அவர்களுக்காக பால்கனியில் கை தட்டச் சொன்னார்கள். அவர்களுக்காக வீடுகளில் விளக்கேற்றச் சொன்னார்கள். அவர்களுக்காக ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து பூச்சொரிய வைத்தார்கள். கொரோனா கோரப்பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, தங்களுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்ற அபாயத்தைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், மரியாதை செலுத்தவும், தேசத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவுமே இந்த ஏற்பாடுகள் என்று சொன்னார்கள். இப்படிச் சடங்குமயமாக்குவதுதான் நமது நன்றியையும் மரியாதையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் வழியா என்ற விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும், நாட்டு மக்களில் கணிசமானோர் இதையெல்லாம் அக்கறையோடு பின்பற்றவும் செய்தார்கள்.
இப்போது அந்த மருத்துவர்களை அவமதிப்பது போல ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவப் படிப்பிற்கான ‘தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு’ (நீட்) வரும் ஜூலை 26 அன்று நாடு முழுவதும் நடத்தப்படும் என்ற ஆணைதான் அது. கோவிட் சிகிச்சையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டிருக்கிற மருத்துவர்களுக்கும் இந்த நீட் ஆணைக்கும் என்ன சம்பந்தம்? அவர்களெல்லாம் அரசுத்துறை மருத்துவர்கள்; அவர்களில் யாரும் ‘நீட்’ எழுதித் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் அல்ல.
இனி ‘நீட்’ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவம் பயிலும் தகுதியைப் பெற முடியும் என்பது, போதிய ஓய்வும் உறக்கமும் இல்லாமல் கடமையுணர்வோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிற மருத்துவர்களின் தகுதியைக் கொச்சைப்படுத்துவதன்றி வெறென்ன? அவர்களை மட்டுமல்ல, அவர்களுக்காகக் கை தட்டிய விளக்கேற்றிய பூச்சொரியலை வரவேற்ற மக்களையும் ஏளனத்துக்கு உள்ளாக்குகிற தேர்வு அறிவிப்பு இது.
அவசியம் என்ன, அவசரம் என்ன?
நாடு முழுவதும் கொரோனா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், குடிமக்கள் நெருக்கடியின் வலியைச் சுமந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த ஆணைக்கு அவசியம் என்ன வந்தது? வேறு எப்போதையும் விட இப்போது மருத்துவத்தை வருவாய்த் தொழிலாக அல்லாமல் மக்களுக்கான சேவையாக மேற்கொள்வதன் மகத்துவம் மிகுதியாக உணரப்படுகிறது. இந்த உணர்வு ஏற்பட்டுள்ள, இத்தகைய சேவைகளுக்காக நாமும் மருத்துவராக வேண்டும் என்ற கனவு விரிந்துள்ள, அடிப்படைக் கல்வித் தகுதி உள்ளவர்களுக்குப் பெருமளவில் அந்த வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட வேண்டும். குடிமக்கள் நலனே தேச நலன் என்ற கோட்பாடு உள்ள அரசு அந்த வாய்ப்புகளை உருவாக்கவே முயலும். ஆனால் அத்தகைய வாய்ப்புகளுக்கான கதவை மூடுகிறது நீட்.
கிராமப்புற மாணவர்கள், அடித்தட்டுச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்போதைய கொரோனா போராட்டத்தில் குடும்பத்தினரோடு இணைந்திருக்கிறார்கள். நாடு தழுவிய அச்சமும் பதற்றமும் அவர்களையும் தொற்றியிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் எப்படி நீட் எழுதுவதற்குப் படிப்பார்கள்? ஒரு வாதத்திற்காக, பிள்ளைகள் இடையூறின்றிப் படிப்பதற்குப் பெற்றோர்கள் வீடுகளில் வசதி செய்து கொடுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், அந்த வசதியும், மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் கட்டணம் வசூலித்து சிறப்புப் பயிற்சிகளை அளிக்கிற தனியார் ‘கோச்சிங்’ மையங்களில் இருக்கிற வசதியும் ஒன்றா? மாநில அரசாங்கமே கோச்சிங் மையங்களை நடத்துகிறது என்றாலும், அது அந்தத் தனியார் நிறுவனங்களின் ஏற்பாடுகளோடு ஒப்பிடுகையில் பின்தங்கியதாகவே இருக்கிறது என்று மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தோரும், சமூக அக்கறையாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மக்கள் – மருத்துவர் விகிதம்
உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தேவை என்று பரிந்துரைக்கிறது. ஆனால் சென்ற ஆண்டு பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கள ஆய்வுக் கட்டுரை, இந்தியாவில் 1457 பேருக்கு ஒரு மருத்துவரே இருக்கிறார் என்று தெரிவிக்கிறது. 2019 ஜனவரி நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 11 லட்சத்து 57 ஆயிரம் அலோபதி மருத்துவர்கள் பதிவாகியிருக்கிறார்கள். ஒரு 80 சதவீதம் பேர் பணியில் ஈடுபடுவார்கள் என்று வைத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 9 லட்சத்து 26 ஆயிரம் பேர் களப்பணியில் இருப்பார்கள் என்று சென்ற ஆண்டு ஜூலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சில ஆண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை விகிதத்தை இந்தியா அடைந்துவிட்டது என்ற ஒரு செய்தி வந்தது. தற்போதைய நிலவரத்தின்படியே கூட, 868 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார் என்று கணக்கிடலாம். ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளில் பதிவு பெற்ற மருத்துவர்களையும் உள்ளடக்கிக் கணக்கிடுகிறபோது வருகிற விகிதம் இது.
இந்த மருத்துவமுறைகளின் சிறப்பையோ, இவற்றைக் கையாளுகிற மருத்துவர்களின் திறமையையோ சிறிதும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஆயினும் இன்றைய போராட்டத்தில் பெரிதும் பொறுப்பளிக்கப்பட்டிருப்பவர்கள் அலோபதி மருத்துவர்களே என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. (உலகளாவிய அறிவியல் ஆய்வு முறைகள் மட்டுமல்லாமல் உலகளாவிய சந்தைப் பின்னலோடும் இணைக்கப்பட்டிருப்பதால் அலோபதி மருத்துவத்திற்கு இந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மையே. அது வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை.)
ஒரு பக்கத்தில், பல மடங்கு எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் தங்கள் கிராமத்தில் சரியான சிகிச்சை கிடைக்காததல் கடும் இழப்புகளைச் சந்தித்த சக மனிதர்களைப் பார்த்ததன் தாக்கத்தில் மருத்துவராக வேண்டும், இப்படிப்பட்டவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக்கொண்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வு உண்மை நடப்பாக மாறவும், சமுதாயத்திற்குப் பற்றாக்குறையின்றி மருத்துவர்கள் கிடைக்கவும் ஒரே வழி முந்தைய தேர்வு முறைகள்தான். ஆனால் நீட் அந்த உணர்வையும் மருத்துவர் வருகையையும் வடிகட்டுகிறது.
அடிப்படைத் தகுதி சேவையில் ஆரவமும் அக்கறையும்தான். அதற்கான பயிற்சிகளோடு இணைகிறபோது முழுமையான மருத்துவர்களாகப் புறப்படுவார்கள். குறிப்பாகத் தமிழகத்தில் இப்படிப் புறப்பட்டவர்கள்தான் பொதுத்துறை மருத்துவர்களாகப் பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை அளித்து வருகிறார்கள். ஆனால் நீட் வேலி இப்படிப் புறப்படுகிறவர்களைப் புறப்பட்ட இடத்திலேயே நிறுத்திவைக்கிறது, அல்லது வேறு பக்கம் போகவைக்கிறது.
மாறிய தேர்வுகள்
“எங்கள் காலத்தில் நேர்முகத் தேர்வு மூலமாக மருத்துவ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்புறம் இதில் மாநில அளவில் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு பிளஸ் டூ மதிப்பெண்களும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும் சேர்த்துக் கணக்கிடப்பட்டது. அதன் பிறகு பிளஸ் டூ மதிப்பெண்களே போதுமென்று கொண்டுவரப்பட்டது. இப்படியெல்லாம் கிடைத்த வாய்ப்புகளைப் பறித்துவிட்டது நீட்,” என்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வு இயக்கப் பொதுச்செயலாளரும், சென்னையின் அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநருமான மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்.
“முந்தைய முறைகளில் மருத்துவரானவர்கள் விரும்பி அரசு மருத்துவமனைகளில் இணைந்தார்கள். இன்றைக்கும் அரசு மருத்துவர்கள் பலர் தங்கள் சொந்தப் பணத்தில் விலை உயர்ந்த முகக்கவசம் போன்ற பொருள்களை வாங்கி கோவிட் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பவர்களுக்கு அவர்களிடமிருந்து தரமான சிகிச்சை கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலோ வழக்கத்தை விடப் பல மடங்கு கட்டணம் வசூலித்துதான் நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, இதர நோயாளிகளையும் இந்தக் கட்டண உயர்வு விட்டுவைக்கவில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.
நீட் மூலம் வரக்கூடியவர்களில் பெரும்பாலோரிடையே இந்தச் சேவை மனப்பான்மையைப் பார்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் பெரும் பணம் செலவிட்டே படிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, பட்டம் பெற்று வந்த பிறகு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள் அல்லது வெளிநாடு போகிறார்கள். ”இது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு” என்று வேதனையோடு கேட்கிறார் ரெக்ஸ்.
வடிகட்டும் போட்டி
“நீட் அறிமுகப்படுத்தப்பட்டபோதே எதற்காக எதிர்த்தோமோ அதே காரணம் இப்போதும் நீடிக்கிறது. இது சந்தைக்கானது, மக்களுக்கானதல்ல என்பதே அந்தக் காரணம். வணிக நோக்கம்தான் நீட் அடிப்படை. சமத்துவமற்ற போட்டியை ஏற்படுத்திப் பலரையும் வடிகட்டிவிடுகிறது நீட்,” என்று ஆவேசத்தோடு விமர்சிக்கிறார் கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“கொரோனா பின்னணியில் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் வேலை செய்கிற மருத்துவர்கள் பலர் விடுப்பு எடுத்துக்கொண்டுவிட்டார்கள். அரசு மருத்துவர்கள் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள். பணியோடு இணைந்த தொண்டு மனப்பான்மை மருத்துவப் படிப்பில் சேரும் நாளிலிருந்தே வளர வேண்டியது. நீட் கட்டமைப்பில் இந்த மனப்பான்மை வளர்வதற்கான வாய்ப்பே இல்லை,” என்கிறார் அவர்.
இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமே பதறிப்போன ஒரு விசாரணையைக் குறிப்பிடுகிறார் பிரின்ஸ். ஏற்கெனவே நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் திரும்பியவர்களில் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோச்சிங் சென்டர்களில் பல லட்சம் ஃபீஸ் கொடுத்து, மூன்றாண்டுகள் வரையில் பயிற்சி பெறுகிறார்கள். இப்படி மூன்றாண்டுகள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களோடு முதல்முறையாக வருகிற, வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எப்படிப் போட்டியிட முடியும் என்று பதறிப்போய்க் கேட்டது நீதிமன்றம். ஆனால் தீர்வு ஏற்படவில்லையே!
கோச்சிங் சென்டர்கள் வழங்குகிற பயிற்சி என்ன? நீட் தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்று கணித்து, அந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களை மனப்பாடம் செய்யவைக்கிற ஏற்பாடுதான் பயிற்சி. இவ்வாறு தேர்ந்தெடுத்த பதில்களோடு வருகிறவர்கள் எப்படி முழுமையான அடிப்படைக் கல்வித் தகுதியைப் பெற்றவர்களாக முடியும்? உதாரணமாக, உயிரியல், வேதியியல் பாடங்களில் ம்ட்டும் கவனம் செலுத்திப் பொதுத்தேர்வில் வெற்றி பெறுகிற ஒருவர் இயற்பியல் பாடத்தில் குறைவான மதிப்பெண்களே பெற்றிருப்பார். ஆனால் நீட் எழுதித் தேர்ச்சி பெற்றுவிடுவார். இதுதான் தகுதியா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அமைச்சர் பிரகாஷ் கேஷவ் ஜவடேகர், “அதற்காகத்தானே எக்சிட் (கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கான தேர்வு) கொண்டுவருகிறோம்,” என்று பதிலளித்ததை நினைவுகூர்கிறார் பிரின்ஸ்.
இத்தகைய விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல், இன்றைய சூழல் பற்றியும் கவலைகொள்ளாமல் நீட் தேதியை அறிவித்துவிட்டது மத்திய மனித வளத்துறை அமைச்சகம். இப்போது கேள்வி தமிழக அரசை நோக்கித் திரும்புகிறது. ஏற்கெனவே சட்டமன்றத்தில் நீட் தேவையில்லை என்று இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்மானங்கள் அர்த்தமுள்ளவைதான், உண்மையான அக்கறையோடு கொண்டவரப்பட்டவைதான் என்பதைத் தமிழக அரசு எவ்வாறு காட்டப்போகிறது?
–அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com