இலக்கியம் என்றால் என்ன (Ilakkiyam Endral Enna)

சாமி.சிதம்பரனார் எழுதிய “இலக்கியம் என்றால் என்ன?” நூல் அறிமுகம்

முதல்  பதிப்பாக 1963-இல் வெளியிடப்பட்ட தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் “இலக்கியம் என்றால் என்ன? “ என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல்,அவரது காலத்திற்குப் பிறகு திருமதி.சிவகாமி சிதம்பரனாரால் தொகுத்து வெளியிடப்பட்டது. 1963 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம் பதிப்பை”சிவகாமி சிதம்பரனார் இலக்கிய நிலையம்”வாயிலாக பதிப்பைக் கண்டது . இதற்கு,சிறப்பான முன்னுரையை பண்பாட்டு ஆய்வறிஞர் நா.வானமாமலை வழங்கியிருக்கிறார். பின்பு 2012-ஆம் ஆண்டு ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டு 216 பக்கங்களில் செறிவூட்டப்பட்டு  முறையாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.
 பதிமூன்று கட்டுரைகள் அடங்கிய இந்த தொகுப்பு நூலில் இலக்கியம் என்றால் என்ன?;இலக்கியமும் கொள்கையும்; இலக்கியம் அன்றும் இன்றும்; மக்கள் இலக்கியம்; பழைய இலக்கியங்கள் கூறும் உண்மைகள்  முதலிய ஐந்து கட்டுரைகளும் இலக்கியத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது.
 தற்காலத்தில்  இலக்கியம் என்பது ஒரு தனி வகைமை; ஆனால்,முன்காலத்தில் எழுத்துருவம் கொண்ட எல்லாமும் இலக்கியம் ஆகும். முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்ற பெயரால் அழைத்தனர்.”நூல்” என்றால் பல இனிய கருத்துகளும், கற்பனைகளும் நிறைந்த செய்யுட்களின் தொகுப்பு என்பது முன்னோர் கருத்து.
 “அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப.”
எனும் தொல்காப்பிய செய்யுள் இயல் சூத்திரத்தில், செய்யுட்கள்”அறம், பொருள்,இன்பம்” முதலான மூன்று பொருட்களையும் அமைத்துப் பாடுவதற்குரியன என்று தனக்கு முன்னிருந்த தமிழ் அறிஞர்கள் கூறியிருக்கின்றனர், என்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியரின் காலங்களுக்கு முன்பே தமிழ் இலக்கியம் செழுமையுற்று இருந்திருக்கிறது என்பது திண்ணம்.
 இலக்கியமும் கொள்கையும் என்கிற கட்டுரையில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,பக்திப் பாடல்கள் போன்ற இலக்கிய வகைமைகள் எல்லாமும் கொள்கையின் அடிப்படையில் இயற்றப்பட்டிருக்கிறது என்பதை தக்க சான்றுகளுடன்  நிறுவிகாட்டியிருக்கிறார் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார். “கலை கலைக்காக; இலக்கியம் இலக்கியத்திற்காக” எனும் மொன்னைக் கருத்தை தகர்த்து தவிடு பொடியாக்கி, கலையும் இலக்கியமும் மக்களுக்கானவை என்பதை திடமாக எடுத்துரைத்திருக்கிறார்.
 “இலக்கியம் அன்றும் இன்றும்”என்கிற கட்டுரையில், சமூகத்தை அடித்தளமாக கொண்டு கட்டப்படும் இலக்கியம் யாவும் அது இயற்றப்பட்ட காலத்தின் சுத்தப்பிரதிபலிப்பே. மரமையும், பழமையையும் அதிகமும் பற்றி நிற்கும் மக்கள்கள், காலத்திற்கு ஏற்ற கருத்துவகையில் “கொள்வன கொண்டும், விடுப்பன விடுத்தும்.” தன்னை புதுக்கிக்கொண்டு இலக்கியங்களை படைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 எந்த சமூகத்திலும் இரண்டு பிரிவுகள் உண்டு.ஒன்று பொருள் படைத்தவர்கள் சமூகம்,மற்றொன்று பாமர மக்கள் சமூகம். அதுபோலவே,கலை இலக்கியத்திலும் இரண்டு பிரிவுகள் உண்டு.இந்த இரண்டு பிரிவினரின் கலை இலக்கிய வடிவங்களை பட்டியலிட்டு காட்டியிருக்கும் கட்டுரையாசிரியர், மக்கள் இலக்கியத்தின்  (பாமர மக்களின் இலக்கியம்) வளர்ச்சியை மறந்து விடுவது பொதுமக்களை அலட்சியம் செய்வதாகவே முடியும் என்று,“மக்கள் இலக்கியம்” என்கிற கட்டுரையில் பாமர மக்களின் கலை இலக்கிய வடிவங்களுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார்.
 “பழைய இலக்கியங்கள் கூறும் உண்மைகள்” என்கிற கட்டுரையில்,சங்க இலக்கியம்  காட்டும்  வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்வது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக் கூறியிருக்கிறார். பழைய வரலாற்றை தெரிந்துக் கொள்ளாதவர்கள், அதே வரலாற்றில் வாழ பழிக்கப்படுவர் . இன்றைய வயிற்று வலிக்கு நேற்றைய ஆகாரங்கள் என்னவென்று தெரிந்தால்தான் மருந்துக்கொடுக்க முடியும் என்பது வரலாற்றாய்வாளர் பழ.அதியமானின் கூற்று.நமது சங்க இலக்கியங்கள் யாவற்றிலும் வரலாற்று உண்மைகள் விரவிக்கிடக்கிறது, அதனை அறிந்துக்கொள்வது மிக முக்கியம் என்பது இந்தக் கட்டுரையின் மையக் கருத்தாகும்.
                        மனவறட்சி மனித வாழ்வை நிந்திக்கும். இந்த நூற்றாண்டு, மனித  வாழ்வை முரண்கள் கொண்டு கட்டமைத்துவிட்டிருக்கிறது. மனிதர்கள் யாவரும் ஊனமுற்றவர்களாகி விட்டிருக்கிறோம். வெறுமையான பாலைவனம் போன்ற வாழ்க்கையை வாழ நாள்தோறும் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இந்த சூழ்நிலையில் நமக்கு அதிகமும் தேவைப்படுவது இலக்கிய வகைமைகளே. கவிதை,சிறுகதை கட்டுரை,புதினம் என எல்லாமும் மிகுதியாக தேவைப்படுகிறது. வேறுபட்ட பண்பாட்டு கூறுகளை கொண்ட நமக்கு,பல்வேறுபட்ட இலக்கியப் படைப்புகள் தேவைப்படுகிறது.
 “அவரவரின் திறமைக்கும், அறிவுக்கும் ஏற்ற இயற்கை-நடையில் சரளமாக- தட்டுத்தடங்கள் இல்லாமல் எழுதுவதுதான் சிறந்த நடையாகும்; மக்கள் மனதை கவரும் நடையாகும்” மொழியும் இலக்கியமும் வளர்வதற்கான நடையாகும்” என்பார் நா.வானமாமலை (நா.வா).சாமி. சிதம்பரனாரும் இதே ஒருமித்தக் கருத்துக்கு வலிமை சேர்த்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வமும், அக்கரையும் கொண்டவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொகுதி பயனுள்ளதாக அமையும்;வாசித்து பயன் பெறலாம்!
                           நன்றி!

நூலின் தகவல்கள்: 

நூல்: இலக்கியம் என்றால் என்ன?
ஆசிரியர்: சாமி.சிதம்பரனார்
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கங்கள்: 216

அறிமுகம் எழுதியவர்: 

நந்தசிவம் புகழேந்தி




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *