எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதி பாரதி புத்தகாலயம் "தமிழ் மீதான ஆதிக்கம்" (Thamizh Meethana Aathikam Book) - புத்தகம் ஓர் அறிமுகம்

எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம்

“தமிழ் மீதான ஆதிக்கம்” – ஆதிக்கம் அறியவும் அகற்றவும் அருந்துணையாகும் நூல்

– மயிலை பாலு

“வடவர் ஆதிக்கத்தால் தமிழுக்கு ஏற்பட்ட காயங் களுக்கு மருந்திட்டு ஆற்றுவதும், காயம்பட்ட வடு தெரியாது வளர்த்தெடுப்பதும் தமிழக மக்களின் கடமை” என்கிறார் எழுத்தாளர் இலா. வின்சென்ட். இந்தக் கடமையில் அவ ரது பங்களிப்பு என்ன என்ற வினா வுக்கு விடையாக வெளிவந்திருப்பது தான் “தமிழ் மீதான ஆதிக்கம்” என்ற நூல். தமிழர் கடையரோ?, தமிழ் மீதான ஆதிக்கம், தொல்காப்பியரும் நால்வருணங்களும், எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியமா? – என்ற நான்கு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வாசகர்களின் முன்னால் வைக்க விரும்பும் கருத்துக்களை 70 பக்கங்களுக்குள் வைத்திருக்கிறார். தமிழர் கடையரோ? என்ற முதல் கட்டுரையிலேயே நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை உணரலாம். தமிழ் மீதான ஆதிக்கத்தோடு, தமிழர் மீதான ஆதிக்கமும் எவ்வாறு கட்டமைக்கப் பட்டது என்பதை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது. “வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்” என்பான் கம்பன்.

இவனுக்கும் முந்தைய சங்க காலத்தில் வறுமை இருந்ததற்கு சாட்சிகளாக வள்ளல்கள் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு என வரையறுக்கப்பட்டு, முதல், இடை, கடை என இவர்களுக்கான கால நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. இதைத்தான் கேள்வி கேட்கிறார் இலா. வின்சென்ட். சங்க இலக்கியங்களில் புலவர்களால் பாடல் பெற்ற வள்ளல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத வட புலத்தவரால் கற்பனை செய்யப்பட்டவர்கள்தான் முதலெழு வள்ளல்களும் இடையெழு வள்ளல்களும் என்கிறார். குமணன், நளன், அரிச்சந்திரன், கர்ணன் என்ற புராண மரபுப் பெயர்களும் கதைகளும் தவிர, முதல், இடை எனும் வகையினரான 14 வள்ளல்களில் எவரும் மக்களால் அறியப்படாதவர்கள். ஆனால் கடையெழு வள்ளல்கள் என்று கூறப்படுவது கற்பனை அல்ல; புராணக் கதையல்ல என்பதைப் பெருஞ்சித்திரனார் (புற நானூறு 158 ஆம் பாடல்) இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் (சிறுபாணாற்றுப்படை வரிகள் 85 – 113) பாடல்களைக் கொண்டு நிறுவுகிறார்.

“வரலாற்றில் வாழ்ந்த தமிழ் மன்னர்களைக் கடையராக்கி, வட மொழி தொன்ம மாந்தர்களை இடை யிலும் முதலிலும் வைத்திருப்பது தமிழக வரலாற்றை வைதீகமயமாக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதி” என்ற முடிவுக்கு வருகிறார் நூலாசிரியர். இந்தித் திணிப்பு என்பது இன்று சமூகத்தில் முன்வந்துள்ள முக்கியப் பிரச்சனையாகும். இந்திய மொழிகள் மீதான சமஸ்கிருத திணிப்பின் இன்னொரு வடிவம்தான் ஒன்றிய அரசு வழியிலான இந்தித் திணிப்பு. முந்தைய காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பரிதிமாற் கலைஞர் கூற்றாகப் பதிவு செய்கிறார்: “ தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கு இன்பம் பயக்கும் என்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாஷை ஒன்றை (மணிமடைப் பவளம்) வகுக்குமாறு தூண்டிற்று. “ மொழி வழியும், இலக்கிய வழியும், இலக்கியம் படைக்கும் ஓலை வழியும் கூட நால்வருணம் திணிக்கப்பட்டது. இன்று இது கற்பனை போல தோன்றலாம்.

உண்மையை உரக்கப் பேசும் பாடல்களின் மேற்கோள்களை விரிவாக எடுத்துச் சொல்லி, “காறி உமிழத்தக்கது அல்லவா? “ இந்தக் காரியங்கள் என்கிறார் நூலாசிரியர். இந்தக் கேள்வி உறங்கும் மூளை களுக்குள் இடியை இறக்கும். மூன்றாவது கட்டுரை தொல் காப்பிய இலக்கணத்திற்குள் நால் வருணப் புகுத்தல் நடந்தது எப்படி என்பதை அலசுகிறது. அத்துடன் வருணம் சாதிகளாக இறுகி கெட்டிப் படுவதற்கு பிராமணியம் செய்த காரியங்கள் என்னென்ன? இதனை அண்ணல் அம்பேத்கர், டி. என் . ஜா ஆகியோர் வழி நின்று விளக்கம் அளிக்கிறார். 1028 சூக்தங்களைக் கொண்ட ரிக் வேதத்தில் 90 ஆவது சூக்தம் மட்டுமே சாதி பற்றி பேசுகிறது. இது இடைச்செருகலாக இருக்கலாம் என்ற முன்வைப்பை நூலாசிரியரின் ஆய்வனுபவத்திற்கு சான்றாகக் கொள்ளலாம். “சங்கம் வளர்த்த தமிழ், தாய்ப் புலவர் காத்த தமிழ்” என்ற பாடல் காதில் தேனாய் பாயலாம்.

ஆனால் சங்கம் என்பதிலும் முதல், இடை, கடை என்பதும், விரிசடைக் கடவுளே புலவராய் இருந்தார் என்பதும் ஏற்புடையது தானா? இந்தக் கேள்வி புதிதல்ல. மாறி மாறி வரும் தலைமுறை களிடம் பழைய கேள்விகளை முன்வைத்து சமகாலத்தோடு இணைத்து விடைகளையும் விளக்கங் களையும் தருவது காலத்தின் தேவை. தேவ பாஷை என்று சொல்லும் ஏமாற்று வேலையை ஒவ்வொரு காலத்திலும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. மக்களே மொழியை உண்டாக்கினர் என்பதை மீண்டும் மீண்டும் வலி யுறுத்த வேண்டியுள்ளது. இந்தத் தேவையை இலா. வின்சென்ட் நிறைவு செய்திருக்கிறார்.

இளைய தலைமுறை மேலும் மேலும் தேடி அடைய வழிவகுத்திருக்கிறார். “தமிழ் செவ்வியல் இலக்கணம், இலக்கியம், பக்தி மரபுகள், நிகண்டு கள், அகராதிகள், பிரபந்த இலக்கி யங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் ஆகிய அனைத்திலும் தொழிற்படும் சமசுகிருத ஆதிக்க மரபுகள் அனைத்தையும் விரிவாக வின்சென்ட் அவர்கள் தொகுத்து நூல் வடிவில் கலைக்களஞ்சியமாக உருவாக்க வேண்டும். அதற்கான பார்வை, தகுதி, முறையியல் ஆகியவை வின்சென்ட் அவர்களிடம் இருப்பதை இக்கட்டு ரைகள் உறுதிப்படுத்துகின்றன” என்ற பேராசிரியர் வீ. அரசு அவர்களின் அணிந்துரை சான்றே இந்த நூலின் ஆழத்தையும், அகலத்தையும் அளவிடற்கு உதவும்.

புத்தகத்தின் விவரம்:

நூல்: தமிழ் மீதான ஆதிக்கம்
ஆசிரியர்: எழுத்தாளர் இலா. வின்சென்ட்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
விலை:ரூ.100/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நூல் அறிமுகம் எழுதியவர்:

– மயிலை பாலு

நன்றி: தீக்கதிர் – 19/05/2025

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *