சுதந்திர தின சிறப்பு கட்டுரை: ♥திப்பு சுல்தான்♥ குறித்த சில சுவையான தகவல்கள்

Independence Day Special Article Some tasty information about Tipu Sultan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.“இன்றும் கூட நடுநிலைப்பள்ளிகளில் போதிக்கப்படும் பொது வரலாற்றுப் பாடமானது திருப்தி அளிப்பதாக இல்லை. வரலாற்றைப் போதிப்பதன் நோக்கம், சில செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் மாணவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக அல்ல என்பதையும், எந்த யுத்தம் எந்தத் தேதியில் நடந்தது, எந்த ராணுவ அதிகாரிக்கு எப்போது பிறந்த நாள் வந்தது, எந்த அரசனுக்கு எப்போது முடிசூட்டு விழா நடந்தது போன்ற விவரங்களில் மாணவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையும் எந்த ஆசிரியரும் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இவற்றை முக்கியமான விஷயமாக யாரும் கவனிப்பதில்லை”

இப்படிக் கூறியது யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? 1924 ஆம் ஆண்டு பவேரியாவில் இருந்த லாண்ட்ஸ்பெர்க் அன் லெக் கோட்டையில் சிறையிலிருந்த அடால்ஃப் ஹிட்லர் எழுதியது. மேலும் அவர் எழுதுகிறார்:

“சரித்திரத்தைப் படிப்பது என்றால், கண்ணுக்கு முன்னே சரித்திர நிகழ்வுகளாகத் தோன்றும் உண்மைகளுக்குக் காரணமான சக்திகளைத் தேடிக் கண்டுபிடித்தலாகும். அவற்றில் அவசியமானவற்றை நினைவில் கொள்வதும் மற்றதை மறந்து போவதும் தான் சரித்திரத்தைப் படித்து ஆராயும் கலையாகும்”
ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியர் போல் இவ்வளவு அழகான வரையறை தரும் ஹிட்லர் தனக்கு அமைந்த சரித்திரப் பேராசிரியர் குறித்து உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் “மெயின் காம்ஃப்” (எனது போராட்டம்) என்ற அவரது சுயசரிதை நூலில்.

Independence Day Special Article Some tasty information about Tipu Sultan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

எனவே நாம் ஒரு கணினியின் தகவல் கிடங்கு போல் சரித்திர நிகழ்வுகளை நினைவில் கொள்ளாமல் அவசியமான தகவல்களையும் அதன் பின்புலங்களையும் ஆராய்வோம்.

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையும் நாம் நமது சரித்திரத்தின் சில பக்கங்களை மீள வாசிப்பதும், அதனின்றும் பெறப்படும் தகவல்களிலிருந்து நம்மை புத்துயிர் ஊட்டிக்கொள்வதும் பொருத்தமாக இருக்கும்.

மைசூர் பேரரசில் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த தைலர் அலி 1761-ல் அதன் அரசரானார். தான் முறையாகக் கல்வி கற்கவில்லை என்ற குறையை தீர்த்துக்கொள்ள தலைமகன் திப்பு சுல்தானுக்கு ஆயகலைகள் அத்தனையும் கற்றக்கொள்ள ஏற்பாடு செய்தார். ராஜா வீட்டு கன்றுக்குட்டியும் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு பதினாறடி பாய்த் தயாரானது. பதினைந்து வயது வளரிளம் பருவத்திலேயே முதன் போர்க்களம் கண்டார் திப்பு. அதுவும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக.

இந்த ‘சூரப்புலி’ காட்டில் தன் நண்பருடன் வேட்டையாடச் சென்ற போது எதிரே ஆக்ரோஷமாய் வந்தது அசல் புலி தன் கோரப்பற்களைக் காட்டியபடி. முதலில் நண்பர் புலியின் தாக்குதலில் ஸ்தலத்திலேயே உயிர்விட்டார். திப்புவின் துப்பாக்கியோ கர்ணன் பெற்ற சாபம்போல் அந்த நேரத்தில் இயங்காமல் போய்விட்டது. கையிலிருந்த குறுவாலும் தவறிக்கீழே விழ புலி ரொம்பவும் குஷியாகி திப்புவை தீர்த்துக்கட்டப் பாய்ந்தது. துளியும் தாமதிக்காமல் ‘வேட்டைக்கார எம்.ஜி.யாராய்” கீழே விழுந்த குறுவாளை எடுத்து தினந்தந்தி வாசகம் போல் “சதக், சதக்” என்று குத்தி புலியைப் பரலோகம் அனுப்பினார் திப்பு. அன்று முதல் அவர் ‘மைசூர் புலி” ஆன கதை இதுதான்.

ஆனால் வரலாற்றாசிரியர் விடுவார்களா? திப்புவின் ராணுவ வீரர்கள் புலி வரிகள் கொண்ட சீருடை அணிந்திருந்தனர் என்றும், திப்புவின் சின்னங்களில் புலி உருவம் பொரிக்கப்பட்டிருந்ததென்றும் எடுத்துக்காட்டி புலியின் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே திப்பு “மைசூர் புலி” என அழைக்கப்படுவதாக வேறு சிலர் தெரிவிக்கிறார்கள்.

Independence Day Special Article Some tasty information about Tipu Sultan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

புலி உருவம் பொரிக்கப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய வாளின் எடை 7.4 கிலோகிராம். விஜய் மல்லையா (வங்கியிலிருந்து கடனாகக் கொள்ளையடித்த) 21 கோடி ரூபாய்க்கு இதனை ஏலத்தில் வாங்கினார்.

ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை அலற வைப்பது போன்ற ஒரு பாயும் புலி பொம்மை (உலோகத்தால் செய்யப்பட்டது) திப்புவிற்குப் பிடித்தமானது. இப்போது அது விக்டோரியா- ஆல்பர்ட் மியூசியத்தில் இருக்கிறது.

பெங்களூருவில் உள்ள லால்பாக் தாவரவியல் பூங்காவிற்கு நம்மில் அநேகர் சென்றிருப்போம். நாற்பது ஏக்கர் பரப்பளவில் இதனை உருவாக்கியவர் தோட்டக்கலையில் அதீத ஈடுபாடு கொண்ட திப்பு சுல்தான் தான்.

தான் கண்ட 37 கனவுகளைப் பற்றி திப்பு சுல்தான் தன் கைப்பட எழுதிய அசல் பிரதியை பிரிட்டிஷ் நூலகம் சென்றால் காணலாம். சிக்மன்ட் ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ வெளியிடப்பட்ட ஆண்டு 1899. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் தன் கனவுகளைப் பதிவு செய்தவர் திப்பு. இவரது கனவுகள் எல்லாமே போர் மற்றும் ஆன்மீகக் கனவுகளே.

“ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்” மார்க்வெஸ் வெல்லஸ்லி எழுதிய கடிதம் இது.

“கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கமாக” இருந்தது திப்புவின் மைசூர் அரசு.

திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.

Independence Day Special Article Some tasty information about Tipu Sultan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றைத் திருத்தியமைத்துப் பயன்படுத்தியதையும், மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடமிருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.

திப்புவின் நிர்வாகத்தில் மதுபானம் மற்றும் விபச்சாரம் கறாராகத் தடைசெய்யப்பட்டிருந்தது. கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் தடைசெய்யப்பட்டது.

கேரளாவில் இருந்த பல கணவர் மணம் நடைமுறைகள் திப்பு சுல்தானால் தடைசெய்யப்பட்டது. முந்தைய காலங்களில் முலை வரி பண்பாட்டால் கேரளாவில் அனைத்து பெண்களின் மார்பகங்களையும் மறைப்பது நடைமுறையில் இல்லாததினால், அனைத்து பெண்களும் மார்பகங்களை மறைக்கலாம் என்பதற்காக ஒரு ஆணையை நிறைவேற்றினார்.

ஆணை பின்வருமாறு:

பாலகாட்டின் முழு பிரதேசங்களிலும் (அதாவது, மலை காடுகளின் கீழே உள்ள நாட்டில்) பெரும்பாலான இந்துப் பெண்கள் தங்கள் மார்பகங்களையும் மறைக்காமல், தலைவிரித்து அவிழ்த்துக் கொண்டு செல்கிறார்கள். இது விலங்குகளைப் போன்று நடத்துவதாகும். இந்தப் பெண்களில் யாரும் இனி ஒரு முழுமையான அங்கி (மார்பகங்களை மறைக்க), மற்றும் முக்காடு இல்லாமல் வெளியே செல்லக் கூடாது.

தன் ஆட்சியில் திப்பு சுல்தான் மேலும் பல புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தினார்:

அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

கப்பல் கட்டும் தளம் அமைத்தார்

இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.

வங்கிகளை, கூட்டுறவு நிறுவனங்களையும் ஏற்படுத்தி மக்களிடமிருந்து வைப்புத் தொகையை வாங்கி வட்டியுடன் திருப்பி அளிக்கும் முறையை திப்பு தன் ஆட்சியில் கொண்டுவந்தார்.

மைசூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பண்டமாற்று முறையில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார்.

சர்க்கரை, உப்பு, இரும்பு, புகையிலை, சந்தனம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், வெள்ளி, தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களின் உற்பத்தி ஆகியவைவற்றை அரசின் கீழ் கொண்டுவந்தவர் நேருவுக்கு முன்னதாக திப்பு சுல்தான் தான்.

Independence Day Special Article Some tasty information about Tipu Sultan. Book Day and Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

திப்பு ஒரு மிகப் பெரிய நூலகத்தை ஏற்படுத்தியிருந்தார். உலக இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் யாவும் அங்கே இருந்தன. மேலை நாடுகளில் ஏற்பட்டு வந்த நவீன முன்னேற்றங்கள் குறித்துஅவர் தம் கைப்பட எழுதிய குறிப்புகள் அங்கே இருந்தன. வெளிநாடுகளிலிருந்து டெலஸ்கோப், பாரோமீட்டர் போன்ற கருவிகளை வரவழைத்தவர் திப்பு. ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த பல குறிப்பேடுகளும், நூல்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன.

இரும்புக்குழாயில் வெடிமருந்தை இடித்துத் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளை திப்பு பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக பயன்படுத்தி அப்போரில் வெற்றி பெற்றார். அவர் பயன்படுத்திய அத்தனை ராக்கெட்டுகளில் ஒன்று கூட இன்று நம்மிடம் இல்லை. அத்தனையும் இங்கிலாந்தில் பாதுகாப்பாக உள்ளன.

போரில் ராக்கெட் தாக்குதல்களைப் பயன்படுத்தினார் என்பதற்குச் சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர்மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.

திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காகத் திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

பிரான்ஸின் உதவியை திப்பு நாடியதால் அச்சம் கொண்ட பிரிஷ்டிஷ் அரசு தன் படை முழுவதையும் திரட்டி ஶ்ரீரங்கப்பட்டின அரண்மையை முற்றுகையிட்டுத் தாக்கியது. இந்த நான்காம் பிரிட்டிஷ்-மைசூர் போரில்தான் திப்பு தோல்வியை சந்தித்தார்.

திப்புவின் பொன்மொழிகள்:

“ஒரு குள்ளநரியைப் போல 1௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட ஒரு சிங்கத்தைப் போல ஒரு நாள் வாழ்ந்து மடியலாம்”

“உனது எதிரியிடம் மண்டியிடுவதை விட சாவதே மேல்”

“இறைவா என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளிடமிருந்து நானே என்னைக் காத்துக்கொள்கிறேன்”

அசைக்க முடியாத உறுதியுடன் தடைகளையும் துயரங்களையும் எதிர்கொள்வதே வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம்.

(நன்றி: தமிழ் விக்கிபீடியா மற்றும் சில இணைய தளங்கள்)

சேஷ ஜெயராமன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.