ஷோபாசக்தி (Shobasakthi) எழுதிய இச்சா (நாவல்) Ichaa Novel - நூல் அறிமுகம் - https://bookday.in/

இச்சா (நாவல்) – நூல் அறிமுகம்

இச்சா (நாவல்) – நூல் அறிமுகம்

இறுக மூடிக் கிடந்த அந்த ஜன்னலின் கதவைத் திறக்க நான் வெகு நாட்களாய் பிரயத்னப்பட்டுக் கொண்டு தானிருந்தேன். ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் அதன் வெளிப்புறம் நான் அதுவரை கண்டிராத பறவை ஒன்று வந்து அமர்ந்து கொண்டது. ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருந்து உந்த, ஜன்னலின் அருகே சென்று அதன் வித்தியாசமான உருவ அமைப்பை ஆராய்ந்து கொண்டு இருந்தேன். அதுவும் தன் கூரிய பார்வையால் என்னை மேலும் கீழுமாய் அளந்து கொண்டிருந்தது. இருவரின் மூச்சுக் காற்றும் ஜன்னல் கண்ணாடியின் உள்ளும் புறமும் படர்ந்து நிற்க, அந்த கதகதப்பு போதுமானதாய் இருந்தது மூடிக் கிடந்த ஜன்னல் கதவு தானாய் வெடித்து திறந்து கொள்ள…

************************

கணமும் தாமதிக்காமல் உள் நுழைந்து, தன் சிறகுகளின் சாம்பல் வண்ண மடிப்புகளில் செந்நிறக் கூரலகை நுழைத்து சிலுப்பிக் கொண்ட அந்தப் பறவை வாய் திறந்து பெண் குரலில் பேசத் துவங்கியது
“என் பெயர் ஆலா…”

ஓர் அழகிய வெள்ளிப் பாவை போல் தகதகத்த அதன் கறுப்பு மேனி ஒரு குயிலினும் சிறியதாய் இருந்தது. ஆனால் களைப்பே அறியாத அதன் சிறகுகளை விரித்தபோது, அவை அதன் உடலினும் இரு மடங்கு நீண்டு கிடந்தன.

பறவையினங்களிலேயே அதிக தூரம் பறக்கும் வல்லமை கொண்டவள் ஆலா என்பதை அவள் சொல்லித்தான் நான் அறிந்து கொண்டேன். இதை அவளிடம் நான் பகிர்ந்து கொண்ட நொடியில் அவள் இதழோரம் ஒரு புன்னகை தோன்றி, கண்களில் சென்று அமர்ந்து கொண்டது.

ஆலா கைது செய்யப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் விசாரணைக் கைதியாக இலங்கையின் ரகசிய வதைமுகாம்களின் கொடூர சித்திரவதைகளுக்கு தன்னுடலை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த காலங்களில், அவளது விசாரணை அதிகாரி, அவள் இட்டுக்கட்டிய தகவல்களை மட்டுமே சொல்வதாக புலம்பியபடியே, தன் தலையில் தானே கைகளால் ஓங்கி அறைந்து கொண்ட காட்சிகளை நினைவு கூர்ந்தாள்.

எது எப்படியோ, ஆலா என்னிடம் மனம் திறந்து உண்மைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாக நான் முழுவதுமாய் நம்பத் துவங்கி இருந்தேன்.

“இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே அதிக வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் பெண் நான் தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முந்நூற்று இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும்…”

ஆலா, தளபதி சுல்தான் பப்பாவினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலான ‘இரட்டை சிறகுகள் நடவடிக்கை’ இறுதி நேரத்து குழப்பங்களால் கைவிடப்பட, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, முந்நூறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதி.

“நான் விடுதலையாகி வரும்போது உங்களின் இளமையை எனக்கு தானமாக தரப்போவது உங்களில் எவர்? ஒரேயொரு நாள் இளமை மட்டுமே எனக்குத் தேவை!”

உள்ளத்தை உலுக்கியெடுக்கும் கேள்விக் கணையை வீசும் அந்த இளம் பெண்ணிற்கு நான் என்ன தான் செய்து விட முடியும், அவள் சொல்வதை அட்சரம் பிசகாமல் நம்புவதைத் தவிர…

ஆலாவிடம் இரண்டே ஆசைகள் தான் எஞ்சியிருந்தன. ஆசைகள் என்பதை விட, லட்சியங்கள் எனச் சொல்வதே பொருத்தமானதாய் இருக்கும்.

முதலாவதற்கு பின்னர் வருகின்றேன். இரண்டாவது அவளது தளபதி சுல்தான் பப்பா வெடித்துச் சிதறி, மாட்சிமை பொருந்திய மரணத்தை தழுவிக் கொண்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையின் வெண்மணலை முத்தமிட வேண்டும், ஒரேயொரு முறையாவது…

தீர்ப்புக்கு முன்னர் இரண்டு வருடங்கள் இரகசிய சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த போது, அவளிடம் இருந்து உண்மையை வரவழைக்க போடப்பட்ட நூற்றுக்கணக்கான போதை ஊசிகளும், ஏற்றப்பட்ட போதை வஸ்துகளும் அவளது உடலை மரத்துப் போகச் செய்திருந்தன. கண்டி ரஜ வீதிய பெண்கள் சிறை வாழ்க்கையோ அவளது ஆன்மாவையும் மெல்ல மெல்ல மரத்துப் போகச் செய்யத் துவங்கியிருந்தது.

ஆனால், தனது சுல்தான் பப்பாவின் மூச்சுக் காற்று கலந்திருந்த மணலை மரத்துப் போன உதடுகளால் முத்தமிடுவதை அவள் ஒருபோதும் ஏற்றுக் கொள்பவளாய் இல்லை. தனது உடலையும், ஆன்மாவையும் மீட்டெடுக்க அவள் சளைக்காமல் போராடி வந்திருக்கிறாள்.

‘பெண்ணொருத்தி முழுமையாகச் சிறு புழுவாக மாறிவிடாமல் இருப்பதற்கான கடும் எத்தனமது.’

அப்போது தான் அவளது ஏறணைத் தம்புரான் அனுப்பி வைத்த தேவதை தந்த வரமாக, தலைமை சிறை கண்காணிப்பாளர் ‘லொக்கு நோனா’ மூலமாக ஆலா எழுதி தள்ளுவதற்கு தினமும் ஒரு தாள் கிடைக்கின்றது. அந்த தாள்களில் எழுதி வைத்த குறிப்புகளைத் தான் அவள் என்னிடம் கதையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘அவளது ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறகு. ஒவ்வோர் எழுத்தும் ஓர் இறகு!’

கதை எனும் போது, வரிசைக் கிரமமாக, காலக் கிரமமாக அடுக்கப்பட்ட நிகழ்வுகளாக நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்து கொள்ள இயலாது. எந்த வித ஒழுங்கு முறையுமின்றி, கலைத்து போட்ட சீட்டுக்கட்டில் இருந்து ஒவ்வொரு சீட்டாய் பொருக்கி எடுக்கும் சோதிடக்காரனின் கூண்டுக் கிளியினைப் போல், ஆலா நொறுங்கி கிடந்த தனது நினைவடுக்குகளில் இருந்து ஒவ்வொன்றாய் உருவி எடுத்து, என்னிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆலா ஓர் அற்புதமான கதைசொல்லி. அவளது கதை சொல்லும் பாங்கு அலாதியானதாக அமைந்ததற்கு இந்த ஒழுங்கின்மையே அடித்தளமாய் அமைந்தது என்பேன். அதிலும், அவளின் கதை துவங்கிய போது போட்ட முடிச்சுகளை, கதை முடிந்த பிறகு தான் என்னால் அவிழ்க்க முடிந்தது. முடிச்சுகள் அவிழ்ந்து, முழுவதுமாய் விளங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையை அடைந்த போது, ஆலா என்னருகில் இல்லை.

“உண்மையை எழுதுவது என்பது சமுத்திரத்தில் கல்வீசி அலைகளில் நீர்வளையங்களை உருவாக்குவதைப் போன்றது”

சில இடங்களில் குழப்பமாகவும், ஒழுங்கற்றும், சங்கேதங்களாலும் நிறைந்து கிடந்த அவளது கதையில், அன்பும் வெறுப்பும் காதலும் கோபமும் காமமும் அச்சமும் துக்கமும் பொறாமையும் வாதையும் வலியும் ஏராளமான நீர்வளையங்களை உருவாக்கிக் கொண்டே பயணிக்கின்றன.

ஆலா ஓர் அற்புதமான கதைசொல்லி. அவளது கதை முழுவதும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதை மாந்தர்கள் ஏராளமாய் வலம் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு செய்தியை சொல்லிவிட்டு தான் செல்கிறார்கள்.

கதை நெடுகிலும் எண்ணற்ற கிளைக் கதைகளையும் கூத்துப் பாடல்களையும் இசைப்பாடல்களையும் போகிற போக்கில் இணைத்துக் கொண்டே போவது ஆலாவின் சுவாரசியமான தனித்தன்மை.

அவற்றில் முக்கியமானதும் ஆலா தனது வாழ்க்கை நிகழ்வுகளோடு அடிக்கடி ஒப்பீடு செய்து கொள்வதும், கண்டி அரசன் ஶ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கு எதிராக கலகம் செய்த மந்திரியின் குடும்பத்தின் கதை. மந்திரியின் குடும்பத்தினரை பிடித்து வந்து, பிறந்து பத்தே நாட்கள் நிரம்பியிருந்த பச்சிளங் குழந்தையை மந்திரியின் மனைவி, உரலில் போட்டு தன் கையாலேயே உலக்கையால் குற்றி நொருக்க வேண்டுமென ஆணையிடுகிறான் கண்டி அரசன்.

அந்த பச்சிளங் குழந்தையைப் போன்று உரலில் வீழ்ந்து, உலக்கைக்கு தப்பிப் பிழைத்தவள் தான் ஆலா. பத்து வயதான மந்திரிகுமாரி சாமலி தேவியின் வீரம் தான் அவளை உலக்கைக்கு தப்ப வைத்து, உயிருடன் பிழைக்க வைக்கிறது.

அவளது முதலாவது மற்றும் அதி முதன்மையான லட்சியமான ‘மாட்சிமை பொருந்திய மரணம்’ என்பதை ஆலா, சாமலி தேவியிடம் இருந்தே தரித்துக் கொண்டுள்ளாள். இன்னும் சொல்லப் போனால் அவளது வாழ்க்கையின் மொத்த சாராம்சத்தையும் இந்த முத்தாய்ப்பான மூன்றே வார்த்தைகளுக்குள் அடக்கி விடலாம்.

‘இரட்டை சிறகுகள் நடவடிக்கை’ தோல்வியுறும் போது, தற்கொலை குண்டுதாரிணியான ஆலா தன்னைத்தானே வெடித்துக் கொள்ள வேண்டும் எனும் கட்டளையே கிடைக்கப் பெறுகிறது. ஆனால் தன் மரணம் எப்படி சம்பவிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும் ஆலா, வாய்க்குள் அடைக்கப்பட்டிருக்கும் சயனைட் குப்பி, கழுத்துக்கு கீழே இருக்கும் வெடிகுண்டு என கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சாவையும் துச்சமென துறக்கிறாள். அதற்கான விலையும், விளைவும் எத்தகைய கொடூரமானவை என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும்.

அந்த கணத்தில் தான், ஆலா இயக்கத்தையும், இயக்கம் ஆலாவையும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைவிட்டு விலகிப் போகிறார்கள்.

அவளது சாவு சாமலிதேவியின் சாவு போல தலை குனியாது இருக்கட்டும் எனும் லட்சியமே வாழ்நாள் முழுதும் நிழலைப் போன்று அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பின் நாட்களில் நிகழ்காலத்தில் உடலை மட்டும் விட்டு விட்டு, பத்து நிமிடங்களுக்கு பிறகான எதிர்காலத்தில் மனம் பயணிக்க பழகிக் கொண்ட காலகட்டத்தில், அதே லட்சியம் மனதையும் முந்திக்கொண்டு அவளை கைபிடித்து அழைத்தபடியே முன்செல்கின்றது.

இலங்கையின் ஒரு எளிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக, விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்ட ஒரு பெண் போராளியின் வழமையான வாழ்க்கை சட்டகத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தி போகிறது ஆலாவின் வாழ்க்கையும்.

கள்ளங்கபடமற்று பறவைகளைத் துரத்தி பிடித்துக் கொண்டிருந்த பால்யம், சிங்களத் தாக்குதலால் சிதறிப்போன குடும்பம், புலிகள் இயக்கத்திற்குள் தஞ்சம், கந்தக மணம் வீசும் ஆயுதப் பயிற்சி முகாம்கள், இரத்தத்தில் தோய்ந்த போர்முனை, இராணுவத்தின் கொடூரமான சித்திரவதைகள், உருக்குலைக்கும் சிறை வாழ்க்கை என ஏற்கனவே கேட்டறிந்த வாழ்க்கைப் பாடுகள்.

ஆனால் ஆலா வழமையெனும் கூண்டுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் சாதாரண பறவையல்ல. பூமியின் ஒரு துருவத்தில் இருந்து எதிர்த் துருவம் வரை இலக்கு நோக்கி பறக்கக் கூடியவள்….

முதன் முதலில் துப்பாக்கியை தூக்கிய போது அவள் தரித்துக் கொண்ட லட்சியமும், எவ்வளவு இக்கட்டான தருணத்திலும் இம்மியளவும் சமரசம் செய்து கொள்ளாத மனோதிடமும் அவளது வாழ்க்கையை அசாதாரணமாக மாற்றி விடுகிறது.

அவளது காதலும் கூட அசாதாரணமானது தான் அவளைப் பொறுத்தவரையிலும்…

‘உங்கள் மொழிபெயர்ப்பு படித்தேன்.உங்கள் தூவல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்’
எனும் முன்பின் சந்தித்திராத சுல்தான் பப்பாவின் வாழ்த்து அட்டையில் துளிர்க்கிறது அவளது பரிசுத்தமான கள்ளம். தூவலின் அர்த்தம் விளங்கிக் கொள்கையில் அவளுள் சுரக்கத் துவங்கி விடுகிறது காதலெனும் பெருநதி.

அக்கறையும், அனுசரணையும், வாஞ்சையும் வாய்ந்த ஒரு சிறு சொல், அன்பின் பேருருவமாக அவதாரமெடுக்கும் வல்லமை படைத்தது. நிதர்சனத்தில், பல தருணங்களில் அது வீழ்வதற்கோ அல்லது வீழ்த்துவதற்கோவான ஒரு துவக்கப் புள்ளியாகவும் உருமாறி விடுகிறது. ஆனால் ஆலாவின் அன்பு வாழ்வதற்கான பேராயுதமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

காலம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டங்களில், நாம் எந்த முகமூடியை தெரிவு செய்து கொள்கிறோம் அல்லது எந்த முகமூடி கிடைக்கப் பெறுகிறோம் என்பதைப் பொறுத்தே, வாழ்க்கை தன் தடங்களை விட்டுச் செல்கிறது.

காலம் என்பது தேவதையா அல்லது சாத்தானா என்பது எவரும் விளங்கிக் கொள்ள இயலாத ஒன்று. எந்த வித சிக்கலுக்கும் தீர்வு காலத்தின் மடியில் தான் ஒளிந்து கொண்டுள்ளது எனும் போது, அது தேவதையாக காட்சி தருகிறது. எல்லாவிதச் சிக்கல்களும் அதே காலத்தின் மடியில் தான் புதைந்து கிடக்கின்றன எனும் போது அதுவே சாத்தானாக மாறிவிடுகிறது.

அவ்வாறு காலம் தேவதையாகவும் சாத்தானாகவும் மாறி மாறி ஆடும் ஆட்டமொன்றில், ஆலா ஐரோப்பாவிற்கு பறந்து செல்கிறாள். அவள் சென்ற ‘லன்டோ ப்ளான்சே’ எனும் ஐரோப்பிய நகரமொன்றில் பேசும் உரோவன் மொழி அகராதியை கூட ஆலா எனக்கு கொடுத்திருந்தாள். ஆனால் அது எனக்கு உபயோகப் படவேயில்லை.

ஆலாவின் வாழ்க்கை நெடுகிலும், ஆலாவோடு கிட்டத்தட்ட சுல்தான் பப்பா போன்று இரண்டறக் கலந்து நிற்பவை – அவள் வயிற்றில் மீன்குஞ்சு போல நிரந்தரமாக தங்கி விட்ட ஷெல் துண்டும், அவளது மனதிற்கு நெருக்கமான குறளியும்.

குறளி என்பது ஒரு பைசாசம். ஆலாவின் கதையில் வரும் பேய்களோடு பேசலாம், விளையாடலாம், வேலைக்கு வைத்துக் கொள்ளலாம், விவாதங்கள் கூட நடத்தலாம்.

ஆலா ஒரு நுளம்பைப் போல் அடித்துக் கொல்லப்படவிருந்த ஆபத்தில் இருந்தும், ஒரு கோழிக் குஞ்சைப் போல் அவளை சிறுகச் சிறுக தின்று கொண்டிருந்த அப்பாச்சியிடம் இருந்தும் அவளைக் காப்பாற்றி விடுதலை பெற்றுத் தந்தது ஒரு துப்பாக்கி தான். அவளுக்கு தைரியத்தையும், நிம்மதியையும் அளித்த துப்பாக்கி, ‘இண்டியா சார்லி’ ஆயுதப் பயிற்சி முகாமில் ஒரு ‘குறளி’யாய் அவளது ஆன்மாவை நிறைக்கிறது. சுல்தான் பப்பாவிடம் இருந்து அன்பின் அடையாளமாகவும் ஒரு ‘குறளி’ அவளை தழுவிக் கொள்கிறது.

அதே ‘குறளி’ தான் ஐரோப்பாவின் கொடும்பனிக் குளிரில் மரத்துப் போய் கிடந்தவளை, கப்டன் ஆலாவாக உயிர்த்தெழுப்புகிறது.

ஆலாவின் வாழ்க்கை ஒரு உருவகமாய் ஒவ்வொருவருடனும் ஏதோ ஒரு இடத்தில் கனகச்சிதமாகப் பொருந்திப் போகவே செய்கிறது.

ஓடித் திரிந்து களித்து கிடந்த பால்யமாகட்டும், போராளியாய் செதுக்கப்படும் முகாம்களாகட்டும், அன்பு நிறைந்த ஒரு சொல்லில் துளிர்த்து தழைக்கும் காதலாகட்டும், சாவின் விளிம்பிலும் லட்சியத்திற்காக தலை குனியாது நிமிர்ந்து நிற்கும் மனோதிடமாகட்டும், புண்ணில் இருந்து வெளியேறும் புழுக்களால் நாற்றமடிக்கும் சிறைக் கொட்டடியிலும் தன்னை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையாகட்டும்…

தனது லட்சியத்திற்காக தீராத வேட்கையோடு அணையா நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறாள் ஆலா…

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக செறிவுள்ளதாக மாற்றிக் கொள்ள சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கும் ஆலாவை நாம் எங்கும், எவரிடத்திலும் சந்திக்கக் கூடும்…

“போகிற போக்கில் புயற்காற்று செடியைச் சும்மா பிடுங்கி விட்டுப் போவதில்லை. அங்கு செடிக்கும் காற்றுக்கும் ஒரு சமர் நிகழ்ந்திருக்கும். ஒவ்வொரு இலையும் எதிர்த்த பின்பு தான் வீழ்ந்திருக்கும். என் மரணமும் அப்படித்தான் நிகழும்”

******************************

ஆலா கிளம்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

என் காதருகே குனிந்து, இரும்பில் சுத்தியலால் அடிக்கும் ஓசை போன்ற சுல்தான் பப்பாவின் குரலில் தீர்க்கமாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள்….

“உங்கள் தூவல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…..”

நூலின் தககவல்கள் : 

நாவல் – இச்சா
படைப்பாளர் – ஷோபா சக்தி
வெளியீடு – கருப்பு பிரதிகள்
முதற் பதிப்பு – நவம்பர் 2019
விலை – ரூ. 350

நூல் அறிமுகம் எழுதியவர் : 

எஸ்.பிரேமலதா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *