ஆசிரியர்- அ. வெண்ணிலா
நூல்: இந்திர நீலம்.
பதிப்பகம்: அகநி வெளியீடு.
விலை- ரூ. 150
புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: இந்திர நீலம்
நூல்: இந்திர நீலம்.
பதிப்பகம்: அகநி வெளியீடு.
விலை- ரூ. 150
புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: இந்திர நீலம்
உலகில் தினமும் பெண்களுக்கான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அதற்கு எதிராக அவர்களும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எதுவும் மாறியதாக இல்லை. அப்படி அவர்களுக்கு கிடைக்காத முக்கியமான இன்னொன்றும் இருக்கிறது அது தான் காமம். என்ன இது இதையெல்லாமா கிடைக்கவில்லை என்று பெண்கள் கேட்பார்கள் என்று இதை வாசிப்பவர்கள் கூட கேட்கலாம். அப்படி கேட்காத, கிடைக்காத, பேசப்படாத காமத்தை மட்டுமே பேசுபவை இந்திர நீலம் கதைகள்.
என்ன தான் நவீன காலத்தில் வாழ்ந்தாலும், தன்னுடைய உரிமைக்காக தர்ணா செய்து போராடினாலும் எனக்கு காமம் கிடைக்கவில்லை என்று ஒரு பெண் தன் கணவனிடம் இயல்பாக கேட்டுவிட முடிகிறதா? இல்லை தானே?. கணவன் அழைக்கும் போது சென்று அவனுக்கு ஆசை அடங்கியவுடன் வெளியேறிவிடவேண்டும் எனும் பழக்கத்தை தானே இச்சமூகம் இன்னும் கட்டமைத்து வைத்திருக்கிறது.! அதற்கேற்ப தன்னுடைய மனைவிக்கு முழு திருப்தி கிடைத்ததா என்று கேட்காமலேயே விலகிவிடும் கணவர்கள் தான் இன்றும் உள்ளனர். மற்ற ஒரு பிரச்சனையை போல் இந்த பிரச்சனை அக்கம் பக்கம் வீடுகளுக்கோ உறவினர்களுக்கோ அவ்வளவு எளிதில் தெரியவும் வராது. உணர்வுகள் பொங்கிப் பெருகி நாளடைவில் மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதற்கு இந்த கிடைக்கப்பெறாத காமமும் முக்கிய காரணம். சமயங்களில் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழலாம் ஆனால் வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றால் இறுதியில் அதுவே மனநோயாக மாறிவிடும் என்பதையும் உணர வேண்டும். அப்படி சங்க காலத்தில் தொடங்கி நிகழ்காலத்தில் தினந்தோறும் அலுவலகம் சென்று வரும் ஒரு சராசரி பெண் வரை மொத்தம் எட்டு கதைகளை உள்ளடக்கிய சிறுகதை தொகுப்பாக வந்திருக்கிறது இந்நூல்.
பேரிளம்பருவத்திலிருக்கும் ஒரு பெண். சிறுவயது முதலே தன்னுடலை முழுவதுமாக கூட பார்க்க வாய்க்காத ஒரு குடும்ப சூழலில் வளர்கிறாள். உறவின் முறை காதல் கணவனோடு தினசரி அலுவல் சென்று வரும் நகர வாழ்க்கை அமைகிறது. குழந்தைகள் பள்ளிப் பருவம் எட்டிவிட்டாலும் தன்னை அழகாக்கி அலங்கரித்துக்கொண்டு தன்னழகை தானே ரசிக்கும் ஒரு சூழ்நிலை அமையாத வாழ்க்கை. போதாமைக்கு மோனோபாஸ் பருவம். தன்னுடைய உடம்பு தன்னிடம் என்ன தான் கேட்கிறது என்பதையே அவளால் அறிய முடியவில்லை. மருத்துவரிடம் சென்று தன் கணவனிடம் காட்டவேண்டிய உடலை திறந்து காட்ட கூச்சம்.
முதலில் தினமும் பலமுறை இருந்த தாம்பத்ய உறவு நாளாக நாளாக இரண்டொரு நாட்களுக்கு ஒரு தடவையென மாறி முதல் குழந்தை பிறந்தவுடன் ஈர்ப்பு குறைந்து பிறகு பத்து நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதமொருமுறையோ என தேங்கிப் போனதே இதற்கு காரணம் என ஒரு கட்டத்தில் கண்டுபிடித்துவிடுகிறாள். பிறகொருநாள் வழக்கம் போல நேரமே வீட்டிற்கு வருபவள் தானே தன்னை அலங்கரித்துக்கொண்டு நேர்த்தியாக உடையணிந்து கொண்டு கணவனுக்காக காத்திருக்கிறாள். அன்றும் இவளுடைய உடலுக்கு உணர்வுகளை தூண்டியதும் ஒதுங்கிக்கொள்ளும் விதமாகவே அமைகிறது.
தனது சிறுவயது முதல் தற்போது வரை தன்னுடைய கணவனால் எப்படியெல்லாம் அவளுடைய காமம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, கொஞ்சம் வயது முதிர்ந்த பிறகு அதே காமம் எப்படியெல்லாம் கிடைக்கவில்லை என்பதை அவளின் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு வரை அலசி ஆராயும் ஒரு மிகச்சிறந்த கதையாக அமைந்திருக்கிறது. உடல் தேவையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கதை எனினும் உளவியல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு பெண்ணை,அவளுடைய பிரச்சனையை முழுமையாக புரிந்து கொள்ளலாம் வாசிப்பவர்கள்.
தனது தாயின் சிறு தவறினால் ஐந்து பேருக்கும் மனைவியான திரௌபதி கதை. நேர்மை, ஒழுக்கம், பத்தினி, பத்தினி அல்லாதவளென வரலாறு பல்வேறு முடிச்சுகளை அவள் மீது பதிய வைத்திருக்கிறது. ஆனால் விரும்பியவனோடு வாழாமலும், விருப்பப்பட்டு அழைக்கிறவனோடு செல்ல முடியாமலும் திரௌபதி எப்படி தவித்திருப்பாள் என்பதை யாருமே பேசியதில்லை. எப்படி உருகி உருகி காதலித்தாலும் அது நிறைவு பெறுவது என்னவோ காமம் எனும் முற்றுப்புள்ளியில் தானே? அப்படி அவளுடைய தவிப்பையும் உணர்வையும் புனைந்து தத்தளிக்கும் கதை ஒரு கட்டத்தில் இது தான் உண்மையோ என கூட நம்ப முடியுமளவிற்கு இருக்கிறது.
காதல் கணவன் கோவலன் பிரிந்து சென்ற பிறகு கண்ணகியின் பரிதவிப்பும் தீண்ட ஆளில்லாத தன்னழகையும் நினைத்து எப்படி மருகியிருப்பாள் என்பதாக நகர்கிறது இந்த கதை. அவனோடு சென்ற வழித்தடங்களையும் இயற்கையையும் விவரிக்கும் விதம் குறித்தும் ஆசிரியரின் மொழி நடை சிலாகிக்க செய்கிறது.
அதற்கு பிறகு, கண்ணணிடமிருந்து வெளியேறாத கோபியர்கள். தங்களுக்கென கணவன்மார்கள் இருந்தாலும் மாயக்கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு மயங்கி தவிக்கும் கோபியர்கள் அவனே ஆயுள் முழுவதும் நம்மை ஆள மாட்டானா? பித்துப்பிடிக்கவும் வைத்துவிட்டு தொட்டுப்பார்க்காமல் கூட சென்று விடுகிறானே இத்தனை பேரின் தவிப்பை அறியவே மாட்டானா என்ற ஏக்கத்துடன் நிறைவுபெறுகிறது.
அட்சயப்பாத்திரத்தின் பசி- இந்த கதை சற்றே வித்தியாசம் நிறைந்தது. கோவலன் சென்ற பிறகு கண்ணகியின் பரிதவிப்பை ஏற்கனவே எழுதியவர், கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். கோவலனின் மறைவுக்கு பின் தனது மகளை புத்த துறவியாக வளர்க்க நினைக்கிறாள் ஆனால் மணிமேகலையோ உதயகுமரன் மீது காதல் மயக்கத்தில் இருக்கிறாள். அவனை மணந்து கொண்டு அரண்மனையில் மகாராணியாக வாழ்வதா? அல்லது அம்மாவின் சொல்படி மணிபல்லவ தீவிற்கு சென்று காலந்தோறும் புத்த துறவியாக வாழ்வதா என்று குழம்பி நிற்கிறாள். முடிவில் துறவியாக மாறிவிட்டாலும் அந்த காதலையும், அவளுக்கு கிடைக்கவே படாத இல்லற சுகத்தை, திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்ட பெண் மனதை ஒரு கண்ணாடி போலவே வாசகனுக்கு கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.
சைவ சமய நாயன்மார்களில் வணிக குலத்தை சேர்ந்த மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதி (அ) காரைக்கால் அம்மையாரை எல்லோருக்கும் தெரியும். பரமதத்தன் கொடுத்த மாங்கனியால் ஏற்பட்ட பிரச்சனை அதன் பிறகு துறவு வாழ்க்கை மேற்கொண்ட கதை வரலாறு இன்று வரை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் ஒருவனுக்கு மனைவியான பிறகு கணவனால் கைவிடப்பட்ட ஒருத்திக்கு எவ்வளவு இன்னல்கள்வரும், இனிமேல் வாழ்க்கையில்தனது கணவனின் அருகாமையே கிடையாது இல்லறச்சுகமும் இல்லையென்பதை எந்த வரலாறு பேசியிருக்கிறது? அதை பேசுகிறது இந்த என்புதோல் உயிர்.
பெருமாளுக்கு சேவகம் செய்ய பொட்டு கட்டி விடப்பட்ட நக்கனின் கண்டுகொள்ளவே படாமல் வீணாகும் இளமையை பேசுகிறது இது. கடவுளின் மனைவி எனும் அடையாளம் உள்ளதால் வேறு ஆண் தவறாக பார்க்க முடியாது. இளமை ததும்பி நிற்கும் போது கல்லாலான கடவுளிடமும் எதையும் சொல்ல முடியாது. ஒருபுறம் தவிப்பையும், மறுபுறம் பெருமாளின் மீதான காதலையும் அடக்கி வைத்தபடி தன்னுடைய இளமையை கொல்லும் பெண்ணின் அகத்தை பேசுவதாக அமைந்துள்ளது.
சிலுவையில் அறைந்த மூன்றாம் நாள் இயேசு கண்விழித்த போது பாவங்கள் செய்ததாக குற்றஞ்சாட்டி கொல்லப்பட்ட ஒரு தாசி இயேசுவிடம் முறையிடுவதாக அமைந்த புனைவு.
எல்லா கதைகளும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழலில் நடந்தாலும் அனைத்து கதை தலைவிகளும் தன்னுடைய கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத உடலுணர்வு சார்ந்து மட்டுமே பேசுகின்றனர்.
அந்த காலத்திற்கான மொழியிலேயே சொல்வதால் சுவாரசியமாக வாசகரை கதைக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார். நிறைய பழங்கால பொருட்களின் பெயர்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நிலத்தை, பூக்களின் பெயர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.நிறைய தரவுகளை திரட்டித்தந்திருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக தலைப்பு கதை தவிர மற்ற அனைத்தும் வரலாற்று காலத்தில் நிகழ்பவை அதை கொஞ்சமும் பிசகாமல் தற்காலத்திற்கு நிகழ்வை கடத்தி தந்ததை படிக்கும் போது காமம் செப்பிய தலைவிகளின் சொற்கள் கண்முன் விரிகிறது.
இன்றைய இலக்கிய வெளியில் பெண்கள் நிறைய எழுத வந்திருக்கிறார்கள். ஆனாலும் யாருக்கோ எதற்காகவோ நினைத்ததை எழுதாமல் தயங்கி தொக்கி நின்றுவிடுவார்கள். அதிலும் காமத்தை இவ்வளவு நுணுக்கமான பார்வையில் அணுகி ஒரு பெண் எழுதியதை எனக்குள்ள சிறிய அனுபவத்தில் நான் இதுவரை படித்ததில்லை. இதற்கு முன்பும் தோழர் அ.வெண்ணிலாவின் படைப்புகளை நான் வாசித்ததில்லை நான் படித்த அவருடைய முதல் தொகுப்பு இது தான்.
‘காமம் செப்பல்’ என்று தன்னுரை தந்து மற்றவர்கள் பேசாததை பேசியதற்கு அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.
பேரன்பின் ப்ரியங்களோடு
சேலம் ராஜா.
10/04/2021.
இரவு-11:15.