சென்னை, மே 25 –
ஆழ்ந்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவோம்; அதை குடும்பங்களில் இருந்து தொடங்குவோம் என்று ஒன்றிய அரசின் தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இரா.செல்வம் கூறினார்.
பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைத்துள்ள ‘திருவான்மியூர் புத்தகத் திருவிழா’ வெள்ளியன்று (மே 24) ஜெயஸ்ரீ திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஜூன் 9 வரை நடைபெறும் இந்த புத்தகக்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது. வாசகர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த புத்தகக்காட்சியை திறந்து வைத்து இரா.செல்வம் பேசியதாவது:
லியோ டால்ஸ்டாய், ரஸ்கின் எழுதிய இரண்டு புத்தகங்கள்தான் காந்தியை வடிவமைத்தது. புத்தகங்கள் இல்லாமல் ஒரு நாகரீகம் முழுமையடையாது. புத்தகங்களை படிக்க தேடித்தேடி அலைந்த நிலைமாறி, கைக்கு எளிதாக கிடைக்கிறது. ஆழந்த படிப்டித்தால்தான் சித்தாந்தங்களை உள்வாங்கி, புதிய கருத்துக்களை, புதுப்புது சித்தாந்தங்களை உருவாக்க முடியும். ஆனால், இன்றை சமூகத்தில் ஆழ்ந்த படிப்பாற்றால் குறைந்து வருகிறது.
ஸ்மார்ட்போன், எக்ஸ் தளம் போன்றவற்றால் ஆழ்ந்த புலமையை பெற முடியாது. நுனிப்புல் மேய்கிற சமூகமாக மாறி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் அறிவார்ந்த சமூகம் உருவாகாது. எனவே, பொங்கல் விழா போன்று கிராமங்கள் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும். புத்தகங்கள் சரியான நேரத்தில் ஒருவர் கையில் கிடைத்தால் அவரின் வாழ்க்கையை மட்டுமின்றி, சமூகத்தையும், வரலாற்றையும் மாற்றியமைக்கும்.
2000 வருடத்திற்கு பிறகு பிறந்தவர்கள் ஜி தலைமுறை என்றழைக்கின்றனர். இந்த தலைமுறை பொறுப்பற்றவர்கள் அல்ல; பொறுமையற்றவர்களாக உள்ளனர். வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டியில் படித்துவிட்டு பலமணி நேரம் பேசுவது பொருளற்றது. இதை மாற்ற வேண்டும். ஆழ்ந்து வாசிக்கும்போதுதான் புலமை பெற முடியும். ஆழ்ந்து வாசிக்கும் பழக்கத்தை குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டும். மாற்றத்திற்கான திறவுகோலாக புத்தகக்காட்சிகள் உள்ளதால், அவற்றை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசிப்பை விரிவாக்குவோம்
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகையில், “தலைநகரங்களில் புத்தகக்காட்சிகள் நடைபெற்றது மாறி, வட்டார அளவில் நடைபெறுகிற நிலை உருவாகி உள்ளது. மனித வாழ்வின், கலாச்சாரத்தின் ஒருபகுதியாக புத்தக்காட்சிகள் மாறியுள்ளது. வருமானத்தில் இருந்து புத்தகங்களுக்கு செலவிடுகிற பண்பாட்டை உருவாக்க வேண்டும்.
வட்டார அளவில் நடைபெறும் சிறுசிறு புத்தகக்காட்சிகள்தான் வாசகர்களுக்கு எளிதாக புத்தகங்களை கொண்டு சேர்க்கின்ற. மனிதர்கள் புத்தகங்களை தேடி செல்வதுபோன்றே, புத்தகங்கள் மக்களை தேடி செல்ல வேண்டும். அறிவொளி இயக்கத்தின் வாயிலாக கிராமங்கள் தோறும் புத்தகங்களை கொண்டு சென்றோம். அதன்தாக்கம் வாசிப்பு பரப்பை அதிகரித்துள்ளது.
உலகம் அறிவுசார் உலகமாக மாறி வருகிறது. அதற்கு ஈடுகொடுக்க குழந்தைகள் வாசிக்க வேண்டும். பெற்றோர்கள் வாசித்தால்தான் குழந்தைகளும் வாசிக்கும். வாசிப்பை விரிவாக்குவோம்” என்றார்.
மூத்த தொழிற் சங்கத் தலைவர் டி.கே. ரங்கராஜன், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் தேவி மோகன், மாதர் சங்க முன்னோடி கே.வனஜகுமாரி, தமுஎகச மாநில நிர்வாகி கி.அன்பரசன், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன், கி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.