7.9.2022 (திங்கள்) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறையில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வு முழுக்க முழுக்க தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் வரவேற்புரையை மூன்றாம் ஆண்டு மாணவர் துறைச் செயலாளர், பெ.தேவேந்திர பிரபு தன் கவிமொழியால் அனைவரையும் வரவேற்றார்.
அவரை தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்துவதற்காக கல்லூரிச் செயலர் அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே.ச., அவர்கள் மாணவர்களையும், தமிழ்த் துறையைம் பாராட்டி வாழ்த்துரைத்தார். குறிப்பாக தொகுப்புரைச் செய்த தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் முகில்வேந்தன் அவர்களின் அகரத்தில் தொடங்கி, ஔகாரத்தில் முடிந்த ஓர் அழகான கவிதையால் தமிழையும், துறையையும், கல்லூரியையும், பொழிவாளரையும், துறைத் தலைவரையும், மாணவர்களையும், பாராட்டி வரவேற்ற முறையைக் கண்டு மகிழ்ந்தார். பின்னர் தமிழ்த்துறையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாணவச் செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், கலைச் செயலர் உள்ளிட்ட பல பொறுப்பாளர்களுக்கு பட்டையம் வழங்கிப் பாராட்டினார்.
தலைமை உரை வழங்குவதற்காக தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் தத்துவப் போதகரின் தமிழ் இலக்கிய மன்றத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மிகுந்த உற்சாகத்துடன் பொறுப்பிலே பிறந்து தென்னம் புகழிலே கிடந்து… என்ற கவிதை வரியைச் சொல்லி ஆரம்பித்தார். பின்னர் தமிழ் இலக்கியத்திற்குள் தன்னுடைய பேச்சை தடம் மாற்றினார். ராபர்ட்-டி- நொபிலியைப் பற்றியும், அவர் உரைநடையின் தந்தை என்று போற்றப்படுவதற்கான காரணத்தையும், அவர் எழுத்துலகில் செய்த அற்புதங்களையும், மேலும் அவர் எழுதிய 40 நூல்களையும் குறிப்பிட்டு பேசினார். பின்னர் சிறப்பு விருந்தினரை, அவர் எழுதிய கவிதையைக் கொண்டே, அவர் எழுதிய நூல்களைக் கொண்டே அலங்கரித்தார்.
துறைத் தலைவரை தொடர்ந்து தத்துவ போதகர் தமிழ் இலக்கிய மன்றத்தலைவர் முனைவர் ஜா. அமிர்தலெனின் தமிழ்த் துறை நடத்தும் தத்துவ போதகர் தமிழ் இலக்கிய மன்றத்தின் முக்கியத்துவத்தை பதிவு செய்து, சிறப்பு விருந்தினரை ரத்தினச் சுருக்குமாக அறிமுகம் செய்தார். நாடறிந்த நல்லக் கவிஞர் திரைப்படத்துறையில் கவனிக்கத்தகுந்த படைப்பாளியாகவும் வளர்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் எதிர்காலத்தில் தன் கவிதைகள் மூலம் எட்டாத தூரங்களை எல்லாம் தொட வேண்டும் என்று வாழ்த்தி மாணவர்களையும், பேராசிரியர்களையும் பாராட்டி வரவேற்றார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் கவிஞர் அ. ப. இராசா அவர்கள், தனக்கும் இந்தக் கல்லூரிக்குமான தொடர்பு குறித்து அழகாக பதிவு செய்தார். எனக்கு இந்தக் கல்லூரியில் தமிழ்த் துறையில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாத காரணத்தினால் இந்தக் கல்லூரியில் என் கல்வியைத் தொடர முடியாமல் போனவன் நான். இன்று திரைத்துறையில் பாடல் ஆசிரியர்களில் அதிக சம்பளம் பெறக்கூடியவனாக திரும்ப வந்திருக்கின்றேன் என்று சொல்லும்போது அரங்கம் அதிர பெரும் கரவொலி ஒலித்தது.
தமிழும், கவிதையும் என்னும் பொருண்மையில் தன்னுடைய பொழிவைத் தொடங்கினார். பல்வேறு காலங்களில் இருந்து வந்த தமிழ்இலக்கியம் உலக இலக்கியங்களை விட மேன்மையுற்ற வரலாற்றை கூறி மொழியையும், இலக்கியத்தையும் முன்னிறுத்தினார். இலக்கிய வடிவத்தில் மொழிக்கு தனித்த ஓர் அடையாளம் உண்டு. கவிதை எப்பொழுதும் தன் இருப்பில் இருந்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கும் அல்லது கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்கின்ற தொனியை முன்னிருத்தி திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பார்த்திபன் அவர்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு கதையை அத்துனை அழகாக மாணவர்களுக்குக் கடத்தினார். குறிப்பாக தொடக்க காலத்தில் இயக்குனர் பார்த்திபன் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தோல்வி அடைந்த பிறகு, வாழ்வதற்கே வாய்ப்பு இல்லை அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணி கடற்கரை ஒன்றில் அமர்ந்து தன் மரணத்தை குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் காற்றில் பறந்து வந்த காகிதம் ஒன்று தன் மீது விழுந்தது. அந்தக் காகிதத்தைப் பார்த்த பின்பு தான் அவர் தன் வாழ்நாளில் மரணத்தைக் குறித்து சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். காரணம் அந்த காகிதத்தில் கல்யாண்ஜி எழுதிய ஒரு கவிதை இருந்தது. அந்தக் கவிதை இதுதான்.
”இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்துத் தொலைக்கலாம்”
இந்த கவிதைதான் அவர் மரணத்தை தடுத்தது. ஆகவே இத்துனைப் பெரிய மாற்றத்தை கவிதையால்தான் பெற முடிந்தது. அதுமட்டுமல்ல அதன்பிறகு அவர் வாழ்க்கையில் பெரிய பெரிய சாதனைகள் செய்து… உயர உயர பறந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகத் திரைப்பட வளர்ச்சியில் ஆஸ்கர் விருது பெரும் அளவிற்கு உயர்நது நிற்கிறார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதையைச் சொல்லி முடிக்கும்பொழுது மாணவர்கள் உறைந்துதான் போனார்கள்.
பின்மொழியைக் குறித்தும், இலக்கியத்தைக் குறித்தும் உரையாடத் தொடங்கினார். மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவி என்பதோடு நின்று விடுவதில்லை அல்லது அப்படி குறிப்பிடுவது தவறு. மொழி ஓர் இனத்தின் அடையாளம். அதனால் மொழி ஆராய்ச்சியாளர்கள், ஓர் இனத்தை அழிக்க நினைத்தால் முதலில் அந்த இனம் பேசும் மொழியை அழித்தால் போதும் தானாகவே அந்த இனம் அழிந்து போகும் என்ற ஆராய்ச்சியை முன்வைக்கின்றனர்.
தன்னுடைய பொருண்மையின் தலைப்பைக் கொஞ்சம் சுருக்கி அதே சமயத்தில் ஆழமாகவும் 1960 களுக்கு பிறகு தமிழ் கவிதைகளில் ஏற்பட்ட மாற்றம் என்ற தலைப்பில் பேசத் தொடங்கினார். குறிப்பாக எழுத்து, கசடதபற, ழகரம், வானம்பாடி இயக்கமுள்ளிட்ட காலங்களில் உருவான கவிதை வரலாற்றை சொல்லி மாணவர்களை சிந்திக்கத் தூண்டினார். கவிதை என்றால் என்ன என்பதற்கு வலம்புரிஜான் கூறிய இலக்கணத்தையும், கவிமணியின் கூற்றையும் உதாரணம் காட்டி கவிதையின் அழகையும், மானுடம்பாடி வெளிவந்த வானம்பாடி இயக்க கவிஞர்களைப் பட்டியலிட்டார். கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழன்பன், மேத்தா, இன்குலாப், வைரமுத்து உள்ளிட்டோர் மானுடத்தைப் பாடியே கவிதைப் படைத்தனர். அதனால் தான் இன்றளவும் கவிதை தன் இருப்பை உறுதி செய்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு ஐரோப்பா தேசத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் உருவான உலக மையம், தாராள மையம் உள்ளிட்ட சித்தாந்தம் இலக்கியங்களில் எதிரொலிக்கத் தொடங்கியது. அது கவிதைகளிலும் பிரதிபலிக்க ஒருபக்கம் இதுபோன்ற தாக்கமும் மார்க்சியக் கோட்பாடும், இந்தியாவில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டுக்குப் பிறகு குறிப்பாக 90களுக்கு பிறகு பெண்ணியம், தலித்தியம் என்ற சொல்லாடல் கவிதையில் இடம்பெறத் தொடங்கியது.
திருச்சி குளப்பாடி கிராமத்தில் பண்ணையார் ஒருவரின் கிணற்றில் தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகள் குளித்ததால் தண்ணீர் தீட்டாகிவிட்டது என்று சொல்லி கிணற்றில் மின்சாரம் வைத்து அந்த குழந்தைகளை கொலை செய்தார். அதைக் கண்டிக்கும் விதமாக வெகுண்டு எழுந்த கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதைதான் மனுசங்கடா நாங்க மனுசங்கடா எனும் கவிதை. இதுவரை எதையெல்லாம் கவிதையில் சொல்லக்கூடாது அல்லது சொல்ல முடியாத சொற்கள் என்று சொல்லப்பட்டதோ? அவற்றைக் கவிதையில் கொண்டு வந்து எல்லோரையும் உச்சரிக்கச் செய்தவர் கவிஞர் இன்குலாப்.
மேலும் எண்ணற்ற சமூக சிந்தனையோடு எழுதப்பட்ட கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் சரளமாக பேசியழகு உள்ளபடியே மெச்சத் தகுந்தது. சமகால கவிஞர்களை எல்லாம் தொட்டுக்காட்டி இன்னும் நூற்றுக்கணக்கான கவிதைகள் இதுபோன்று வரவேண்டும் என்றும், கவிதையில் ஒளிந்திருக்கும் அழகியலையும், அரசியலையும் பற்றி மிக விரிவான ஒரு ஆய்வுரையை நிகழ்த்தினார். ஆனாலும் புதுக்கவிதை, மரபுக் கவிதைப் போல ஒரு இலக்கணக் கட்டமைப்பு இல்லாமல் எதை எதையோ கவிதை என்று பேசுகின்றனர் என்ற ஒரு உரையாடல் முன் வைக்கப்பட்டதையும், கவிஞர் வைரமுத்துகூட புதுக்கவிதை மிக தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் சந்த அடிப்படையில் மரபுக் கவிதையையே எழுதிய வரலாற்றையும் கோடிட்டு காட்டினார்.
மேலும், இன்றைக்கு புதுக்கவிதை ஒரு ஆரோக்கியமான சூழலில் வளர்ந்து வருவதை யாராலும் தடுக்க முடியாது. அதை காலம்தான் தீர்மானிக்கும் என்று கூறி, சுவாரசியம் சற்றும் குறையாமல் தன்னுடைய உரையை முடித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.
அந்த வகையில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ், முனைவர் டேவிட் ஸ்டான்லி, முனைவர் அ. பிரின்ஸ், முனைவர் ஐ. அமல்ராஜ், முனைவர் ஜா.அமிர்தலெனின், முனைவர் டான் ஸ்டோனி, முனைவர் ஞான யுவராஜ், அருள் தந்தை சகாயராஜ், முனைவர் எ.பாவலன், பேரா. சந்தியாகப்பர், முனைவர் சசகாயராஜா, பேரா. லெனின், பேரா. ஜெயக்கொடி உள்ளிட்ட பேராசிரியர்கள், இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் சுமார் 180க்கும் மேற்பட்ட மாணவர்களும், பொறுப்பில் இருந்த மாணவர்களும் அனைவரும் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.