“இந்திர நீலம்” (சிறுகதைகள்)
அ.வெண்ணிலா
அகநி வெளியீடு
பக்கங்கள் : 216
₹.150
எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் சிற்சில கவிதைப் படைப்புகளின் மூலமே அவர்களை அடியேன் அறிந்திருந்தேன். கடந்த ஆண்டு “கனலி” இணைய இலக்கிய இதழ் மற்றும் பிற மின்னிதழ்களில் ஒரு சில சிறுகதைகள் வாசித்து பிரம்மிப்பில் திளைந்திருந்தேன். எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் படைப்புலகம் குறித்த இணைய சந்திப்பு நிகழ்வின் மூலம் வெண்ணிலா அவர்களின் ஆளுமையை உணர்ந்தேன்… இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தைக் கண்டவுடன் கைப்பற்ற முனைய இவைகளே காரணமாக அமைந்தன எனலாம்.
“இந்திர நீலம்” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பில் எட்டு (8) சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. முன்னுரைக்கு இடப்பட்டுள்ள தலைப்பே “காமம் செப்பல்” இந்த சிறுகதைகள் எழுதுவதற்கான காரணங்களையே கவித்துவமிக்க வரிகளில் எடுத்தியம்பிய விதத்திலேயே இந்நூலின் மீது இனம் புரியா காதல் உண்டாகத் தொடங்கியது. இந்நூலினைப் படிக்க படிக்க காமத்தின் பரிதவிப்பை, தித்திப்பை பேரானந்தத்தை அடைந்த நிலையில் மிதந்தேன் என்பதே மெய். நூல் வாசிப்பை இதுவரை ஒருவித (நற்)போதையாக கருதியவனுக்கு இந்த களிப்பு உண்டாவதில் வியப்பில்லையே….
காமம் என்றாலே முகஞ்சுழிக்கும் இந்த சமூகத்தில் காமத்தின் தேவையை பிரதிபலிக்கும் படைப்பாகவே இந்நூலைக் கருதலாம். பாலியல் கல்வியின் அவசியத்தை உணர இது போன்ற படைப்புகள் நிச்சயம் உதவுமென கருதுகிறேன். காலங்காலமாக நடைபெறும் பாலியல் சுரண்டல், பாலியல் வன்முறைகளுக்கெல்லாம் தீர்வு காண முனையும் முன்னர் பாலியல் தேவையை உணர்தல் அவசியமென்றே இதனைக் கருதுகிறேன்.
“காமத்தை அரிய ரசனையாகச் சிற்பங்களில் வடித்து வைத்துள்ள சமூகம்தான், பொது இடத்தில் பேசிக் கொள்கிற ஆணையும் பெண்ணையும் அச்சுறுத்தலோடு கையாள்கிறது” என்கிற எழுத்தாளரின் சிந்தனை உண்மையானதுதானே. “சமையலறையின் எண்ணெய்ச் சிகிடுகளையும், மங்கிய ஒளியையும்விடப் படுக்கையறையின் கண்ணுக்குத் தெரியாத சிகிடுகள்” என்ற வாசகத்தின் தீவிரத்தை ஒவ்வொரு ஆணும் உணர்தல் அவசியமென்றே கருதுகிறேன்.
1. இந்திரநீலம்:
நிகழ்காலத்தில் பணி செல்லும் அரிவை(?) பருவ பெண்ணின் வாழ்வில் முக்கிய பருவ மாற்ற காலகட்டத்தில் நிகழும் மனவெழுச்சிகளை மிக மிக விலாவரியாக விவரிக்கும் வண்ணம் வடிவமைந்துள்ளார் எழுத்தாளர் அவர்கள். கிட்டத்தட்ட 70 பக்கங்களில் இருந்த போதிலும் சிறிதும் அயர்ச்சி உண்டாக்காவண்ணம் இளமைப் பருவம் முதலான நிகழ்வுகளுடன் பெண்ணின் பரிதவிப்புகளைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எனலாம். ஒவ்வொரு ஆணும் வாசிக்க வேண்டிய சிறுகதையாக இதனைப் பரிந்துரை செய்கிறேன். கள்ளக்காதல் குறித்த தெளிவினை உணரலாம் என நம்புகிறேன். முத்தம் குறித்த புதிய பார்வை உண்டாகும் என்பதும் எனது அனுகூலம்.
2. தர்மத்தின் ஆகுதி:
பஞ்ச பாண்டவர்களை மணந்த திரௌபதியின் மன உணர்ச்சிப் போராட்டத்தின் வெளிப்பாடே இச்சிறுகதை. மகாபாரதத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளது. இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா என்ற எண்ணமும் உண்டானது என்பதை மறுப்பதற்கில்லை.
3. சிலம்பின் ரகசியம்:
சிறுவயதில் பாடப்புத்தகத்தில் படித்த “கோவலன் -கண்ணகி மதுரை நோக்கிப் புறப்படுதல்” படலம் தான் இச்சிறுகதைக்கான கதைக்களம். தெரிந்த கதைதானே என்ற நமது அலட்சியத்தில் சவுக்கடி அடிப்பது போன்ற காவியமே இது. கண்ணகியின் உணர்வுப் போராட்டம் ஒருபக்கமென்றால் எழுத்தாளரின் சொற்கட்டு, வாக்கிய அமைப்புகளோ மறுபக்கத்தில் அமைந்து நம்மை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதே நிதர்சனம்.
4. கண்ணனிடமிருந்து வெளியேறாத கோபியர்கள்:
கோகுலத்துக் கண்ணனின் மீது காதல் கொண்டுள்ள பெண்களின் அக உணர்வுகளை அதீத தாபங்களை மிக லாவகமாக வெளிப்படுத்தியுள்ள சிறுகதையே இது. கோபியர்களின் மேல் பச்சாதாபம் உண்டாக்கும் வண்ணம் அமைந்த கதைக்களம்.
5. அட்சயப் பாத்திரத்தின் ருசி:
மணிமேகலை துறவறத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அவள் மனதில் உண்டாகிய (?) அகச் சிக்கல்களை மனப் போராட்டங்களை வருங்கால நன்மை தீமைகளை பகுத்தாராய்ந்து முடிவெடுத்த தருணமே இச்சிறுகதையின் சாராம்சம். பரத்தையர் குலத்தின் நிகழ்வுகளையும் பௌத்த மதத்தின் நுட்பங்களையும் புரிந்துணரும் வண்ணம் அமைத்த விதம் வெகு சிறப்பு.
6. என்புதோல் உயிர்:
புனிதவதி காரைக்கால் அம்மையாராக மாறிய தருணமே இச்சிறுகதையின் மூலம். புனிதவதியின் கணவன் பரமதத்தன் பிரிவிற்கான காரணமாகக் கூறப்படும் கிளைக்கதை ரணகளம்.
7. நித்ய சுமங்கலி:
‘நக்கன்’ என்ற பெண் பெருமான் மீது கொண்ட காதலே இச்சிறுகதை. பள்ளியெழுச்சிப் பாடலில் துயில் எழுப்பி பள்ளியறை வரை உடனுறையும் பெண்ணிற்கு சிவபெருமான் மீது காதல் வருவதற்கான காரணங்களை எழுத்தாளரின் மொழிநடையில் படித்தால் மட்டுமே அதன் உயிர்ப்பை உணர முடியுமென கருதுகின்றேன்.
8. விலக்கப்பட்ட கனி:
இயேசுவிற்கும் இயேசுவால் பாவவிமோசனம் பெற்ற வேசிக்குமிடையே நடைபெறும் உரையாடலே இச்சிறுகதையின் கதைக்களம். தாசி யேசுவின் மீது சுமத்தும் பழி வழியாக வேசிகளின் வாழ்வியல் புண்ணிய தருமத்தை உணர இச்சிறுகதையை ஒவ்வொரு ஆடவரும் அவசியம் வாசிக்கலாம்.
ஒவ்வொரு சிறுகதை குறித்தும் பல பக்கங்களில் சிலாகித்து பேசிக் கொண்டே இருக்கலாம். இதிகாச காலந்தொட்டு நவீன கால வரையிலான பெண்களின் அகப்பக்கங்களை மிக ஆழமாக அலசி ஆராய்ந்து இந்நூலினை வடித்துள்ளார் எழுத்தாளர் அவர்கள். இப்படைப்புகளை ஒரு ஆண் எழுத்தாளர் இவ்வளவு நுட்பமாக எழுத இயலுமா என்ற வினா ஒருபுறமும் ஒருவேளை அப்படி யாரேனும் ஒருவர் எழுதியிருந்தால் உண்டாகும் நிலவரம் கலவரமாகுமோ என்ற ஐயம் உண்டானதையும் தவிர்க்க இயலவில்லை.
இங்கு யான் எடுத்தியம்பிய கருத்துக்கள் யாவும் கடலின் சிறுதுளி மட்டுமே. இந்நூலினைப் படிக்கும் போது இனம்புரியாத இன்ப உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க இயலாது என்பதே நிதர்சனம். இச்சிறுகதைகளைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தமது வாழ்வில் நிகழ்ந்தவைகளென்றோ நமது உள்ளுணர்வின் பிரதிபெலிப்போ என்ற மயக்கத்தில் திளைக்கலாம். இவைகளைப் படிக்கும் ஆண்களோ பெண்களின் உள்ளுணர்வுகளை படித்து தெளித்து பெண்களின் வாழ்விற்கு ஒளியூட்ட உதவலாம் என்றே கருதுகிறேன். அங்ஙனம் நடப்பதே இந்நூலிற்கான ஆகச்சிறந்த வெகுமதியாக அமையுமென அடியேன் கருதுகிறேன்.
எழுத்தாளரின் பிற படைப்புகளையும் படிக்கும் ஆவலுடன் நிறைவு செய்கிறேன். வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.