வணக்கம் நண்பர்களே,
லொக்கு நோனா என அழைக்கப்படும் சிறைத் தலமை அதிகாரி மர்லின் டேமி அவர்களால் பிரான்ஸின் தலைநகர் பாரிசில் ஒரு தேனீர் உணவகத்தில் வைத்து இரகசியமாக பாதுகாக்கப்பட்ட காப்டன் ஆலாவின், சிறையில் இருந்து இரகசியமாக எழுதப்பட்ட (600க்கும் மேற்பட்ட)எழுத்துப் பிரதியை தனது மிகப் பெரிய பாரத்தை இறக்கி வைத்ததுபோல் ஆசிரியர் ஷோபாசக்தியிடம் கையளிக்கிறார் அன்றைய சிறையதிகாரி.இந் நாவலின் அடிப்படை உருவகத்தை இங்கிருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
இன்றைய காலக்கட்டத்தில் எல்லோராலும் அறியப்பட்ட புனைவுப் படைப்பாளிகளில் ஒருவர் தான் ஷோபாசக்தி அவர்கள். என்னைப் பொறுத்தவரை அவரது நாவல்கள் முழுமையான புனைவாக இல்லை என்றே சொல்வேன். அவரது நாவல்களை வாசிக்கும் ஈழத்தமிழன் அவரது நாவலின் உள்த்தளங்களை உன்னிப்பாக உற்று நோக்கினால் நாம் அதற்குள் எங்கேயோ ஒரு இடத்திலாவது பார்வையிலும் சரி, செவிவழியிலும் சரி அல்லது நேரடி அனுபவத்திலும் சரி, கண்டிப்பாகப் பயணித்திருப்பதை உணரலாம். அதனை இச்சா நாவல் மூலம் பதிவு செய்கிறார் ஆசிரியர் ஷோபாசக்தி அவர்கள்.
ஒருவன் தனது வாழ்க்கையை ஒரு குறிக்கப்பட்ட வயதைத் தாண்டும்போதுதான் திடமாகத் தீர்மானிக்க முடிகிறது. ஆனால் அதில் சிலர்,மிகவும் இளம் வயதினிலேயே மிகவும் துரதிர்ஷ்டவசமாக ஆச்சரியம், ஏக்கம், கவலை, துன்புறுத்தல், கட்டாயப்படுத்தல், விரக்தி, வறுமை, வர்க்க வேறுபாடுகள் இவை போன்ற இன்னும் பல காரணங்களால் தனது ஆன்மாவை அழித்துக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்படுக்கிறார்கள்.இதன் வெளிப்பாடே ஆலாவின் இதயத்துடிப்பை இச்சா நாவல் எங்கள் கண்களை விரியவைக்கின்றன.
இச்சா நாவல் வெள்ளிப்பாவை எனும் காப்டன் ஆலா, தனக்கு ஏற்பட்ட சிறுபராயம் முதல் இறுதி வரையிலான சாவு வரைக்கும் நடந்த நிகழ்ச்சியையே இழுத்துச் செல்கின்றது. இதில் ஆலாவைப் போன்றே சமூகத்தின் விளிம்புத் தளத்திலிருந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என சில மனிதர்களுக்கு தெளிவான முகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் நாவல் முழுவதும் சொல்லொனாத் துயரம் நிரம்பி வழிந்து கொண்டு போவதைக் கவனிக்கலாம் . ஒடுக்குமுறை, புறக்கணிப்பு, ஏமாற்றுதல், துரோகம் போன்ற கீழ்மைகள் கதை முழுதும் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. ஈழப்போரின் மானுடத்துயரை ஆலாவின் வாழ்வை ஊடறுத்துச் செல்லும் பல்வேறு காலகட்டங்கள், பல்வேறு மனிதர்கள் ஊடாக நகர்த்துகிறார் ஷோபாசக்தி.
என்னைப் பொறுத்தவரை இந்நாவல் இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகத் தெரிகிறது.
ஆலாவின் சிறுபராயம் தொடக்கம் அவரது சிறைக் கொடுமை அனுபவங்களையும், அதற்கிடைப்பட்ட காலகட்டங்களில் அவரது இளம் பருவ அடக்குமுறை, பாலியல் வலோற்காரம், சிங்கள ராணுவத்தின் மற்றும் காடையர்களின் அட்டகாசம், போராட்டப் பயிற்சிகள், அவரது விடாமுயற்சியின் பங்களிப்பு, காதல், இதுபோன்ற சம்பவங்களையும் அடுத்து பிற்பகுதியில், அவருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பிரகாரம் அய்ரோப்பிய நாட்டிலிருந்து சென்ற ஒரு பத்திரிகையாளர்(வாமதேவன்) சிறையிலிருந்த ஆலாவைத் திருமணம் செய்து, பின்னர் ஒரு பிள்ளையுடன் (பதுமன்) அய்ரோப்பாவில் வாழும் நிலைப்பாட்டை சிறந்த புனைவாகப் படைத்திருப்பது பாராட்டத்தக்கது. நாவலின் ஆரம்பம் (ஆலா சிறையிலேயே இறப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்) ஆலாவின் நிஜமான சரித்திரமாகவும், பின்னர் கற்பனை நிகழ்ச்சியாகவும் படைத்திருக்கும் ஷோபாசக்தி, அதிலும் ஒரு உண்மை இருப்பதாக உணர்கிறேன். காரணம் அப்படிப்பட்ட இளைஞர்களையோ அல்லது யுவதிகளையோ ஈழப் போர் முடிவடைந்த பின்னர் அதிகமாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்களது நாடகம் சகஜமாக நடைபெறுவதைத் காணலாம். அதனைத் தான் அவர் வெளிக்காட்டியிருக்கலாம்.
ஆலா என்ற பெயர் வரக்காரணம் என்ன? ஏன், எதற்காக, எப்படி அவர் ஈழப் பெண்போராளியாக உருவெடுத்தார்? அதன் அடிப்படைக் காரணம் என்ன? அவரது கிராமத்தின் அன்றைய நிலைப்பாடு எப்படி? அவர்களது பதுமர் இனத்தவர்களின் தொழில் மற்றும் கடவுள் யார்? அவர்களது சூனிய மந்திரங்கள் எத்தனை வகையுள்ளன? அவற்றின் சக்தி (பவர்) எப்படிப்பட்டது? இது போன்ற இன்னும் எக்கச்சக்கமான கேள்விகளுக்கு விடை தருகிறார் ஆசிரியர் ஷோபாசக்தி அவர்கள்.
இச்சா நாவல்,
இரத்த ஞாயிறு.
சித்திர முகாம்,
பதுமர் குடி,
சிங்களத்தி,
நீராமகள்,
வன்னிப் பெருநிலம்,
இரட்டைச் சிறகுகள்,
முதலாம் எதிரி,
முந்நூறு ஆண்டுகள்,
பிலேந்திரன்,
விநோதமங்கை,
காரணக் குறளி,
ஆகிய சிறிய தலைப்புகளுடன் நகர்த்தியிருப்பது, வாசிப்போருக்கு நாவலின் ஒவ்வொரு பகுதியையும் நினைவில் வைத்துக் கொள்ள இலகுவான தமிழ் நடையிலும் மற்றும் அவரது வழமையான கிண்டல், பகிடிகளும் கலந்திருப்பது, நாவலின் தொடர் வாசிப்புக்கு மெருகேற்றுவது போல் அமைந்துள்ளது.
முழுக்க முழுக்க ஆலாவின் துயரங்களையும் அவர் அனுபவித்த சிறைக் கொடுமைகளையும் வாசிக்கும் போது, கவலையும், துக்கமும், கண்ணிரும் தான் மேல் ஓங்குகிறது. இலங்கை அரசின் இனவாத ஒளிப்பு நடவடிக்கை தமிழ் மக்களின் ஓட்டு மொத்த ஆன்மாக்களையே ஆவியாக்கியது. இதனால் கூறவரும் ஆசிரியர், இன்றைய காலகட்டங்களில் புரட்சியானது ஆயுதபலம் கொண்டு அடியோடு ஒழிக்கப் படுவதை ஆலா மூலம் பதிவு செய்கிறார்.
வழமைபோல் இங்கும் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் இலுப்பங்கேணி ஊடாக மக்களின் இடர்பாடுகளையும் அவர்களது துயரங்களையும் இலங்கை அரசின் காணி அபகரிப்பு, மொழி வேற்றுமை, இது போன்ற பல சம்பவங்களைக் காட்டும் ஆசிரியர், அவர்களது நிலத்தையும் தங்களையும் மந்திரங்கள் மூலம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதனையும் அழகாகச் சித்தரிக்கிறார்.
ஒரு நாவலுக்கு கதைக்களம், பாத்திரங்களின் படைப்பு, அவர்களது பண்பாட்டு ஆவணம், சிறந்த சொற்றாடல், இவையாவற்றையும் தாங்கியே இச்சாவைப் படைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதுபோன்ற நாவல்கள் இனி வரப்போகும் தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது நிட்சயம்.ஒரு காலகட்டத்திலாவது நாவல்கள் சொல்லும் கதைகள் உண்மையாகவே இருக்கவேண்டும். அத்துடன் மானிடத்திற்கான நேசம் அதில் பதிந்திருக்க வேண்டும். அதனை ஷோபாசக்தி தனது நாவல்களில் பதியத் தவறுவதில்லை. மனிதநேயம் இல்லாவிட்டால் அதனால் ஏற்படும் வேதனையை யாராலும் ஜீரணிக்க முடியாது.
எப்போதும் போல் ஆசிரியர் ஷோபாசக்தி அவர்கள் உண்மையை மறைப்பதில்லை. அவரிடத்தில் காணப்படும் மிகப் பிரத்தியேகமான ஒரு கருத்தாற்றல், தெரிந்ததை மட்டுமே விபரிப்பார். தெரியாததை தெரியாதென மறுத்துவிட்டுவது. ஈழப்போரின் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் விடுபட்டிருந்தாலும் அவை எந்தவிதத்திலும் வாசகனைச் சென்றடைய அதிக தூரம் இருக்கலாம் என எனது பார்வை. இதனை ஒவ்வொரு நாவலிலும், கதை, கட்டுரைகள் மூலமாக அவர் வாசகர்களுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அரசியலையே இலக்கியமாகவும், இலக்கியத்தை அரசியலாகவும் படைக்கும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஈழப்போரின் பின்னரும் கூட அவை அரசில் சார்ந்த இலக்கியமாகவே தெரிகிறது. ஆனால் இத்தனை காலத் துயரமான நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் மக்களின் உள்ளங்களை நிறைத்தவண்ணமே இருக்கின்றன. இதனையே ஷோபாசக்தி அவர்கள் நாவல்கள் மூலமாக எங்களுக்கு நினைவுபடுத்துகிறார் போல் தெரிகிறது. ஒருமுறை சொன்னால் போதாது அதனை அடிக்கடி சொன்னால் தான் மனிதன் சிந்திப்பான். இதனையே இலக்கியம் பல உருவங்களில் நமக்குக் காட்டுகிறது என எனது பார்வை.
நண்பர்களே, துயரங்கள் மலைபோல் சிறையில் அடைபட்டிருக்கும் ஆன்மாக்களின் உடல் முழுக்கக் கொட்டிக்கிடக்கின்றன. சுடு சொற்களும், சூடு போட்ட காயங்களும் தினமும் காதால் கேட்டும் உடலின் உணர்ச்சி வேதனைகளும் நிறைந்த ஆலாவின் ஆன்மா, போராளி என்றால் என்ன என்றதற்கு, தனக்கே ஒரு வரையறை வகுத்து, தனது மரணம் வீண்போகக்கூடாது என்றெண்ணி, இறுதியாக தானே சரணடைந்து, தனது 23 வயதில் சிறைச்சாலையில் மரணமடைந்து, இறுதியாகப் புதைக்கப்பட்ட அந்த மயாணத்தின் இறுதியான **வெள்ளிப்பாவை ** என்றும் எங்கள் நினைவில் விட்டு அகலவே மாட்டாள்.
வாசியுங்கள் நண்பர்களே.
நன்றிகள்.
பொன் விஜி-சுவிஸ்.
புத்தகத் தலைப்பு:- இச்சா
ஆசிரியர் :- ஷோபாசக்தி
நூல் வெளியீடு :- கருப்புப் பிரதிகள்
பக்கங்கள் : – 304
விலை :- 290/-
முதல் பதிப்பு நவம்பர் 2019
இரண்டாம்பதிப்பு ஜனவரி2020
விற்பனைத் தொடர்பு:- 94442 72500