நாம் புழங்கும் வாழ்க்கையிலிருந்து நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கக்கூடிய நினைவுகளின் வழியே மீண்டுமொரு வாழ்க்கையை அதேபோல் வாழமுடியுமானால் அதை மீட்டெடுக்கும் சக்தி எழுத்திற்கு மட்டுமே உண்டு. அந்த எழுத்தை எழுதிப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நினைவுகளின் பாதாளத்தில் புதைந்து புதைந்து தன் பால்யகாலத்தை மீட்டெடுப்பது என்பது மிகவும் சிரமமான வேலைதான். அதுவும் தன்னுடன் பழகிய பால்யகால நண்பர்களின் பெயர்களையும் , உறவுகளின் பெயர்களையும் , தனது தாத்தாக்களின் தாத்தாக்கள் பெயர்களையும், ஊர்களின் பாதைகளையும், ஊர் மக்களையும், அவர்களின் பெயர்களையும், ஊர்க்கிணறுகளையும், ஊருணிகளையும், பம்புசெட்டுகளையும், ஊர் தெய்வங்களையும் , கோயில் திருவிழாக்களையும்,அந்த ஊர் நிலத்துக்கே உரிய சில தனிப்பட்ட மனிதர்களின் உடல் மொழிகளையும், அவர்களின் அசைவுகளையும் கோயில், கிராமம் என தன் நினைவில் பதிந்து போன அத்தனை விஷயங்களையும் நினைவுகளின் நிலவெளி என்ற இந்த நூலில் தனது இயல்பான மொழிநடையில் எழுதிச் சென்றுள்ளார் இந்த நூலின் ஆசிரியர் செந்தி.
இயற்கையாகவே கவிமனம் படைத்த செந்திக்கு தனது ஊர் வன்னிவேலம்பட்டியைப்பற்றி எழுத நினைத்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அசலான மனித முகங்களுடன் வாழ்ந்து பழகிய அவரது பிள்ளை மனமும் அவரை கொள்ளை கொண்ட வன்னிவேலம்பட்டி வேம்புலையனும் தேவன்குறிச்சி குன்றுகளும் ,ஏழூர்கன்னிமார்கள் கதையும், ஊர்ச் சாத்திரைக்கு சப்பரம் கட்டும் கலை நேர்த்திகளும் ,பள்ளிப் பருவத்து காதல்களும் நம் வாசிப்பில் வரும்போது நம்மை அந்நியப்படுத்திவிடாத அவரது புழங்கு மொழிக்குள் நம்மையும் கடத்திச்சென்று விடுவது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. மிகையில்லாத மொழியில் சில புனைவுகள் ஆங்காங்கே கட்டமைக்கப்பட்டாலும் வாசிப்பில் இயல்பான தன்மையில் அதைக் கடந்துவிடவும் முடிகிறது.
தாத்தாக்கள், பாட்டிகள்,அத்தைகள்,சித்திகள், சித்தப்பாக்கள், பெரியம்மா, பெரியப்பாக்கள்,அவ்வாக்கள் என தனது பரம்பரையின் முழுமைத்தன்மைக்குள் முடிந்த அளவு பல சுற்றுக்களை சுற்றி வந்து அவர்களின்மீது கொண்ட பாசத்தையும், பண்பையும் அதே அளவுடன் நூலின் கொள்ளளவுக்கு ஏற்ப பகிர்ந்து தந்துள்ளார்.சாதிய மனிதர்கள் வாழும் ஒவ்வொரு ஊரையும் காட்டும் அநேக கதைகளுக்கு இடையில் இந்த நூல் சாதியை விட்டு சக மனிதர்கள் மீது கொண்ட அன்பையும் பிணைப்பையும் கொண்ட ஊர் மனிதர்களாக காட்டுவது இவரது பார்வையில் இவரது ஊரின் மனிதர்களை நமக்கு எளிய மனம் கொண்டவர்கள் போல் காட்டுகிறது. அதற்கான பல நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தியிருப்பது இவரது சொல்லோவியங்களில் ஒன்று. ஊரில் தான் பார்த்த மனிதர்கள் ஓவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அதீத குணங்களையும் குறைகளையும் எந்தவித புகாருமின்றி பதிவு செய்துள்ளார்.
மனிதர்களுக்கு கதைகள் இருப்பதுபோலவே தெய்வங்களுக்கும் கதைகள் உண்டு. அது மனிதர்களை அந்த நிலத்தோடு ஒன்றுபடுத்தும் செயலாகவே படுகிறது. அத்தகைய எளிய மனங்களுக்காகவே கோயில்களும் , தெய்வங்களும், திருவிழாக்களும் அமைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படியாக நமது ஊர்க் கலாச்சாரங்கள், நாட்டுப்புறக்கலைகள் யாவும் அமைந்துள்ளன. அந்த கலைகளின் வழியாகவே மனிதர்களும் உயிர்ப்புடன் வாழ முடிகிறது. அந்த உயிர்ப்பில் ஒரு திவலையாகவே இந்த நூலும் அமைந்துள்ளது . அதற்கான நுட்பத்துடன் நூலை அழகிய முறையில் மேகாபதிப்பகம் வடிவமைத்துள்ளது. நூலின் அட்டைப்படத்தில் இரு பக்கங்களிலும் கருப்பு வெள்ளையில் சில நிழற்படங்களும் மேலும் அழகூட்டுகின்றன.
நூல்: நினைவுகளின் நிலவெளி
ஆசிரியர்: செந்தி
வெளியீடு : மேகா பதிப்பகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நன்றியும் அன்பும் மஞ்சுளா
மகிழ்ச்சி