ஏழை நாடுகளின் வயிற்றிலடிக்கும் சர்வதேச நாணய நிதியம்
ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வின் கடுமையான பாதிப்புகளைக் குறைந்த வருவாய் கொண்ட வளரும் நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஏழை மற்றும் வளரும் நாடுகள் தங்களது (மக்கள் நலச்) செலவுகளைக் குறைக்க வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய சர்வதேச நாணய நிதிய அதிகாரி பெத்யா கோவா புரூக்ஸ், “கடன் நெருக்கடியைத் தவிர்க்க ஏழை நாடுகள் அரச செலவினங்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்த வழிகாட்டலானது வளர்ந்து வருகின்ற மற்றும் ஏழை நாடுகளுக்கும், அங்குள்ள உழைக்கும் மக்களுக்கும் எதிரான நேரடித் தாக்குதலாகும். உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு உண்மையான காரணமான வளர்ந்த நாடுகளையும், கார்ப்பரேட்டுகளையும் விட்டுவிட்டு, ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கு உலை வைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
போர் காலநிலைபேரழிவு யார் காரணம்?
மேற்காசியாவில் போரைத் தூண்டிவிட்டு, உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலையை உயர்த்தியதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கே பெரும் பங்கு உண்டு. அதேபோல, இன்றைக்கு ஏழை நாடுகளின் விவசாயத்தையும் உணவு உற்பத்தியையும் சீரழிக்கும் காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணமே வளர்ந்த நாடுகள் தான்.
உலகளாவிய கார்பன் திட்டம் என்ற அமைப்பின் தரவுகளின்படி, தொழில்புரட்சி காலம் முதல் இன்று வரை வளிமண்டலத்தில் வெளியான மொத்த கரியமில வாயுவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமே 47 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. ஆனால் கார்பன் உமிழ்வில் 3 சதவிகிதம் என்ற மிகக்குறைந்த அளவே பங்கு வகிக்கும் ஏழை நாடுகளே காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளை சந்தித்து வருகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்க வெறியினாலும், போர்ச் சூழ்ச்சியினாலும் ஏற்படும் பேரழிவுகளுக்கு ஏழை நாடுகளைப் பலிகடாவாக்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
மக்கள் நலத்திட்டங்களை வெட்டுவதுதான் சிக்கனமா?
சர்வதேச நாணய நிதியம் ‘செலவைக் குறையுங்கள்’ என்று நல்ல ஆலோசனை போல கூறும் இந்த பேச்சுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்னவென்றால் ஏழை மக்களுக்கு அரசுகள் வழங்கும் மானியங்கள், இலவசக் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் செலவுகளை வெட்டுவதுதான்.
நியாயப்படி, இதுபோன்ற நெருக்கடி காலத்தில் கார்ப்பரேட்டுகள் மீது கூடுதல் வரியை உயர்த்ததான் இது போன்ற சர்வதேச அமைப்புகள் அறிவுறுத்த வேண்டும்.
ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, உலகளவில் கடந்த சில ஆண்டுகளில் உருவான புதிய சொத்துக்களில் 63 சதவீதத்தை உலகின் வெறும் 1 சதவீதம் மட்டுமே உள்ள பெருங்கோடீஸ்வரர்கள் வைத்துள்ளனர். உலகளவில் முன்னணி தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் போர்ச் சூழலைப் பயன்படுத்திப் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.
இந்த கார்ப்பரேட்டுகள் மீது சொத்துவரி (Wealth Tax) விதிக்கச் சொல்லாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் ‘சிக்கன நடவடிக்கையை’ப் பரிந்துரைப்பது மிக மிக கொடூரமான நயவஞக திட்டமாகும்.
இழப்பீடு தர வேண்டியது வளர்ந்த நாடுகளே
வளர்ந்த நாடுகள் நடத்தும் போர்களாலும், அவர்களால் ஏற்படும் காலநிலை பேரழிவாலும் வளரும் நாடுகள் சந்திக்கும் பொருளாதார இழப்புகளுக்கு வளர்ந்த நாடுகளே முழுமையான இழப்பீடு (Loss and Damage Fund) வழங்க வேண்டும். ஆனால், சர்வ்தேச நாணய நிதியம் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதிக்க நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்கு எதிராகப் பாகுபாட்டுடனும் செயல்படுகிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
📚 எழுதியவர் :
✍🏻 – சேது சிவன்,
ஆசிரியர் குழு
தீக்கதிர் நாளிதழ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

