சார்ஸ் கோவி-2 (SARS-CoV-2) வேற்றுருவங்களை கண்டறிய மரபணு தொகுதி வரிசை (Genome sequencing) அவசியம். ஏன்? இது குறித்து மத்திய அரசு போதிய அளவில் செயல்பட்டுள்ளதா?
INSACOG (Indian SARS-CoV-2 Genomic Consortia) எனப்படுவது இந்திய சார்ஸ் கோவி-2 மரபணு தொகுதி திடீர் மாற்றங்களை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட குழுமம் ஆகும். இது மத்திய அரசின் ஆலோசனை குழுமம். மார்ச் தொடக்கத்திலேயே, நாவல் கொரோனோ வைரசின் புதிய அதிதீவிர தொற்று வகை குறித்து இந்த அமைப்பு அரசை எச்சரித்துள்ளது. சென்ற வாரம், இந்த அமைப்பின் தலைவரும் நுண்கிருமியியல் நிபுணருமான ஷாகீத் ஜமீல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோவிட்-19 தொற்றை அரசு கையாளும் விதம், குறிப்பாக தரவுகளைப் பகிர்வது, இரண்டாம் அலை தொற்றில் புதிய வேற்றுருவத்தின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு விமர்சனங்களை ஷாகீத் முன்வைக்கிறார்.
இந்திய சார்ஸ் கோவி-2 மரபணு தொகுதி குறித்த குழுமம், INSACOG (Indian SARS-CoV-2 Genomic Consortia) என்றால் என்ன?
பல்வேறு தரப்பு நோயாளிகளிடமிருந்து கோவிட் மாதிரிகளை சேகரித்து, அவற்றுள் சர்வதேச அளவில் தொற்று உருவாக்கும் கோவிட்-19 வேற்றுருவங்களைக் கண்டறியும் பொறுப்பு, நாட்டில் 10 ஆய்வகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 10 ஆய்வகங்களும் இணைந்த குழுமம்தான் இந்த இன்சாகாக் அமைப்பு. சில மாதிரிகள் இந்தியா முழுவதும் பரவும் அளவிற்கு திடீர் மரபணுமாற்ற உருவம் கொண்டவையா என்றும் ஆய்வு செய்ய வேண்டியது இந்த குழுமத்தின் பணி. இவற்றுள் சில சோதனைக்கூடங்கள் ஏப்ரல் மாதம், 2020லிருந்து இந்தப் பணியைச் செய்து வருகின்றன. ஆனாலும் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சோதனை நடத்தப்படவில்லை. மரபணு தொகுதியை வரிசைப்படுத்துவதில் (Genome sequencing) நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள், உயிர்தொழில்நுட்பத்துறையில் உள்ள ஆய்வுக்கூடங்கள், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR), மருத்துவ ஆராய்ச்சி குறித்த இந்திய கவுன்சில் (ICMR), மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் ஆய்வுக்கூடங்கள் ஆகியவை இந்தக் குழுமத்தில் உள்ளன. இந்த தொற்று மாதிரிகளை மாநிலங்களிலிருந்து சேகரித்து அவை திடீர் மரபணு மாற்று வேற்றுருவங்களுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்று ஆய்வு செய்யும் பணியானது, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நோய் தடுப்புக்கான தேசிய மையத்திடம் (NCDC) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து பயணம் செய்தவர்களிடமிருந்து இந்த மாதிரியை சேகரித்து வரிசைப்படுத்தும் பணி ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது.
இதன் ஆய்வு முடிவுகள் என்ன?
உயிர்தொழில்நுட்பத்துறை மே மாதம் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 20 ஆயிரம் மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டு 3,900 வேற்றுருவங்கள்(variants) கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு வேற்றுருவங்கள் B.1.1.7. (இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்டது), B.1.351 (தென்ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது), P2 (பிரேசிலில் முதலில் கண்டறியப்பட்டது) ஆகியவையாகும். ஆனால், வேறுவிதமான புதிய வேற்றுருவத்தை சில ஆய்வுக்கூடங்கள் கண்டறிந்தன. அவை இந்தியாவில் மட்டும் அடையாளம் காணப்பட்டன. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த வேற்றுருவங்களை ஒரு குடும்பமாக இணைத்து B.1.617 என்ற வேற்றுருவம் அடையாளம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு மரபணு மாற்றம் ஏற்பட்ட வேற்றுருவம் (double mutant variant) எனப் பலரும் அழைக்கிறார்கள். ஏனெனில் கொக்கி புரதத்தில்(spike protein) உள்ள E484Q மற்றும் L452R என்ற இரண்டு திடீர் மரபணு மாற்றங்கள் இந்த புதிய வேற்றுருவத்தில் இணைந்து காணப்படுகிறது. இந்த மரபணு மாற்றங்கள் தனித்தனியாக பல்வேறு இடங்களில் ஏற்கனவே இனம் காணப்பட்டுள்ளது. ஆனால் ஒரே வேற்றுருவத்தில் இதுவரை காணப்பட்டதில்லை. இதன் பல்வேறுபட்ட திடீர் மரபணுமாற்ற உருவங்கள் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்த வைரஸ் மனித உடலுக்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக்கொள்வதால் இவை குறித்து இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை.
