அலுவலகம் முடித்து உடலின் ஆற்றலை முழுவதுமாய் இழந்த நிலையில் டூவீலரில் கிளம்பி சென்னை பாரிமுனையில் இருந்து கேகே நகர் முருகன் தேநீர் கடையை நோக்கி.. பெருமழையின் நீர் தேக்கத்தால் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக.. பள்ளம் மேடுமாக.. தார்ச் சாலைகள் பிளந்து வழியெங்கிலும் கருங்கல் சல்லிகள் இரைந்து காணப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசலும்.

எத்தனை இடையூறுகள் இருந்தாலும் மூளை என்னவோ எதற்கு சைதை ஜெ செய்து ஃபோன் செய்தார்.. நாளை யார் யார் விடுப்பு சொல்லி இருக்கிறார்கள்.. நாளைய பொழுதினை யாரை வைத்து வேலைகளைத் திட்டமிடலாம்.. இப்படியாகவே ஓடிக்கொண்டிருந்தது மனதுக்குள். ஒரு வழியாக முருகன் தேநீர்க் கடை வாசலுக்கு வந்து சேர்ந்தால்.. ஏற்கனவே கடையின் வாசல் முழுக்க டூவீலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.. வண்டியை எங்கு நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் வந்து அவருடைய வாகனத்தை கிளப்ப.. அந்த நொடியில் கிடைத்த இடைவெளிக்குள் என்னுடைய வாகனத்தை உள்ளே நுழைத்து நிறுத்திக் கொண்டேன். ஒரு அவுன்ஸ் டீயும் சிகரெட்டுமாக 20 நிமிடத்தை மொத்தமாக விழுங்கியது முருகன் தேநீர்க் கடை. இருண்டு கிடந்த வானம் வேகமாக தூறலை வீச.. அடுத்த ஐந்து நிமிடத்தில் எதிரில் இருக்கும் குடியிருப்பில் நான்.

டூவீலரை எனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விட்டு உள்பக்கம் தாழிடப்பட்டிருக்கும் என்னுடைய வீட்டின் கதவைத் தட்ட.. வீட்டுக்குள் ஒரே சத்தம்.. இளைய மகனுக்கும் என்னுடைய இணையருக்குமிடையில்.. கதவை திறந்து கொண்டே அவன் “ஏம்மா உனக்கு அறிவே இல்லையா” என்று வேகமாகக் கோபப்பட, அம்மாவை மரியாதை குறைவாக பேசிய மகனை அடிக்க கை ஓங்கியபடி நான் வேகமாக வர, உள்ளே இருந்த சுமதி குறுக்கே வந்து அடிக்காதீங்க அவனை என்று ஓங்கிய எனது கையைப் பிடிக்க.. தள்ளுமுள்ளோடு முடிந்தது. ஒருவழியாக இருவரின் சமாதானத்தோடு அன்று இரவு சாப்பாடு முடிந்தது..

படுப்பதற்கு முன் எப்பொழுதும் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட நான் இரண்டு நாட்கள் முன்பு வெளியிடப்பட்ட #தோழர்_தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய “இடையிலாடும் ஊஞ்சல்” புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்கத் தொடங்கிய மூன்று மணி நேரத்தில் அந்த புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடித்தேன். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து இடையிடையே ஒவ்வொருவரின் குடும்பத்திலும், வாழும் சமூகத்திலும் பெண்கள் குறித்தானதொரு புரிதலை நம்முடைய பார்வையிலும், நம்முடைய செயல்பாட்டிலும் மற்றவர்களிடையே எங்கே அமைத்துக் கொடுத்திருக்கிறோம் என்பது எனக்குள் ஆகப்பெரிய கேள்வியை எழுப்பிக் கொண்டே இருந்தது.. எவ்வளவு முற்போக்கு பேசினாலும் கூட ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் நமக்குள்ளும் அடிக்கடி வந்து நிற்கிறது பெண்களை சக மனுசியாக பார்க்க தவறும் போக்கு.. அதனுடைய வெளிப்பாடாகவே என்னுடைய 21 வயது இளைய மகன் 49 வயது உள்ள தன்னுடைய அம்மாவை கோபத்தில் உனக்கு அறிவு இருக்கிறதா என்கிற வார்த்தையை பயன்படுத்திப் பேசியது என்பதும்.

நான் எப்படி என்னுடைய இணையரோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதிலிருந்து அவன் கற்றுக் கொண்டதாக நான் உணர்ந்தேன். ஆக, காரணம் அவன் கிடையாது நம்முடைய பேச்சும் நடவடிக்கையும் தான் என்பதை புரிந்து கொள்ள, ஆண் பெண் சமத்துவம் பேசி, பெண்ணுரிமை பேசிடும் எனக்கே 58 வயது ஆகும் என நினைத்திடும் போது, அது, உளப்பூர்வமான வெட்கத்தை ஏற்படுத்தியது எனக்குள்.

“இடையிலாடும் ஊஞ்சல்” எளிய சொற்களில் ஆழமான கருத்துகளை அர்த்தம் மிகுந்த சொற்களுக்குள், செரிவாக, நிஜ வரலாறுகளின் வழியாக 34 கட்டுரைகளை கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். கடந்த மூன்று வருடங்களுக்குள் உலகில், இந்தியாவில், தமிழகத்தில் நடைபெற்ற, பெரும், சமூகம் வெட்கி தலைகுனியும் அளவிற்கு செய்தியாக வந்த நிஜ சம்பவங்களை; அப்படியான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணமான சமூக பிரச்சனைகளின் வேர் தேடி அதிலிருந்து நம்மை எதிர்கொள்ள வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கட்டுரையின் ஆசிரியர்.

பிரச்சினைகளின் வேர் தேடி அவர் முன்வைக்கும் வரலாற்று தரவுகள் சில இடங்களில் இளைய தலைமுறையினர் பலர் அறியாதது.. அறிய வேண்டும் என நினைப்பவர்கள் தேடிக் கண்டறிந்து அத்தகைய புத்தகங்களை வாசிக்கத் தூண்டும் அளவிற்கு கட்டுரையை அர்த்தம் மிக்கதாக எழுதி இருக்கிறார்.

“படையெடுக்கும் பாம்புகள்” என்கிற முதல் கட்டுரையில் இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் தான் என நிறுவுவதற்கு எத்தனை தில்லாலங்கடி வேலைகளை செய்து வந்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள் என்பதை பிஷப் கால்டுவெல் அவர்கள் “திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூல் கொண்டு எத்தனை முறை அடித்தாலும் சாக மறுக்கும் மண்ணுளிப் பாம்பை போல் மீண்டும் மீண்டும் சமஸ்கிருதம் “மொழிகளின் தாய்” என்கிற கற்பிதம் இருந்து கொண்டே இருக்கிறது என முடித்திருப்பார்.

எத்தனை புத்தகம் கொண்டு அடித்தாலும் அந்த மண்ணுளிப் பாம்பு சாகாது. அந்தப் புத்தகத்தால் வெட்டுப்பட்டால் மட்டுமே அந்த மண்ணுளிப் பாம்பு மரணத்தைத் தொடும். அடிக்கும் வேலையை விட்டு புத்தக அருவாள் கொண்டு வெட்டும் வேலையைத் தொடங்க வேண்டியது இருக்கிறது.

ஆணாதிக்கம் மிகுந்த உலகப் பெரும் சமூகத்தில் மத அடிப்படைவாதிகளிடம் ஆட்சிப் பொறுப்பு இருந்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, ஈரானில்
இளம் பெண்ணின் மரணத்திலிருந்து தொடங்குகிறது ஹிஜாப் அணிய மாட்டோம் என்று முஸ்லிம் பெண்களின் போராட்டமும் அவர்களுக்கு ஆதரவாக முற்போக்கு சக்திகளின் கைகோர்ப்பும்.. அதே நேரத்தில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இந்துத்துவா வெறியர்களின் முஸ்லிம் வெறுப்பால் ஹிஜாப் அணிந்துதான் நாங்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வோம் என்று இந்தியா முழுவதிலும் போராட்டம்.. முஸ்லிம் இளம்பெண்களின் தலைமையில் ; இங்கும் முற்போக்கு சக்திகள் அந்த பெண்களுக்கு ஆதரவாக..

ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் எந்த ஒரு முடிவையும் பெண்கள் தனியாக எடுத்திடக் கூடாது, அவர்களுக்கு என்று சொந்த முடிவு கிடையாது என்பதில், இசுலாமிய, இந்து மத அடிப்படைவாதிகள் ஒன்று போலவே இருக்கிறார்கள் . இதனை “ஈரான் பெண்களின் போராட்டம் வெல்லட்டும்” என்கிற கட்டுரையில் நேர்த்தியாக போராட்டக் களத்தில் நிற்கும் பெண்களின் பக்கம் இருந்து கட்டுரையை அழகாக செதுக்கியிருப்பார் கட்டுரை ஆசிரியர்.

“சந்தையில் பெண்ணுடல்” என்கிற கட்டுரையில் உலகத்தின் கட்டற்ற லாப சந்தையில் பெண் உடல் சார்ந்த விழுமியுங்கள் எவ்வாறு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டு இன்னொரு இடத்திற்கு நகர்ந்திருக்கிறது என்பதை மூன்று செய்திகளோடு எழுதி இருக்கிறார். மூன்று செய்திகளுமே பெண் உடல் சார்ந்த நம்முடைய மரபான கருத்துக்கள் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவையை எழுப்பி இருப்பதை உணரச் செய்து முடித்து இருக்கிறார்.

எல்லா தளங்களிலும் தனி மனிதன் தொடங்கி குடும்பம் என்கிற நிறுவனத்தின் வழியாக பொதுச் சமூகம், அனைத்தையும் திறந்த மனதோடு விவாதிக்கத் தொடங்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

“தமிழ்நாட்டில் நடக்கும் ஞானபூசை” என்கிற கட்டுரையில் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட குறிப்புகளை ஊரில் பொதுமக்கள் கூடியிருக்க ஒருவர் வாசிக்க அதை பலர் கேட்டுக் கொண்டே புதிய ஓலை சுவடிகளில் பதிவாக்கிட “ஞானபூசை” என்கிற விழாவினை ஆண்டுதோறும் நடத்திட்ட சமணம் வாழ்ந்தது இப் பூமி. பிறப்பினை (சாதி) கல்விக்கான அளவுகோல் என்று வைக்காத “வாக் தேவி” தெய்வத்தை வழங்கிய சமணத்தை விழுங்கி வைதீகம் பிற்காலத்தில் சரஸ்வதி பூஜையை நடத்தி புத்தகங்களை சரஸ்வதி தேவியின் காலடியில் வைத்து அறையை பூட்டி இன்னும் ஒரு பூசை போடாமல் தொடக்கூடாது என்று பழக்கப்படுத்தி வரும் செய்தியினை வருத்தத்தோடு எழுதி இருக்கிறார்.

தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அளித்திடும் சிறு நிதி உதவியால் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதை ‘ஞானபூசை” என்று அறிவித்து வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று மேடைதோறும் முழங்கி குருட்டு பெருமை பேசும் குடிகள் குறித்து “கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பி பாருங்க அப்பு” என்ற கட்டுரையாளருக்கே உரிய நையாண்டியோடு எழுதி இருக்கிறார் “பெருமை பேசுவோம்.. ஆனால்” என்கிற கட்டுரையில்.

பல அதிர்ச்சி தரும் சம்பவங்களை கேள்விப்பட்டும் செய்திகளாக வாசித்தும் அதிர்ச்சியே இல்லாமல் அமைதியாய் இருக்க பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் நம் பெரும் சமூகம் குறித்து கவலையோடு பேசி இருக்கிறார் தன்னுடைய பல கட்டுரைகளில்.

ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான பஞ்சம்.. இந்தியாவின் கொடூரமான தாது வருட பஞ்சம்.. இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாகமாட்டேன் என்று அறிவித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு காவி வண்ணம் பூசி அவமானப்படுத்தும் நிகழ்வு.. விளையாட்டு போட்டிகளில் ஹிட்லர் காலத்தில் தொடங்கப்பட்ட இனவெறிக் கொடூரம் இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குள் எப்படி உருமாறி நிகழ்கிறது என்கிற அபாயத்தையும் , பிராமணர்- பிராமணர் அல்லாதவர் என்கிற காலம் இன்று தலித்-தலித் அல்லாதவராக மாறி இருக்கும் பெரும் சமூகத்தின் மனப்போக்கு .. தொடரும் ஆணவக் கொலை..
இப்படி பல அதிர்ச்சி தரும் நிஜங்களை, செய்திகளை கட்டுரையாக்கி கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள்.

பசியை வெல்லும் போர்.. அவமானமே பாராட்டு.. 100 நாள் கோபங்கள்.. அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.. தினங்களின் அரசியல்.. கண்டா வரச் சொல்லுங்க.. அந்த 45 நிமிடங்கள்.. யார் சொன்னா கேட்பீங்க.. நமக்குள் வாழும் வைரஸ் ஒன்றா இரண்டா..?

நம்மை பண்படுத்துவது யார்.? ஒற்றை தீர்வு இல்லை.. துக்க நாள் அல்ல என்றாலும் துக்கமாய் இருந்தது.. எங்கள் தமிழ்..என்ன தமிழ்.? இப்படி பல கட்டுரைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

34 கட்டுரைகளும் நாம் வாழும் காலத்தில் நடந்தேறிய அநீதிகள், சம்பவங்கள், நிஜங்கள், செய்திகள்.. இவைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. எந்த ஒரு சம்பவமும் திடீரென்று சமூகத்தில் நிகழ்ந்து விடுவது கிடையாது அல்லது நிகழ்த்தப்படுவது கிடையாது. ஒவ்வொரு சம்பவமும் எந்த காற்புள்ளியிலிருந்து
தொடங்கியது என்பதை காற்புள்ளியின் முன்னிருக்கும் வரிகளில் இருந்து தொடங்கி இருக்கிறார் கட்டுரை ஆசிரியர். அனைத்தையும் வரலாற்று தரவுகளோடு கட்டுரைகளாக்கியிருக்கிறார்.

400 சொற்களுக்குள் ஒரு சம்பவத்தின் ஆணிவேர் தொடங்கி நிகழ்காலம் வரை எழுதி விட முடியுமா என்ன..? எழுதிவிட முடியும்.! அதுவும் எளிமையான சொற்களில் தரவுகளைக் கொடுத்து ஆழமாகவும் அழகாகவும் என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் நிரூபித்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள்.

இந்த கட்டுரை தொகுப்பு இளையவர்களின் கைகளில் போய் சேர வேண்டும்.. அவர்களால் மட்டும்தான் கடந்த காலத்தை அறிந்து நிகழ்காலத்தில் வாழ்ந்து எதிர்காலத்தில் ஊடுருவி பிரச்சனைகளை வேரறுக்க முடியும். இளைய சமுதாயத்திடம் இந்த தொகுப்பினை கொண்டு சேர்க்கும் பணியை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் முன் எடுக்க வேண்டும்.

இப்போது நான் ஆரம்பித்த என் கதைக்கு வருகிறேன்…
பெண் உடல் சம்பந்தமாகவும் பெண் உரிமை சம்பந்தமாகவும் ஆண் பெண் சமத்துவம் சம்பந்தமாகவும் குடும்ப நிறுவனத்தில் இருந்து தொடங்க வேண்டி இருக்கிறது என்பதை உணர்ந்த நான்.. இலக்கியனை மறுநாளின் மாலைப்பொழுதில் என் இணையரையும் உடன் அமர வைத்து குடும்பத்தில் நானும் நீயும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..? அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறார்.? அம்மா காலை எத்தனை மணிக்கு எழுகிறார்.. எத்தனை மணிக்கு உறங்குகிறார்.. பகலில் உறங்காமல் கூட என்னென்ன வேலை பார்க்கிறார்.. நாம் நம்மால் என்ன வேலை பார்க்க முடியும் அவருக்கு உதவியாக.. நமக்கான வேலையாக எதையெல்லாம் எடுத்துச் செய்ய முடியும் ..இப்படி எல்லாம் செய்து நம்மை பழக்கப்படுத்திக் கொண்டால் நாளை உனக்கான ஒரு குடும்பம் உருவாகும் பொழுது அந்த குடும்பத்தில் உனக்கு இணையராக வரக் கூடியவரிடம் என்ன விதமான மேம்பட்ட பார்வை இருக்கும் உன் குறித்து.. உன்னுடைய குழந்தைகள் உங்கள் இருவரையும் பார்த்து எப்படி வளர்வார்கள்.. எப்படி பேசுவார்கள்.. பெரும் சமூகத்தில் அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் எப்படி மாற்றத்திற்கு உள்ளாகும்.. அதுதான் நாளைய சமூகம் உன்னையும் உன்னுடைய குடும்பத்தையும் பார்க்கக்கூடிய, பழகக்கூடிய முறையில் நல்லதொரு மேம்பட்ட புரிதலை அவர்களுக்கு சொல்லும்.. என்றெல்லாம் சொல்லி நான் புரிந்து கொண்ட அளவில் இருந்து அவனுக்கு புரிய வைத்தேன்.. நல்லதொரு மாற்றத்தை என் அளவில் தொடங்கி இருக்கின்றன இந்த கட்டுரைகள்..

எப்பொழுதாவது ஆணாதிக்கம் சிந்தனைக்குள் வரும்பொழுது மீண்டும் இந்த கட்டுரைகளில் பலதை வாசித்து என்னை நேர் செய்து கொள்ள முடியும் என நம்புகிறேன். நன்றி தமிழ் அண்ணே.

இடையிலாடும் ஊஞ்சல் கட்டுரைத் தொகுப்பின் அட்டைப் படமே பல செய்திகளை, நம் மனதில் சிறு கீறல்களை விழவைத்து வலி எடுக்கச் செய்து பேசும்.

சிறப்பான முறையில் வடிவமைத்து கொண்டு வந்திருக்கிறார்கள்
பாரதி புத்தகாலயத்தினர். 21 ஆம் ஆண்டு துவக்கத்தின் முதல் நூலாக
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘இடையிலாடும் ஊஞ்சல்’ புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அவசியம் வாசித்து விடுங்கள்.

எனக்கு மூன்று மணி நேரம் ஆயிற்று இந்த புத்தகத்தை வாசிக்க.
உங்களுக்கு அதை விட குறைவான நேரமே போதுமானதாக இருக்கலாம்.

அன்பும் வாழ்த்துகளும்.

கருப்பு அன்பரசன்

நூல்: இடையிலாடும் ஊஞ்சல் { கட்டுரைகளின் தொகுப்பு }
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை. ரூ.140/-
பக்கங்கள் 144.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *