Identity politics of tribals and right Article in tamil translated by Sa.Veeramani பழங்குடியினரும், வலதுசாரிகளின் அடையாள அரசியலும் தமிழில்: ச.வீரமணி
பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 15 அன்று, போபாலில் பழங்குடியினத்தவரின் முதுபெரும் தலைவரான பிர்சா முண்டா பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற பழங்குடியினர் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், சுதந்திரத்திற்குப்பின் கடந்த பல ஆண்டுகளாகவே, பழங்குடியினர் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்று கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய அரசாங்கம்தான் நாட்டின் வளர்ச்சியில் அவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்து, பல்வேறு நலத் திட்டங்கள் மூலமாக அவர்களைப் பயனாளிகளாக மாற்றியிருக்கிறது என்றும் பீற்றிக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தக் கூட்டத்தின்போது தங்கள் அரசாங்கம் பழங்குடியினர் ஆதரவு அரசாங்கம் என்பதைப்போல் காட்டிக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இனிவருங்காலங்களில் பிர்சா முண்டா பிறந்த நாள், “ஜன்ஜதியா கவுரவ் திவாஸ்” (“பழங்குடியினரை கவுரவிக்கும் தினம்”) என அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மோடி, மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில்வே நிலையத்தை, கோண்ட் ராணி, ராணி கமலாபதி ரயில்வே நிலையம் என மாற்றும் விழாவிலும் பங்கேற்றார். அதேநாளன்று, மோடி, காணொளிக் காட்சி மூலமாக, ராஞ்சியில் பிர்சா முண்டா மற்றும் பழங்குடியினர் வரலாற்று அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

இவை அனைத்தும் தாங்கள்தான் பழங்குடியினர் நலன்களுக்காகப் பாடுபடுபவர்கள் எனக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தன. ஆனால் உண்மையில் மோடி அரசாங்கமானது பழங்குடியினர் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் வனங்கள் மற்றும் வன நிலங்களில் அவர்களுக்கு இருந்துவந்த வாழ்வாதாரங்களையும், வாழ்வதற்கான வழிவகைகளையும் அழித்துக்கொண்டும் இருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்றபின், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதே, பழங்குடியின மக்களின் அவலநிலையும் தொடங்கிவிட்டது. அரசாங்கங்களாலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் பின்பற்றப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பழங்குடியின மக்களை அவர்களின் பாரம்பர்ய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்தன, பலரையும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பேராசைபிடித்த ஒப்பந்தக்காரர்களின் கீழ் அடிமை ஊழியஞ்செய்வதற்குத் தள்ளின. பழங்குடியினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், அரசமைப்புச்சட்ட உரிமைகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன.

2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், இவ்வாறு பழங்குடியினர் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவதும், அவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவதும் நின்றிடவில்லை. மாறாக, அதன்பின்னர் வனங்களில் உள்ள இயற்கைச் செல்வங்களும், கனிம வளங்களும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுவது முன்னிலும் மோசமான முறையில் அதிகரித்தன.

நாட்டில் ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகளிலிருந்த கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவதற்கு முன்னால் அப்பகுதிகளிலிருந்த கிராம சபைகளிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. மோடி அரசாங்கம் வந்தபின்னர், இது தொடர்பான சட்டத்தில் முதல் திருத்தம் 2015இல் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டத்தின்மூலம் இவ்வாறு கிராம சபையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றிருந்த நிலைமை ஒழித்துக்கட்டப்பட்டது. மேலும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, 2011இல் ஐமுகூ அரசாங்கத்தால் பழங்குடியினர் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களும் ஒழித்துக்கட்டப்பட்டன. மேலும், இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகளிலிருந்த சிறிய சுரங்கங்களை பழங்குடியினர் கூட்டுறவு சங்கங்களுக்கு குத்தகைக்கு விடலாம் என்கிற சட்டப்பிரிவும், இப்பகுதிகளில் செயல்படும் நிலக்கரி நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 26 சதவீதத்தை சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள மாவட்ட கனிம நிறுவனங்களுக்கு (District Mineral Foundation) அளித்திட வேண்டும் என்கிற சட்டப்பிரிவும் மோடி அரசாங்கத்தால் ஒழித்துக்கட்டப்பட்டது. இவ்வாறு ஒருபக்கத்தில் பழங்குடியினருக்கு விரோதமாக நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளுக்குக் குழிதோண்டிப்புதைத்துள்ள அதே சமயத்தில், பழங்குடியினர் வாழ்ந்துவந்த வனங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம வளங்களைச் சூறையாட அனுமதியும் அளித்துவருகிறது.

1927ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தில் ஒன்றிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமுன்வடிவு, வனங்கள் மீதான உரிமைகள் தொடர்பாக பழங்குடியினத்தவரை இதர இனத்தவருடன் சமமாகக் கருதுவதற்கு கிராம சபைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த பங்களிப்பினை அழித்திட இட்டுச் செல்கிறது. மேலும் பழங்குடியினர் வனங்களில் விவசாயம் செய்வதையும், மீன் பிடிப்பதையும், வன உற்பத்திப் பொருள்கள் மீதான உரிமைகளையும், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மீது இருந்த உரிமைகளையும் கிரிமினல் குற்றமாக்கும் விதத்திலும் அமைந்திருக்கின்றன.

இந்தச் சட்டமுன்வடிவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும், மோடி அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 2018-19 ஆம் ஆண்டு வனக் கொள்கையாக இருந்தாலும் சரி, அல்லது 1980ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act, 1980)-ஆக இருந்தாலும் சரி, நாட்டின் வனங்கள் அனைத்தையும் வனங்கள் அல்லாத நோக்கங்களுக்குத் திருப்பி விடுவதற்கும், தனியார்மயத்தையும், வணிகமயத்தையும் ஊக்குவிப்பதற்கும், வனங்களின் மீது கிராம சபைகளுக்கு இருந்த அதிகாரங்களை ஒழித்துக்கட்டுவதற்கும் வழிவகைகள் செய்வதேயாகும்.

மோடி அரசாங்கம் கொண்டவர உத்தேசித்துள்ள அனைத்து மாற்றங்களும், வன உரிமைகள் சட்டத்தின் ஷரத்துக்களை அரித்து வீழ்த்தி, வன நிலங்களில் பழங்குடியின மக்களுக்கும், வனங்களில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கும் இச்சட்டத்தின் மூலமாக அளிக்கப்பட்டிருந்த உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கும், அவர்கள் வன நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், சிறு அளவில் வன உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் இருந்த உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கும் இட்டுச்செல்கிறது. இவ்வாறு பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கு வன நிலங்களில் அளிக்கப்பட்ட உரிமைகளும், அவற்றை விவசாயம் செய்வதற்கான உரிமைகளும் இப்போது ஒன்றிய ஆட்சியாளர்களால் மீறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒன்றிய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, 2020 ஆகஸ்ட் 31 வரையிலும் வன நில உரிமைகளுக்காக தாக்கல் செய்த மனுக்களில் (claims for titles) 46.69 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டிருக்கின்றன. அதாவது, அவர்களின் கோரிக்கை மனுக்களில் பாதிக்கும் கீழேயே அவர்களுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடியின மக்களுக்காக தங்கள் அரசாங்கம் ஏராளமாகச் செய்துள்ளது என்று மோடி பீற்றிக்கொண்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், உரிமை கோரி மனுக்கள் செய்துள்ள ஐந்து பழங்குடியினர் குடும்பங்களில் அநேகமாக மூன்று குடும்பங்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

மோடி அரசாங்கம், பழங்குடியின மக்களின் “சமூக நலனில்” எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை பழங்குடியினக் குழந்தைகள் கல்வி கற்க முடியாத அவல நிலையே நன்கு எடுத்துக்காட்டும். 2020 மார்ச்சுக்குப்பின்னர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பழங்குடியினக் குழந்தைகளுக்கான அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டதால், பழங்குடியினக் குழந்தைகளில் 90 முதல் 95 சதவீதம் வரை எவ்விதமான கல்வியும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணையயவழிக் கல்வி உலகம் (The world of online education) என்பது பழங்குடியின மாணவர்களுக்கு மூடப்பட்டிருக்கிறது. அநேகமாக அனைத்துப் பழங்குடியின மாணவர்களுக்கும் கல்வி உரிமை ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை கிராமப்புற பழங்குடியினக் குடும்பங்கள் மிகவும் வறியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களின் மத்தியில் பசி-பட்டினிக் கொடுமை கடுமையாக இருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு வேலை அளிப்பதிலும் அநேகமாக இவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். பழங்குடியினர் குறித்த மோடி அரசாங்கத்தின் இந்துத்துவா அணுகுமுறை, வலதுசாரி அடையாள அரசியலின் வகையைச் சார்ந்தது. மோடி, தன்னுடைய உரையில், பழங்குடியின சமூகத்தினருடன் ராமனுக்கு இருந்த தொடர்பைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்து சமூக அமைப்பில் அடித்தட்டில் பழங்குடியின மக்களை வைத்திடும் இந்துத்துவா திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.

இவ்வாறு இவர்கள் பழங்குடியின மக்களுக்காகப் போராடியவர்களைப் புகழ்ந்துகொண்டும், அவர்களின் பெயர்களை ரயில் நிலையங்களுக்கு வைத்துக்கொண்டும், அவர்களுக்காக சிலைகள் எழுப்பிக்கொண்டும் உள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு வன நிலங்களிலும், வனங்களிலும் இருந்துவந்த உரிமைகளையும், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசமைப்புச்சட்ட உரிமைகளையும் ஒழித்துக்கட்டும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. பழங்குடியினர், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களால் பலிகொடுக்கப்படுபவர்களில் பிரதானமாக இருக்கிறார்கள்.

(நவம்பர் 17, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *