Indhiran Kavithaigal இந்திரன் கவிதைகள்




உடம்பு
***********
உடம்பு எனது கேளிக்கை விடுதி.
அதிரும் அதன் கிடார் இசைக்கு ஏற்ப
காலவெளி கடந்த நடனத்தில் திளைக்கிறேன்
வாழ்தலின் மது அருந்தி.

ஒருவரை நேசிக்கும்போது
அவரது உடம்பையும் சேர்த்தே நேசிக்கிறேன்.
வாழ்க்கையின் அகராதி திறந்து அர்த்தம் தேடுகையில்
நான் எனும் பிரம்மையின் அரண்மனையைக்
கட்டி எழுப்புகிறது உடம்பு.

உடம்பு எனது தேசப்படம்.
காயங்களின் திருகலான புதிர்ப் பாதைகளில்
வலியுணர்த்தி வழிகாட்டி
அது என்னைக் காப்பாற்றுகிறது.

மரணத்தின் பிடியில் உடம்பை நாங்கள்
அதிக நேரம் இருக்கவிடுவதில்லை
நாங்கள் அதை புதைத்து விடுகிறோம்
அல்லது
எரித்துச் சாம்பலாக்கி நதியில் கரைத்து விடுகிறோம்.

இரண்டாவது இதயம்
**************************
இரண்டு கண்கள் , இரண்டு செவிகள்,
இரண்டு நுரையீரல் , இரண்டு சிறுநீரகங்கள்
இருக்கும் எனக்கு
ஏன் இல்லை இரண்டு இதயம் ?

பாழடைந்த பங்களாவின் எதிரொலிபோல்
இதயத்தின் நான்கு அறைகளில்
ஒரு அறையில்
முதல் காதலின் சடலம் கிடக்கிறது
இன்னும் புதைக்கப்படாமல்.

இரண்டாவது அறையில்
கூண்டுக்குள் உலவும் விலங்கைப் போல்
வெறியோடு உலாவி
கர்ஜிக்கின்றன நிறைவேறாத ஆசைகள்.

மூன்றாவது அறையில்
இன்னும் ரத்தம் சொட்டச் சொட்ட
வலியில் முணகிக் கொண்டிருக்கின்றன
வெளியில் பெயர் சொல்ல முடியாதவர்கள்
இழைத்த அவமானங்களின் காயங்கள்.

ஒரு இசைத்தட்டைப் போல் சுழலும்
நான்காவது அறையில்தான் நான் வசிக்கிறேன்.
தேவாலயத்தின் ஜெப ஆராதனைப் பாடல்களின் இசை
சாம்பிராணிப் புகைபோல் சுழலும் நான்காவது அறையில்
என்னை நானே மன்னித்து ,
எனக்கு நானே அன்பு செலுத்தி

எனது காயங்களை எனது நாவாலேயே நக்கிக் குணப்படுத்தி
தன் சின்ன வெளிச்சத்தால் மொத்த இரவையும் வசீகரிக்கும்
மின்மினிப் பூச்சியைப் போல் கம்பீரமாய் வாழ்கிறேன்.

ஓட்டைப் படகு போல மிதக்கிறது
துடித்துத் துடித்துப் பழுதடைந்த எனது இதயம்.
எனக்கு இப்போது வேண்டும்
ஒரு இரண்டாவது இதயம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *