பாமாயில் சாகுபடியில் விழுங்கப்படும் வடகிழக்கு இந்தியாவின் காடுகளும் விவசாயிகளின் வாழ்வும் | சேது சிவன் | Palm Oil Cultivation | www.bookday.in

பாமாயில் சாகுபடியில் விழுங்கப்படும் வடகிழக்கு இந்தியாவின் காடுகளும் விவசாயிகளின் வாழ்வும் – சேது சிவன்

பாமாயில் சாகுபடியில் விழுங்கப்படும் வடகிழக்கு இந்தியாவின் காடுகளும் விவசாயிகளின் வாழ்வும்

சிப்ஸ், சிக்கன் பொறிப்பதில் தொடங்கி கேக் உள்ளிட்ட இனிப்பு வகைகள் தயாரிப்பு வரை உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்குப் பாமாயில் இன்றியமையாத தேவையாக உள்ளது. இது உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்குக் கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பாமாயில் நமது உடலுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும், உலகின் நுரையீரலான காடுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைப் பற்றியதே இக்கட்டுரை.

இந்தியாவின் பாமாயில் தேவை

2026 மதிப்பீடுகளின்படி, 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் பாமாயில் நுகர்வு தோராயமாக 230 சதவீதம் அதிகரித்துள்ளது. 1990களில் இருந்தே பாமாயிலை இறக்குமதி செய்யும் நமது நாடு, இன்று தேவையின் அளவு மிக அதிகமாகியிருப்பதன் காரணமாக, உலகளவில் பாமாயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது.

அரசு திட்டம்

இறக்குமதியைக் குறைக்கவும், அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யவும் பாமாயில் உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதுவே இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களின் இயற்கைச் சூழலை அழிக்கும் புள்ளியாக மாறியுள்ளது.

நாடு முழுவதும் பாமாயில் சாகுபடியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. 2015-16இல் ‘எண்ணெய்வித்துக்கள் மற்றும் பாமாயிலுக்கான தேசிய இயக்கம்’ (National Mission on Oilseed and Oil Palm) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிறகு அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்களும் பெருமளவிலான நிலங்களைப் பாமாயில் தாவரங்கள் பயிரிடுவதற்காகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்திட்டம் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி அந்தமான்-நிக்கோபார் தீவுகளையும் முதன்மை மையமாகக் கொண்டுள்ளது.

இதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் 2021இல் ‘எண்ணெய்வித்துக்கள் மற்றும் பாமாயிலுக்கான தேசியத் திட்டம்’ (NMEO-OP) தொடங்கப்பட்டது. இதன்கீழ், 2029ஆம் ஆண்டுக்குள் பாமாயில் தாவரங்கள் பயிரிடப்படும் பரப்பளவை சுமார் 24.71 லட்சம் ஏக்கராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு 2021ஆம் ஆண்டு ரூ.11,040 கோடியை ஒதுக்கியது. தற்போது நாடு முழுவதும் சுமார் 15.81 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாமாயில் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் தனியார்-அரசு கூட்டுப் பங்களிப்பை வலியுறுத்துகிறது. இதன்படி ஒன்றிய அரசு பாமாயில் சாகுபடிக்குத் தேவையான நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து வருகிறது. சாதாரண தரிசு நிலங்களை அல்ல, மிகவும் வளமான வெப்பமண்டலக் காடுகளை அழித்தே இந்தப் பயிரிடலுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இதற்காகத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் நிலங்களை அளவீடு செய்து தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன.

அழியும் பல்லுயிர் பெருக்க மையங்கள்

மேலே கூறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசமும் மூன்று உலகளாவிய பல்லுயிர்ச் செழிப்பு மையங்களை (Global Biodiversity Hotspots) தன்னகத்தே கொண்டுள்ளன. இவை இந்தியாவின் மிக விரிவான, அடர்ந்த காடுகளின் ஒரு பகுதியாக இருப்பதோடு, அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு வனவிலங்குகள், மூலிகைத் தாவரங்கள், காட்டு உணவுப் பயிர்களின் வாழ்விடமாகவும் திகழ்கின்றன. இவை அனைத்தும் பாமாயில் சாகுபடியின் காரணமாக அழிவின் பாதையில் தள்ளப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் தற்போது பாமாயில் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு 1.68 லட்சம் ஏக்கர். இதில் மிசோரம் 74,130 ஏக்கர் பரப்பளவுடன் முதலிடத்திலும், அருணாச்சல பிரதேசம் சுமார் 61,775 ஏக்கர் பரப்பளவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தப் பரப்பளவை 2026ஆம் ஆண்டிலேயே சுமார் 2.28 லட்சம் ஏக்கராகவும், நீண்டகால இலக்காக வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் 23.77 லட்சம் ஏக்கராகவும் அதிகரிக்க வேண்டும் என அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. 2016ஆம் ஆண்டிலிருந்து நாகாலாந்தில் மட்டும் பாமாயில் சாகுபடி 3,000 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. சாகுபடிப் பரப்பளவு எவ்வளவு விரைவாக அதிகரித்ததோ, அதே வேகத்தில் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன.

‘குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச்’ (Global Forest Watch) அமைப்பின் செயற்கைக்கோள் ஆய்வுகளின்படி, 2001 முதல் 2023 வரை இந்தியாவின் மொத்த மரப்பரப்பு இழப்பில் சுமார் 60 சதவீதம் அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் உள்ள ‘தம்பா புலிகள் காப்பகத்தின்’ (Dampa Tiger Reserve) நிலப்பரப்புகளில்கூடப் பாமாயில் பயிரிடுவதற்காக ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித-விலங்கு மோதல்களும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் அவல நிலை

2004ஆம் ஆண்டிலிருந்தே மிசோரத்தின் அனுபவம் பேரழிவை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பாமாயில் தோட்டங்கள் மண்ணின் வளத்தையும் நீரையும் முழுமையாக உறிஞ்சிவிடுகின்றன. இதனால் வளமான மண் வறட்சியடைகிறது; பாமாயிலுக்குப் பிறகு வேறெந்தப் பயிரும் அந்த நிலத்தில் முளைப்பதில்லை.

நாகாலாந்தில் விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர்ப் பற்றாக்குறை, போதிய பாசன உள்கட்டமைப்பு இன்மை, அரசின் ஆதரவின்மையால் தவிக்கின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் விதைகள் குறுகிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாமல் விடப்படுகின்றன; பதப்படுத்தும் வசதிகள் இல்லாததால் விதைகள் அழுகிப்போவதும் தொடர் பிரச்சினையாக உள்ளது. பெரும்பாலான நிலங்கள் மலைப்பாங்கான பகுதிகளாக இருப்பதால் போதிய பாசன வசதிகள் இன்றும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய கட்டமைப்புக் குறைபாடுகள் அனைத்தும் விவசாயிகளுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்துகின்றன.

இதன் விளைவாக விவசாயிகள் மாற்றுப் பயிர்கள் நடும் முயற்சியில் இறங்கினர். ஆனால் காலம் கடந்துவிட்டது—பாமாயில் விதைப்பினால் மண்ணின் வளமும் சத்தும் சிதைந்துவிட்ட காரணத்தால் மறுபயிர்களும் வளராமல், மேலும் நஷ்டமே மிச்சமாகியுள்ளது. இதுபோன்ற அனுபவங்கள் ஒவ்வொரு மாநில விவசாயிகளுக்கும் நிறைய உள்ளன.

இலாபம் கறக்கும் நிறுவனங்கள்

பதஞ்சலி (Patanjali), கோத்ரேஜ் அக்ரோவெட் (Godrej Agrovet), 3F ஆயில் பாம் (3F Oil Palm) ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களே வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் சாகுபடியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எந்த ஒரு மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு அரசோ, இந்தத் தனியார் நிறுவனங்களோ பொறுப்பேற்கவில்லை.

புள்ளிவிவரங்கள் மறைப்பு

தேசிய வனக் கணக்கெடுப்புகளில் வனத்துறையினரால் பாமாயில் தோட்டங்கள் காடுகளின் பரப்பளவாகவே தவறாகப் புகாரளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்திய வனக் கணக்கெடுப்பு நிறுவனம் (FSI) சர்வதேசத் தரநிலைகளுக்கு மாறாக வனப்பகுதிகளை வரையறுத்து வருகிறது. இதனால், ஒரு வளமான காடு அழிக்கப்பட்டுப் பாமாயில் தோட்டமாக மாற்றப்பட்டாலும், அது “நிலப் பயன்பாட்டில் மாற்றமில்லை”, “வன இழப்பில்லை” என்றே கணக்கில் காட்டப்படுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழல், காடுகளின் அழிவுகள் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 2023ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் அரசுப் பதிவேடுகளில் உள்ள நிலங்களுக்கு மட்டுமே வனப் பாதுகாப்பு பொருந்தும் என்று சட்டத்தையே சுருக்கிவிட்டது. 1996ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பழங்குடியின, சமூகக் காடுகளையும் பாதுகாப்பிற்குள் கொண்டு வந்திருந்த நிலையில், இந்தத் திருத்தத்தால் அந்தப் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கின் அடிப்படையில், வனப்பகுதிகளில் வணிக ரீதியான சுரண்டல்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த போதிலும், அரசு இத்தடையை எதிர்த்தே வருகிறது.

சர்வதேச அனுபவம் தரும் எச்சரிக்கை

இது இந்திய விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, சர்வதேச விவசாயிகளின் பிரச்சினையும் ஆகும். பாமாயில் பயிரிடும் விவசாயிகளுக்கு எதிர்கால பொருளாதாரப் பாதுகாப்பு அளிக்கும் முறையான திட்டமிடல் வழிகாட்டுதல்கள் இல்லாததன் விளைவாக, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் 3.5 மில்லியன் ஹெக்டேர் காடுகள் பாமாயில் தோட்டங்களாக மாற்றப்பட்டு, மிகப்பெரிய பல்லுயிர் இழப்பை அந்நாடுகள் சந்தித்தன. இதுபோன்ற அழிவை நோக்கியே வடகிழக்கு மாநிலங்களும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக சூப்பர் எல் நினோ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பாதிப்பு மேலும் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. நுகர்வோரின் தட்டில் இருக்கும் சிப்ஸிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபங்கள் வரை நீளும் இந்தச் சங்கிலியில், விலை கொடுப்பது வடகிழக்கு இந்தியாவின் காடுகளும், அங்கு வாழும் விவசாயிகளும் பழங்குடி மக்களும் தான்.

📚 எழுதியவர் : 

✍🏻 – சேது சிவன்,
தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் குழு

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *