உலகளவில் பெரும் கவனம் பெற்றிருக்கும் ஈரானியத் திரைப்படப் படைப்பாளிகளில் ஒருவர் மொஹ்சன் மக்மல்பஃப். 90களில் உத்வேகம் பெற்ற ஈரானிய புதிய அலை இயக்கத்தில் மக்மல்பஃப்பின் பங்களிப்பு அளப்பரியது. ஈரானிய கலாச்சாரத்தில் நிலவும் ஒடுக்குமுறை, இன பாகுபாடு, பெண்களின் மீது கவிழ்ந்திருக்கும் அழுத்தங்கள், உதிரி மனிதர்களின் கைவிடப்பட்ட நிலை போன்றவை அவரது திரைப்படங்களில் பேசுபொருளாக இருந்திருக்கின்றன. யதார்த்தத்தையும், கற்பனையையும் ஒன்று கலந்து கிட்டதட்ட ஆவணப்படங்களின் சாயல்களில் அவரது திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
நெருக்கடி மிகுந்த தனது வாழ்க்கை பாரங்களில் இருந்து விடுபடும் எத்தனிப்பில் நிறுத்தமில்லாமல் சைக்கிளில் வட்டமடித்துக்கொண்டேயிருக்கும் அஃப்கான் அகதி குறித்த Cyclist, ஒரு திரைப்படத்திற்கான நடிகர் தேர்வுப்போல மனிதர்கள் பங்கேற்கச் செய்து அதில் அவர்களது துயர கதையை வெளிகொணருகின்ற Salaam Cinema, 17 வயதில் தன்னால் தாக்கப்பட்ட ஒரு காவலரை பிறிதொரு காலத்தில் தேடி அவருடன் உரையாடல் நிகழ்த்தும் A Moment of Innocence போன்றவை இவரது மகத்தான கலைப் படைப்புகள்.
அரசு மற்றும் கலாச்சார இறுக்கங்களுக்கு எதிராக தொடர் கேள்விகளை தனது திரைப்படங்களின் வாயிலாக எழுப்பி வந்ததால், மொஹ்சன் மக்மல்பஃப்பின் திரைப்படங்கள் அனைத்தும் ஈரானில் தடைச் செய்யப்பட்டிருக்கின்றன. இவரது மனைவி, இரண்டு மகள்கள், மகன் என முழு குடும்ப உறுப்பினர்களுமே திரைப்படப் படைப்பாளிகள்தான்.கேன்ஸ் உள்ளிட்ட உலகின் கலைத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் இவர்களது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட படங்கள் திரையிடல் கண்டிருக்கின்றன.2005க்கு பிறகு, ஈரானில் இருந்து வெளியேறியமொஹ்சன் மக்மல்பஃப் தனது குடும்பத்துடன் பாரீஸ் நகரில் வாழ்ந்து வருகிறார்.தனது முழு வாழ்க்கையிலும் ஒரு கலகக்காரராக இயங்கிவரும் மக்மல்பஃப்பிடம் அவரது கலையுலக பயணம் குறித்து ஃபெடர் டோட் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.
காலம் அதி விரைவாக நகர்வது குறித்து பதற்றமாக இருக்கிறது.உங்களது moment of innocence (1996) வெளிவந்து 22 வருடங்கள் கடந்துவிட்டது.அதற்கும் 22 வருடங்களுக்கு முன்பு நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள் (1974).இத்தகைய காலத்தின் நகர்வு உங்களும் திரைப்படங்களுக்கும் இடையிலான உறவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?குறிப்பாக, Moment of innocence இயக்கிய அந்த மனிதரில் ஏதேனும் மாற்றம் உண்டாகியிருக்கிறதா?
என்னுடைய 17வது வயதில் சிறைக்கு சென்றேன்.அந்த தருணத்தில், மதத்தின் காரணமாக கலை அனுபவமோ அல்லது திரைப்பட அனுபவமோ எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.சிறையிலும், என்னால் திரைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.ஆனால், அதன்பிறகுதான் புரட்சி நடந்தது.அப்போது எனது வயது 22.இளைஞர் பருவத்தில் இருந்த நான், திரைப்படங்களில் சொல்லப்படுகின்ற கதைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.புரட்சிக்கு பின்னர், திரைப்படங்களுடன் எனக்கு அறிமுகம் உண்டானதும், சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க, சினிமா மிகச் சிறந்ததொரு கருவி என உணரத் துவங்கினேன்.சிறை அனுபவமும், புரட்சியும் எங்களது கலாச்சாரத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்ற பாடத்தை எனக்கு போதித்தன.முதலில், இது எனக்கு வியப்பு அளிப்பதாக இருந்தது.
சிக்கலென்று நான் குறிப்பிடுவது, அரசியல் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தி அல்ல. நாங்கள் அரசரை மாற்றிவிட்டோம், எங்களது அமைப்புமுறையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துவிட்டோம். ஆனால், எங்களது கலாச்சாரத்தை மட்டும் எங்களால் எதுவும் செய்ய முடியாதிருந்தது. அதனால், அரசியலில் இருந்து கலைச் செயல்பாட்டிற்குள் என்னை நகர்த்திக் கொள்வதன்மூலம், மக்களின் மனங்களில் மாற்று சிந்தனைகளை கலை மற்றும் கேமிராவின் மூலமாக விதைக்க முடியும் என கருதி, கலையின் பக்கமாக வந்துவிட்டேன்.

அந்த தருணத்தில், நான் எனக்குள்ளாக நினைத்துக்கொண்டேன்.சரி. புரட்சிக்கு முன்பு சர்வாதிகார ஆட்சியின் கீழ் நிறைய குழப்பங்களும், பெரும் பீதியும் மக்களிடத்தில் நிலவும்.புரட்சிக்கு பிந்தைய கால மக்களின் மனங்களில் சர்வாதிகார ஆட்சியின் கீழாக வாழ்வது எப்படிப்பட்டது என்கிற கேள்வி எழுந்துள்ளது.அதனால்தான், எங்களது புரட்சி அடையவில்லை. ஏனெனில், நாங்கள் ஒரு சர்வாதிகாரிக்கு பதிலாக மற்றொரு சர்வாதிகாரியை அவ்விடத்தில் உட்கார வைத்தோம். இந்த முறை, நான் மக்களின் மனங்களில் விவாதத்தை தோற்றுவிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.அதனால், எனது அனைத்து திரைப்படங்களில், எங்களில் நிலவிய சிதைவுகளையும் வடிவமற்ற மாற்று சிந்தனைக் குறித்தும் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தேன். Moment of Innocence திரைப்படத்தில் நான் என்ன வலியுறுத்த விரும்பினேன் என்றால், சரி, இப்போது நீங்கள் ஜனநாயக ரீதியிலான மாற்றத்தை நோக்கி நகர விரும்புகிறீர்கள் என்றால், முதலில் உங்களுக்குள்ளாக உரையாடத் துவங்குங்கள், சக மனிதரிடத்தில் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதுடன், புரிந்துணர்வை மேலும் விசாலப்படுத்துங்கள்.
ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்கிக்கொள்வதிலேயே உறுதியாக இருக்காதீர்கள் என்பதே எனது மைய கருத்தாக அத்திரைப்படத்தில் இருந்தது.ஈரானில் அப்போது நடந்திருந்த புரட்சியின் மீதான எனது விமர்சனமே அது.முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி முன்னெழ தூண்டும் கருத்தை வலியுறுத்தும் திரைப்படப் பிரதியாக்கமே Moment of Innocence.வன்முறையை கையிலெடுக்காமல், மாற்று வழிகளில் எனது புரட்சியை – கலகத்தை நான் வடிவமைத்துக்கொண்டேன்.அடுத்தக்கட்ட பரிணாமத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதே எனது புரட்சிகர செயல்பாடாக இருந்தது.அந்த திரைப்படம் இளைஞனாக அப்போது ஈரானில் இருந்த எனது இருத்தலோடு மட்டுமே தொடர்புடையதல்ல, மாறாக, ஈரானிய சமூகத்திற்கு நான் சொல்ல விரும்பிய செய்திகளும் அதில் அடங்கியிருக்கின்றன.
திரைப்படங்கள் பார்வையாளர்களிடத்தில் எத்தகைய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது?நீங்கள் துவங்கிய பணியின் பயன் என்னவாக இருக்கிறது?
தனிப்பட்ட வகையில் நான் மட்டுமல்ல, எங்களது பாணியே நிறைய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது.கூட்டாக, நாங்கள் ஈரானிய புதிய அலை திரைப்படங்களை உருவாக்கத் துவங்கினோம்.இதன்மூலமாக, பன்முகப்பட்ட பார்வை கோணங்களையும், மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் நாங்கள் சாதித்திருக்கிறோம்.புரட்சிக்கு முன்பு Gabbeh (1995) திரைப்படத்தை நான் இயக்கியிருந்தால், 2000 நபர்களாவது அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தன.அதைவிடவும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பார்த்திருக்க வாய்ப்பியிருக்கிறது.

புரட்சிக்கு பின்னர், இந்த திரைப்படத்தை உருவாக்கியபோதுக்கூட, பெரிய அளவிலான பார்வையாளர்கள் இந்த திரைப்படத்திற்கு வருவார்கள் என்று நான் கருதவில்லை.ஏனெனில், இது வணீகக் கூறுகளை கொண்ட திரைப்படமல்ல. ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக, ஒரு மில்லியன் பார்வையாளர்கள் அந்த திரைப்படத்துக்கு கிடைத்தார்கள்.அது ஒரு கலாச்சார மாற்றமாக இருந்தது. அதோடு, தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் ஈரானிய வாழ்வு நிலைகளில் இருந்து மாறுபட்டு, புதிய அலை ஈரானிய திரைப்படங்கள் மக்களின் வாழ்வை நெருங்கி அணுகியிருந்ததை நீங்களாகவே உணர்ந்துகொள்ள முடியும்.
மேற்கத்திய திரைப்பட கலை, தனக்கான உந்துதலை புகைப்படக் கலையில் இருந்தும், நாடகக் கலையில் இருந்தும் பெற்றதாகவும், ஆனால் ஈரானை பொருத்தவரையில் இவ்விதமாக கலைத் தொடர்புகள் ஏதுமில்லை எனவும் முன்பொருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். ஈரானில் புகைப்படக் கலை மற்றும் ஓவிய மரபு இல்லை என்றும், இலக்கியத்தில் இருந்தும் குறிப்பாக கவிதையில் இருந்துமே திரைப்படக் கலைக்கான உந்துதல் உருவானதாக தெரிவித்திருந்தீர்கள். இல்லையா?
ஆமாம்.அது சரிதான். சினிமாவுக்கான கோட்பாடுகள் மேற்குலத்தில் புகைப்படக் கலையிலிருந்தும், ஓவியக் கலையிலிருந்தும் பெறப்பட்டிருந்ததால், இவ்விரு கலைக் குறித்த புரிதலும் அறிமுகமும் முன்பே கிடைக்கப்பெற்றிருக்கிற மக்களால் மிக எளிதாக, அதன் நீட்சியாக உருவெடுத்த திரைப்படக் கலையையும் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், ஈரான் சினிமா தனக்கான வேர்களை புகைப்படக் கலையிலோ ஓவியக் கலையிலோ கொண்டிருக்கவில்லை.
மதத்தின் காரணமாக, எங்களது கலாச்சாரத்தில் புகைப்பட கலையும், ஓவியக் கலையும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.அதனால், எங்களுக்கு இதுப்போன்ற கதைகள் எல்லாம் இல்லை.ஆனால், எங்களிடம் ஏராளமான கவிதைகள் இருக்கின்றன.கவிதைகளில் இருந்தே எங்களது திரைக் கலைஞர்கள் உத்வேகம் பெறுகின்றனர்.எங்களது கவிதைகளில் ஏராளமான படிமங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.சமயத்தில், எங்கள் நாட்டு கவிஞர்கள் கவிதைகளில் அதி அற்புதமான பிம்பங்களை உருவாக்கிவிடுவார்கள்.அதனால், எங்களது திரைக்கலைக்கான உந்துதலை நாங்கள் கதைகளில் இருந்தும், கவிதைகளில் இருந்துமே பெறுகின்றோம்.
Gabbehல் பயன்படுத்தப்பட்டுள்ள நிறங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன?அந்த செயலாக்கத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?
Gabbehஐ பொருத்தவரை, ஓவியம் வரைவதைப்போல செயல்பட்டேன்.நாங்கள் செயற்கை விளக்குகளை பயன்படுத்தவில்லை.இயற்கையான உலகத்தில் இயங்கும் நாங்கள், எங்களுக்கு உகந்த வெளிச்சம் கிடைப்பதற்காக, பல மணி நேரம் வரையிலும்கூட காத்திருப்போம். சமயங்களில் தேவையை விடவும், அடர்த்தியான மஞ்சள் நிறம் கிடைத்துவிடும். உதாரணத்திற்கு, சூரியன் எங்களுக்கு தேவையான மஞ்சள் ஒளியை வெளியிடுவதற்காக சில மணி நேரம் நாங்கள் காத்திருப்போம்.சில தருணங்களில் மஞ்சள் பூக்களை மிகுதியாக சேகரித்து தரையில் அவைகளை பரப்பி வைத்துவிடுவோம்.இதன்மூலமாக, அந்த காட்சி கூடுதல் அழகு மிகுந்ததாக உருவாகியிருக்கும்.நிறத்திற்கான வேட்டையைப் போன்றது இச் செயல்பாடு.
இங்கு லண்டனில் வாழ்ந்துவரும் எனக்கு, ஈரான் பற்றி கிடைக்கக்கூடிய தகவல் அனைத்தும், “ஈரான் வாழ்வதற்கு ஏற்ற நிலமல்ல, சர்வாதிகாரம் மிதமிஞ்சிய தேசம், பெண்களை ஒடுக்குகின்ற தேசம்” என்றெல்லாம்தான் இருக்கிறது. அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம் என்றாலும், எனது ஈரான் மற்றும் பிற அனைத்து உலகங்கள் பற்றிய புரிதலும் திரைப்படங்களின் வாயிலாக உணர்ந்துகொண்டதாகவே இருக்கிறது.

முழுமையாகவே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஈரானின் மைய வரலாறு அதன் இலக்கியங்களிலும், செய்திகள் அதன் திரைப்படங்களிலுமே காணக் கிடைக்கின்றன.
உங்களது படைப்புகள் பெரும்பாலும் கடுமையான தணிக்கைக்கு உட்பட்ட பிறகே திரையிடல் காண்கிறது.தணிக்கைத் துறை அல்லது அத்துறை உங்களிடத்தில் தோற்றுவித்திருக்கும் மறைமுக எச்சரிக்கை உங்களது படைப்புகளில் எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது?
ஈரானில் தணிக்கைத் துறை என்பது மத அடிப்படை வாதத்திலிருந்தும், அரசியலில் இருந்தும் உருவெடுத்திருப்பது.அதோடு, ஈரானிய கலாச்சாரத்தோடும் அதற்கு ஆழமான தொடர்புகள் இருக்கிறது.குழந்தைகளுக்கு முன்னால் நாங்கள் சில விஷயங்களை காண்பிக்க முடியாது. உதாரணத்திற்கு, ஏமாற்றுத்தனங்களை எங்களது திரைப்படங்களில் பார்க்க முடியாது. மதம் அதனை அனுமதிக்காது.
தணிக்கைத் துறை என்பது அரசியல், மதம் மற்றும் கலாச்சார உணர்வுகளில் வேர் விட்டிருக்கிறது. ஆனால், நாங்களும் சாமர்த்தியமாக செயல்படுவது உண்டு.அதிகார மையத்திற்கு ஒரு திரைக்கதையை சமர்ப்பிக்கும் நாங்கள், வேறொரு திரைப்படத்தையே இயக்குவோம். பின்னர், அவர்கள் அந்த படத்தை ஒடுக்கும் முயற்சியில் இறங்குவார்கள்.அதனால், அவர்களுக்கு ஒரு திரைப்பிரதியை நாங்கள் கொடுப்போம். அசலான பிரதி அவர்களின் கைக்கு சென்றிருக்காது.

அசலான பிரதியை ஈரானுக்கு வெளியே அனுப்புவதற்கு எங்களால் முடிந்த செயல்களில் எல்லாம் நாங்கள் ஈடுபடுவோம்.அல்லது திரையரங்கத்திலேயே சமர்பிக்கப்பட்ட பிரதிக்கு மாற்றான பிரதியை ஒளிபரப்பு செய்ய பல்வேறு முயற்சிகளை எடுப்போம்.அரசும் தொடர்ந்து எங்களை கண்காணித்தபடியும், எங்களது திரைப்படங்களின் மீதான தனது கட்டுப்பாட்டை இழக்காமல் தொடர்ந்து வேலைகளை முடுக்கிவிட்டபடியே இருக்கும்.ஆனால், இன்றைய இணையதள யுகத்தில், அவர்களால் திரைப்படங்களின் மீது கட்டுப்பாடுகளை கோருவதெல்லாம் சாத்தியமில்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
ஆனால், எனது மற்றும் எனது குடும்பத்தாரின் அனைத்து திரைப்படங்களும், அதாவது முழு நீளத் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் அனைத்தையும் சேர்த்து நாங்கள் உருவாக்கிய 40 திரைப்படங்களும், எனது 30 புத்தகங்களும் ஈரானில் தடைச் செய்யப்பட்டிருக்கின்றன. எனது பெயரைக்கூட அவரை தடைச் செய்திருக்கிறார்கள்.செய்தி ஊடகங்களும், தொலைக்காட்சியும் கூட எனது பெயரை உச்சரிப்பதில்லை.இதுவும் ஒருவகையிலான தணிக்கைதான்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஈரானுக்கு வெளியில் ஒருமுறை என்னை கொலை செய்யக்கூட முயன்றிருக்கிறார்கள். நான் ஈரானில் இருந்து வெளியேறு 14 வருடங்கள் ஆகிறது.அப்போது ஆப்கானிஸ்தானில் நான் தஞ்சமடைந்தேன்.ஆனால், ஈரானிய அரசு அங்கு வைத்து என்னை கொலை செய்யும்படி சில தீவிரவாதிகளை ஏவிவிட்டது.உடனடியாக நான் டஜகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தேன்.அங்கும் தீவிரவாதிகள் என்னை கொலை செய்ய முயன்றனர்.நான் பாரீஸுக்கு இடம்பெயர்ந்தேன்.அங்கும் என்னை கொலை செய்யும் முயற்சிகள் அரங்கேறின. இதுதான் ஈரானிய அரசாங்கத்தின் அணுகுமுறை.

ஆனால், ஈரானுக்கு வெளியில் நாங்கள் இருந்தாலும் ஈரானிய சமூகத்தை பிரதிபலிக்கும் வகையிலான திரைப்படங்களைதான் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். கடந்த வருடத்தில் பிபிசி பெர்சியா தொலைக்காட்சி எனது மற்றும் எனது குடும்பத்தாரின் பத்து திரைப்படங்களை ஒளிப்பரப்பு செய்ததோடு, குறிப்பிட்ட ஒரு திரைப்படம் தொடர்பாக என்னிடம் உரையாடல் நிகழ்த்தவும் செய்தார்கள். அதனால், ஈரானிய மக்களுடன் எங்களின் கலை மூலமாக தொடர்பில் இருந்தபடியேதான் இருக்கிறோம்.தொலைக்காட்சி எங்களது திரைப்படங்களுக்கு தடை விதித்திருந்தாலும், கள்ள சந்தையின் வழியிலாக எங்களது திரைப்படங்கள் ஈரானிய மக்களுக்கு கிடைத்தபடியே இருக்கின்றன. ஈரானிய சர்வாதிகார ஆட்சியால் படர்ந்து விரிந்திருக்கும் இருள் திரையினுள் எங்களது கலையை கொண்டு மீண்டும் மீண்டும் ஒளிப் பாய்ச்ச செய்யும் முயற்சிகளை நாங்கள் தொடர்ந்தபடியே இருக்கிறோம்.
ஈரானுக்கு வெளியில் இருந்து திரைப்படங்கள் இயக்குவது கடினமானதாக இருக்கிறதா?உங்களது திரைப்படங்களின் மீதான அணுகுமுறையில் மாற்றமடைந்திருக்கிறதா?
கொரியா, பாகிஸ்தான், ஜியார்ஜியா, இத்தாலி, துருக்கி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் நான் திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்.என்னுடைய அனுபவத்தில், நான் புரிந்துகொண்டுள்ளது என்னவென்றால், மனிதர்கள் அனைத்து நிலவெளிகளிலும் ஒரே பண்புகளுடன்தான் இருக்கிறார்கள். நாம் ஒரே மாதிரியாகத்தான் சிரிக்கிறோம், ஒரே வகையில்தான் காதலில் ஈடுபடுகிறோம், துயரங்களும் ஒன்றே போலத்தான் இருக்கிறது. எதிர்கொள்கின்ற சூழல்களிலும் நமது உணர்வுகளும் ஒரே மாதிரியாகதான் வெளிப்படுகிறது.மனிதர் அனைத்து இடங்களிலும் ஒரேபோலத்தான் இருக்கிறார்கள்.மொழி மட்டும்தான் வேறுபடுகிறது. மொழி என்பது மொழிபெயர்ப்புதான். நான் எப்படி ஒரு தகவலை உச்சரிக்கிறேன் என்பதுதான் வேறுபடுகிறது.

வெவ்வேறு நாடுகளில் பயணிக்க நேர்ந்தாலும், நம்மால் அந்த நிலப்பகுதி மக்களை புரிந்துகொள்ள முடியும்.என்னால் இப்போது சொல்ல முடியும், எங்கு திரைப்படங்களை இயக்க நேர்ந்தாலும், அவ்வனுபவம் ஒன்றைப் போன்றதே. ஏனெனில், நான் மனிதர்களை பற்றிதானே படங்களை இயக்குகிறேன்.ஈரானில் நான் திரைப்படங்களை இயக்கியபோதும், ஒட்டுமொத்தமான மனித சமூகத்துக்கான திரைப்படங்களாகத்தான் அவைகளை உருவாக்கினேன். Moment of innocence திரைப்படம் ஈரானை பற்றியது மட்டுமல்ல. அல்லது The President திரைப்படத்தை 2013ல் ஜியார்ஜியாவில் இயக்கியிருந்த நான், அத்திரைப்படத்தை வெவ்வேறு நாடுகளில் திரையிட்டு காண்பித்தபோது, அவர்களும் அதனை தங்கள் தேசத்து திரைப்படமாகவே உணர்ந்து கொண்டார்கள். “ஆமாம். இது எங்களைப் பற்றிய திரைப்படம்தான்” என்பதே அவர்களது கருத்தாகவும் இருந்தது. ஆனால், இதில் குறிப்பிடும்படியான ஒரு விஷயமென்னவென்றால், பலதரப்பட்ட கலாச்சாரங்களின் அறிதல் நமக்கு இருக்க வேண்டும்.நான் கூடுதல் ஆழமாக பயணிக்க விரும்புகிறேன்.நமது வாழ்க்கையின் முதல் அடுக்கை தாண்டிச் செல்லும்போது, அனைத்து மனிதர்களும் ஒரே போன்றவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
The Gardener திரைப்படத்தில், பஹாய் (Baha’i) நம்பிக்கையின் குறிப்பிட்ட அனுபவத்தையும், அதை பின்பற்றுகின்ற மக்களையும் ஆராய்வதில் தீவிரமாக இருந்துள்ளீர்கள். நம் எல்லோரையும் பாதிக்கின்ற பொதுமைப்படுத்தப்பட்டுள்ள உலகளாவிய தன்மைகளை ஆய்வதற்காக, அந்த குறிப்பிட்ட பஹாய் அனுபவத்தில் நீங்கள் நிலைகொண்டிருந்தீர்கள். இதுதான் இந்த திரைப்படத்தின் மூலமாக நீங்கள் அடைய முயன்ற கருத்தா?
அந்த திரைப்படத்தை உருவாக்கியதற்கான முக்கிய காரணம், நான் சிறுபான்மையினரைப் பற்றி ஒரு திரைப்படம் உருவாக்க வேண்டுமென்று விரும்பியதே.ஈரானில் இத்தகைய சிறுபான்மையினர் அனுபவிக்கின்ற கொடூரங்களை விவரிப்பதற்காகவே The Gardener ஐ உருவாக்கினேன். அவர்கள் ஈரானிய சமூகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்கலைகழங்களில் பயில முடியாது. அப்படி முயற்சித்தாலே சிறைதான் செல்ல வேண்டும். பஹாய் கலாச்சாரம் புகட்டப்படுகின்ற மேல்நிலை கல்வியை அளிக்கும் பல்கலைகழகத்தில் அவர்கள் ஒரு பாடத்தை பயின்றாலே, காவலர்கள் அவர்களை கைது செய்துவிடுவார்கள். அவர்களுக்கு வேலையும் கொடுக்கப்படுவதில்லை.ஈரான் அவர்களை தனது தேசத்தில் இருந்து வெளியேற்றவே துடித்துக்கொண்டிருக்கிறது.

அதேப்போல ஈரானிய மக்களும் பஹாய் சமூகத்தினரைப் பற்றி கவலைகொள்வதில்லை.அவர்கள் பஹாய் குழுவினரைப் பற்றி மட்டுமல்ல, கிருஸ்துவர்கள், யூத மதத்தினர் குறித்தும் கவலைப்படுவதில்லை.அதனால், இத்தகைய மனிதக் குழுக்களின் மீது மாநில, மத மற்றும் அரசு ரீதியிலான அழுத்தங்கள் கவிந்திருக்கிறது.அதனால், அத்தகைய மனிதர்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுவதன் மூலமாக ஒரு விவாதத்தை தோற்றுவிக்க வேண்டுமென்பது எனது நோக்கமாக இருந்தது. அப்படியாவது ஈரானிய மக்கள், “அவர்கள் பைத்தியகாரர்கள்” போன்ற சொல்லாடல்களை தவிர்த்துவிட்டு, மேலும் நுணுக்கமாக அவர்களை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தேன். பிற இனக்குழுக்கள் குறித்து பேச தயங்குகிற தடைகளை உடைத்தெறிய வேண்டுமென நான் விரும்பினேன். ஒரு இந்திய சுற்றுலாவாசி ஈரானுக்கு வருகிறார் என்றால், கூடுதலாக அவர் இந்து மதத்தை சேர்ந்தவராகவும் இருந்தால், அவரிடத்தில் இத்தகைய சிறுபான்மையின மக்கள் பெரும் ஈரப்பை உருவாக்கிவிடுவார்கள். ஆனால், ஈரானியற்கு அவர்கள் குறித்தும் ஒரு கவலையும் இல்லை.
இதுப்போன்ற மனித குழுக்களை பற்றிதான் நான் பேச விரும்புகிறேன்.150 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் நிறுவப்பட்ட பஹாய் இன மக்களின் மகிழ்வு நிரம்பிய வாழ்க்கையை பற்றி உரையாட முயற்சிக்கிறேன்.ஏனெனில், அது மிகவும் ஜனநாயகப்பூர்வமான மதம் என்பதோடு, எதுக் குறித்தும் விவாதிப்பதற்கான சாத்தியங்களையும் கொண்டிருந்தது. நான் மத சார்புடையவன் அல்ல என்றாலும், வேற்று மதத்தை சார்ந்திருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை ஒடுக்குவதையும், கொலை புரிவதையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. ஒரு திரைப்படப் படைப்பாளியாக எதுகுறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.வாழ்க்கையை சினிமாவிற்குள் கொண்டுவரும் எனது நம்பிக்கையே இதெல்லாம்.எப்படி நாம் வறுமையில் துயருறுகிறோம்?ஏன் நமக்கு சினிமா தேவைப்படுகிறது?ஒற்றுமையான வாழ்க்கைஏன் சாத்தியப்படக்கூடாது?பல்வேறு கலாச்சாரங்கள் ஒரு குடையின் கீழ் வாழ்வதில் ஏன் சிக்கல் வர வேண்டும்?

பஹாய் கலாச்சாரம் குறித்து நான் ஒரு திரைப்படம் இயக்கினேன்.ஆனால், அத்திரைப்படம், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை வலியுறுத்தும் படமாகவும் இருந்தது.ஜனநாயக உரிமைகள் குறித்தும், பல்வேறுவகைப்பட்ட மனிதரின் ஜீவ போராட்டத்தை குறித்தும் அந்த திரைப்படம் அலசுகிறது.அனைத்து மனிதர்களின் வாழ்வியல் போராட்டமும் ஒன்றைப்போலவேத்தான் இருக்கின்றது என்பது அதில் பதிவாகியிருக்கிறது.அது ஒருவகையில் உருவகத் திரைப்படம் போலவும் இருக்கிறது.இவ்வகையிலான திரைப்பட முயற்சிகள் பொருளீட்டும் வாய்ப்புகளை அதிகம் வழங்காது.ஏனெனில், இன்றைக்கு சினிமாவில் வணீக செயல்பாடுகள் மிகுதியாக உள் நுழைந்திருக்கின்றன.என்னளவில், திரைப்பட அணுகுமுறை என்பது தீர்க்கதரிசியின் செயலை ஒத்தது.நான் மதரீதியிலான தீர்க்கதரிசிகளை குறிப்பிடவில்லை, ஆனால், ஒருவித தெய்வாதீன கூறுகளை அடங்கிய தீர்க்கதரிசிகள்.பொருள்முதல்வாத அணுகுமுறையை கடந்தும், மனிதர்களை உள்ளார்ந்து ஆழமாக நெருங்கி அணுகவும், புரிந்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது.நாமெல்லாம் என்றாவது ஒரு நாள் இறந்துவிட போகிறோம்.வாழ்க்கை மிக சிறியது.அதனால், இந்த பொருள்முதல்வாத உலகத்தில் ஏராளமான சாதனைகளை குவிப்பதற்காக மட்டுமே நாம் பிறப்பெடுத்திருக்கவில்லை.
மிகக் குறுகிய வாழும் காலம் மட்டுமே உடைய நாம், இன்னும் தீவிரமாக நமது இயங்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும்.நமது வாழ்க்கைக்கான அர்த்தம் என்பது மிக முக்கியமான கேள்வி ஆகும்.கடவுளின் வழியில் விளக்கப்படும் வாழ்வின் அர்த்தம் குறித்தும் நான் சொல்லவில்லை.உண்மையை சொல்லவேண்டுமெனில், நமது வாழ்தலுக்கு ஒரு நோக்கமும் இருப்பதில்லை.ஆனால், இந்த குறுகிய காலத்தை கூடுமானவரையில் அர்த்தப்பூர்வமாகவும், அழகானதாகவும், ஏற்றுகொள்ளும் விதத்திலும் நாம் அமைத்துகொள்ள வேண்டும்.பல வகைப்பட்ட இன்றைய திரைப்படங்களும், மிகப் பெரிய தொழிற் நிறுவனத்தின் அங்கமாக விளங்குகின்றன. அது மக்களின் சிந்தனையை மழுங்கடிப்பதோடு, தனக்கு உகந்த எதையும் திரைப்பட வடிவத்திற்குள் புகுத்தி, இறுதியில் எவ்விதமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல், மீண்டும் அவர்களை வெளியேத் தள்ளுகிறது. அதனால், Gabbeh, The Silence, The Gardener போன்ற திரைப்படங்கள் அர்த்தமே இல்லாத உலகத்தில், ஒருவித அர்த்தத்தை கற்பிக்க முயலுகின்றன.மனிதர்களாக நமது வாழ்க்கையை நமக்குள்ளாக அர்த்தப்பூர்வமாக உருவாக்கிக்கொள்வது மிக மிக அவசியமானது.
நமது வாழ்க்கையை அர்த்தப்பூர்வமாக வாழ்வது என்றால், நம்மிடம் அகந்தை நிலவுகிறது என்று நினைக்கிறீர்களா?
ஆமாம்.நான் நினைக்கிறேன்.உணவுக்கு அடுத்து மனிதர்களுக்கு அவர்களது வாழ்வின் அர்த்தம் தேவையாய் இருக்கிறது.அப்படி நமக்கு வாழ்வதற்கு எந்தவொரு காரணமும் இல்லையென்றால், நாம் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்.நம் எல்லோரையும்தான் குறிப்பிட்டு சொல்கிறேன். நாம் ஆரோக்யமான உடல் நலத்தின் காரணமாக மட்டும், உயிர் வாழ்வதில்லை. மாறாக, நமது வாழ்தலுக்கான அர்த்தத்தின் மூலமாகவும்தான். சிலருக்கு இத்தகைய அர்த்தம் நிரம்பிய வாழ்க்கை பயணமென்பது, தங்களது பிள்ளைகள் குறித்து கவலைகொள்வது, பிறர் பற்றி யோசிப்பது, சமூக பணிகளில் தங்களை இணைத்துக்கொள்வது, மனித உரிமைகளுக்காக போராடுவது போன்றவை எல்லாம் அடங்கும்.

கலைஞர்களைப் பொறுத்தவரையில், தங்களது பார்வையில் அழகு என்பதை முற்றிலுமாக இழந்துவிட்ட மனிதர்கள் வாழும் உலகத்தில், அழகை படைக்க முயற்சிப்பது. எனது வாழ்க்கையை அர்த்தப்பூர்வமாக இத்தருணத்தில் வடிவமைத்துக்கொள்வது என்பது, திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கி எனது தனிப்பட்ட வாழ்க்கைப்பாடுகளில் இருந்து தப்பித்துகொள்வது மட்டுமே அல்ல. மாறாக, திரைப்படக் கலையை ஒரு ஊடகமாக பயன்படுத்தி பன்முகப்பட்ட கலாச்சார அடையாளங்களை கொண்டுள்ள மனிதர்களிடத்தில் உரையாடலை தோற்றுவிப்பதே ஆகும். இறுதியில், எப்போதும் பிஸியாக இருப்பதான பிரேமையில் மட்டும் நான் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது அல்லவா!
அது திரைப்பட கலையின் அழகியல் கூறுகளில் ஒன்று.திரைப்பட கலை உலகளாவிய மொழியை கொண்டிருக்கிறது.நாம் எல்லோரும் ஒரு வகையில்தான் புன்னகைக்கிறோம்.மனித கண்கள் அந்த புன்னகையை ஒரே விதத்தில்தான் பதிவு செய்துகொள்கிறது.அவன் என்ன கலாச்சாரத்தை சேர்ந்தவன் என்றெல்லாம் அந்த புன்னகையில் அது வேறுபடுத்தி பார்ப்பதில்லை.
இன்றைய காலத்தில், உலக மனிதர்களின் பொதுவான மொழியாக திரைப்படக் கலை திகழ்கிறது.ஆங்கிலம் தெரியாத மனிதரிடத்தில் நாம் ஆங்கிலத்தில் உரையாடும்போது, அவர் அதனை புரிந்துகொள்வதில்லை. ஆனால், திரைப்பட கலையில், புகைப்பட கலையில், ஓவியங்களில் நம்மால் வார்த்தைகளின் மூலமாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றாலும், அது ஏதோரு வகையில் நம்மிடம் ஒரு உறவாடலை ஏற்படுத்திக்கொள்ளும். சினிமாவின் மூலமாக, இவ்வகையில் நம்மால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.
யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக, புதிரான வகையில் இது மேலும் வளர்கிறது. இவையெல்லாம் திரைப்படக் கலைக்கு ஒரு சவாலை ஏற்படுத்துகின்றன என்றாலும், மொழியளவில் திரைப்படக் கலையின் மொழியையே கொண்டிருக்கின்றன.
ஆமாம்.உங்களுக்கு புரிகிறதா?ஒருவரின் மீது மற்றொருவர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். யூ டியூபில் நீங்கள் ஏராளமான திரைப்படங்களை பார்க்க முடிகிறது. அளவில் அவை மிகச் சிறிய திரைகளை கொண்டிருந்தாலும், அதிலும் சினிமா அடங்கியே இருக்கிறது. யூ டியூப்பையும் நான் ஒரு கருவியாகவே பார்க்கிறேன். சினிமாவும் ஒரு கருவிதான் என்றாலும் அது ஒரு சிறந்த கருவி என்பதில் சந்தேகமில்லை. அகண்ட திரையில் திரைப்படங்களை பார்க்கும் செயலென்பது ஒரு நிலக்கண்ணாடியின் முன்னால் நிற்பதைப் போன்றது.
தனிமையில் உங்களது செல்போனில் நீங்கள் திரைப்படம் பார்க்கும் செயலென்பது ஒரு இலக்கிய பிரதியை நுகர்வைப் போன்றது. ஆனால் திரையரங்கத்தில் பெரும் திரளான மனிதர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்க்கும்போது, உங்களது கண்ணீரை, சிரிப்பை, நெகிழ்வை நீங்கள் பிற மனிதர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்கள். அதுவொரு வகையிலான அனுபவம்.அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், ஒரு மனிதாயத்தன்மையில் சங்கிலியில் திரைப்படங்கள் நம்மை இணைக்கிறது.உங்களது தனிமையுணர்வை இழப்பதற்கும், உங்களது சிந்தனையோட்டத்தை பொருத்திப் பார்த்து மேலும் விசாலப்படுத்திக்கொள்வதற்கும் திரையரங்கம் வழிவகுக்கிறது.
திரைப்படங்களை உருவாக்குவது பற்றியல்ல, உருவாக்கப்படும் திரைப்படங்கள் பார்வையாளர்களை சேர வேண்டுமென்பதே எனது கவலையாக இருக்கிறது.என்னைப் பொருத்தவரையில், பார்வையாளர்கள் இல்லாத எவ்வித கலைச் செயல்பாடும் பயனற்றது என்றே கருதுகிறேன்.
உண்மை.உங்கள் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.கலையின் உயிர்ப்பு நிலைக்காக, தொடர்ச்சியாக கலைச் செயல்பாடில் இறங்குவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.கலை என்பதை படைப்புக்கான ஒரு விழைவாகவும், மனிதத்தன்மை குறித்த ஒரு பொறுப்புணர்ச்சியாகவுமே கருத முடியும்.எனக்கு ரொட்டியை கொடுக்கும் ஒரு ரொட்டி உற்பத்தியாளருக்கு நான் எனது திரைப்படத்தை கொடுக்கிறேன். நாம் தொடர்ந்து உயிர் நிலைத்திருக்க நமக்கு ஏராளமானவற்றை கொடுக்கின்ற மனிதர்களுக்கு நாம் ஏதாவது பதிலளிக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியில் இருந்தே எனது கலை, இயக்கம் கொள்கிறது. நான் இப்படிதான் இருக்கிறேன்.அந்த ரொட்டி உற்பத்தியாளருக்கான எனது அன்பை திரைப்படத்தின் மூலமாக நான் வெளிப்படுத்துகிறேன்.
பார்வையாளர்களை நமது திரைப்படங்கள் சென்றடைவது என்பதுப் பற்றி பேச விரும்புகிறேன். மக்களை உங்களது திரைப்படங்கள் சென்றடைவதில் காலத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?90களில் ஈரானிய சினிமாவில் ஒரு நிலை உருவானது. உங்களுடைய திரைப்படங்களும், அப்பாஸ் கிரஸ்தாமி, ஜாபர் ஃபனாகி உள்ளிட்டவர்களின் திரைப்படங்களும் பெரிய அளவில் திரையிடல்களை கண்டது.இப்போது அந்த சூழல் எப்படி இருக்கிறது?
சமீபமாக, இணையதள பெருக்கத்திற்கு பிறகு, சினிமாவின் நிலை அவ்வளவு ஆரோக்கிமான ஒன்றாக இல்லை.திரையரங்கத்திற்கு வெகு குறைவான எண்ணிக்கையிலான மக்களே படம் பார்க்க வருகிறார்கள்.ஆனால், இணையதளத்தில் அவர்கள் அந்த படத்தைப் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு, எனது The Gardener திரைப்படத்தை யூ டியூபில் நாங்கள் பதிவேற்றம் செய்தோம்.1, 50, 000 மக்கள் அந்த படத்தின் யூ டியூபில் பார்த்திருக்கிறார்கள்.கூடுதலாக, திரைப்பட விழாக்களிலும், வெளியிடப்பட்ட வேறு இடங்களிலுமாக இந்த திரைப்படத்திற்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. அமெரிக்காவில்கூட இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.

ஆனால், இதெல்லாம் அந்த குறிப்பிட்டத் திரைப்படத்தை சார்ந்தும், அது வெளியாகும் காலத்தை சார்ந்தும்தான் செயல்படுகிறது.உதாரணத்திற்கு Kandahar திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அஃப்கான் அகதிகளைப் பற்றிய அத்திரைப்படம் 9/11 சம்பவத்திற்கு பிறகு வெளியானது. உடனடியாக, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.இத்தாலியில் அதுவரையிலான ஆசிய சினிமாக்களின் சாதனையை அந்த திரைப்படம் அதிக வசூலின் மூலமாக முறியடித்தது. அதனால், சமயங்களில் ஒரு திரைப்படத்தின் வெற்றி அது வெளியாகும் காலம் மற்றும் தருணத்துடன் தொடர்புடையது. இக்காலத்தில், குறைந்த அளவிலான திரைப்பட விநியோகஸ்தர்களே இருக்கிறார்கள். ஏனெனில், மக்கள் திரையரங்கத்திற்கு முன்புபோல வருவதில்லை என்பது அதற்கான காரணம். ஆனால், இன்னமும் அதிகமான திரைப்படக் கலைஞர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏராளமான திரைப்பட விழாக்களும், கலை அமைப்புகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் எனது Salaam Cinema மற்றும் A Moment of Innocence திரைப்படத்தை வட அமெரிக்காவில் திரையிடுவதற்கான முயற்சிகளில் இப்போது ஒரு விநியோகஸ்தர் இறங்கியிருக்கிறார்.
அதனால், ஒரு திரைப்படம் தன்னுள் ஆன்மாவை கொண்டிருந்தால், அதற்கு ஒருபோதும் மரணமில்லை.குறிப்பாக கலைப் படங்களுக்கு மரணமில்லை.Gabbeh திரைப்படம் ஒருபோதும் மரணமடையும் என நான் கருதவில்லை.நான் மரணத்தை தழுவுவேன்.ஆனால், Gabbeh, The Silence ஆகிய திரைப்படங்களுக்கு எப்போதும் மரணமில்லை.
இணையதளம் எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்திவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில், எதையும் பார்ப்பதற்குரிய வசதியை இணையதளம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், திரைப்படங்களைப் பொருத்தவரையில் விநியோகஸ்தர்களின் கரங்கள்தான் ஓங்கியிருக்கிறது. அவர்கள் எந்த படத்தை திரையிட விரும்புகிறார்களோ அதனை மட்டுமே பார்வையாளர்களால் பார்க்க முடியும். அதோடு, இணையத்தின் வலிமையான சாத்தியங்களில் ஒன்று என்னவென்றால், எனது வசிப்பிடத்திற்கு வெளியில் செல்லாமலேயே என்னால் உலகத்தின் எந்த திசையில் நடக்கும் நிகழ்வுகளையும் என்னால் அறிந்துகொள்ள முடியும். திரைப்படங்களைத் திரையரங்கத்தில் காண்பதில் வெகுவான விருப்பத்தை நான் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் எதிர்பார்க்கின்ற வகையிலான திரைப்படங்கள் வெளிவருவதில்லை. கலை அனுபவத்திற்கு பயிற்றுவிக்கப்படாத பார்வையாளர்களுக்கும், கலை அனுபவத்தை முற்றாக புறக்கணிக்கின்றவர்களுக்கும் இடையில் மெலிதான் ஒரு தொடர்பு இருப்பதாக கருதுகிறீர்களா?
கலைஞர்களுக்கும், விமர்சகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையிலான ஒரு பாதையை சினிமா ஏற்படுத்துகிறது. அதோடு அது தொழில் துறையோடும் தொடர்பில் இருக்கிறது.தீவிரமான கலைப் படைப்பை நீங்கள் உருவாக்கினால், சராசரி பார்வையாளர்களால் அதனை புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு திரைப்பட மொழியின் அரிச்சுவடி குறித்து குறைந்த அளவிலான அறிதலே இருக்கும். அதனால், நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஈரானிய புதிய அலை இயக்கத்தை தோற்றுவித்தபோது, வருடத்திற்கு ஐம்பது திரைப்படங்களும், பல திரைப்பட இதழ்களையும் வெளிகொண்டுவந்தோம். விமர்சகர்கள் குறிப்பிட்ட திரைப்படங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என பார்வையாளர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். இதன் மூலமாக, திரைப்பட மொழியின் அரிச்சுவடி அவர்களுக்கு அறிமுகாகும்.

ஆனால், இப்போது அனைத்தும் இணையத்திற்கு வந்துவிட்டது.மாறுப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகைப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். புதிதான சிந்தனைப் போக்கு உடைய கலைஞர்கள் உருவெடுத்திருப்பதைப்போல, புதிதான பார்வை கோணங்களையுடைய பார்வையாளர்களும் உருவாகியிருக்கிறார்கள். இப்போது நான் ஒரு திரைப்படத்தை இயக்கும்போது, அது 100 சதவீத பார்வையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் அல்லது அவர்களால் பார்க்கப்படும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஒவ்வொரு திரைப்படமும் தனக்கே உரிய பிரத்யேகமான பார்வையாளர்களை கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் மையக் கருத்து, கூறுமுறை, அதன் மொழி போன்றவை பார்வையாளர்களை பிரித்து வைத்திருக்கிறது.பல படங்கள் வணீக நோக்குடன் உருவாக்கப்படுகின்றன.
அவை உலகளவில் மிகப் பெரிய அளவிலான வெற்றியை அடைந்தாலும், காலத்தில் அவை எஞ்சி நிற்காது. ஆனால், சில திரைப்படங்கள் நித்தியப்பூர்வமானது.இந்தியாவில் இயங்கும் திரைத்துறையில் ஏராளமான படங்கள் உருவாக்கப்படுகின்றன.ஆனால், அவைகளில் எதுவும் காலத்தில் தனித்து நிற்காது. சத்தியஜித் ரேவின் திரைப்படங்கள் காலக் காலத்திற்கு கைமாற்றம் செய்தபடியே இருப்பதைப்போல, அவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. சத்தியஜித் ரேவின் படைப்புகளுக்கு ஒருபோதும் மரணமில்லை. ஆனால், மற்ற பாலிவுட் திரைப்படங்களில் உயிரும் ஆன்மாவும் துளியும் இருக்கவில்லை. இரண்டுவிதமான வாழ்க்கை இருக்கிறது.மனித வாழ்க்கை அல்லது மிருகத்தனம் நிரம்பிய வாழ்க்கை.