கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றால், ஜனநாயகமும் இருக்காது
ஏ.எஸ். பன்னீர்செல்வன்
தி ஹிந்து, 2020 ஏப்ரல் 20
குழந்தை மருத்துவர் டாக்டர் கஃபீல் கானின் கைது குறித்து ’விபரீதமான ஆர்வம்’ என்ற தலையங்கத்தை தி ஹிந்து பத்திரிக்கை 2020 பிப்ரவரி 17 அன்று வெளியிட்டது. புதிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் மனித உயிர் மற்றும் பொருளாதாரங்கள் மீது தன்னுடைய அபாயகரமான தாக்குதலை நிகழ்த்தி வருவதால், அந்த வைரஸ் பரவுவலைக் கட்டுப்படுத்துவதிலும், மக்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கான சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதிலுமே அரசாங்கத்தின் கவனம் இருக்கும் என்றே அனைவரும் கருதுவர். ஆனால் மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்குத் தண்டனையை வழங்குகின்ற ஆதிக்க மனநிலையே இப்போது அரசிடம் இருப்பது தெரிகிறது. நீதிமன்றங்கள் உரிமைகளைப் பாதுகாப்பது, விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்காதது, இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது.
மாற்றுக் கருத்தாளர்களின் தலையெழுத்து
2018ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிவில் உரிமைகளின் பிரச்சாரகரான கௌதம் நவ்லகா, அறிஞரும், ஆர்வலருமான ஆனந்த் டெல்டும்ப்டே ஆகிய இருவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளன்று, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் சரணடைய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகினர். மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராகப் போலியான செய்திகளைப் பரப்பியதாகவும், அவரைப் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் கூறி, தி வயர் என்ற செய்தி இணைய இதழின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது உத்தரபிரதேச அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தின் அத்துமீறிய நடவடிக்கையை கண்டனம் செய்த பலரும், ’அரசியல் நெருக்கடிநிலையைக் கொண்டு வருவதற்கான சாக்காக, மருத்துவரீதியிலான இந்த நெருக்கடிநிலையைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தனர். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் போன்ற மாற்றுக் கருத்தாளர்கள் இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாக்டர் கான், நவ்லகா, டெல்டும்ப்டே, வரதராஜன் போன்றவர்கள் நியாயமற்ற வகையில் நீதித்துறையின் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர்களுக்கு, விமானத்தில் பறக்கக்கூடாதவர்களின் பட்டியலில் இடம் பெறுவதற்கான ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான உரிமைகளைப் பாதுகாப்பதில் கடந்த பத்தாண்டுகளாக நீதிமன்றங்கள் ஈடுபட்டிருக்கவில்லை. ஆனாலும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவது, தணிக்கைக்குள்ளாக்குவது மற்றும் விவாதத்திற்குள்ளாக்குவது போன்ற செயல்பாடுகளை ஆவணப்படுத்துகின்ற புலமை வாய்ந்த பதிவுகள் கடந்த 3,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்ற கூர்மையான வாதங்கள், சந்தேகங்கள் மற்றும் வேறுபாடுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளை ஆவணப்படுத்துகின்ற திரட்டாக ’மாறுபடுகின்ற இந்தியா’ என்ற நூல் இருக்கின்றது. சார்வாகா மற்றும் கௌதம புத்தர் முதல் சமகாலத்திய அறிவுஜீவிகளான ரோமிலா தாப்பர் மற்றும் அமர்த்திய சென் வரையுள்ள எழுத்தாளர்களின் குறிப்பிட்ட நூல்களைத் தொகுத்துப் பேசுவதாக அந்த நூல் இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கவும், பொறுப்பேற்றுக் கொள்ள வைக்கவும் மக்களுக்கு அது உதவுவதாக இருக்கின்றது.
போபாலில் உள்ள பாரத் பவனை நிறுவியவரும், பல்வேறு கலாச்சார நிறுவனங்களின் நிர்வாகியாக நன்கு அறியப்பட்டவருமான அசோக் வாஜ்பேய், அந்த தொகுதியைத் தொகுத்திருப்பதோடு, அதற்கான மிகவும் அருமையான அறிமுக உரையையும் எழுதியுள்ளார். , தேர்ந்தெடுக்கப்பட்ட நமது பிரதிநிதிகள், கற்றறிந்த நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலரும், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இருக்கின்ற முக்கிய பங்கைப் புரிந்துகொள்வதற்காக இந்த நூலை வாசிக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பமாகும். தங்களுக்கிருக்கின்ற ஆதரவு தருகின்ற வசதியிலிருந்து விலகி, தங்களுடைய தொழில்களின் முக்கிய நோக்கம் நோக்கி இவர்கள் அனைவரும் திரும்ப வேண்டும்.
குறிப்பிடத்தக்க ஓரிரு பகுதிகள்
இங்கே இருக்கின்ற இடப் பற்றாக்குறை அந்த நூலை முழுமையாக ஆராய்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது. அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஓரிரு நூல்களிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன். சமூகப் பிளவுகள் மிகவும் பரவலாக வடிவமைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், கோவூர் கிழார் எழுதிய, ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்த்த சங்க கால புறநானூற்றுப் பாடலை முதலில் காணலாம்.
’உன் எதிரி உயரமான பனை மரத்தின்
வெள்ளைப் பூ மாலைகளை அணிந்தவன் அல்ல
கரிய கிளைகள் கொண்ட வேம்பின்
மாலை அணிந்தவனும் இல்லை
உன்னுடைய மாலை ஆத்திப் பூவால் ஆனது
உன்னுடைய எதிரியின் மாலையும் ஆத்திப்பூவால் ஆனதே.
உங்களில் யார் தோற்றாலும்
உங்களுடைய குடியே தோற்கும்.
இருவரும் வெல்வதற்கும் சாத்தியமில்லை
தங்களுடைய ரதங்களில் பதாகையை ஏந்திக் கொண்டிருக்கும்
உங்களைப் போன்ற அன்னிய மன்னர்களை நகைப்பூட்டும்
உங்களுடய செயல்கள் குடிப் பெருமைக்கு ஏற்றவையல்ல’
என்ற அந்த புறநானூற்றுப் பாடல் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்ற சகோதரர்களான நெடுங்கிள்ளி மற்றும் நலங்கிள்ளி ஆகியோருக்கு தெளிவான அறிவுரை வழங்குகின்ற வகையில் இருக்கிறது.
இரண்டாவதாக, நெருக்கடிநிலை காலத்தில் சிறையில் இருந்து ஜெயபிரகாஷ் நாராயண் பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இருக்கிறது. அதில் ’பத்திரிகைகளையும், பொதுமக்களின் அனைத்து வகையான எதிர்ப்புகளையும் அடக்கி வைத்து விட்டு, உங்களுடைய திரிபுகளையும், பொய்களையும் நோக்கி எழுகின்ற விமர்சனங்கள் அல்லது முரண்பாடுகளுக்கு அஞ்சாமல் நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய வழியில் பொதுமக்களின் பார்வையில் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடியும், எதிர்க்கட்சிகளை அரசியல் அழிவுக்குள்ளாக்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நிச்சயம் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நமக்கென்று இருக்கின்ற சுதந்திரங்களை, ஆக்கபூர்வமான தூண்டுதல்களை, நியாயங்களை, சமத்துவத்தை பறித்துக் கொள்வதற்கான உரிமை எந்தவொரு அரசாங்கத்திற்கும் இல்லை என்பதையே அந்த நூல் நமக்கு கற்றுத் தருகிறது.
https://www.thehindu.com/opinion/Readers-Editor/no-dissent-no-democracy/article31382687.ece
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு
உண்மையான, முக்கிய விஷயம் இது…இது தேசத்தின் எதிர்கால எச்சரிக்கை கூட…இன்னொரு 1975 வேண்டவே வேண்டாம்… விமலா வித்யா