நூல் அறிமுகம்: இலக்கம் 4 பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து | உரையாடலில் பிரளயன்- கருப்பு அன்பரசன்.

நூல் அறிமுகம்: இலக்கம் 4 பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து | உரையாடலில் பிரளயன்- கருப்பு அன்பரசன்.

இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றினை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதுவதற்கு 16  புனைவாளர்களை, வரலாற்று அறிஞர்கள் என பம்மாத்து காட்டி மத்திய இந்துத்துவா அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பானது,  மெய்யான வரலாற்று அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் எழுதி வைத்திருந்த நிஜங்களை அழிப்பதற்கான மாற்றுவதற்கான ஒரு வலுவான முனைப்பு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய  சு. வெங்கடேசன் அவர்கள் எடுத்துரைத்து பாராளுமன்றத்தில் ஒரு நிஜமான கலகத்தை தனது பேச்சில் நிகழ்த்தி, அந்தக் குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் இன்று ஒரு கடுமை மிகுந்த வேண்டுகோளை முன்வைத்தார். அதன் எதிரொலியாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் தொடர்ந்திட பிரச்சனை இந்தியா முழுவதிலும் பேசப்படும் ஒன்றாக மாறிப்போனது.. இன்றைய பொழுதில் அந்தக் குழுவை மாற்றி அமைப்பதற்காக இன்னும் ஒரு சிலரை சேர்ப்பதற்காக மத்திய இந்துத்துவ அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது..
இதுவும்கூட எவரை ஏமாற்றப் போகிறோமோ எவரின் தோள் மீது ஏறி சவாரி செய்ய போகிறோமோ அவர்களை நியமித்தே.. அப்படி நியமிக்கப்படவிருக்கிற உறுப்பினர் பெண்ணாக இருக்கலாம் அல்லது சிறுபான்மை அடையாளங்களை தாங்கியவராக இருக்கலாம் அல்லது ஒடுக்கப்பட்ட பகுதி மக்களின் அடையாளங்களோடு எவராவது இருக்கலாம்.. இவர்கள் அனைவருமே ஆளக்கூடிய பாசிச இந்துத்துவா சக்திகளின் வசதிக்கேற்ப “நூல்”கொண்டு எழுதக்கூடிய “நூல்”பிடித்துப் பேசக்கூடிய புரோகிதர்கள் ஆக இருந்து வரலாற்று வேரினை கைபர் போலன் கணவாய் வழியாக தேடக்கூடிய வரலாற்று கதைசொல்லிகள்.  அவ்வளவே.
இந்துத்துவா பாசிச சக்திகளின் ஆட்டத்திற்கு எதிராக பதுங்காட்டமும், இணையாட்டமும், நேரெதிர் ஆட்டமும் நிகழ்த்தி வந்த ஜனநாயக சக்திகள் தற்போதுதான், 12000 ஆண்டுகால இந்திய வரலாற்றினை எழுதிடத் துடிப்பவர்களுக்கு எதிராக ஓர் எதிர் ஆட்டத்தை சரியான நேரத்தில், சரியான நேரத்தில் தொடங்கியிருக்கிறார்கள் தமிழகத்திலிருந்து.. அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் முன்னெடுப்பில் இந்தியா முழுவதிலுமிருந்து ஆகப்பெரிய வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் துணைகொண்டு என்கிற அறிவிப்பு களத்திலே பணிபுரியக்கூடிய எண்ணற்ற பண்பாட்டு ஊழியர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம் அளிக்கக்கூடிய அறிவிப்பாகும். இத்தகைய எதிர் ஆட்டத்தை தான் “இலக்கம் 4, பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து..” என்கிற நூலின் உரையாடல் தொகுப்பில் நாடக வியலாளர் பிரளயன் அவர்கள் பல்வேறு இடங்களில் காத்திரமாக சொல்லி இருக்கிறார் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாகவே பண்பாட்டுத் தளத்தில்.
1989 ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் இரண்டாம் நாள் வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹாஸ்மி அவர்களின் படுகொலைக்குப் பிறகு சென்னை கலைக்குழு அவருடைய  “ஹாலோ போல்” என்கிற வீதி நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து உடனடியாக அவரின் பிறந்தநாளில் “உரக்கப் பேசு” என நிகழ்த்தப்படுகிறது.. தொடர்ந்து பல இடங்களில் நாடகத்துக்கு பெரும் வரவேற்பு.. மார்க்சிஸ்ட் கட்சினுடைய தலைவர்களும் தோழர்களும் “உரக்கப் பேசு” நாடகத்தை சென்னை நகரின் பல தொழிற்சங்க வாயில்களில் நிகழ்த்துகிறார்கள்.. ஒரு நாள் மாலை சென்னையின் நெருக்கடி மிகுந்த மண்ணடியில் நான்கு முனைச் சாலை சந்திப்பு ஒன்றில் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.. நாடகமாடிக் கொண்டிருக்கும் போதே லோக்கல் காவல்துறை தலையிட்டு நாடகத்தை நிகழக்கூடாது என முட்டுக்கட்டை இடுகிறார்கள்.
பார்வையாளர்களாக பல நூறு பேர் கூடி இருக்க காவல்துறை தனது அத்துமீறலை  நாடகக் கலைஞர்கள் மீது நிகழ்த்த எத்தனிக்கிறது. பார்வையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவல்துறையின் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திரும்பிப் போகச் செய்ய; நாடகக் கலைஞர்களும் உற்சாகமடைந்து நாடகத்தை தொடர்ந்து அதே இடத்திலேயே நிகழ்த்தி முடிக்கிறார்கள்.. இதிலே குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னவென்றால் நாடகத்தின் வடிவமைப்பின் ஒரு பகுதியாக காவலர் தொப்பி அணிந்து நடிகர் ஒருவர் வந்து நாடகத்தை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுப்பார்.. அதையும் மீறி நாடகத்தின் ஒருங்கிணைப்பாளர் பல்வேறு காரணங்களை சொல்லி நாடகத்தை நிகழ்த்திக் கொண்டே இருப்பார்.
இந்த நாடகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிஜ காவலர் வந்து நாடகத்தை நிறுத்த முயற்சி செய்ய, பார்வையாளர்கள் அந்த காவலரை விரட்டியடிக்க, நாடகத்திலும் ஒரு காவலர் வந்து நாடகத்தை நிறுத்த முயற்சி செய்யும் பொழுது மீண்டும் காவல்துறை வந்துவிட்டது என்கிற எண்ணத்திற்கு பார்வையாளர்கள் சென்று நாடக காவலரோடு சண்டைக்கு செல்ல தயாராகி விட்டார்கள்.  பிறகு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரளயன் தலையிட்டு, இது நாடகத்தின் ஒரு பகுதி இந்தப் போலீஸ் நம்ம நாடகக் கலைஞர் தான் என்று உரைத்திட, அதன் பிறகே அந்த நாடகக் கலைஞர் விடுவிக்கப்பட்டு நாடகம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. நூற்றுக்கும் குறைவான பார்வையாளர்களோடு தொடங்கப்பட்ட அந்த நாடக நிகழ்வு காவல்துறையின் அத்துமீறல் காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  சூழ சிறப்பான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது “உரக்கப் பேசு” வீதி நாடகம்.
இதேபோன்று முற்றுப்புள்ளி என்கிற நாடகமும் அன்றைக்கான வேலையின்மை இட ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது தமிழகத்தின்  பல ஆயிரக்கணக்கான இடங்களிலே நாடகம் நிகழ்த்தப்பட்து. அதுவும் பார்வையாளர்களின் இயல்பான பங்கேற்பில் நாடகத்தின் ஒரு பகுதியாகவே.. எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் நாடகவியலாளர் பிரளயன் அவர்கள் பார்வையாளர்களின் மனநிலை, சமூகத்தின் அரசியல் சூடு உணர்ந்து தன்னுடைய நாடகமாக்கத்தை தொடர்ச்சியாக  நிகழ்த்திக் கொண்டே வருகிறார். இன்றளவிலும் சுமார் 50 நாடகங்களுக்கு மேல் இயக்கி இந்தியாவின் ஆகச்சிறந்த நாடகவியலாளராக பலராலும் அறியப்பட்டிருக்கிறார். அவரது வீதி நாடகங்களும், மேடை நாடகங்களும் எளிய மக்களின் வாழ்நிலையை பேசக் கூடியதாகவும் உழைக்கும் மக்களின் சார்பில் நின்று அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடியதாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.
திட்டமிட்டே உருவாக்கப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆதரவாக பெரும்பான்மையாக இருக்கும் அடித்தட்டு மக்களே நியாயப்படுத்தி பேசிட எப்படி இங்கு சொலவடைகளும் பழமொழிகளும் அதிகாரத்தால் பரவலாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தன்னுடைய உரையாடல் வழியாக காத்திரமாக எடுத்து வைத்திருப்பார்.
“அஞ்சு விரலும் ஒரே மாதிரியாகவா இருக்கு” என்ற அறிவிற்கு புறம்பான பழமொழிகள் எவருக்கு சாதகமாக இருக்கிறது? இல்லாதவர்களை அப்படியே இருக்கச் செய்ய ஏன் பேசப்பட்டது என்ற கருத்து நமக்குள் நிச்சயம் கேள்வியை எழுப்பும் அவரின் உரையாடல்கள் வழியாக. எழுதி இருக்கக்கூடிய வரலாற்றில் எவைகளையெல்லாம் நாம் கேள்விக்குள்ளாக்க படவேண்டும் எவைகளை நம் சமூகத்திற்கு மேம்பாட்டிற்காக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பேசியிருக்கிறார்.
கடந்த காலங்களில் ஆளுமைகள் பலரால் வடிவமைக்கப்பட்ட எத்தனை எத்தனை நாடக வகைமைகளாக.. வடிவங்களாக அரங்கங்களாக, கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் அவைகள் எவரின் வர்க்க குணாம்சத்தை பேசக் கூடியதாக, அந்த இயக்குனரின், குழுவின்  அரசியல் பேசக் கூடியதாக இருக்கும் என்பதை தன்னுடைய உரையாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.. சமூகத்தில் அரசியல் சாராத கலைப்படைப்பு என்று எதுவுமே கிடையாது.. அரசியல் சாராத கலைப்படைப்பு என்று பேசப்படுகின்ற படைப்புகள் அனைத்தும் பேசுவதுவும் ஒருவகையான நேர்மையற்ற அரசியலே.  நேர்மையற்ற இலக்கியமே.. ஆனால் நாங்கள் நேர்மையான அரசியலை உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியலை அவர்களின் குரலாக இருந்து எங்களின் படைப்புகளில் நாடகமாக்கி வருகிறோம்.. எங்களின் படைப்புகள் அனைத்துமே அரசியல் பேசும், அந்த அரசியல் உழைக்கும் மக்களுக்கும் எளியவர்களுக்கும் எதிரான அரசியலாக இருக்காது என்பதை உரத்துச் சொல்லி தெளிவுபடுத்துகிறார் தன்னுடைய உரையாடலில்.
பார்வையாளர்களாக இருக்கக்கூடிய மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியின் வழியாக தயாரிக்கப்படும் நாடகங்களின் உள்ளடக்கத்திற்கும், பேசு பொருளுக்கும்; அரசு நிதி உதவி பெற்று தயார் செய்திடும் கலை படைப்பிற்கும் இடையேயான  கருத்து சார்ந்த அணுகுமுறையில் இருக்கக்கூடிய வித்தியாசங்களை அழகாக பதிவாக்கி இருப்பார் தன்னுடைய உரையாடலில் பிரளயன்..
வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பத்தால் மனித உறவுகள் மட்டுமல்லாது அவன் அறிவார்ந்து தெரிந்துகொள்ள விரும்பும், பேச விரும்பும், பார்க்க விரும்பும் அனைத்துமே தனித்த சுய விருப்பத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு மாற்றி வைத்திருக்கக்கூடிய ஒரு சவால் மிகுந்த சூழலில்.. ஒவ்வொன்றுமே அவனுடைய பர்சனலாக மாற்றி வைக்கப்பட்டிருக்கும் நிலைகளில் நாடகம் மட்டுமே மனித சமூகம் குழுவாக இயங்கிட வேண்டியே கட்டாயம் வரையில் நிலைத்திருக்கும் என்பதை வலுவாக பதிவு செய்திருக்கிறார் தன்னுடைய உரையாடலில்.
சுதந்திரமாக இயங்கக்கூடிய தனிமனித ஆளுமைக்குள் அவனது நாடகப் படைப்பிற்கு  நிதியுதவி செய்யக்கூடிய ஒரு நிறுவனம் புகுந்து விடும் பொழுது அவனுக்குள் இருக்கும் படைப்புச் சிறகுகள் ஊனப் படுத்தப்பட்டு ஒற்றை நெல் ஒன்றிற்காக வெளியே வந்து சீட்டை எடுத்துப் போடும் கிளியாக மாறிப் போகிறான் என்பதையும் பின்னாளில் அடையாளமற்று வலுவற்ற மனம் கொண்டவனாக மாறிப் போகிறான் என்பதையும் மிகத் தெளிவு மிகுந்த உரையாடல் நடத்தி இருப்பார்.
மக்கள் குழுவின் தனிமனிதனின் ஆசைகள், அவனுடைய வேலை முறைகள், அவருடைய பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், சிந்திக்கும் செயல்கள், அவன் பேசும் வார்த்தைகள் இப்படி அனைத்தின் கீழமை மற்றும் மெச்சத் தகுந்தவைகளாக அவள் நினைத்துக் கொண்டிருப்பதை உள்ளடக்கியதுதான் பண்பாடு. இந்த பண்பாடு தனிமனிதர்கள் துவங்கி குடும்பம் சமூகம் என விரிந்து பரந்து காணப்படுகிறது. எவர் ஒருவர் அதிகார ஆதிக்க மேல்நிலை ஆக்கத்தில் செயல் புரிந்து தன்னுடைய கருத்தியலை மெச்சத் தகுந்த பண்பாடாக பொதுவெளியில் கட்டமைக்கப்படும் பொழுது அந்தக் கருத்தியல் தளத்தில் குறுக்கீடு செய்து சரியான அடையாளம் காண்பதென்பது  பண்பாட்டு அரசியல் ஆகும்.
ஒவ்வொரு பண்பாட்டு அரசியலுக்கும் ஒரு வர்க்க குணாம்சம் நிச்சயம் இருக்கும். இந்தியாவிற்குள் இந்த வர்க்க குணாம்சத்தை அடையாளம் காணுவது என்பது ஏற்கனவே மனித மனங்களுக்குள் பல நூறு ஆண்டுகளாக இறுகிப் போயிருக்கும் சாதியை விடுத்து காணமுடியாது.. ஒவ்வொரு மனிதனுடைய ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் தெரிந்தோ தெரியாமலோ, அப்பட்டமாக மேலோங்கிய அவனுடைய சாதி தெளிவாகத் தெரியும். இவர்களிடையே குறுக்கீடுகள் செய்யப்படும் பொழுது பண்பாட்டு ஊழியர்கள் மிகவும் கவனிக்க வேண்டியது மேற்சொன்ன சாதிக் கட்டுமானத்தை உள்வாங்கி இருக்கிறோமா என்பதைத்தான்.. அந்தப் பார்வைக்கு தற்போது தான் நம்மை பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறோம்.  பெரியாரையும் நம்மோடு இணைத்துக் கொள்வதில் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது நம்மிடையேயான மாற்றத்தை தற்போது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இயக்கம் இன்றைக்கு அம்பேத்கரையும் பெரியாரையும் அயோத்திதாசரைவையும், ஜோதிராவ் புலேவையும் இணைத்துக்கொண்டு அவர்களின்  சமூக நீதிக் கருத்துக்களை உள்வாங்கி தன்னுடைய அரசியல் பண்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்த வேண்டிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை தனது உரையாடலின் பல இடங்களில் வெவ்வேறு கருத்துக்களின் வழியாக நிறுவியிருக்கிறார் பிரளயன்.
தாழ்த்தப்பட்ட பின்தங்கிய வகுப்பினராக பல நூறு ஆண்டுகள் கிடந்தவர்கள் இப்பொழுது தங்களின் சாதி அடையாள அரசியலோடு இன்றைக்கு இருக்கக்கூடிய ஜனநாயகத்தின் வழியாக தங்களுக்கான உரிமையை பெற அணி திரண்டு வருகிறார்கள். அப்படி அணி திரண்டு வரும் பொழுது, பொதுத்தளத்தில் மற்றவர்களோடு தன்னையோ.. தன்னோடு மற்றவர்களையோ இணைத்துக் கொள்ள கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தன்னுடைய உரையாடலில் நிகழ்கால அடையாள அரசியலின் தன்மையும் அதிலிருக்கும் நியாயத்தையும் தேவையான எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
உலகமயம் என்கிற ஒற்றைச் சொல் உலக நாடுகளின் எல்லைக் கோடுகளை எல்லாம் அழித்து தனக்கான ஒரு பிரதிநிதிகளை, மேலாளர்களை, ஊழியர்களை ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கிக் கொண்டாலும், அதற்கு லாபம் தரக்கூடிய பழக்கவழக்கங்களை பண்பாடுகளாக கட்டமைத்து வருகிறது என்பதனையும், பல்வேறு மொழி,தேசிய இனம், சாதி ,பழக்கவழக்கங்கள் இன்னும் பல தனித்துவமிக்க அடையாளங்களோடு இருக்கக்கூடிய இந்தியாவிற்குள் ஒரு “ஒற்றை அடையாளத்திற்காக” எப்படி உலகமயம் இங்கே தன்னுடைய கால்களை நிறுத்திக்கொள்ள இந்துத்துவா சக்தி பயன்படுத்திக்கொள்கிறது என்பதனையும், இந்துத்துவா சக்திகளும் அதனோடு எப்படி உரசி ஒட்டிக்கொள்கிறது என்பதையும், இதற்கு நேரெதிராக இருக்கக்கூடிய வேறுபாடுகளும் இருப்பதற்கான ஒரு இடமாகத்தான் இந்த தேசம் இருந்தே வந்திருக்கிறது என்பதனை நாம் புரிந்து முழுவதுமாக உள்வாங்கி, இந்த இடம் எல்லோருக்குமான இடம் என்பதை நிராகரிக்கும் பொழுதினில் அவர்களை எதிர்த்து நம்முடைய நடவடிக்கைகள் வேறுபாட்டில் காணப்படும் ஒற்றுமைகளை இணைத்து நம்முடைய பணிகளை பண்பாட்டுத்தளத்தில் அமைந்திட வேண்டும் என்பதனை பிரளயன் அவருக்கே உரிய தனித்துவமான காத்திரமான நையாண்டித் தனத்தோடு தனக்கான பாணியில் பல இடங்களில் பதிவாக்கி இருக்கிறார்.
எல்லாமும் மாறிக் கொண்டிருக்க கூடிய ஒரு சூழலில் அடையாளங்களும் தனிமனித தேவைக்கேற்றபடி மாறிக்கொண்டே இருக்கும் என்ற விஞ்ஞான உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார் தன்னுடைய உரையாடலில்.. இந்துத்துவா சொல்லாடல்களை பி ஜே பி தவிர்த்து மற்றவர்கள் மற்ற அமைப்புகள் சொல்லாடல்களாக பயன்படுத்தும் பொழுது நமக்குள் சந்தேகம் ஏதும் வராமல் அப்படியே விட்டுவிடுகிறோம் என்கிற உணர்வை எச்சரிக்கை செய்கிறார் நமக்கு. இந்துத்துவா சக்திகள் பெரும் தேசியம் பேசக் கூடிய சூழலில் நாம் வட்டார தேசியத்தை முன்னிறுத்தியும் பெரும் தேசியத்தையும் பேச வேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்பதை வெடிப்புற பேசியிருக்கிறார் நாடக வியலாளர் பிரளயன் அவர்கள்..
சாதியை ஒழிக்க சொல்லக்கூடியவர்கள் பள்ளிக்கூடங்களில் சாதியை வலியுறுத்தி கேட்பதை ஏன் நியாயப்படுத்துகிறார்கள் என்று ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட நபர்களால் முன்வைக்கப்படும் பொழுது அதற்குள் பெருவெளிச் சமூகம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து கொள்ளும் அபாயப் பொழுதில் அதற்கு எதிர் பேச்சை, நியாயத்தை பொதுச் சமூகத்தில் இருந்து காத்திரமாக வராதது நம்முடைய பலவீனத்தை காட்டுவதாக அவர்கள் இந்த உரையாடலில் பேசியிருக்கிறார்.
நுகர்வுக் கலாச்சாரம் எப்படி மனித உறவுகளை மனித மாண்புகளை தனிமனிதர்கள் தொடங்கி, குடும்பம், சமூகம் என அனைவரையும் சிதைத்து துகள் துகளாக்கி, தனக்கு எதிராக ஒவ்வொரு மனித உயிர்களையும் தாழ்ந்தோ.. உயர்த்தியோ பார்க்கக்கூடிய மனநிலை எவ்வாறு இன்றைக்கு மனித மனங்களுக்குள் சாத்தியப்பட்டு கிடக்கிறது என்பதை, பணம் இருக்கிறவன் இல்லாதவனின் தோள்மீது ஏறி சவாரி செய்வான் அதை பொருத்து கொள்வதே இல்லாதவனின் இருப்பு  என்கிற விதியினை, ஒரு நெருக்குதலை மனமுவந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலே சொல்லிக்கொண்டிருக்கிறது நுகர்வுக் கலாச்சாரம்..
இப்படி பல தளங்களில் தன்னுடைய உரையாடலை ஆழ்ந்தும், அறிவு கூர்ந்தும்,
நுணுக்கமாகவும் எளிமையாகவும் பலரும் புரிந்து கொண்டு தன் செயல்பாட்டை தீவிரமாக முன்னெடுக்க செய்யவும், காத்திரமானதொரு உரையாடலை 15 வருடங்களுக்கு முன்னதாகவே நிகழ்த்தியிருக்கிறார் பிரளயன். கலைஞன் காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல.. எதிர்காலத்தை தன்னுடைய அனுபவத்திலிருந்து தீர்மானிக்க கூடியவன். நாடக வியலாளர் பிரளயன் கலைஞன் மட்டுமல்ல.. அவர் பண்பாட்டு அரசியலில் தன்னுடைய படைப்புகளின் வழியாக நின்று போராடக் கூடிய ஒரு மாபெரும் சக்தி மிகுந்த போராளியும் கூட.
“இலக்கம் 4, பிச்சுப் பிள்ளைத் தெருவிலிருந்து” என்கிற இந்த நூல் பண்பாட்டுத்தளத்தில் ஊழியர்களாக, பல வெகுஜன மக்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஒரு மாற்றுச் சமூகம் காண தன்னை அர்ப்பணித்து வேலை பார்த்து வரும் களப் போராளிகள் அனைவரின் கைவசம் இருக்கவேண்டிய ஒரு முக்கியமான ஆவணமும் கூட. இந்த நூலை வாசித்து முடித்தவுடன் உங்களுக்குள் ஒரு உற்சாகம் பீறிடும்.. இதுநாள் வரையில் தாம் செய்த வேலைகளோடு சேர்த்து செய்யத் தவறிய வேறு ஒரு தளத்தை நோக்கி நம்மை உந்தித் தள்ளும் சக்தியைக் கொடுக்கும், பிரளயன் அவர்களின் உரையாடலைத் தாங்கிய “இலக்கம் 4.. பிச்சுப் பிள்ளை தெருவிலிருந்து”..
நாடகவியலாளர் பிரளயன் அவர்களோடுசரியானதொரு திசைவழியில் உரையாடலை நகர்த்தி கேள்விகளின் வாயிலாக கொண்டு சென்ற மற்றுமொரு நாடகவியலாளர் கி.பார்த்திபராஜா, நாடகக் கலைஞர் ராஜா ரவி வர்மா மற்றும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் மிகவும் மெச்சத் தகுந்த கேள்வியாளர்கள் மூவருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்வோம்.
நல்லதொரு வடிவம் மிகுந்த முறையில் வெளியிட்டு இருக்கக்கூடிய வாசல் வெளியிட்டார்களுக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
இந்தப் புத்தகத்தை முழு வெள்ளைத்தாளில் வெளிக்கொண்டு வந்ததற்கு பதில் “ஆப் ஒயிட்டில்  ‘ கொண்டு வந்து இருந்தால் இதனுடைய தரம் இன்னும் எங்கேயோ கொண்டு போய் இருக்கும்
என்கிற உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்த பதிப்பில் வெளியீட்டாளர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
 கருப்பு அன்பரசன்.
இலக்கம் 4.. பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து..
நூல் வேண்டுவோர்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வாசல்
40D/3, முதல் தெரு,
வசந்த நகர்
மதுரை 625 003.
98421 02133.
விலை: ரூ.250/-
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *