நூல் : இலக்கணம் இனிது
ஆசிரியர் : நா.முத்துநிலவன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018
(044-24332424, 24332924, 24356935, [email protected]/www.thamizhbooks.com)
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஜனவரி 2021
விலை : ரூ.90
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ilakkanam-inidhu/

பொருள் – சொல் – எழுத்து என்பதே வரலாற்று முறைமையும் வாழ்க்கை முறைமையும் ஆகும். காலம் கடந்தும் வெளி தாண்டியும் தன் கருத்தை அல்லது செய்தியைச் சொல்லவேண்டிய அவசியம் வந்தபோது மனிதன் எழுத்தை கண்டுபிடிக்கிறான். சொல்பவனின் முகக்குறி, கை – கால் – ஆட்டம் ஆகியவற்றை வைத்து சொல்லின் பொருளைச் சரியாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு எழுத்துக்கு இல்லாததால் இலக்கணம் அவசியமாயிற்று.

தமிழில் தோன்றிய இலக்கணம் எழுத்துக்களை உயிர், மெய் என்று பாகுபடுத்தியதும் மெய் எழுத்துக்களை வல்லினம், இடையினம், மெல்லினம் என பாகுபடுத்தியதும் ஒலிகள் உடம்பில் தோன்றும் இடங்களை வைத்து எழுத்துக்களை வரிசைப்படுத் தியதும் அறிவியல் பூர்வமானவை; இன்றைக்கு ஆச்சரியம் ஏற்படுத்துபவை. இந்த அடிப்படையில் தோழர் முத்துநிலவன் அவர்கள் மூன்று சுழி ண இரண்டு சுழி ன, சிறிய ர, பெரிய ற எனச் செல்லமாகச் சொல்லப்படும் எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையும் அவருக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லிச் செல்கிறார். செல்லப் பெயர்களாக அவற்றை ஏற்றுக் கொண்டால் என்ன என நான் தோழர் முத்துநிலவனைக் கேட்க விரும்புகிறேன்.

ஏனெனில், இலக்கணப் படியேதான் தமிழ் எழுதப்பட வேண்டும் எனப் பண்டித வீம்பு அவரிடம் இல்லை. கால மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிக்கும் அவர் நன்னூலின் ‘கழிதலும் புகுதலும்’ என்பதின் நுட்பத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.ச, ர, ல முதலில் வந்தால் தவறில்லை என மரபு மாற வேண்டும் என்றும் நவீனத் தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்வதை யார் ஏற்காதிருப்பர்?

எழுத்துப் பிழையைக் காட்டிலும் கருத்துப் பிழை தான் கண்டித்தற்குரியது எனக் கருதும் அவர் அத் தர்க்கத்தின் நீட்சியாக எழுத்துப் பிழையே கருத்துப் பிழைக்கு இடம் கொடுத்து விடுமே என்ற முடிவுக்கு வந்து சந்திப்பிழை குறித்து வாதித்து இறுதியில் இறுக்கம் தேவையில்லை என்று தீர்மானிப்பது ஏற்கத்தக்கதே. (வேலை கொடு – வேலைக் கொடு இங்கு பொருட் தெளிவிற்கு க் அவசியமாகிறது. எனக்கு தெரியாது- எனக்குத் தெரியாது த் இல்லை என்றாலும் பொருள் மாற்றமடையாது)

திருக்குறளின் மூன்று அதிகாரங்களில் அடக்கப்படும் குறள்களின் எண்ணிக்கையை வைத்து அவர் திருவள்ளுவரின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை விளக்குவது சிறப்பு.

அதேபோல் தொல்காப்பியரின் திணைப்பாகுபாட்டை மார்க்சிய மானுட வரலாற்றோடு பொருத்திக் காட்டுவதும் சிறப்பு.

அறம், பொருள், காமம் என்பது நூல் வரிசையாயினும் காமம், பொருள், அறம் என்பதே வரலாற்று வரிசையாகும். இந்த அறத்தை வலியுறுத்தவே அறத்தின் பயன் வீடுபேறு என நான்காவது ஒன்று தோன்றியது என்பதும் அறத்தின் அடிப்படையில் ஏன் ஒழுக வேண்டும் என்ற கேள்விக்குச் சொல்லப்பட்ட விடைக்குச் சங்கப் புலவர்கள் சிலர் ஆற்றிய எதிர்வினைகளும் (அறவிலை வணிகன்), அற வழி நடந்தால் சிறப்போடு செல்வமும் கிடைக்கும் என்று வள்ளுவரின் ‘செல்வமும் ஈனும்’ என்பதற்குப் பொருள் கொண்டால் ‘பொருட் செல்வம் பூரியர் கண்ணுமுள’; ‘நினைக்கப்படும்’; ‘இருவேறு உலகத்து இயற்கை’ என்றெல்லாம் அவர் பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வியுமாக …தோழர் நீண்ட வரலாற்றுத் தேடலுக்கு வழி திறக்கிறார்

ஓரறிவு உடைய உயிர்கள் முதலாகப் பேசிய தொல்காப்பியருக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற அவரது கேள்வி தொல்காப்பியச் சிந்தனைக்கான பாராட்டே.

இலக்கணம் இனிது என்கிறார் அவர். இலக்கணம் மட்டுமல்ல எந்தப் பாடமும் இனிதே. மாணவர்களை வகுப்பில் கட்டிப் போடும் உத்திகளை அறிந்து உயிர்ப்போடு வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் அமைந்தால். அப்படியான ஓர் ஆசிரியர் தோழர் முத்துநிலவன் என்பதற்கு இந்நூல் சாட்சியம் பகர்கிறது.One thought on “நூல் அறிமுகம்: நா.முத்துநிலவன் எழுதிய *இலக்கணம் இனிது* – எழுத்தாளர் சந்திரகாந்தன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *