‘நான் உங்கள் வலியை உணர்கிறேன்’: B.1.617 வைரஸ் | நேர்காணல் G. சம்பத் , தமிழில் கிருத்திகா பிரபாவைரஸ் இனத்தின் COVID-19 செயற்படையின் தலைவரான SARS-CoV-2-XUV-700 உடனான எனது நேர்காணல், உங்களில் பலருக்கு நினைவிருக்கும். அதுவரையில் எந்த ஒரு நேர்காணலிலோ, 7,000 ஆண்டுகளில் எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலோ உரையாற்றாத ஒரு வைரசை பேட்டி எடுத்தது, பத்திரிக்கை உலகில் ஒரு சாதனை என்றே சொல்லலாம்.

இன்று, ஒட்டுமொத்த நுண்ணுயிர் சமூகமே கொண்டாடுகிற, உலக அரங்குகளில் இந்திய வகைமை/மாதிரி என்றழைக்கப்படுகிற பிரபல வைரசான  B.1.617 உடனான எனது நேர்காணலை உங்களுக்காக வழங்குவதில் பெரு மகிழ்ச்சிக்கொள்கிறேன்…

மனிதர்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையிலான தகவல்தொடர்பு தடையை உடைக்க கூடிய, சிறப்பு உயிர்-மரபணு மென்பொருளை என்னுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம், இந்த வரலாற்று நேர்காணலை சாத்தியப்படுத்தி உதவிய Potangoli Pvt Ltd நிறுவனத்திற்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

நான்:  ‘வேரியண்ட் ஆஃப் கன்சர்ன்’ (VoC) என்று ஒரு வழியாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

பி .1.617: நன்றி. வைரஸ்களாகிய நாங்கள், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 27 மணிநேரம், மிகவும் கடினமாக உழைக்கிறோம், ஆனால் நாங்கள் அதை புகழ் அல்லது பெருமையால் உந்தப்பட்டு செய்வதில்லை. நாளை வேறு ஒரு சிறந்த வகை வைரஸ் வந்தால், நான் அமைதியாக எனது பையை தூக்கிக்கொண்டு போய் விடுவேன்.

நான்: VoC அங்கீகாரம் கிடைத்த பிறகு, நீங்கள் ‘2021 நோய்க்கிருமி விருதுகள்’ அனைத்தையும் வென்றுள்ளீர்கள்.

‘இரட்டை மாற்றம் கொண்ட நம்பிக்கைக்குரிய புதுமுகம்’ விருதை நீங்கள் வென்றது, பலருக்கும் ஆச்சரியமானதாக இல்லை. ஆனால் நீங்கள் ‘மிகவும் பரவும் வைரஸ்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த நோய்க்கிருமி’ விருதுகளையும் வென்று வாகை சூடியுள்ளீர்கள். உங்களது இந்த வெற்றியின் ரகசியம் என்ன?

பி .1.617: உண்மையில் இது ஒரு குழு முயற்சி. நோயெதிர்ப்பு அமைப்புகள், தடுப்பூசிகள் மற்றும் பெரும்பான்மை சர்வாதிகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமைந்த சிறந்த குழு எங்களிடம் உள்ளது. நிபுணர் ஆலோசனைகளை கவனத்தோடு எடுத்துக் கொள்ளும் தலைமை எங்களிடம் உள்ளது. அந்த வகையில் வைரஸ்கள் ஆகிய நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

நான்: காந்திக்குப் பிறகு, இந்திய மரபணுப் பொருட்களாகிய நீங்கள்தான் இவ்வளவு பெரிய அளவில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறீர்கள், அதுவும் மிகவும் குறுகிய காலத்தில். கடந்த அக்டோபரில் தான் நீங்கள் உயிர் பெற்றீர்கள், ஆனால் அதற்குள் 45க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி விட்டீர்கள். Mis-Fortune இதழ் அதன் வருடாந்திர ‘உலகின் சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் உங்களுக்கு 2 வது இடத்தை அளித்துள்ளது. உங்களது மெழுகு சிலை லண்டனில் உள்ள Madame Twososல் நாளை திறக்கப்பட உள்ளது. இது குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

B.1.617: இந்த பெருமைகள் அனைத்திற்கும் நான் உரியவனா தெரியவில்லை. உலக அரங்கில்,  இந்திய வகைமை/மாதிரியாக எனது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் நான் பெருமைப்படுகிறேன். முன்பெல்லாம், நாங்கள் இந்தியர் என்று சொல்வதற்கு வைரஸ்கள் வெட்கப்படும். இனிமேல் அது இல்லை. இன்று, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வைரஸ்கள் கூட இந்திய பிறழ்வுகளை பிரதிபலிக்கவும், தங்களின் ஸ்பைக் புரதங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறுகின்றன – இது, இந்திய நோய்க்கிருமிகளுக்கு ஒரு சிறிய படிக்கல், ஆனால் இந்திய தேசியத்திற்கு, மாபெரும் பாய்ச்சல்!நான்: இந்தியாவை மையப்படுத்துவது என்ற முடிவின் பின்னணி என்ன?

பி .1.617:  2020 நடுப்பகுதியில், உலகளவில் எங்கள் வளர்ச்சி தட்டையாக இருந்தது, பாதிக்கப்பட்டவர்கள் விகிதங்கள் குறைந்து கொண்டிருந்தன. புதிய மாதிரிகளை உருவாக்குவதற்கும், தொற்று சங்கிலி தொடரை  நிலைப்படுத்துவதற்கும் எங்களுக்கு மிகக் குறைவான நேரமே இருந்ததை நாங்கள் அறிவோம். முதலீடு செய்வதற்கு ஒரு நாட்டை நாங்கள் விரைவாக முடிவு செய்ய வேண்டியிருந்தது. பிரேசிலிய மாதிரியின் செயல்பாடு சிறப்பாக இருந்த போதும், இன்னும் அதிக மக்கள்தொகை தேவை என எங்களில் பலர் உணர்ந்தோம். கும்பமேளா மற்றும் பல தேர்தல் பேரணிகளை இந்தியா மேற்கொள்ள உள்ளது என்று கேள்விப்பட்ட உடன், ​​எங்களது பாதை தீர்மானிக்கப்பட்டது. உங்கள் அரசாங்கம் தடுப்பூசி கொள்முதலில் சொதப்பியபோது, ​​இந்தியாவில் எங்கள் பணி, பூங்காவில்  நடப்பது போல அல்லது கல்லறையில் உலாவுவதுபோல எளிதாகவே இருக்கும் என்பதை நாங்கள் தெரிந்துக் கொண்டோம். கொரோனா இனத்திற்குள் இச்செய்தி பரவியதால், அனைத்து வகைகளும் இந்தியாவுக்கு விரைந்து சென்று மத நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பின, அவற்றில் பெரும்பாலானவை பங்கேற்கவும் செய்தன.

நான்: கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?

பி .1.617: நாங்கள் எங்கள் கவலைகளை இந்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டோம். தடுப்பூசி போடப்படுவது மிக மெதுவாக நடைமுறை படுத்தப்படுவதால், தடுப்பூசியின்  வீரியத்தை சுலபமாக தவிர்க்கக்கூடிய புதிய பிறழ்வுகளைக் கொண்டு வர எங்களுக்கு போதுமான நேரம் இருக்கும் என இந்திய அரசு எங்களுக்கு உறுதியளித்துள்ளது. அதனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நான்: ஒரு வைரஸ், ஒரு வைரஸ் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு மனிதர்களைக் கொல்வது முற்றிலும் அவசியமா?

பி .1.617: உங்கள் வலியை நான் உணர்கிறேன். கொலை செய்வதை, வைரஸ்களை விட வெறுப்பவர்கள் எவரும் இல்லை. சொல்லப்போனால்,  கொலை சதவிகிதம் அதிகமாவது, எங்களது தொற்று சதவீதத்தைக் குறைக்கும். உங்கள் antibodies காரணமின்றி எங்களை தாக்கும்போது நாங்கள் என்ன செய்வது? அவர்கள் எங்களைப் பார்த்த அடுத்த நொடி தாக்கத் தொடங்குகிறார்கள். அதனால் நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எங்களை குத்துவதற்கும் உதைப்பதற்கும் பதிலாக உரையாடலின் மூலம் எங்களுடனான வேறுபாடுகளை antibodies தீர்த்துக் கொள்ள வேண்டுமென, அமைதியை நேசிக்கும் ஒரு தாராளவாதியாக நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் வைரஸ்கள், பாசிஸ்டுகள் அல்ல.

நான்: மூன்றாவது அலைக்கான உங்கள் திட்டங்கள் என்ன? இரண்டாவது அலையிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்ட இந்தியா, மூன்றாவது அலைக்கு  தயாராக இருக்கும் என்று நீங்கள் கவலைப்படவில்லையா?

பி .1.617: மனிதர்களைப் போலல்லாமல், வைரஸ்களாகிய எங்களுக்கு தொலைநோக்கு பார்வை உண்டு. என்ன நடந்தாலும், இந்தியர்கள் ஒருபோதும் சிறந்த சுகாதார சேவையை கோர மாட்டார்கள் அல்லது அதனை தேர்தல் பிரச்சினையாக மாற்ற மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அரசாங்கத்தில் உள்ள எங்கள் நண்பர்களும், பொறுப்பு ஏற்றலுக்கான வலியுறுத்தல் எழும் ஒவ்வொரு முறையும் வகுப்புவாத பிரச்சனையை கையில் எடுப்போம் என உறுதியளித்துள்ளனர். போதுமான அளவு சோதனை செய்யாததன் மூலமும், கோவிட் தரவுகளை மறைப்பதன் மூலமும், COVID நோயாளிகள்  தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என கைகழுவியதன் மூலமும், அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது. எனவே மூன்றாவது அலையை பற்றி எங்களுக்கு எந்த  கவலையும் இல்லை. இன்னும் சொல்வதென்றால் வரும் ஆண்டுகளில், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் இன்னும் பல அலைகளில் இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதை நாங்கள் ஆவலுடன்  எதிர்நோக்குகிறோம்.

நன்றி: தி இந்து நாளிதழ் ஆங்கிலம் 
https://www.thehindu.com/society/satire-i-feel-your-pain-b1617-an-interview-with-b1617/article34612512.ece