நான் பாடிக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
இடையில் காற்றும் குருவியும் மரமும்
எட்டிப்பார்க்கின்றன
சேற்றில் கலந்த நீரை அருந்தியதாலும்
புழுதி படிந்த பாதைகளின் முட்களில்
தடுமாறி நடந்த கால்களின் களைப்பினாலும்
அதிகாரம் தீண்ட மறந்த காலனியின்
அடிவயிற்றில் ஓயாது எரியும்
புறக்கணிப்புப் பசியினாலும்
எனது குரல் கிணற்றில் விழுந்த
எலியின் சத்தமென கேட்கக்கூடும்
கேளும் செவிகளுக்குள்
நீடிக்கும் மௌனத்தை
மொழிபெயர்க்கக்கூடும்
காற்றும் குருவியும் மரமும்.

ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்
Posted inPoetry
