ஆதிக்க மனதோடு
அலையும் போர்க்கரங்களை
ஏந்தும் அரசியலின்
எண்ண ஓட்டங்களில்
கருணையும் ஈரமும் கலந்தால்
பதுங்கு குழிகளும்
பாயும் ஏவுகணைகளும்
பயனிலாது போகலாம்
பால்ருசி மாறாப் பிள்ளைகளும்
இயலா ஏதிலாரும்
வெடிகளுக்குள் எரியும்போது
இடங்களைப் பிடித்து
எதை அறுவடை செய்வீர்கள்
புகையும் வீடுகளுக்குள்ளும்
நடுங்கும் உயிர்களுக்குள்ளும்
ஊடுருவும் விமானங்கள்
அழித்துச் செல்கின்றன
நகரும் உலகின் நம்பிக்கையை.
உங்கள் நிலமென்றும்
எங்கள் நிலமென்றும்
எல்லை பிரித்து
அள்ளிப் பூசிக் கொள்ளுங்கள்
வெந்து தணியும் சாம்பலை.
அரசியலின் கூர்வாள் கொண்டு
அகதிகளை உருவாக்கி
அலைக்கழித்து வேரறுக்கும்
சண்டையில் வடியும் குருதியில்
மிதக்கிறது மனிதத்தின் பேருடல்.
இளையவன் சிவா
நரசிங்காபுரம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

