நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு. ஆ.மாதவனின் இலக்கியச் சுவடுகள் – உஷாதீபன்நூல்: இலக்கியச் சுவடுகள் கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர்: ஆ.மாதவன்
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.

படித்து முடித்தாயிற்று. ஆ. மாதவனின் ”இலக்கியச் சுவடுகள்” கட்டுரைத் தொகுப்பை. இதற்குத்தான் 2015 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. விருதுக்குத் தகுதியானவர் ஆ. மாதவன். கடைசி 3 வருடங்களில் வெளிவந்த அந்த ஆசிரியரின் ஒரு புத்தகத்தினைக் குறிப்பிட்டு விருது வழங்கப்பட்டதில் இந்தப் புத்தகம் அந்தப் பெருமை பெற்றுள்ளது. இவரது புனலும் மணலும், அரேபியக் குதிரைகள் சிறுகதைத் தொகுப்பு, ஆ.மாதவன் கதைகள், கடைத் தெருக் கதைகள் என்று பலவும் படித்திருக்கிறேன் நான். மலையாள வழக்குச் சொற்கள் கலந்த தமிழ் நடை கொஞ்சம் நெருடும் எனக்கு. எதை அர்த்தப்படுத்துகிறார் என்று புரிந்து புரிந்து நகர வேண்டியிருக்கும். முதுபெரும் தரமான படைப்பாளி திரு ஆ. மாதவன் அவர்கள். இந்த இலக்கியச் சுவடுகள் கட்டுரைத் தொகுப்பில் பல்சுவை விருந்தினை நீங்கள் காணலாம்.

அவரது நாவல்கள் பிறந்த விதம், சிறுகதைகளுக்கான களம் அமைந்த தருணங்கள், பழம் பெரும் படைப்பாளிகளுடனான நினைவுச் சரங்கள், எண்பதுகளின் தமிழ் நாவல்கள், க.நா.சு.வுக்கு நடந்த பாராட்டு, அதை ஒட்டி நடைபெற்ற கருத்தரங்கு, சங்க வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பஷீரின் படைப்புலகம், அயலகப் படைப்பாளிகள், காசியபனின் “அசடு” நாவல்பற்றி, சிறுகதைப் படைப்பாளியின் அனுபவங்கள், நாவலில் சமுதாயப் போக்கு,..நா.பா.அவர்களின் தீபம் இலக்கிய இதழ் நடைபோட்ட விதம், அது வளர்த்தெடுத்த இளம் படைப்பாளிகள்…. என்று பலதரப்பட்ட விஷயங்களை அலசுகிறது இந்தப் புத்தகம். இடையே ஆ.மாதவனின் இரண்டு பேட்டிகள்… கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரின் அலட்டாத, எளிமையான, செயற்கைத் தன்மையில்லாத, குறிப்பாகப் பொய்யில்லாத பதில்கள்…. 375 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை வைகை சென்னையில் புறப்படும்போது ஆரம்பித்து மதுரை வந்து இரவு பதினோரு மணியோடு முடித்தேன். நல்ல திருப்தியான இலக்கிய அனுபவம்.