உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 1 : இளம் குடும்பத் தலைவி (சீன தேசத்துக் கதை)  தமிழில் – ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 1 : இளம் குடும்பத் தலைவி (சீன தேசத்துக் கதை) தமிழில் – ச.சுப்பாராவ்

முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. பொதுவாக வீட்டில் நல்ல மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் மருமகள்கள் தம் தாய்வீட்டிற்குச் சென்று வந்துவிட்டால் வீட்டில் சிறுசிறு பிரச்சனைகள் வரும். பெரியவர் மருமகள்கள் தம் தாய்வீடு செல்வதை எப்படித் தடுப்பது என்று யோசித்து ஒரு திட்டம் போட்டார்.

அடுத்த முறை அவர்கள் தம் தாய்வீடு செல்ல அனுமதி கேட்ட போது, பெரியவர், ” போய் வாருங்கள். ஆனால் வரும் போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்கள் கொண்டுவரவேண்டும். நான் கேட்பதைக் கொண்டு வராவிட்டால், நான் திரும்பவும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்,” என்றார்.

”சரிங்க மாமா… என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்,” என்றனர் இரு மருமகள்களும்.

” ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை பொட்டலம் போட்டுக் கொண்டு வரவேண்டும்,” என்று ஒரு மருமகளிடமும், ” ஒரு காகிதத்தில் கொஞ்சம் தீயைக் கொண்டு வரவேண்டும்,” என்று மற்ற மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தார்கள். சரி, முதலில் அம்மா வீட்டிற்குப் போகலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டார்கள். தாய்வீட்டில் சந்தோஷமாக சில நாட்கள் இருந்தார்கள். கணவன் வீடு திரும்ப வேண்டிய நாள் வந்த்தும்தான் மாமனார் கேட்டது பற்றிய பயம் வந்தது.

ஆனாலும் கணவன் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள். வழியெங்கும் மாமனார் கேட்டதை எப்படி நிறைவேற்றுவது என்ற கவலையோடு புலம்பிக் கொண்டே நடந்தார்கள்.  அப்போது ஒரு எருமை மீது சவாரி செய்து கொண்டு வந்த ஒரு இளம்பெண் இவர்களது புலம்பலைக் கேட்டாள். உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டாள். இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், ” இவ்வளவுதானா… கவலைப் படாதீர்கள்,” என்றாள் சிரித்தபடி.

முதல் மருமகளைப் பார்த்து, ” ஒரு காகிதத்தில் ஒரு விசிறியை பொட்டலம் கட்டி அந்தக் கிழவரிடம் கொடு,” என்றாள். அடுத்தவளிடம், ”ஒரு சிமினி விளக்கை ஏற்றி, ஒரு காகிதப் பையில் போட்டு மாமனாரிடம் கொடு,” என்றாள்.

மருமகள்கள் இருவருக்கும் தம் பிரச்சனை தீர்ந்த்து பற்றி ஒரே மகிழ்ச்சி. அந்தப் பெண்ணிற்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிமினி விளக்கையும் தந்தார்கள். மாமனாருக்கு தன் மருமகள்களின் அறிவு பற்றித் தெரியும் என்பதால் உங்களுக்கு இதை யார் சொல்லித் தந்தது என்று அதட்டிக் கேட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.

”இவ்வளவு புத்திசாலியான பெண் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளாகத் தான் இருக்கவேண்டும், அவளை எனது கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்,” என்றார் பெரியவர். அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க நாலாதிசையிலும் தனது வேலைக்காரர்களை அனுப்பினார். அவர்களும் அவளது ஊரைக் கண்டுபிடித்து வந்து சொன்னார்கள். பெரியவர் அவள் வீடு சென்று அவர்களது பெற்றோரிடம் சொல்லி, அவளை தனது கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆகி வந்த சில நாட்களிலேயே வீட்டு நிர்வாகம் முழுவதையும் ஏற்று, பொறுப்பாக நடத்த ஆரம்பித்தாள்.

பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சி. மிக நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு‘ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.

சில காலம் கழித்து அவ்வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். யார் இது இத்தனை திமிராக எழுதி வைத்தவன், இந்த வீட்டினருக்கு ஏதாவது பாடம் புகட்டி, இந்தத் திமிரை அடக்க வேண்டுமே என்று கோபப்பட்டார். வீட்டில் நுழைந்த அவரை கடைசி மருமகள்தான் வீட்டு வாசலில் வரவேற்றாள். துறவி வீட்டு வாசலில் நின்றபடியே,       ” இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்த சாலையின் நீளத்திற்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிடில் சபித்து விடுவேன்,” என்றார்.

” கண்டிப்பாக துறவியே…. சாலையின் இரு முனைகளையும் கண்டு பிடித்து, எத்தனை நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவிற்கு நான் துணியை நெய்து தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்,” என்றாள் அவள் பணிவாக. அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் கடைசி எல்லை வரை செல்வது. அதன் ஆரம்பமும், முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்கு இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

”சரி, வேண்டாம்,.. கடல் நீரளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா….” என்றார்.

” கண்டிப்பாக துறவியே… தாங்கள் தயவு செய்து கடலில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், ஒரு நொடியில் நான் அத்தனை ஆழாக்கு எண்ணெயை செக்கில் ஆட்டித் தந்துவிடுகிறேன்,” என்றாள் அதே பணிவோடு.

துறவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில மணித்துளிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்று உணர்ந்தார். யோசித்தபடியே, பக்கத்தில் பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.

” பெண்ணே ! நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா இல்லை அதன் கழுத்தை நெரிக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்,” என்றார்.

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, ” துறவியே ! நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா இல்லை, தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள், நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்,” என்றாள்.

துறவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ” மாபெரும் துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாத போது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு இந்தச் சிறுமிக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினாள் அந்தப் பெண்.

”நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்,” என்று துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளம் மருமகளும் தனது வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

– தொடரும் 

Show 8 Comments

8 Comments

  1. harirao s

    அருமையான கதை. சுவைபட கூறியுள்ளீர்கள்.

  2. V.mohanakannan

    Excellent It has moral value too

  3. Sampath S

    அருமை தோழரே..எளிய நடையில் சிறப்பாக ஒரு கதை

  4. கண்ணன்

    எளிமையான நடை
    அழமான கருத்து பொட்டகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *