கொரோனா தொற்றை தடுப்பதில் மக்கள் நடைமுறைகள் மாற்றத்தின் முக்கியத்துவம் – உட்டரா பாரத்குமார் | தமிழில் இரா. இரமணன்

Importance of change in people's practices in preventing corona virus infection Uttara Bharath Kumar article in book day websiteகொரோனா பெரும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இரண்டு முக்கிய வழிகளே உள்ளன. ஒன்று மருத்துவ வழி; இன்னொன்று மக்களின் நடைமுறைகளில் (behavioural changes) மாற்றம் கொண்டுவருவது. திரள் தடுப்பு (herd immunity) இன்னும் ஏற்படவில்லை; அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதற்கு சில மாதங்களோ ஒரு வருடமோ ஆகலாம். இந்த நிலையில் முக கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கை கழுவுவது போன்ற நடைமுறை மாற்றமே பெரும் தொற்று பரவுவதை தடுக்க உதவும் முக்கிய வழியாகும். இதில் முக கவசம் அணிவதில் மூன்று தவறுகளைப் பார்க்க முடிகிறது.

1.தொடர்ச்சியாக அணியாமல் அவ்வப்போது அணிவது.

2. தவறான முறையில் அணிவது

3. அணிவதே இல்லை. இந்த தவறுகளைக் களைய ஏழு முக்கிய விசயங்களை செய்ய வேண்டும்.

முதலாவதாக முக கவசம் அணிவது குறித்த தகவலை பரப்புவது. இதில் நாம் ஏன் முககவசம் அணிய வேண்டும்; எந்த வகையான மாஸ்க், யார் எப்போது அணிய வேண்டும் போன்ற தகவல்களை மக்கள் நம்பக்கூடிய ஆளுமைகளான விஞ்ஞானிகள், உடல் நல நிபுணர்கள், உலக சுகாதார நிறுவனம், டிவி, செய்தித்தாள், வானொலி, முன்களப் பணியாளர்கள் ஆகியோர் மூலம் வழங்க வேண்டும். புதிய தகவல்கள் இருந்தால் அதையும் அவ்வப்போது தர வேண்டும். மக்களுடைய நம்பிக்கைகளையும் தவறான கருத்துகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. அதை நம்பகமான தரவுகள் மூலம் மாற்ற வேண்டும்.

இரண்டாவதாக இந்த தகவல்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டியதில்லை. சிலர் மாஸ்க் அணிவது தொற்றை தடுக்கும் என்பதையே நம்புவதில்லை. இன்னும் சிலர் நம்புகிறார்கள்; ஆனாலும் தொடர்ச்சியாக அணிவதில்லை. ஆகவே ஒவ்வொரு பிரிவினருக்கும் பொருத்தமானதை அளிக்க வேண்டும்.

மூன்றாவதாக மாஸ்க் அணிவதன் நன்மைகளை பரப்ப வேண்டும். அதிக எண்ணிக்கையில் மாஸ்க் அணியும் மக்கள் சமூகத்தில் தொற்று குறைவாக இருப்பது குறித்த பதிவுகள்; தொடர்ச்சியாக அணிபவர்கள் தாங்கள் எவ்வாறு தொற்றை தவிர்த்தோம் என்கிற சான்றுகள் (மூட்டு வலிக்கு ஒரு மருந்து நிறுவனம் சிலரின் வாய்மொழிச் சான்றுகளை காட்டும் விளம்பரங்கள் போல – மொழி பெயர்ப்பாளர்) மாஸ்க் அணிவதே இன்றைய நாகரீகம், அது ஒரு சமுதாயப் பொறுப்பு, பெரியவர்களுக்கு காட்டும் மரியாதை, புத்திசாலித்தனம் என பரப்புரை செய்வது போன்ற வழிகளில் முயற்சிக்கலாம்.நான்காவது சமூகத்தில் ஒரு நேர்மறை ஒழுங்கை ஏற்படுத்துவது. பெரும்பாலானோர் அணிந்தால் மற்றவர்களும் அணியும் சாத்தியங்கள் உள்ளன. சமூக மற்றும் ஊடக முன்னோடிகள் மாஸ்க் அணிந்தே எப்பொழுதும் தோன்றுவது; அவர்கள் அதைப்பற்றிப் பேசுவது, விளம்பரங்கள், அறிவுரைகள், காணொளிகள் ஆகியவற்றின் வாயிலாக இந்த ஒழுங்கை ஏற்படுத்தலாம்.

ஐந்தாவதாக மாஸ்க் அணிவதை அமுல்படுத்துவது. அணியாவிட்டால் யாரும் எதுவும் செய்யப் போவதில்லை என்பதாலேயே பலரும் அணிவதில்லை. காவல்துறை மூலம் கட்டாயப்படுத்தலாம். ஆனால் அதைவிட நாம் எல்லோரும் கூட்டுப் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அவரவர் பகுதி மக்களிடம் பொதுவெளியில் மாஸ்க்கை சரியாகவும் தொடர்ச்சியாகவும் அணிய வேண்டும் என்பதை நயமாக சொல்லலாம். தொடர்ந்து செய்யும்போது இது ‘அடுக்கு விளைவு’களை ஏற்படுத்தும்.

ஆறாவதாக குடும்பத் தலைவர் முதல் தேசத் தலைவர்கள் வரை எம்பதி (empathy) என்று சொல்லுகிற பிறர் உணர்வுகளுடன் ஒன்றி வழி நடத்தி செல்ல வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதில் மத, அரசியல், இலாப நோக்குகள் கூடாது. தலைவர்கள் மாஸ்க் அணிவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மக்களிடையே நேர்மறை நடத்தைகளை உண்டாக்கும்.

ஏழாவதாக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். தைரியமாகவும் நேர்மையாகவும் செய்திகளை வழங்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை அல்லாமல் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடாது. வழியேயில்லை; எல்லாம் இனி அழிவுதான் என்று சொல்லி மக்களை பீதியில் உறைய வைக்கக்கூடாது. அதேபோல் சமூக ஊடகங்களும் வகைதொகையற்ற விதத்திலும் தவறான பயனற்ற தகவல்களை பரப்பக்கூடாது. எரியும் பிணக் குவியல்கள், திணறும் மருத்துவ மனைகள், ஆக்சிஜன் சிக்கல்கள், தடுப்பூசி மற்றும் மருந்துகள் பற்றாக்குறை இவைகளை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கக்கூடாது. தடுக்கும் முறைகள் குறித்த உற்சாகமளிக்கும் ஊக்கமளிக்கும் பதிவுகளை இட வேண்டும். முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி, தடுப்பூசி ஆகியவைகளில் புதிய ஆலோசனைகளும் புதுமையான வழிமுறைகளும் தரலாம்.

முடிவாக எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான நடத்தை முறைகளில் நாம் முதலீடு செய்ய வேண்டும். இதுவரை தற்காலிக முறைகளையே பின்பற்றியுள்ளோம். தொற்று குறித்து விளக்குவதற்கு அறிவியலாளர்களை ஈடுபடுத்தும் செலவினங்களுடன் மக்கள் நடத்தைகளை புரிந்து கொள்வது, முன்கூட்டியே அறிவிப்பது, அதை வடிவமைப்பது போன்ற செயல்கள் செலவு குறைந்தவையாகும்.

உட்டரா பாரத்குமார் 
முதுநிலை தொழில்நுட்ப ஆலோசகர் 
ஜான் ஹாப்கின்ஸ் மையம்
நன்றி: இந்து ஆங்கில நாளிதழ்
07.06.2021 கட்டுரையின் சுருங்கிய தமிழாக்கம்
https://www.thehindu.com/opinion/op-ed/behaviorial-change-can-reduce-transmission/article34746275.ece