்தார்கள். அந்த மலையில் யாருடைய உதவியுமின்றி ஹம்போல்ட் 5920 மீ உயரம் பனியையும் பொருட்படுத்தாது, ரத்தம் சொட்டிய கால்களுடன் ஏறினார். இப்படி தான் நடத்த பாதையெங்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் இவர். மேற்கொள்ளும் பயணத்தின் போது எப்பேர்பட்ட இடையூறுகள் வந்தாலும் , தன் உயிருக்கு அது ஆபத்தானதாய் இருந்தாலும் , கவலை கொள்ளாமல் தான் சேகரித்தவைகளை பாதுகாப்பதிலேயே முழு கவனத்தையும் கொண்டிருந்தார். இது அவருடன் பயணித்தவர்களுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.

நெப்போலியன் மாவீரர். ஹம்போல்ட்டும் நெப்போலியனும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். இருவருக்கும் சமமான பாராட்டும் புகழும் இருந்தது என்றால் நினைத்துப் பாருங்கள்… ஒரு அறிவியலாளரை எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் ஒரு மாவீரனோடு ஒப்பிட்டு என்று. நெப்போலியனே இவரை கண்டு பொறாமைப் பட்டாராம்.

“Essay on the Geography of Plants” , “Views of Nature” போன்ற நூல்களை தம் ஆய்வுப் பயணம் மூலம் வெளிக்கொணர்ந்தார். இதில் இரண்டாவது புத்தகம் 11 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரபலமான ஒன்று. கவிஞர்கள் , அறிவியலாளர்கள் , அரசியலாளர்கள் என அனைவராலும் கவரப்பட்ட புத்தகம் இது. ஏன் ஹம்போல்ட்டுக்கும் மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இவரின் புத்தகங்களை படித்துவிட்டு சார்லஸ் டார்வின் மருத்துவ படிப்பை விட்டு விட்டு பயணம் மேற்கொண்டார் என்றால் பாருங்கள், பயணம் எத்தனை சுவாரஸ்யமானதென. காஸ்மாஸ் என்னும் பிரபலமான புத்தகத்தின் ஐந்தாவது பாகத்தை தொகுத்துக் கொண்டிருக்கும் பொழுது , அவர் வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இவ்வுலக வாழ்வை துறக்கின்றார்.‌

எளிய மொழிநடையில் பிற நாட்டு அறிவியல் அறிஞர்களையும், நம் நாட்டில் நமக்குத் தெரியாத அறிவியல் அறிஞர்களையும் வெளிப்படுத்தும் ஓங்கில் கூட்டத்தின் படைப்புகள் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டும்.

விமர்சித்தவர்..

நூலின் தகவல்கள் : 

புத்தகத்தின் பெயர் : ஹம்போல்ட்
ஆசிரியர் : ஹேமபிரபா
தலைப்பு : பயணக் கட்டுரை
பதிப்பகம் : ஓங்கில் கூட்டம்
பக்கங்கள் : 24

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பா விமலா தேவி
பட்டுக்கோட்டை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *