கவிஞர் கு.இலக்கியன் | இச்சிறுகுடி நிலத்தின் பெரும் வாதை (Ichsirukudi Nilathin Perum Vathai) | Mouval Publication - மௌவல் பதிப்பகம்

நூல் அறிமுகம்: இச்சிறுகுடி நிலத்தின் பெரும் வாதை

புத்தகத்தின் பெயர்: இச்சிறுகுடி நிலத்தின் பெரும் வாதை (Ichsirukudi Nilathin Perum Vathai)
ஆசிரியர்: கு.இலக்கியன்
வெளியீடு: மௌவல் பதிப்பகம் (Mouval Publication), 2023
விலை: ரூ.100

கவிஞர் கு.இலக்கியன் தஞ்சாவூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதிப்புறு விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தால் மூன்று கவிதை நூல்களும் இரண்டு சிறுகதை தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.

உணர்வுகளின் வெளிப்பாடான மகிழ்ச்சி, சோகம், கோபம், ஆச்சரியம் என எல்லா உணர்வுகளையும் சொற்களின் மூலம் உருவாக்கப்படும் ஓர் அழகிய காட்சியாக இக்கவிதை நூலில் திகழ்கிறது.கற்பனை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை கற்பனை வளத்தோடு விவரிக்கும் திறன் கவிதைகளுக்கு உண்டு என நிரூபித்துள்ளார் ஆசிரியர் இலக்கியன்.

எழுத்தாளர்கள் பொதுவான சொற்களை கூட புதிய அர்த்தத்தில் பயன்படுத்தி, அவற்றிற்கு ஒரு புதிய உயிரைக் கொடுக்கும் திறன் கவிதைகளுக்கு உண்டு என்பதை கவிஞர் இச்சிறுகுடி நிலத்தின் பெரும் வாதை (Ichsirukudi Nilathin Perum Vathai) புத்தகத்தில் விவரித்துள்ளார்.

நாம் வாழும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகள், நடந்த நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை கவிநயத்தோடு வாசகர்களை கவரும் அளவிற்கு இவரின் கவிதைகள் சிறப்பாய் உள்ளது.

கவிஞரின் முதல் கவிதை வாசிக்கும் நம் மனம் வருந்தும் அளவிற்கு உள்ளது. ஒரு குடும்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை உருவகமாகக் கூறுகிறது. குறிப்பாக, தந்தையின் செயல்களால் தாய் வருத்தப்படுவதையும், தினந்தோறும் வேதனைப்படுவதும், பிள்ளைகள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பதையும் குறிப்பிடுகிறது. இது ஒரு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்பு மற்றும் துன்பங்களை வெளிப்படுத்துகிறது.

கவிஞரின் கவிதைகள் இயற்கையின் சுழற்சியையும், உயிர்வாழும் போட்டியையும் பெரும்பாலும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தன் கவிதைகளுக்கு அழகூட்டும் வண்ணமாக இயற்கையின் அழகு, உயிரினங்களின் வாழ்க்கை முறை மற்றும் விவசாயிகளின் உழைப்பு ஆகியவற்றை மிக அழகாக விவரிக்கிறது. வயல்வெளியை ஒரு காட்சிப்படமாக வைத்து, அதில் நடக்கும் பல நிகழ்வுகளை ஒரே நேரத்தில் சொல்லியும் உள்ளார்.

ஆணாதிக்கம் பற்றி ஒரு கவிதையில் கூறுகையில், ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்ற தவறான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் பிரச்சினை. இந்த நம்பிக்கையின் காரணமாக, பெண்களுக்கு குறைந்த மதிப்பு கொடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன எனும் கருத்தை சொல்லிவிட்டு, இத்தகைய பிரச்சினைக்கும் பெண்கள் அடிமைத்தனமாக இருப்பதற்கும் காரணம், முந்தைய காலத்தில் வாழ்ந்த பெண்கள் தான் என அடித்து சொல்லுவார்.

மேலும் கவிஞர் பெண்களின் வீரம் பற்றிய கவிதையில், காலங்காலமாக பல கலாச்சாரங்களிலும் சமூகங்களிலும் பாடப்பட்டு வரும் ஒரு பொதுவான கருத்து. இது வெறும் சொல் அல்ல, பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் காட்டும் துணிச்சல், தைரியம் மற்றும் தியாகத்தை குறிக்கிறது. பெண்களுக்குள் ஒளிந்திருக்கும் வீரத்தை புகழ்ந்து காட்டியுள்ளார்.

உணவுக்கும் பசிக்குமான ஒரு முழம் இடைவெளியில் நின்று வேடிக்கைப் பார்க்கிறது வாழ்க்கை எனும் கவிதையில், மிகவும் சோகமான உண்மையை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை என்பது நமக்கு தேவையான அனைத்தையும் நம்மைச் சுற்றி வைத்திருந்தாலும், நாம் அதை அடைய முடியாமல் தவிக்கும் நிலையை இது விவரிக்கிறது. நமக்கு தேவையானது நம் கண் முன்னே இருந்தாலும், சில காரணங்களால் நாம் அதை அடைய முடியாத நிலை எனும் கருத்தை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்.

கவிஞர் இலக்கியன் கவிதைகள் அனைத்தும் மிகுந்த கருத்துகளையும் கற்பனை வளங்களும் சேர்ந்து ஒரு காப்பியமாக இந்தக் கவிதை நூல் தெரிகிறது.

எழுதியவர்:

தி.தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்,
அரசு உதவி பெறும் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி,
ஆடுதுறை.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. கு.இலக்கியன்

    ஆசிரியர் அவர்களுக்கு நன்றி்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *