8 அக்டோபர் 2023, ரெஜினா சந்திரா அவர்களின் “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது . விரைவான வாசிப்பு என்றாலும் தொடர்ந்து வாசிக்கும்படி இயல்பாகவும், நடைமுறை வாழ்வோடு இழையோடும் நிகழ்வுகள் வழியாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர் ரெஜினா.
தனது வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளுக்குத் தங்கமுலாம் பூசி, கதாப்பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டி உரையாடலோடு கதையைக் கட்டமைத்தது மிக இயல்பு, அதுவே ஈர்ப்பு. பல கதைகள் மெட்ரோ பயணங்கள் எனும் புதிய தளத்தில் உள்ளன. “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” தலைப்பு கவித்துவம். உண்மையில் உடலில் இடப்புறத்தில் இருக்கும் இதயத்தைத் திறக்க வைக்கிறது ரெஜினாவின் எழுதுகோல் எனும் இதயத் திறவுகோல்.
உணர்வுகளை வருடிவிட்டபடியே நினைவுகளால் நம்மைத் தாலாட்டுகிறது ரெஜினா சந்திராவின் எழுத்து நடை. பல கதைகளில் நாம் அந்தப் பாத்திரங்களாகவும், சில சூழல்கள் நம் வாழ்வில் அனுபவித்ததை இணைத்துப் பார்க்கவும் வைக்கிறது “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்”. சில கதைகள் முடிவில்லாப் பயணம் போலத் தோன்றும், வாசிக்கும்போது இந்தக் கதை இப்படி முடிந்திருக்க வேண்டும் என வாசிப்பவரை எழுத்தாளரோடு சிந்திக்க வைக்கும்.
13 கதைகளும் பலவிதம். மழலை முதல் முதுமை வரை, ஏழை முதல் வலியவர் வரை, நட்பு, அலுவல், உறவினர் என வாழையிலையின் எல்லாப் பகுதிகளிலும் நிரம்பிய உணவு வகைகள் போல பந்தி பிரமாதம். விண்மீன்கள், நெஞ்சே நெஞ்சே, இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும், செல்வி – இ ஆ ப, மே மாதக் கல்யாணம் எனக் கதைத் தலைப்புகளும் கவித்துவம்.
சிறுகதை விரும்பிகள் ரசித்து மகிழ்வர். எல்லா வாசிப்பாளருக்கும் ஒரு மாறுதலான உணர்வு தரும். “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” ரெஜினா சந்திராவின் முதல்படைப்பு என நம்ப மனம் மறுத்தாலும் அவர் சிந்தனையும், கதைக்களமும் அவரது அனுபவத்தைப் பறைசாற்றுகிறது. எழுத்தாளர் ரெஜினா சந்திராவை வாழ்த்தி வரவேற்போம். “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” வாசித்து மகிழ்வோம்.
நூலில் ரசிக்கத்தக்க சில வரிகள்
“சாதாரணமாக எழுந்த அந்த யோசனை நாளடைவில் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் 1-10 நகர்வது போல் தீவிரமடைந்தது”.
“காலை நேரங்களில் முகத்தைப் பார்த்துப் பேச அவசியமில்லாத மேம்போக்கான உரையாடல்கள் மட்டுமே இவர்களுக்குள்”.
“இயற்பியல் ஆசிரியரிடம், ‘கிரீன் கிரீன்’ ஆகத் திட்டு வாங்கி அழுதது”.
“இது உங்களுக்கு நல்லா இருக்கும். இதுல பல்லு கிராண்டா இருக்கு!
ஏன் பல்லு மூக்குன்னு சொல்றீங்க அழகா முந்தானி, தலைப்புன்னு சொல்லலாமில்ல ?”
“திருமண பந்தத்தில் இணைய விரும்பி இருவரும் உதித்த ‘ஆம்’ என்ற ஒற்றை சொல் எல்லா வேலைகளுக்கும் தொடக்கப் புள்ளியானது”.
“இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்”
நூலை வாங்க +919884981161
எழிலினி பதிப்பகம்.