காலமெனும் ஆழிக்குள் புதைந்து நமது கண்களுக்கும் கருத்துகளுக்கும் புலப்படாத வேந்தர்களின் வரலாறுகள் பல. அப்படிப்பட்ட வரலாறுகளும் அக்கால மக்கள் வாழ்க்கையும் இன்றுவரை நாம் காணத்துடிக்கும், வாழத்துடிக்கும் ஓர் கனவுலகம். அந்த ஆழியில் மூழ்கிடாது ஒரு கலங்கரையாய் நம்முன் காட்சியாய், சாட்சியாய் இன்றளவும் தம் இருப்பை நிலை நாட்டி விண்ணளவு உயர்ந்துள்ளவர் ஒரு சிலரே. அப்படி எளிதில் கடந்து செல்ல முடியாத, என்றும் நினைவில் தங்கியிருக்கும் வரலாற்று நாயகர்களில் ஒருவர் கரிகாலன். பெயர் சொல்லும் அளவுக்கு புகழ் சொல்லும் ஆவணங்கள், அவருக்கு பிந்தைய சோழ அரசர்களுக்கு கிட்டிய அளவு கரிகாலனுக்கு பெரிதாக இல்லை. இந்த நாவலைப்பொறுத்தவரை கரிகாலன் மீண்டும் பிறந்துள்ளான் என்றே எண்ணத் தோன்றுகிறது. எழுதப்படாததோர் வீரச்சரித்திரம் வீறு கொண்டு எழுந்துள்ளது இத்தனை காலம் கடந்து. சிற்றறரசாய் நலிந்திருந்திருந்த சோழர்குல சரித்திரத்தை உச்சத்தில் வைத்த முதல் மாமன்னன் கரிகாலனை தனது வானளாவிய எழுத்துகளுக்குள் மீண்டும் பிறப்பெடுக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். அவனே இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய இமயவேந்தன் கரிகாலன்.

ஆசிரியர் திரு. கு. அசோக்குமார்

இதன் ஆசிரியர் திரு. கு. அசோக்குமார் அவர்கள். சுங்கத்துறையில் பணிபுரியும் இவருக்கு இது இரண்டாவது நாவல். முதல் நாவலும் கரிகாலன் வரலாறே. கரிகாலன் பிறந்தது முதல் சூழ்ச்சியில் இழந்த சோழத்தை மீட்பது வரையிலுமான கதை. இரண்டு பாகங்களாய் வந்து வாசகர்களிடைய மிகப்பெரும் வரவேற்பை பெற்றதோடல்லாமல் பல விருதுகளையும் வாங்கிக்குவித்தது அந்த சோழவேங்கை கரிகாலன் எனும் நாவல். அதன் தொடர்ச்சியாகவே இமயவேந்தன் கரிகாலனை எழுதியிருந்தாலும் இந்த நாவலை தனியாக படித்தாலும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.

போரையே வெறுக்கும் ஒரு மன்னனுக்கு போரொன்றே வாழ்வானதன் பின்னணியை மிக துல்லியமாக சொல்லும் நூல் இது. சிறுவயதிலேயே செயற்கரிய செயல்களை செய்து இழந்த அரசாட்சியை பிடித்த கரிகாலன் வரலாற்றை கேள்விப்பட்டதும் உண்டு. படித்ததும் உண்டு. ஆனால் கரிகாலன் வடக்கே படையெடுத்த வரலாற்றை எங்கும் படித்ததில்லை. எங்குமே பேசப்படாத ஓர் வரலாறு. இந்த நாவலின் களமே இமயம் வரை சென்று களம் கண்டு வென்று சரித்திர சாதனை படைத்த வரலாற்றை கூறுகிறது..

இதுதான் கதை என்றாலும் அதை எழுதிய விதம் பிரம்மாண்டம் எனும் சொல்லைத்தாண்டி அதனினும் மிஞ்சிய அர்த்தம் தரும் வேறு சொல் கிடைக்கவில்லை. தென் கோடியில் அரசாளும் மன்னன் வடக்கே படையெடுத்துச் செல்லும் அவசியமென்ன? அதன் காரணமென்ன? அந்தக்கால சூழலில் இது எப்படி சாத்தியாமாகியிருக்கும்?உணவு, இருப்பிடம், ஆயுதங்கள், படைபலம், சென்றுவர ஆகும் காலத்திற்குள்ளில் வீரர்களின் மனோதிடம் இவையெல்லாம் எப்படி கிட்டியிருக்கும்? இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலாக சம்பவங்களை கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார். இல்லை.. அவர் படையில் ஓர் வீரராக நம் கையிலும் வாள் தந்து கூடவே களமெங்கிலும் அழைத்துச்சென்றிருக்கிறார் ஆசிரியர். இந்த நாவலின் தனிச்சிறப்பே எந்த எழுத்தாளரின் சாயலும் இல்லாத தனி நடை. நவீன கதை சொல்லும் பாணி.

எப்படி வெறும் போரை மட்டும் வைத்துக்கொண்டு எழுநூறு பக்கங்களுக்கு மேல் எழுத முடியுமா? அதுவும் தொய்வின்றி விறுவிறுப்பாக.. முடியும்.. இவரால் முடியும். இவர் எழுத்தால் முடியும். அந்த வரிகளுக்குள் ஆயுதங்கள் மட்டுமல்ல பஞ்சபூதங்களும் சேர்ந்தே களமாடுகிறது.

வரலாற்று நாவல்களை தேடிச்சென்று வாசிக்கும் வாசகர்களுக்கு மட்டுமில்லாமல் பிற வாசகர்களுக்கும் இந்த நாவல் ஒரு விருந்தையே அளிக்கும். ஏனெனில் வரலாற்று நாவலுக்குரிய வரையறைகளை உடைத்தெறிந்து இப்படியும் எழுதலாம் என வெகுஜன ரசிப்பு உலகத்துக்குள் தம் எழுத்தால், நாவல் முழுவதும் விரவிக்கிடக்கும் அழகு தமிழால் உள்ளே நுழைந்திருக்கிறார்.. படைப்புலகத்துக்கு இது ஒரு புதுமையான பாணி. போர்க்காட்சியின் வர்ணணைகளாகட்டும்.. பிரிவுத்துயரில் தவிக்கும் கரிகாலன் ஆதிராவின் காதல் வர்ணணைகளாகட்டும்.. ஒவ்வொரு அத்தியாயங்களிலும் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கேற்ப, அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப்பட்டுள்ள சொல்லாடல்களும் தத்துவங்களும் அரசர் முதல் ஒவ்வொரு தனி மனிதருக்கானதாகவும் எழுதியிருக்கிறார். எல்லா பாகங்களிலும் குறைந்தது பத்து முதல் இருபது வரை “அடடா” “ஆஹா” என‌சொல்ல வைக்கிறது. அதையெல்லாம் தனியாக எடுத்தாலே ஒரு புத்தகம் போடலாம்.

உதாரணத்திற்கு
நட்பிற்கு
“நட்பெனும் நூலிழையில் அன்பை பாவோட்டி இருளில்லாத உலகம் நெய்வோம்”
காதலுக்கு
“உறவின் பிரிவு வாழ்வினும் கொடியது. காதலில் பிரிவு இறப்பினும் கொடியது”
மழைக்கு
“கரிய நிற துகிலணிந்த ஆகாயம் வானவில் நாணிழுத்து நீரம்புகளை எய்யத்துவங்கியது.” தவிப்பிற்கு
“இன்னலை எண்ணித்தவிக்கும் மனதின் துயரம் இன்னலைவிட கொடியது” இப்படி நாவலெங்கிலும் இலைகளில் இழைந்தோடும் நரம்புகளாய் பின்னிப்பிணைந்திருக்கிறது.

இந்த நாவலில் போரே பிரதானம் என்றாலும் உயிர் உருக்கும் காதலும் உண்டு. வாளும் வேலும் கொண்டு போரை எழுதியிருக்கிறாரென்றால் மன்மதனின் அம்பைக்கொண்டு காதலை வடித்திருக்கிறார். உட்செல்பவர்களையும் அந்த அம்பு தாக்காமல் விடாது.

இத்தோடு மனம் நெகிழ வைக்கும் நட்பும் உண்டு.
நாவலெங்கிலும் பின்னிப்பிணைந்திருக்கும் பகைவரின் சூழ்ச்சிகள். அதை முறியடிக்கும் கரிகாலனின் மதியூகம், அவனுக்கு துணையாக மாமன் இரும்பிடார், உடன் மனைவி ஆதிரா மற்றும் நண்பர்கள் சுடரொளி, இளம்பரிதி, முகில் என அத்தனை கதாப்பாத்திரங்களும் மேன்மை மிக்கது. முக்கியமாக
சோழத்தின் அத்தனை ஆண்களுடன் கரிகாலன் வடக்கே புறப்பட்டு சென்றிருக்கையில் சோழத்தின் முதுகெலும்பாய் நின்று நாட்டைப் பாதுகாத்தது பெண்கள். அவர்களை வழிநடத்தியது கரிகாலனின் மனைவியான ஆதிரா என்று சொல்லியிருப்பது மிக அழகு. இப்படி பெண்களின் மாண்பை போற்றி எழுதியிருப்பது சமீபத்தில் வெளியான வேறெந்த நாவலிலும் இல்லையென்றே கூறலாம்.

கதைக்குள் செல்லாமலே நாவலைப்பற்றிய ஓர் பார்வையே இந்த ஓர் அறிமுகம். அந்த பரபரப்புகளும், விறுவிறுப்புகளும், திருப்புமுனைகளும், இழப்புகளும், காதலும், கண்ணீரும், ஏக்கமும், துக்கமும், பரவசங்களும் படிப்போருக்கு அந்தந்த நேரத்திற்கு உண்டாகும் உணர்வுகள்.. அது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஆகையால் அதை எழுதவில்லை.

வரலாறென்பது படிக்கப்படுவதற்கு மட்டுமல்ல.. நம் முன்னோர்களின் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், அவர்களின் அறம் என அதன் வழிவழியே வந்த தலைமுறைகளுக்கு தம் வீரத்தையும் பண்புகளையும் கடத்துவதாகும். இதை படித்த பின்பு கரிகாலன் இப்படித்தான் வாழ்ந்திருக்கக்கூடுமா!! இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே!! இல்லை இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும் எனும் நம்பிக்கையை ஊட்டுகிறது இந்த நாவல். காலத்திற்குள் கரைந்திருந்த கரிகாலன் இனி காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும் வண்ணம் காவியம் படைத்திருக்கிறார் ஆசிரியர். “கரிகாலன் படித்திருக்க வேண்டும் இந்த புத்தகத்தை” என புத்தக வெளியீட்டின்போது திரு. மரபின் மைந்தன் முத்தையா கூறியதையே சொல்லத்தோன்றுகிறது. சோழத்தின் புகழை, இறையாண்மையை, மாண்பை இமயத்தில் பொறித்தது கரிகாலன் மட்டுமல்ல. தன் புதினத்தின் மூலம் கரிகாலனோடு தன் பெயரையும் ஆழப்பதித்திருக்கிறார் ஆசிரியர் கரிகாலன் அசோக்குமார் அவர்கள். இப்படியோர் அற்புதமான நாவலான இமயவேந்தன் கரிகாலனை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நன்றி.

T.K வித்யாகண்ணன்
திருப்பூர்

நூல் : இமயவேந்தன் கரிகாலன் [வரலாற்று நாவல்]
ஆசிரியர்: திரு. K. அசோக்குமார்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
ஓவியங்கள்: திரு ஷ்யாம்

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *