ஐ பாம்பு - காக்கைக்கூடு பதிப்பகம் | Snake - I Paambhu

நூலாய்வு திருநகர் பக்கம் விஷ்வா அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதாக சொன்னார்கள்!

தம்பி விஷ்வா நிறைய சேவைகள் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னென்ன சேவைகளை செய்தார். என்று இங்கே சொன்னால், அதுவே ஒரு புத்தகமாக போய்விடும். நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். மேடையில் அழைத்து என் கையில் ஒரு நூலைக் கொடுத்தார். புத்தகத்தை கையில் வாங்கியதும் அது என்ன புத்தகமாக இருக்கும் என்றுதான் ஆவலோடு பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பே சரியில்லாதது போல் எனக்குத் தோன்றியது. ‘ஐ பாம்பு’என்று தலைப்பிட்டு இருக்கிறார். ஐ பாம்பு என்பது வியப்புக்குரிய சொல்லாயிற்றே. பாம்பைக் கண்டால், அய்யய்யோ பாம்பு என்று தானே கத்துவோம். ஐ பாம்பு என்று வியந்தா பார்த்துக் கொண்டிருப்போம். புத்தகத்தை தொட்ட நான் தலைப்பை பார்த்துவிட்டு படிக்காமல் அப்படியே வைத்து விட்டேன்.

ஒரு நண்பர் என்னைக் கேட்டார், “ஐ பாம்பு புத்தகம் வாங்கிச் சென்றீர்களே படித்தீர்களா” என்று. நான் பதில் சொல்லாமல் கேள்வி கேட்டேன்,

“நீங்களும் வாங்கிச் சென்றீர்களே படித்தீர்களா” என்று. அவர் சொன்னார், “ஆம் நான் படித்து விட்டேன்” என்பதோடு,

“மிக நன்றாக எழுதி இருக்கிறார். மிகவும் நுட்பமாக ஆராய்ந்து ஆராய்ந்து எழுதி இருப்பதாகச் சொன்னார்.

அதைப் படித்ததில் இருந்து பாம்புகள் பற்றியான என் பார்வையே மாறிவிட்டது” என்றும் சொன்னார்.

“அப்படி என்றால் அது பாம்புகளை பற்றியான ஆய்வு நூலா”

என்று கேட்டேன்.

“என்ன நீங்க, ஒரு எழுத்தாளர் இந்நேரம் படிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன், நீங்க படிக்காமலேயே என்னை கேட்கிறீங்களே”

என்று நக்கலாக கேட்டார் நண்பர். கவிதையோ கதையோ என்று நினைத்து விட்டேன் இப்படி பாம்பை பற்றி எழுதி இருப்பாரென்று நினைக்கவில்லை. பிறகுதான் நான் நூல் எடுத்து படிக்கத் தொடங்கினேன். உண்மையில் நான் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை எழுத்து நடை என்பது ஒரு நாவலுக்கான நடையாக உள்ளது.

பாம்பைப் பற்றியான செய்திகளையும், பாம்புகளோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் விரிவாக எழுதிச் செல்கிறார். பொதுவாக இது போன்ற நூல்கள் வாசிப்பதற்கு கடினமாக இருக்கும் ஆனால் இவரின் எழுத்து நடை அப்படி அல்ல சுவாரஸ்யமாக நகருகிறது. பக்கத்துக்கு பக்கம் புதிய புதிய செய்திகள். ஒரு பாம்பின் பெயரை உழவன் பாம்பு என்று சொல்கிறார். நல்ல பாம்பு, சாரப்பாம்பு, பச்சைப்பாம்பு, கண்ணாடி விரியன், என இன்னும் பல பெயர்களை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உழவன் பாம்பு என்ற ஒரு பெயரை விஷ்வா எழுதிய ஐ பாம்பு நூலில்தான் பார்க்கிறேன். படிக்க படிக்க மிகவும் சுவாரசியமாகச் சென்றது. நாவல் எழுதுகின்ற என் போன்றவர்களுக்கும் இந்த நூல் பயனுள்ளது என்று தான் சொல்லுவேன்.

பாம்புகளுக்கு என்னென்ன உணவுகள் பிடிக்கும். பாம்புகளுக்கு என்ன மாதிரியான இடங்களில் வசிக்கப் பிடிக்கும். பாம்புகளிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்மிடமிருந்து பாம்புகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும். பாம்புகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு ஐ பாம்பு பதில் சொல்கிறது. இது பாம்புகளை பற்றிய தகவல் களஞ்சியம் என்று கூட சொல்லலாம். உலக அளவில் பாம்பினங்களின் எண்ணிக்கை 5000 என்று சொல்கிறார். அதில் 300 க்கும் மேற்பட்ட இனங்கள் இந்தியாவில் என்றும், தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பினங்கள் மட்டும் 133 என்று சொல்கிறார். அதோடு தமிழ்நாட்டில் தான் பாம்பினங்கள் அதிகமாக வாழும் சூழல் இருப்பதாகவும் சொல்கிறார்.

அதற்கு தமிழ்நாட்டில் நிலவும் பல தட்பவெட்பம் காரணங்களாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

பாம்பு என்று கண்டுவிட்டால் போதும் கையில் என்ன கிடைக்கிறதோ அதை கொண்டு முதலில் அடித்து கொல்லத்தான் பார்க்கிறோம். ஆனால் பாம்பு வகைகளில் நஞ்சற்ற பாம்பு வகைகளும் இருக்கின்றன என்கிறார். அவைகளை எல்லாம் படங்களோடு விளக்குகிறார். நிச்சயமாக வளரும் குழந்தைகள் அனைவருமே இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையாக தான் உள்ளது.

நாம் அறியப்படாத பல உண்மைகள் மர்ம முடிச்சுகள் போல ஒன்றொன்றையும் அவிழ்க்கிறார், பாம்புகளைப் பற்றித்தான் எத்தனை விதமான கதைகள்! மூட நம்பிக்கைகள் அத்தனையும் உடைத்து எரிகிறார் இந்த புத்தகம். ஒவ்வொரு செய்தியும் நம்மை வியக்க வைக்கிறது. ஒரு பாம்பை பற்றி இப்படி விவரிக்கிறார்.

ஈரமான நிலப்பகுதி மற்றும் இலைச்சருகுகள் இடையே புகுந்து வாழும் புதைவால் பாம்பினமாகும். இது எதிர் பாலின இணையுறவு இனப்பெருக்க இயல்வு கொண்ட இப்பாம்பினத்தில் இதுவரை ஆண் பாம்புகள் கண்டறியப்படவில்லை. ஆண் பாம்புகளின் துணை இன்றி கருவுரும் பெண் பாம்புகள் ….

நாம் இத்தனை நாள் பாம்பைப் பற்றி என்னென்ன வெல்லாம் தெரிந்து வைத்திருந்தோமோ,ஏன் என்று கேட்காமல் கேட்ட பாம்புக் கதைகள் அத்தனையும் பொய்யாகி பொல கொலவென உதிர்கிறது.

இந்திய மலைப்பாம்புகள் வளர்ந்த மனிதரைக்கூட சுற்றி வளைத்து விழுங்கி விடும் என்ற செய்தியில் உண்மையில்லை என்கிறார். பெரிய விலங்குகளை விழுங்குகின்ற தாடைகளை பெற்றுறிருந்தாலும் மனிதரை விழுங்கியதாக இதுவரை எந்த நிகழ்வுக் குறிப்புகளும் இல்லை. என்கிறார்.

சாரைப் பாம்பு என்பது ஆணினம் என்றும் நல்ல பாம்பு என்பதை பெண்ணினம் என்றும் அது இரண்டும் இணை சேரும் என்றே இத்தனை காலமும் நம்பி வந்தோம். அது இரண்டும் வேறு வேறு இனமாம், சாரைப்பாம்பில் உள்ள இரண்டு ஆண் பாம்புகளும் தான் சண்டை போட்டுக் கொள்ளுமாம். கட்டிப் புரண்டு இரண்டடி மூன்றடி உயரத்திற்கு எழுந்து நின்று சண்டை போடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் அதை பெண் பாம்பான நல்ல பாம்பும் ஆண் பாம்பானா சாரையும் இணை சேர்வதாக தவறாகவே எண்ணி இருக்கிறோம். இரண்டுமே ஆண் சாரை தானாம்.

191 பக்கங்களே கொண்ட இந்த நூலில் இது போன்ற ஏராளமான தகவல்கள். வியப்படையவும் திகப்படையவும் செய்கிறது.

ஒவ்வொரு பாம்பின் பெயரையும், அதன் அறிவியல் பெயரையும், பெயருக்கான காரணத்தையும் ஆராய்ந்து சொல்கிறார். அறிவியல் பெயர் அறிவுக்கு உகந்ததாக இல்லையெனில் அஞ்சாமல் அதைப் புறந்தள்ளவும் செய்கிறார்.

குறிப்பாக சாரைப்பாம்பினுடைய அறிவியல் பெயர் முகோசா என்று இருக்கிறது. அதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் பாம்பினுடைய இயல்புக்கு அந்தப் பெயர் முரணாகத் தெரிகிறது. முகோசா என்றால் மெலிந்த உடல் என்று வருகிறது சாரைப்பாம்பு ஒன்றும் மெலிந்த உடல் அல்ல அது நல்ல கனத்த உடல் தான். அதுபோல் இன்னொரு சொல். ப்டயாஸ் இதன் பொருள் என்ன என்றால் நஞ்சை பீய்ச்சும் என்பதாக பொருள் வருகிறது. உண்மையில் சாரைப்பாம்பு நஞ்சற்ற வகை அது கடித்தாலும் ஒன்றும் ஆகாது. அதற்கு பெரிதாக மருத்துவம் கூடத் தேவையில்லை என்கிறார்.

பிறகு சாரைப்பாம்பு என்ற பெயருக்கு தமிழில் என்ன பொருள் இருக்கும் என்று ஆராய்கிறார் அது நீளமாக இருப்பதால் சாரை என்பதாக பொருள் கொள்ள முயல்கிறார்.

தமிழில் எல்லா சொற்களும் பொருளுடையதே. தொல்காப்பியம் சொல்லுகிறது. பிறகு சாரைப்பாம்பு என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் இல்லாமல் போய்விடுமா. தேடினேன்,

சரு, என்ற சொல்லிலிருந்து மட்டும் ஏராளமான சொற்கள் பிறந்துள்ளது.

சரு என்பதற்கு சறுக்குதல், அதாவது வழுக்கிக் கொண்டு போகுதல். என்றும் வளைந்து கொள்ளுதல் என்றும் பொருளாகிறது.

சருகு –வட்டமாக சுருட்டிக்கிக்கொள்ளும் காய்ந்த இலை.

சருகட்டை –தன்னைத்தானே சுருட்டிக் கொள்ளும் மரவட்டை.

சருகுனி –வளைந்து சுருட்டி கொள்ளும் உண்ணி.

சருக்கம் –ஒரு குறிப்பிட்ட காவியத்தின் தலைப்பு. இது சர்க்கா என்று வடமொழியில் திரிந்துள்ளது.

சருமம் –உறித்தால் சுருண்டு கொள்ளும் மனிதனின் தோல்

சரு- சருமம் என்பதே சரீரம் என்று வடமொழியில் திரிந்துள்ளது

சருவம் –வீட்டில் பயன்படுத்தும் சருவப் பானை

சருப் பாம்பு என்பதே சாரைப்பாம்பு என்றானது.

சருப்பாம்பு என்பதே சர்ப்பம் என்று வடமொழியில் திரிந்தது

சக்கரம் என்பதற்கான மூலச் சொல்லே சரு தான்.

சருக்காரம் என்பதே சக்கரம் என்று ஆனது.

அந்த சருக்காரத்தால் பிழியப்பட்டதால்

கரும்புச்சாற்றை சருக்காரைக் கட்டி என்றார்கள்

சருக்கை அரை கட்டி என்பதே சர்க்கரை என்றானது

சர்க்கரை என்பதே அரபு மொழியில் சுக்கார் என்றானது

அதுவே ஆங்கிலத்தில் சுகர் என்றானது

அந்த சரு என்ற வார்த்தையில் இருந்து தான் சுருள் என்ற வார்த்தையும் பிறந்ததாக சொல்லப்படுகிறது…….

அரிய வகை பாம்புகளைப் பற்றி அறிய செய்திகள்

அதில் ஒரு பாம்பின் பெயர் ஓடுகாலி.

ஒரு இடத்தில் நில்லாமல் துறு துறுவென்று ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர் சிறுமிகளை, “ஒரு இடத்துல நிக்குதான்னு பாரு ஓடுகாலி” என்று திட்டுவது உண்டு.

அந்த ஓடுகாலி என்ற பெயர் இந்த பாம்பிடம் இருந்துதான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் நூலாசிரியர் விஸ்வா, ஓடுகாலி எனும் பெயரைச் சொல்ல வெட்கப்படுவதாகவும், இந்தப் பெயரை மாற்ற வேண்டும். என்று நினைப்பதாகச் சொல்லி இருக்கிறார். தமிழில் வேறு நல்ல பெயர் வைப்பது அவசியம் என்றும் சொல்லி இருக்கிறார். அதுபோன்ற செயல்களை செய்ய வேண்டியதில்லை விஸ்வா அவர்களே. அது அவசியமற்றது. தமிழில் எல்லாப் பெயர்களும் பொருள் உள்ளது தான். காரண காரியமாக வைத்திருப்பார்கள் அதை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை. எனவே ஓடுகாலி என்பதே நல்ல பெயர் தான்.

பாம்பு வகைகளில் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பெயர், கொம்பேறி மூக்கன். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் கூட வந்திருக்கிறது. பழி வாங்கும் உணர்ச்சிலும் முயற்சியிலும் மனிதர்களை விட, ஹீரோவை விட, வில்லன்களை விட பெரிதாக இந்தப் பாம்பை பற்றி கதை கதையாக பேசுவதை கேட்டிருக்கிறேன் ஆனால், கடைசியில் இந்த பாம்பு, நஞ்சற்ற பாம்பு என்கிறார். எனக்கு இந்தப் பக்கத்தை படிக்கையில் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. வடிவேல் படத்தில் வரும் காமெடி போல.

இப்படி பாம்புகளைப் பற்றியும், பாம்புகளை மீட்கப் போன இடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும். சுவைபடச் சொல்லுகிறார்.

முடிவில் நம்மையும் ஐ பாம்பு என்றே வியக்க வைக்கிறார்.

நூலின் தகவல்கள் 

நூல் : ஐ பாம்பு

ஆசிரியர்  : விஸ்வா நாகலட்சுமி

வெளியீடு  : காக்கைக்கூடு பதிப்பகம்

 

எழுதியவர் 

பொன். விக்ரம்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *