இலக்கிய நண்பனும் இரண்டு கிலோ சீனியும்
“என்ன சும்மா தான் இருக்கியா?” நேற்று கடைத்தெருவில் போகும் போது ஒருவன் கேட்டான். “இல்லையே, வேலை தேடிட்டு இருக்கேன். கம்ப்யூட்டர் கிளாஸ் போறேன், அம்மாவிற்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்கிறேன். கவிதையெல்லாம் எழுதி புத்தகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்” என்று பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால், இலேசாகச் சிரித்தேன்.” இவ்வளவும் கேட்க அவனுக்கும் பொறுமை இருக்காது.
இன்று காலை குளித்து வீடு நுழையும் போது அப்பா, அம்மாவிடம் கேட்டது காதில் விழுந்தது. ”ஏண்டி, ரேஷன்ல அரிசி, பருப்பு, பாமாயில்லாம் போடுறானாமே. நான் சொல்லித்தான் இந்த வீட்ல எல்லாம் நடக்கணுமா? தெண்டச்சோறு தின்னுட்டு சுத்தறானே தடிமாடு. வீட்டுக்குப் பொறுப்பா ஏதாவது செஞ்சா என்னவாம்?”
நான் நேற்று என்ன செய்தேன் என்று நினைத்தேன். காலையில் நூலகம் சென்று சத்திய சோதனை வாசிச்சது ஞாபகம் வந்தது. எத்தனையோ முறை வாசிச்சாச்சு. ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஒரு திருப்தி கிடைக்கிறது.
”இப்போ ரேஷன் கடையில வேலை பார்க்கிறது யாரு தெரியுமா? உன் பையனோட சிநேகிரதக்காரன் தான்” அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
தனபால் தான் அது. எனக்கும் தெரியும். பி. ஏ படிப்பில் நாலு பேப்பர் பாக்கி வைத்திருந்தான். அதனால் என்னவாம்? மனதுள் கேள்வி எழுந்தது.
”ரேஷன்ல கூட ரெண்டு கிலோ சீனி, எக்ஸ்ட்ராவா கோதுமைலாம் கேட்டா தரமாட்டேன்னா சொல்லப்போறான். இன்னிக்கு உன் பையனை அனுப்பு” அப்பாவே பேசிக்கொண்டிருந்தார்.
”அப்படிப் புத்திசாலிப்பையனைப் பெத்திருந்தா நான் இப்படி இருக்கப் போறேன். அவன் பொழைக்கத் தெரியாத பிள்ளைங்க” அம்மா அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் புலம்பலுக்குக் காரணம் தெரியும். போன மாசம் தான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில் பார்த்த வேலையிலிருந்து விலக்கி விட்டிருந்தார்கள். பி. ஏ. தமிழ் இலக்கியத்தில் திருவருட்பா படித்து விட்டு தினம் தினம் கடன் வாங்கியவர்கள் வீட்டில் வசூலிக்கச்செல்லும் போது அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் சோகக்கதையின் ஈரத்தில் நனைந்து விட்டு எப்படி முகத்தைக் கடுகடுப்பாக மாற்றிக் கேட்பது?
தினம் இருபதாயிரம் வசூலான இடத்தில் பத்தாயிரம், பதினைந்தாயிரம்னு வசூலானால் எந்த ஃபைனான்ஸ்காரன் தான் என்னை வேலைக்கு வைத்துக் கொள்வான்.
ஆயிற்று மணி பத்து. ரேஷன் கடையில போய் வரிசைல நிற்கணும். ஆனால், எப்படியாவது அம்மா சொன்ன மாதிரி சீனி, கோதுமைலாம் கொஞ்சம் கூடுதலா கேட்கணும். மனசு ஒத்துழைக்கணும்.
சரியாக 10 மணிக்குப் போக எனக்கு முன்னரே ஒரு நீண்ட வரிசை நின்றது. பத்து நாற்பதுக்கு தனபால் வந்தார். (கூடப்படித்தவர் தானென்றாலும் வேலை பார்ப்பவருக்கு ஒரு மரியாதை வேண்டாம்?)
”என்னடா சிவா? இங்க தான் இருக்கியா? ஒரு சிநேகப் புன்னகையுடன் என்னைக் கடந்து சென்று கடையைத் திறந்தார்.
கூட்டம் என்னைத் திரும்பிப் பார்த்தது.
“ரேஷன் கடைக்காரருக்குக் கிடைக்கும் மரியாதையைப் பார்க்க வேண்டுமே. இறைவனே வந்து நின்றாலும் அந்த சமயத்தில் முதல் மரியாதை ரேஷன் கடைக்காரருக்குத் தான்.”
வரிசை மெல்ல நகர்ந்தது. முதலில் வாங்கியவர் விஜய் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் வாங்கியது போல் அவ்வளவு மகிழ்ச்சி. கூடப்படித்த நண்பரென்பதால் முன்னால் போய்க்கூட வாங்கலாம். ஆனால், மனசு மறுத்தது.
அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் சரியாக அந்த நேரத்திற்கு வந்து அவரிடம் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டு காதருகில் சென்று பேசிவிட்டு ஒரு அட்டைக்கு நியாயமாக வழங்கப்படுவதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வாங்கிவிட்டு ஏதோ தமக்கு அலுவலகத்தில் அவசர வேலை இருப்பது போல் காட்டிக் கொண்டு ஓடுவார்கள்.
வரிசையில் நிற்கும் அப்பாவி ஜனங்க எங்கே எதிர்த்துக் கேட்டால் தனக்கு நியாயமாக வழங்கப்போவதையோ தர மாட்டேனென்று விட்டால்? என்று பயப்பட்டு பேசாமல் ஒரு ஞானியின் பக்குவத்துடன் சிரித்தனர்.
வியர்வை சிந்திய ஒரு மணி நேரத்திற்குப் பின் (இதற்கிடையில் எனக்கும் தனபால் சாருக்கும் சொல்லிக்கொடுத்த ஆறாம் வகுப்பு வாத்தியார் வந்து, என்ன தனபால் சௌக்கியமா? என்று ஒரு வணக்கமும் போட்டுவிட்டு தனக்குத் தேவையான அளவு வாங்கிவிட்டுப் போனார்.) என் முறை வந்தது. ”என்ன சிவா கூடுதலா ஏதாவது வேணுமா?” தனபால் சன்னமான குரலில் கேட்டார். “இல்லப்பா. அட்டைக்குள்ளது கொடுத்தாப் போதும்” என்றேன்.
வீட்டுக்கு வர அம்மா திட்டினாள்.
நான் நூலகம் சென்று தைரியமாக சத்திய சோதனை எடுத்து வாசித்தேன்.
ஆனாலும், “அநியாயத்தை எதிர்த்துக் கேட்க துணிவில்லை?” என்று மனது சுட்டிக்காட்டியது. புத்திசாலித்தனமாக நான் அதைப் புறக்கணித்து விட்டேன்.
கதாசிரியர் :
நா. ரெ. மகாலிங்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.