1.
உங்கள் சாதிப் பாலுணர்வின் வன்பசியைப் போக்குமெனில்
என் அம்மணம் ஒன்றும் அசிங்கமாகிவிடுவதில்லை.
நீங்கள் வரிசை கட்டி
ருசி பார்க்கும்
என் சதைத் துண்டங்களில்
ஒழுகும் குருதியில்
அழிந்து கொண்டிருக்கும்
தீண்டாமை வலிகள்.
வாருங்கள் என் உடல் மீது
மேயும் உங்களின் தேகத்தில்
பாலெனக் குருதியைப் புகட்டி
பண்பாடுகள் கட்டிக்காக்கும்
அவரவர் அம்மாக்களைத்
தேடிப் பார்க்கிறேன்.

2.
பனியைப் பருகும்
பகலவனின் வேகமென
உன் மௌனத்தை மொழிபெயர்க்கும்
என் மனவோட்டம்
எப்படியோ பொருந்திப் போகிறது
உன் புறக்கணிப்போடு.
உனக்கான சூரியனாக
உதிக்கும் என்னை
பார்வையில் பனியாக்கி விடுகிறாய்.
உனக்கான பாடுபொருளாகவோ
தேடுபொருளாகவோ
மாறிப்போன பின்னே
நானாக இல்லாத என்னை
எவ்விடம் தேட?

3.
பாலைவனத்திற்குள்
தேடிக் கொண்டிருக்கிறது
பறக்கும் பட்டாம்பூச்சி
மலரும் மரத்தை
மழை நீரில் மின்னும் வண்ணங்களை
தன்னோடு உலா வரும் பூச்சிகளை
எல்லைகளைக் காட்டும் பசுந்தடங்களை.
மணல் வெளிக்குள்
நுழைந்த பின்னும்
தன்நிலை மறவாமல்
போகுமிடமெங்கும்
வனத்தைச் சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியின் அன்பை
வானம் மழையென நீட்டுகிறது.

இளையவன் சிவா
மடத்துக்குளம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *