இன்று பள்ளி மாணவி ஒருவர் அனுப்பி வைத்திருந்த செய்தி என்னை மிகவும் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. வேறொருவரின் செயல்களுக்காக நான் ஒருபோதும் இதுபோன்று குற்ற உணர்வுக்கு உள்ளானதாக என்னுடைய நினைவில் எதுவுமில்லை. நம்மிடையே இருக்கின்ற வெறுப்புணர்வை விதைக்கின்ற வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மூலமாகப் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நம்முடைய குழந்தைகளை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியாது போய் விடும். அந்த மாணவி எனக்கு அனுப்பி வைத்திருந்த செய்தியில் பாதிப்பேர் ஹிந்துக்கள், பாதிப்பேர் முஸ்லீம்களாக இருக்கின்ற தங்கள் வகுப்புக்கென்று இருக்கும் குழுவிடம் வகுப்புவாதம் கொண்ட செய்தியொன்றை ஆசிரியர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஹிந்தி ஆசிரியர் மனதைப் பாதிக்கின்ற வீடியோ ஒன்றை மக்களைப் பிளவுபடுத்துகின்ற செய்தியுடன் இணைத்து தங்களுடைய குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார் என்றும் அந்தச் சிறுமி குறிப்பிட்டிருந்தார்.
‘ஆசிரியரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் சிறுமி ஒருவளின் தொண்டை மீது கத்தியை வைத்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை நன்கு கவனித்த என்னால் முஸ்லீம் பையன் ஒருவன் மீது தவறுதலாகக் குற்றம் சாட்டும் வகையில் அது இருப்பதைக் காண முடிந்தது. உண்மையில் போலிச் செய்தியொன்றைப் பரப்பி மாணவர்களுக்கிடையே வகுப்புவாத மோதலை உருவாக்க அந்த ஆசிரியர் முயன்றுள்ளார். இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அந்தச் செய்தி வேண்டுகோளுடன் இருந்தது. ஆசிரியர்களை வணங்கி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி வருகின்ற நாட்டில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம் ஹிந்து-முஸ்லீம் என்ற விவாதத்தைப் பரப்புவதைப் பற்றி என்ன சொல்ல?
வீடியோவில் உள்ள சிறுவன் முஸ்லீம் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அந்தச் சிறுமியை அவன் கொல்ல முயற்சி மேற்கொள்வதாகவும் வீடியோவைப் பகிர்ந்திருந்த அந்த ஹிந்தி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். பகிரப்பட்ட அந்த வீடியோவுடன் ‘ஜாகோ (எழுந்திரு) ஹிந்து, இது நாம் ஒன்றுபட வேண்டிய நேரம். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற வேண்டுகோளும் இணைந்திருந்தது.
ஆசிரியர் அனுப்பி வைத்த வாட்ஸ்ஆப் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை நான் பார்த்தேன். குஜராத்திலிருந்து வெளியான அந்த வீடியோ வகுப்புவாத தொனியுடன் தில்லி பள்ளிகளில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவானது உண்மையா அல்லது போலியா என்று ஆய்வு செய்ய முனைந்துள்ள அந்தச் சிறுமியின் மனதில் அந்த வீடியோ ஏற்படுத்தியிருக்கின்ற விளைவை சற்றே கற்பனை செய்து பாருங்கள். வீடியோவைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியரால் அந்த வீடியோ குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்க முடியாதா? எந்தவொரு கொடூரமான செயலும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாகவே இருக்கும் என்பதை குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இப்படித்தான் பயன்படுத்திக் கொள்வதா?
சிறிது நேரம் கழித்து அந்த ஆசிரியர் பகிர்ந்து கொண்ட வீடியோ குறித்து பள்ளி முதல்வர் ‘ஒரு தவறு நடந்து விட்டது, இனிமேல் மீண்டும் அதுபோன்று நடக்காது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அந்த ஆசிரியரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றே நினைக்கிறேன். குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியரை நம்பவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். நாம் அனைவருமே தற்செயலாக தவறான குழுக்களுக்கு செய்திகளை அனுப்பி வைத்திருக்கின்றோம் என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதே நமக்குப் போதுமானதாகும்.
ஆனாலும் இதுபோன்று பகிரப்படுகின்ற செய்திகள் நன்கு சரிபார்க்கப்பட வேண்டும். அந்த ஆசிரியர் கடந்த காலங்களில் இதுபோன்ற வகுப்புவாதக் கருத்துகள் அல்லது பரிந்துரைகள் ஏதேனும் செய்திருக்கிறாரா என்பதை மாணவர்களுடன் கலந்து பேசி பள்ளி முதல்வர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற ஆசிரியர்கள் யாராவது இதுபோன்ற செய்திகளை தங்கள் பள்ளிக் குழுக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர் கண்டறிய வேண்டும். ஆசிரியர்களின் மனநிலை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இங்கே அந்த ஆசிரியர், மாணவி, அவரது தந்தை அல்லது தில்லியில் உள்ள அந்தப் பள்ளியின் பெயர்களை தவிர்த்திருக்கிறேன் என்றாலும் அந்த மாணவி அனுப்பி வைத்த செய்தியில் இருந்த ‘நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்ற கடைசி வரியைத் தவிர்ப்பது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகவே உள்ளது.
அன்புள்ள ஆசிரியரே, தயவுசெய்து உங்களுக்கு இது போன்ற வெறுப்பு நிறைந்த செய்திகளை அனுப்பி வைப்பவர்களிடமிருந்து – அது உங்களுடைய கணவராக இருந்தாலும்கூட – நீங்கள் விலகியே இருங்கள். மற்றவர்களை மிகவும் மோசமாக வெறுக்கின்ற ஒருவரால் நிச்சயம் உங்களையும் நேசிக்க முடியாது. இந்த மாணவர்கள் – அவர்கள் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – உங்களுடைய குழந்தைகள். அவர்களை உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எட்டு அல்லது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களின் வயது என்னவாக இருக்கும்? உங்களிடம் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனம் இருக்க வேண்டாமா?
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நீடித்திருக்கும். பாட்னாவில் உள்ள எனது பள்ளியில் முன்னர் கற்பித்து வந்த உதய்ப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்னுடைய ஆசிரியர்கள் இருக்கின்ற பழைய புகைப்படம் ஒன்றை இன்று எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான கிரேசி மைக்கேலும் இருந்தார். அவரைப் பார்த்த ஒரேயொரு பார்வையே என்னிடம் புன்னகையை வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. அதுதான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு. அந்தப் புகைப்படத்தில் இருந்த ஆசிரியர்கள் – அப்போது என்னிடம் கடுமையாக நடந்து கொண்டவர்களும்கூட – என்னை உணர்ச்சிவசப்பட வைத்தனர். அதனால்தான் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.