B.1.617 குடும்ப வைரஸ் சர்வதேச அளவில் கவலை அளிக்கும் வேற்றுருவமாக உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் அதிக அளவில் நோய் விளைவித்த வைரஸ் இதுவே. மார்ச் மாதம் மகாராஷ்டிராவில் உயர்ந்துவந்த நோய் தொற்றுக்குக் காரணமும் இதுதான். நோயின் தீவிரத்தை அதிகரிக்க இந்த வேற்றுருவம்தான் காரணம் என்று நிரூபிக்க இதுவரை எந்த தடயமும் இல்லை. B.1.1.7. வேற்றுருவம் அதிக தொற்றை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களிலும் மத்திய மாநிலங்களிலும் இந்த வேற்றுருவம் ஏற்படுத்தும் தொற்று அதிகம் என்று இன்சாகாக் குழுமத்தின் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இந்த மாதிரிகளை அடையாளம் காண்பது தவிர, மரபணு தொகுதியை வரிசைப்படுத்துவதன் (Genome sequencing) பயன் என்ன?
வைரசின் தொற்றை அதிகப்படுத்துவதில் சில மரபணு மாற்று உருவங்களின் பங்கை புரிந்துகொள்வதே மரபணு தொகுதி வரிசைப்படுத்துவதின் நோக்கம். சில வேற்றுருவங்கள் நோய் எதிர்ப்புசக்தியை மீறி செயல்படுகின்றன. சில வைரஸ்கள் நோயெதிர் அணுக்களிடமிருந்து(antibody) நழுவிச்செல்கின்றன. தடுப்பு ஊசிகளின் மீது இவற்றின் தாக்கம் ஏற்படலாம்.
உலகெங்கும் உள்ள சோதனைக்கூடங்கள் (இந்தியா உட்பட) தற்போது தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், வைரசின் மரபணுமாற்ற வேற்றுருவங்களுக்கு எதிராக எவ்வளவு திறனாக செயல்படுகின்றன என்று ஆய்வு செய்துவருகின்றன. கோவிட்-19 பாசிட்டிவ் மாதிரிகளிலிருந்து வைரசை பிரித்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடமிருந்து இரத்த ஊனீர் (blood serum) சேகரிக்கப்படுகிறது (ஏனெனில் அவற்றில் நோயெதிரணுக்கள் [antibodies] உருவாகியிருக்கும்). இப்படி சேகரிக்கப்பட்ட நோயெதிரணுக்கள், புதிய மாற்று பெற்ற வைரசை அளிக்க எவ்வளவு தேவைப்படுகின்றன என்று இத்தகைய பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் நிர்ணயிக்கிறார்கள். பொதுவாக, தடுப்பூசிக்குப் பிறகு உருவாகும் நோயெதிரணுக்கள் – கோவேக்சின், கோவிஷீல்டு, ஃபைசர் மற்றும் மாடர்னா – ஆகியவைகள் வேற்றுருவங்களை அழிக்கின்றன(neutralize). எனினும் தென்னாப்பிரிக்கா, பிரேசில் மாற்றுருவங்கள் மற்றும் இரண்டு மரபணு மாற்றம் ஏற்பட்ட வேற்றுருவங்கள்(double mutant variant) ஆகியவற்றிற்கு எதிராக வெகுசில நோயெதிரணுக்களே உருவாகின்றன.
நோயெதிரணுக்களின் அளவை அதிகரிப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல, செல்சார்ந்த எதிர்ப்புசக்திக்கான இணை வலைப்பின்னல் உள்ளது. தடுப்பூசிகள் எவ்வாறு எதிர்ப்புசக்தியை முடுக்கி விடுகின்றன என்பதில் இந்த செல்சார்ந்த வலைப்பின்னல் முக்கிய பங்காற்றுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிட் 19 தடுப்பூசிகள் கிருமி பரவுவதை தடுக்கவும், தொற்று ஏற்படாமல் தடுக்கவும் இந்த தடுப்பூசிகள் அவ்வளவு திறன் வாய்ந்தது இல்லை என்றாலும் 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கின்றன.
நன்றி: தி இந்து(ஆங்கிலம்), 23.5.21