(தில்லியில் கலவரம் நடந்தசமயத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்த அல்-ஹிந்து கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அன்வர் அவர்களுடைய போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழும் பிணைத்திடுவோம் என்றும் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர். எனினும், டாக்டர் எம்.ஏ.அன்வர், நான் என் கடமையைச் செய்தமைக்காக பொய்யாகப் பிணைத்திட முடியாது என்று கூறுகிறார்.)

கலவரங்கள் நடைபெற்ற வட கிழக்கு தில்லியில் முஸ்தபபாத் என்னுமிடத்தில் 22 வயதுள்ள முகமது இம்ரான் தன் தந்தையுடன் வீதியில் வந்துகொண்டிருந்த சமயத்தில், காவல்துறையினர் திடீரென்று அங்கிருந்த குடியிருப்புவாசிகளை வீட்டிற்குள் போகுமாறும் கேட்டுக்கொண்டே, துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினார்கள்.

பிப்ரவரி 25 அன்று இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த சமயத்தில் வட கிழக்கு தில்லி, இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, முஸ்லீம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. பெரும் கூச்சலும் குழப்பமும் நடந்துகொண்டிருந்த சமயத்தில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டு ஒன்று இம்ரான் கானின் பிறப்புறுப்புப் பகுதியில் தாக்கி, கடும் வேதனையைக் கொடுத்தது. காயத்திலிருந்து வந்த ரத்தம் நிற்கவே இல்லை. இம்ரானுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அவரது குடும்பத்தார் உணர்ந்தனர். ஆயினும், வன்முறை வெறியாட்டங்கள் வீதிகளில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால், அவர்களால் அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.

அந்த சமயத்தில், அதிர்ஷ்டவசமாக, பழைய முஸ்தபாபாத்தில் ஒரு கிளினிக் மட்டும் திறந்திருந்தது. அந்த கிளினிக், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் உதவி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தது. டாக்டர் எம்.ஏ. அன்வர் என்பவரால் நடத்தப்பட்டுவரும் ‘அல்-ஹிந்த்’ என்னும் அந்தக் கிளினிக் மிகவும் சிறிய ஒன்றுதான். மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் நிறைந்த ஒன்று அல்ல. எனினும், இம்ரானின் நிலையைக் கண்ட டாக்டர் அன்வர் அவரை உள்ளே கொண்டுசென்று, அவருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் இம்ரான், லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர், தினக்கூலியான இம்ரான், இப்போதும் சிகிச்சையில்தான் இருந்து வருகிறார். அன்றையதினம்  தன்னுடைய உயிரைக் காப்பாற்றியவர் டாக்டன் அன்வர் அவர்கள்தான் என்று அவர் நம்புகிறார். “அவர் மட்டும் அன்றையதினம் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்காமல் இருந்திருந்தாரானால், நானும் என்னைப்போன்று மற்றவர்களும் உடனடியாக பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்க முடியாது,” என்று இம்ரான் கூறுகிறார்.

அல்-ஹிந்த் கிளினிக் போட்டோ:இஸ்மத் ஆரா

உயிரைப் பாதுகாத்தவரா அல்லது கொலைகாரரா?

கலவரங்கள் நடைபெற்ற சமயத்தில், தன்னுடைய கிளினிக்கில் டாக்டர் சிகிச்சை அளித்த 600க்கும் மேற்பட்ட நோயாளிகளின் மத்தியில் இம்ரான் என்பவரும் ஒருவர். அவர்களில் பலர் கடுமையான முறையில் காயங்கள் அடைந்திருந்தார்கள். கிளினிக்கில் இருந்த டாக்டர் அன்வரும் மற்றும் அவருடைய சகோதரரான டாக்டர் மெராஜ் இக்ரம் என்பவரும் 24 மணி நேரமும் புல்லட், பெல்லட், கத்தி, கம்பி, கம்பு போன்றவற்றால் காயங்கள் அடைந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

இப்போது, கலவரங்கள் சமயத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்ற அறிக்கைகளில் ஒன்றில் தன்னையும் குற்றஞ்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு,  டாக்டர் அன்வர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்,. 20 வயதுள்ள, தில்பால் நெகி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் டாக்டர் அன்வரும் குற்றஞ்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஜூன் 4 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்ற இடத்திற்கு வெளியே, பி.ஆர்.அம்பேத்கர், தியாகி பகத்சிங், மகாத்மா காந்தி படங்கள் இருந்தன. மூவர்ணக் கொடி பறந்துகொண்டிருந்தது. எனினும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்திய அரசாங்கத்திற்கு எதிராகக் கிளச்சி செய்துகொண்டிருந்தனர். கிளர்ச்சி செய்துகொண்டிருந்தவர்கள், 23.02.2020 அன்றிரவு, வன்முறையில் ஈடுபட்டார்கள். அதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை தயால்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஃபரூக்கியா மசூதியில் கிளர்ச்சியை நடத்தியவர்கள் 1. அர்ஷத் பிரதான் 2. டாக்டர் அன்வர், அல்-ஹிந்த் மருத்துவமனை உரிமையாளர். மேலே கூறியுள்ள நபர்களை விசாரணை செய்ய முடியவில்லை. பின்னர் அவர்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, அதன்படி விசாரிக்கப்படுவார்கள்.”

டாக்டர் அன்வர், தான் அன்றையதினம் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே செல்லவில்லை என்று கூறுகிறார். “பிப்ரவரி 19 அன்று, நான் என்னுடைய அத்தையின் ஈமச்சடங்கில் கலந்துகொள்வதற்காக பீகார் சென்றிருந்தேன். பிப்ரவரி 24 அன்று காலைதான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.  களைப்பாக இருந்ததால் வீட்டில் தூங்கிவிட்டேன். போராட்டம் நடந்த இடத்திற்குச் செல்லவில்லை,” என்று கூறுகிறார்.

மேலும், அன்வர், தனக்கு அர்ஷத் பிரதான் என்பவர் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறுகிறார். “அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரை எப்போதுமே சந்தித்தது இல்லை,” என்கிறார்.

பிப்ரவரி 27 அன்று அல்-ஹிந்த் மருத்துவமனையில் நடைக்கூடத்தில் ஊழியர்கள் 

பேசிக்கொண்டிருக்கும் காட்சி போட்டோ: ராய்ட்டர்ஸ்/அனுஸ்ரீ ஃபட்னாவிஸ்

‘மனிதாபிமானத்தின் அடிப்படையை’க் காட்டியதற்காகவே, தான் ‘குறி வைக்கப்பட்டிருப்பதாக’ அன்வர் கூறுகிறார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கூறுகிறார்.

“நான் வன்முறையின் எவ்வித வடிவத்திலும் நம்பிக்கையில்லாதவன். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்துவந்த சமயத்தில் கூட்டங்களைக் களைத்திட காவல்துறையினர் என்னைக் கேட்டுக்கொண்டபோதெல்லாம் நான் சுற்றிலுமிருந்த மக்களிடம் சென்று பேசியிருக்கிறேன், அவர்களும் என் பேச்சைக் கேட்டார்கள்,” என்று அன்வர் கூறுகிறார். “ஒரு சமயம், கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு நான் கேட்டுக்கொண்டிருக்கையில் என் மீதும் காயம் ஏற்பட்டது. நான் கிளர்ச்சியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக்கொண்டேன்,” என்று அன்வர் கூறினார்.

டாக்டர் அன்வர் (வயது 40) பீகார் சம்பரான் பகுதியைச் சேர்ந்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் தில்லி வந்தார். ஜிடிபி மருத்துவமனையில் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். பின்னர் முஸ்தபாபாத்தில் சொந்த கிளினிக்கைத் துவங்கி, அங்கேயே வசித்து வருகிறார்.

“நான் என்னுடைய மருத்துவ சிகிச்சையை ஒரு மேசை ஒரு நாற்காலி ஆகியவற்றுடன் ஒரு சிறிய அறையில்தான் துவங்கினேன்,” என்று நினைவுகூர்ந்திடும் டாக்டர் அன்வர்,  “படிப்படியாக ஒரு சிறிய அளவிலான கிளினிக்கை திறக்கக்கூடிய அளவிற்கு முன்னேறியிருக்கிறேன். இந்தப் பகுதியில் ஏழை மக்கள் ஏராளமாக வசிக்கிறார்கள். அவர்கள் தினக்கூலி உழைப்பாளி மக்கள். அவர்களால் அதிக அளவில் செலவு செய்து பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் சிகிச்சை பெற முடியாது. நான் அவர்களிடம் 50 ரூபாய் மட்டும் கட்டணம் பெற்றுக் கொண்டு புற நோயாளிகளாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் துவங்கினேன். சில சமயங்களில் அந்தத்தொகையைக்கூட அவர்களால் கொடுக்க முடியாது,” என்றார்.

கொஞ்ச காலத்திலேயே டாக்டர் அன்வர் முஸ்தபாபாத் குடியிருப்புவாசிகளாக உள்ள அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் மதிப்பும் மரியாதையும் பெற்றார். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவர் எப்போதும் தயாராக இருப்பார்.

சமூக முடக்கம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்தப் பகுதியில் இருந்த அநேகமாக அனைத்து மருத்துவர்களும் நோயாளிகளைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டனர். ஆனால், டாக்டர் அன்வர் மட்டும் நோயாளிகளைத் தொடர்ந்து பார்த்து, சிகிச்சையளித்து வந்தார்.

அல்-ஹிந்த் கிளினிக் என்பது ஒரு சிறிய கூடம், இரண்டு அறைகள், பத்து படுக்கைகளுடன் இருக்கிறது. மூன்று மருத்துவர்களும், இரு மருத்துவ ஊழியர்களும் பணிபுரிகின்றனர். வட கிழக்கு தில்லி கலவரத்தின்போது மருத்தவமனையும், அவசரப் பிரிவு வார்டும் 24 மணி நேரமும் செயல்பட்டது.

அல்-ஹிந்த் மருத்துவமனையின் முகப்பு டெஸ்க்,  போட்டோ:இஸ்மத் ஆரா

எனக்காக என் செயல்கள் பேசும்

“பாதிப்புக்கு உள்ளானவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் 24 மணி நேரத்தையும் செலவிட்டோம்,” என்று டாக்டர் அன்வர் கூறுகிறார்.

மருத்துவர்கள் பொதுவாக “தொழில்முறை” மருத்துவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் வன்முறை வெறியாட்டங்களின் கொடூரத்தன்மை எல்லை மீறிச் செல்லும்போது, அவர்களும்கூட தன்நிலை இழந்துவிடுகிறார்கள். தன் உடம்பு முழுவதும் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கொண்டுவரப்பட்டவரைப் பார்த்துவிட்டு தன் தம்பி, டாக்டர் மெராஜ், ஒரு சமயம் கதறி அழுததை,  அன்வர் நினைவுகூர்ந்தார்.

நான் அவனை இறுகப் பிடித்துக்கொண்டேன். இவ்வாறு நன்கு வளர்ந்த டாக்டரே கதறி அழுத அந்த சமயத்தில் நான் அவனிடம், “டாக்டர்கள் கதறக் கூடாது, அதுவும் முக்கியமாக இதுபோன்ற தருணங்களில் கதறக்கூடாது” என்று அவனை சமாதப்படுத்த முயன்றேன். மேலும் அவனிடம்,  “நீ இவ்வாறு அழுதாயானால், மக்கள் நம்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்,” என்றேன்.

வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மத வன்முறை வெறியாட்டங்கள், பல குடும்பங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது. அவர்களின் வீடுகளையும், கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டது. கலவரங்களுக்குப்பின்பும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்வர் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்ததே அங்கிருந்த மக்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலான விஷயமாகும்.

கலவரத்தின்போது தீயினால் சாம்பலாக்கப்பட்ட ஒரு கடை,  போட்டோ:இஸ்மத் ஆரா

“மக்கள் வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக மிகவும் பயந்துபோய் இருக்கிறார்கள். சில அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பல்வேறுவிதங்களில் உதவ முன்வந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் சுமார் பத்தாயிரம் பேர்களுக்கு வெற்றிகரமாக முதல் உதவி செய்திருக்கிறோம்,” என்று டாக்டர் அன்வர் கூறினார்.

டாக்டர் அன்வரின் கிளினிக்கிற்கு பக்கத்திலிருந்த குடியிருப்புவாசிகள் பலர் தாமாகவே முன்வந்து முதலுதவிக்குத் தேவையான பஞ்சு, பாண்டேஜ் துணிகள், காயங்களுக்கு உதவும் மருந்துப் பொருள்களைக் கொண்டு வந்து தந்து உதவியிருக்கிறார்கள். புரகிரசிவ் மெடிகோஸ் மற்றும் சயிண்டிஸ்ட்ஸ் ஃபோரம் தேசிய கன்வீனரான, டாக்டர் ஹர்ஜித் பட்டி, எய்ம்ஸ், ஜேஎன்யு, மாக்ஸ் மருத்துவமனைகளிலிருந்து டாக்டர்கள் குழுவும் மற்றும் வக்ப் வாரியத்திலிருந்தும்  அன்வரின் கிளினிக்கிற்கு வந்து உதவி இருக்கின்றனர்.

கலவரம் நடைபெற்று வந்த சமயத்தில் அன்வரும் அவருடைய சகாக்களும் 24 மணிநேரமும் பாதிக்கப்பட்டு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சில சமயங்களில் இது அவர்களுக்கும் கூட அசாத்தியமான அளவிற்கு இருந்திருக்கிறது. எனினும் அவசியம் கருதி செயல்பட்டிருக்கிறார்கள்.

கலவரத்தின்போது அல்-ஹிந்த் கிளினிக்கில் முதலுதவி பெற்ற ஒருவர், போட்டோ:இஸ்மத் ஆரா

‘நான் பயப்படவில்லை. ஏனெனில் நான் எந்தத் தவறும் செய்திடவில்லை.’

அன்வர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது, அவர்கள் குடும்பத்திற்கு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அன்வருக்கு இரு குழந்தைகள். கலவரம் நடந்தசமயத்தில், தன்னை மிரட்டி அலைபேசியில் ஏராளமாக அழைப்பு வந்தது என்று கூறும் அன்வர் பின்னர் அலைபேசி அழைப்புகளை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டதாகக் கூறினார். சிகிச்சைக்கு வந்த நோயாளிகளே, “காவல்துறையினர் உங்கள்மீது குறி வைத்திருக்கின்றனர், எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறியிருக்கின்றனர்.

“நான் அவர்களின் எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் நான் காவல்துறையினருடன் மிகவும் சுமுகமான உறவுகள் வைத்திருந்தேன்.  சிரமங்களைக் கையாள இருவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் சில பிரச்சனைகளுடன் அவர்கள் என்னிடமும், இங்குள்ள பெரியவர்களிடமும் வருவார்கள். நாங்கள் அனைவரும் அமர்ந்து பேசி, பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கிறோம்,” என்று அன்வர் கூறினார்.

“எந்தவிதத்தில் பார்த்தாலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நான் எவ்விதத்திலும் உதவிகளைச் செய்ததில்லை. குற்றங்கள் செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும்,”  என்கிறார் டாக்டர் அன்வர்.

பிப்ரவரி 27 அன்று அல்-ஹிந்த் கிளினிக் ஸ்டோலிருந்து மருத்துவ ஊழியர்கள் மருத்துவ உபகரணங்களைப் பெறும் காட்சி போட்டோ: ராய்ட்டர்ஸ்/அனுஸ்ரீ ஃபட்னாவிஸ்

“மக்களுக்காக நான், மக்களால் நான்”

கடந்த நான்கு மாதங்களில் அன்வருக்கும் முஸ்தபாபாத் மக்களுக்கும் இடையேயான பிணைப்பு என்பது மிகவும் வலுவான ஒன்றாகக் கெட்டிப்பட்டிருக்கிறது.

“எனக்கு உடம்பு சரியில்லை என்று எவரேனும் கேள்விப்பட்டால், என்னைப் பார்க்க அவர்கள் ஓடோடி வருகிறார்கள். ஏதேனும் உதவி வேண்டுமா என்று என்னிடமும் என் குடும்பத்தாரிடமும் கேட்கிறார்கள்,” என்று அன்வர் கூறுகிறார்.

“கலவரத்தின்போது நான் உதவிய மக்கள் இப்போது என்னிடம் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் அவர்கள் என்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். தேவைப்பட்டால், எனக்காக நீதிமன்றத்திற்கும் வரத் தயார் என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் குறிவைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு மக்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள்,” என்று அன்வர் கூறுகிறார்.

“என் மருத்துவமனைக்கு வந்த சடலங்கள் குறித்து போலீசார் என்னிடம் விசாரித்தார்கள். கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் யார் என்றும், அவர்களுக்கு நிதி உதவி அளிப்பது யார் என்றும் என்னிடம் விசாரித்தார்கள். ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசியவர்கள் யார் என்றும் என்னிடம் விசாரித்தார்கள். ஆனால், இக்கிளர்ச்சிப் போராட்டங்களின் ஓர் அங்கமாக எப்போதுமே நான் இல்லாதபோது, இக்கேள்விகளுக்கெல்லாம் எப்படி நான் பதில் கூற முடியும்? எனவேதான் அவர்கள் என்மீது கோபமாக இருக்கிறார்கள். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழும் என்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி இருக்கிறார்கள். என் அலைபேசியைப் பறிமுதல் செய்துள்ளார்கள். இதுவரை அதை அவர்கள் என்னிடம் திருப்பித்தரவில்லை,” என்று அன்வர் கூறுகிறார். அவர் நிறைவாகக் கூறியதாவது:

“என்னைப் பிணைத்திட அவர்கள் எப்படி வேண்டுமானாலும் முயலட்டும். இதில் அவர்கள் தோல்வியடைவார்கள். எனக்காக என் வேலைகள் பேசும். தில்லியில் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடந்துள்ள கலவரங்களில் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியைத் தவிர வேறெதுவும் நான் செய்திடவில்லை.”

(நன்றி:தி ஒயர்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *