பசி – சத்யா சம்பத்

Hunger (பசி) Poetry By Sathya Sampath (சத்யா சம்பத்). Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.பசி

ஊரடங்கில் இருந்தமக்களுக்கு
வயிற்றுப் பசியை அடக்க வழி இல்லை
மூன்று வேளை சோறு இரண்டு வேளையாகி,
ஒரு வேளையாக குறைந்த போதும்,
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

காலை முதல் மாலை வரை
உழைத்து வந்தடையும் மக்கள்
வீட்டில் முடங்கியிருப்பதைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

தெருவெங்கும் “பூ “விற்று
வாசனை பரப்புபவனின் வீடு
“பூ” உதிர்ந்த நாராக கருகுவதைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

உண்ண நேரமின்றி
உழைப்பவரின் உடனடி பசியாற்றும்
டீ மாஸ்டரின் வயிறு
ஒட்டி கிடப்பதைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

ஊசி பாசி விற்று
வயிற்றைக் கழுவுபவரின் வீட்டடுப்பில்
பூனை தூங்குவதை கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

எப்பொழுது பள்ளி திறக்கும்
எப்பொழுது சத்துணவு கிடைக்கும் என்று
ஏங்கும் பிஞ்சுகளைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

இந்த வயிற்றுப் பசியை
கொரோனா எப்பொழுது அடக்கும் என்று
யாருக்கும் தெரியவில்லை

– சத்யா சம்பத்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.