Indhiya Mathangalum Indhiyavirku Vandha Mathangalum Book by A. Marx and Bookreview By S. Azhageshwaran நூல் அறிமுகம்: அ. மார்க்ஸின் ’இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்’ - சு. அழகேஸ்வரன்

பிளவுவாத அரசியலுக்கு எதிரான நூல்

சமீபத்தில் பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் என்ற நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் 1970 களில் ஏற்பட்ட தாராளவாத பொருளாதாரவாதத்தின் வீழ்ச்சி, அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவு குறித்த அச்சம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு முதலியவை மதத்தின் இருப்பை உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறுகிறது. மேலும் தேசியம் என்பதின் மீதான ஈர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இடத்தை மதவாத தேசியம் கைப்பற்றியுள்ளது. இந்த மதவாத தேசியம் மதங்கள் தாம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அதிகாரம் பெறுவதாகவும், அதுவே சிறுபான்மையாக உள்ள இடங்களில் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி துன்புறுத்துவதற்கு காரணமாகியுள்ளது. எனவே மதங்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்கிறது இந்த நூல் முன்னுரை.

அத்துடன் தமிழகத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவமும் சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடுகளைத் தாண்டி கல்வியைப் பொது சொத்தாகியதால் சிறுபான்மை மதத்திற்கும் பிறருக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியது. தவிரவும் திராவிட இயக்கம் சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை பேணியதால் தமிழகத்தில் சமயம் பொறை நிலவியது. இதுவே மதவாத சக்திகள் தமிழகத்தில் இன்று வரை காலூன்ற முடியாமல் தடுத்து வருகிறது என்று தொடங்கும் இந்நூல் மதங்களின் தோற்றம், பரவல் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த புதிய பார்வையை வழங்குகிறது.

இதற்கு பௌத்த மற்றும் இந்துமத ஆய்வாளர் டேவிட் கெல்னரின் மனித வாழ்வில் மதங்களின் பங்கு குறித்த கருத்துக்கள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மானுட வாழ்வில் மதத்தின் பங்கு இறை நம்பிக்கை, இறப்பிற்கு பிந்தைய வாழ்வு என்பதுடன் முடிவடைவதில்லை. அதற்கும் அப்பால் பிறந்த குழந்தையை ஆசிர்வதித்து, பெயரிட்டு அதைச் சமூக உறுப்பினர்களில் ஒருவராக ஏற்று பின்னாளில் அவரது திருமணத்தை ஆசீர்வதித்து அந்த தம்பதியினரை குடும்பமாக அங்கீகரிக்கிறது. மதத்தின் அந்த ஏற்புகளுக்கு அரசும், சட்டங்களும் சட்டபூர்வ நிலைமை வழங்குகிறது. இவற்றையே நாம் கெல்னர் கருத்துக்களின் சுருக்கமாகக் கொள்ளலாம். மேலும் இவையெல்லாம்தான் மதத்தை எளிதில் முடிவுக்கு கொண்டுவர முடியாமைக்கான காரணங்களாக உள்ளதாகவும் இந்நூல் சுட்டுகிறது.

இந்து மதம்:
இந்து மதத்தின் ஆகப்பெரிய பலவீனம் அதன் தோற்றத்திலேயே அடங்கியுள்ளது. அது வருண வேறுபாட்டில் தொடங்கி சாதி, தீண்டாமை ஆகிய அனைத்திற்கும் நடைமுறையில் மட்டுமின்றி கோட்பாடு ரீதியாகவும் இடம் கொடுத்தது. மேலும் இந்து மதத்திற்கு மறைநூல் ஒன்று இல்லாததின் காரணமாக இந்து மதத்தை ஏற்றவர்கள் முன்வைத்த கருத்துக்களில் பெரிய வேறுபாடுகளைக் காண முடிகிறது என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது. 

மேலும் அயோத்தியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை முன்வைத்து, இராமர் கோவில் இடிக்கப்பட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று இந்துத்துவவாதிகளின் உற்சாகமாக வாதிட்டதை இந்நூல் மறுக்கிறது‌. இந்த அகழாய்வில் கிடைத்த தூண்கள் முதலானவை பௌத்த கட்டுமானங்களில் உள்ள தூண்களில் பானியிலேயே உள்ளன. எனவே அவற்றை பாதுகாத்து வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் குரல்கள் பல திசைகளிலுமிருந்து ஒலித்ததை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

அவற்றுடன் இந்துமத காப்பிய வர்ணனைகள் மற்றும் துர்கா பூஜை குறித்த சர்ச்சைகளுக்கும் இந்நூல் எதிர்வினை ஆற்றுகிறது. இந்துமதக் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் மிகவும் தொன்மையானவை. அவை மத நூல்கள் அல்ல. அந்த காப்பியங்களில் பெண்களின் அங்க அழகுகள் வர்ணிக்கப்பட்டுள்ளது ஒரு காப்பிய மரபின் அடிப்படையில்தான். இந்த மரபு தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும் தொடரத்தான் செய்கிறது. எனவே இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் குறித்த வர்ணனைகளை ஆபாசங்களாகப் பார்க்கக்கூடாது. 

அதேவேளையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் அரசியல் சார்ந்தே இவற்றின்மீது விமர்சனங்களை வைத்தார்கள். அந்த அரசியலும் நமது சூழலுக்கு தேவையான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.

அதேபோல் அசுரகுலத் தலைவன் மகிஷாசுரனை கொன்றொழித்த மகிஷாசுர மர்தினியை (துர்கை) கொண்டாடும் வகையில் துர்கா பூஜை நடத்தப்படுகிறது. உண்மையில் ஓரங்கட்டப்பட்ட உள்நாட்டு மக்களை கொன்று ஒடுக்கியதை விவரிப்பதுதான் இந்த மகிஷாசுரன் மர்த்தினி வரலாறு. இதற்கு மாறான கதையைச் சொல்லி துர்கா பூஜை கொண்டாடுவது எம் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவே உள்ளது என்று பழங்குடியினர், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களில் உரிமைகளுக்காக நிற்பவர்கள் சொல்லி வருகிறார்கள். அத்துடன் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் எல்லைப்பகுதிகளில் மகிஷாசுரனை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஆனால் இதே கருத்தை பிரச்சாரம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை நியாயப்படுத்தி அன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி நாடாளுமன்றத்திலும் பேசினார். இவை அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிரானது என இந்நூல் வாதிடுகிறது.

சமணம்:
உயிர்ப்பலிகளை ஏற்றுக்கொண்ட கங்கைச் சமவெளி வைதீகம், பௌத்தம்-சமண எழுச்சிக்கும் பிந்தைய காலத்தில் அவற்றை கைவிட்டன. உயிர்ப்பலி மறுப்பு எனும் கொல்லாமை உட்பட எளிய மக்களின் பசிப்பிணி அகற்றள், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைதள் ஆகிய கொள்கைகளை சமணம் மட்டுமே முழு உறுதிப்பாட்டுடன் கடைப்பிடித்தது. எனவே பிற மதங்களுடன் ஒப்பிடும்போது, சமணம் வீழ்ச்சி அடைவதற்கு அதுவே காரணமாக அமைந்தது. ஆனாலும் சமணம் இந்தியா முழுவதும் எண்னையும், எழுத்தையும் பரப்பியது. பிராமி எனும் தொல் வடிவ எழுத்தை இந்தியாவிற்கு கொடையாக அளித்தது போல் தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்களை வழங்கியது. பாட்டுக்களை சீர்களாகப் பிரிப்பது, எழுத்து, சொல்லாராய்ச்சி மற்றும் அகராதி உருவாக்கப் பணிகளை சமணமே செய்தது என்பதை இந்நூல் மீள் பதிவு செய்கிறது. மேலும் பாஜக எம்பி தருண் விஜயும், துக்ளக் ஆசிரியர் சோ வும் திருக்குறளை இந்துத்துவ வலைக்குள் கொண்டு வர முயற்சித்ததை சுட்டிக்காட்டி அது சமண நூல்தான் என்று நிறுவுகிறது.

பௌத்தம்:
பௌத்தம் நீண்டநாள் நீடித்ததற்கு காரணம், அதை மீளுருவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகள், பண்டைய பொருளாதாரத்திலும், இலக்கண உருவாக்கத்திலும் பௌத்தத்தின் பங்களிப்புகளை இந்நூல் விளக்குகிறது.

தொடக்க கால பௌத்தம் இறுதி விடுதலை என்பதற்கு மட்டுமே அழுத்தம் கொடுத்தது. உலகியல் சார்ந்த விடயங்களை பொருத்தமட்டில் சமூக சடங்குகளுக்கும், பக்திக்கும் இடமற்ற மறுவாழ்வு ஒன்றை மட்டுமே முன்வைத்தது. ஆனால் அது வெகுஜனத் தன்மையை அடைந்தபோது சமூக ஏற்பை அளிக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் போனது ஒரு குறையாகவே இருந்தது. எனவே இந்த காலியிடத்தை பூர்த்தி செய்ய பிற மதக் கருத்துக்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டது. இதன் காரணமாகவே பௌத்தம் ஒப்பீட்டு ரீதியில் அதிக காலம் நீடித்தது.

மேலும் தமிழகத்தில் பௌத்த மீளுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனவே கெல்னர் கூறிய கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

பௌத்தம் உருவாக்கிய பொருளாதார மாற்றங்களைப் பொருத்தமட்டில், அந்த காலத்தில் வணிகர்கள் தொலைதூரத்திலிருந்து வணிகம் செய்து வந்தனர். அவர்கள் பௌத்த துறவிகள் வசித்த குகைளுக்கு பொருளாதார உதவிகளை செய்தனர். பௌத்த மடங்கள் மிக முக்கியமான வாடிக்கையாளர்களாகவும், வணிகர்களின் பொருட் கிடங்குகளாகவும் இருந்தன. பின்னர் இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் விவசாயக் குடியிருப்புகளை உருவாக்கியதில் பௌத்தம் முக்கியப் பங்காற்றியது. இந்த குடியிருப்புகள் வழியாக பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. இது அடிப்படை பொருளாதாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் தொலைதூரம் வணிகம் முடிவுக்கு வந்தது. எனவே தமது மதக் கடமைகளையும், பொருளாதாரச் செயல்பாடுகளையும் நிறைவேற்றி முடித்திருந்த பௌத்த மடங்கள் மறையத் தொடங்கின.

தமிழ் இலக்கண உருவாக்கத்தைப் பொருத்தமட்டில் பௌத்த மரபில் வந்த இலக்கண நூலான வீரசோழியம் எட்டு சுவைகளுடன் ‘சாந்தம்’ என்ற சுவையையும் கூடுதலாக இணைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் பௌத்த நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் ஏற்பட்ட மொழி மாற்றங்களை ஏற்று, தமிழ் இலக்கணத்தை இந்நூல் விளக்குகிறது.

சைவம்:
தமிழகத்தில் சைவ எழுச்சி பெற்ற பின்புலம், முஸ்லிம் மன்னர்களால் கட்டப்பட்ட காசி மடம் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளது.

சைவக் குரவர்களில் ஒருவரான குமரகுருபர சுவாமிகள் சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு சைவ தத்துவங்களை விளக்கியதில் கவர்ந்த ஒளரங்கசீப்பின் தமையன் தராஷிகா காசியில் ஒரு மடத்தை கட்டிக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சுவாமிகள் நேபாளத்தில் சாரங்கி என்ற ஊரில் துணை மடத்தை அமைத்தார். ஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்களின் உதவியால் உருவாக்கப்பட்ட குமரகுருபர மடம் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. ஆனால் சாரங்கி மடம், சைவ மடங்களின் உள்விவகாரங்களின் காரணமாக அவர்களது கையை விட்டு போய்விட்ட உண்மைகள் தமிழறிஞர் கு.அருணாச்சலத்தின் நூலை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது. 

ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என சித்தரித்ததுடன் சமண பௌத்த நூல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்கிற மும்மூர்த்திகள் மற்றும் மாணிக்கவாசகர், மெய்கண்டார் முதலான சைவர்களின் பணிகளில் காரணமாக தமிழ் சைவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் வசமானது. இந்தப் பின்னணியில்தான் சைவம் மடங்கள் பெரும் செல்வத்துடன் உருவாக்கப்பட்டது. 

இஸ்லாம்:
இஸ்லாம் வணிகச் சூழலில் உருவான மதம். சம்பாதித்த பொருளில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அளிப்பதோடு நிறுத்திக்கொண்டது. அளவுக்கு மீறிய சொத்து சேகரிப்பு குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் சமூக சமத்துவத்தை பொறுத்தமட்டில் இஸ்லாமிற்கு நிகராக எந்த மதத்தையும் சொல்லிவிட முடியாது. ஒரு காலத்தில் மேலை கிறிஸ்துவ வரலாற்றறிஞர்கள் ‘இஸ்லாம் வாளோடு மதம்’ என்று கதை பரப்பியதை தற்போது இந்துத்துவவாதிகள் செய்து வருகிறார்கள். உண்மையில் மதமாற்றம் என்பது இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒரு மதத்தில் ஈர்ப்பு கொண்டு அதை ஏற்பது முதல் கட்டம். இரண்டாவது நிலையில்தான் அவர்கள் அந்த மதத்தின் நம்பிக்கைகள் அனைத்தையும் மதித்து இறுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். இதன்படி பார்க்கும்போது இந்தியாவில் இஸ்லாம் படிப்படியாகத்தான் பரவியது. முஸ்லிம் அரசுகள் இஸ்லாம் பரவலில் பங்கேற்ற போதிலும் அதை வன்முறையில் செய்யவில்லை.

இன்று இஸ்லாம் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் அது இஸ்லாமுக்குள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இஸ்லாமிய புனித நூல்கள் மறு வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் திருக்குர்ஆனில் தந்தைவழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என்று அஸ்மா பர்னால் முன்வைக்கும் வாதங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. மதத்தில் நின்று உரையாடுவதற்குரிய ஒரு உரைசார் உத்தியை இவரது வாசிப்பு வழங்குவதில் இதுவே முக்கியமான போக்காக இனம் குறிக்கப்படுகிறது.

அடுத்ததாக, இன்று உலகம் முழுவதும் பரவி வரும் தப்லிக் ஜமாத் இயக்கம் அரசியல் பற்றி பேசாமல் ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இவ்வாறாக அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று இஸ்லாம் அறிஞர்களில் சிலர் விமர்சித்து வருவதை இந்நூல் கவனப்படுத்துகிறது. ஆனால் இவ்வியக்கம் பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக உள்ளது என்று குற்றஞ்சாட்டி சவுதி அரேபிய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. எனவே இந்த இயக்கம் குறித்து கூடுதல் வாசிப்பு தேவை.

கிறிஸ்தவம்:
அடிமைப் பட்டவர்களின் மதமாக உருப்பெற்ற கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக, காலனியாதிக்க மதமாகத் தோற்றம் கொண்டு மிகப்பெரிய மானுட அழிவிற்கு காரணமானது என்று கூறும் இந்நூல், டால்ஸ்டாய் எழுதிய நூலை திருச்சபை ஏற்காததற்கான காரணங்களை விளக்குகிறது. இயேசுவிற்கு பிறகு உருவான கிறிஸ்தவம் தொடக்கத்தில் அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களை ஏற்று தன் பயணத்தை தொடங்கியது. ஆனால் பின்னர் மத அதிகாரமும், அரசதிகாரமும் தனது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள மனிதர்களை அற வாழ்விலிருந்து விலக்கி பொருளாதாய வாழ்விற்கு உரியவர்களாக மாற்ற விரும்பியது. இயற்கை அதீதங்களையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் மீண்டும் புகுத்தி இயேசுவால் தூய்மை செய்யப்பட்டிருந்த இறைவன் கட்டளைகளை கரைப்படுத்தியிருந்தன என்பதை டால்ஸ்டாய் கண்டுகொண்டார். எனவே இடைப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்ட அழுக்குகளை நீக்கி தூய்மை செய்து அதை ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ என்ற நூலாக எழுதினார். அதனால்தான் திருச்சபை அதை ஏற்கவில்லை.

அடுத்ததாக, தமிழகத்தில் சகோதரி லூசியானா திருச்சபையின் ஆதரவுடன் ஆற்றிய பணிகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேவையாற்றிய ஐம்பது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு யாரும் மாறவில்லை என்பதை கவனப்படுத்துகிறது. மேலும் பிரஷ்யாவிலில் பிறந்து, தரங்கம்பாடிக்கு வந்த ஸ்டுவர்ட்ஸ் பாதிரியார் பணிகளையும், அவரோடு தொடர்புடைய வரலாறு குறித்து எழுதப்பட்டுள்ள ஆ.மாதவையாவின் ‘கிளாரிந்தா’ நாவல் குறித்த திறனாய்வும் இடம்பெற்றுள்ளது.

இறுதிப்பகுதி வா.வே.சு. ஐயரால் எழுதப்பட்டுள்ள நூல் குறித்தது. ஔரங்கசீப்பிற்கு எதிராக போராடிய குருகோவிந்த் சிங் குறித்து எழுதப்பட்டுள்ள அந்த நூல் இஸ்லாத்திற்கு எதிராக மத வெறுப்பையோ, அவதூரையோ வெளிப்படுத்தாமல், அந்த மதத்தின் நெறிகளுக்கு உட்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை விளக்குகிறது.

இவற்றையெல்லாம் தொகுத்து பார்க்கும்போது, இந்நூல் மதம் குறித்த மார்க்ஸ் கூறிய கருத்துக்களை இந்தியச் சூழலில் நின்று விளக்குவதாகவே இருக்கிறது. அறிவொளி காலத்தில் எழுந்த தத்துவப் போக்கு மதத்தையும், தத்துவத்தையும் பிரித்து நிறுத்த வேண்டும் என்றது. தத்துவியலார் எனில் துர்க்கைம் மதத்தின் இடத்தை தேசியம் கைப்பற்றி விட்டது என்றார். சமூகவியலாளர்களோ மதம் என்பதின் இடத்தை அரசியல் கைப்பற்றும் என்று நம்பினார்கள். ஆனால் மார்க்ஸ் மட்டுமே மதத்தை அவ்வாறு குறைத்து மதிப்பிட முடியாது என்றார். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் தொடரும் வரை மதமே நிவாரணியாக அமையும். எனவே மனிதத் துயரங்களை எதிர்ப்பதற்காக வர்க்க ஒற்றுமையைக் கூர்மைப்படுத்துவதுதான் நமது பணி என விளக்கினார் என்றும், அந்த கருத்து நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறது இந்நூல்.

மேலும் இந்நூல் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் மதம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை நவீன கருத்தாக்கங்கள் ஊடாக விரிவுபடுத்தி புதிய எல்லைகளை கண்டடைகிறது. அத்துடன் இந்துத்துவவாதிகளாலும், பொதுப் புத்தியில் நின்று பேசுபவர்களாலும் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் போது, இடையீடு செய்யப்பட்டவைகளின் தொகுப்பாகவும் இந்நூல் திகழ்கிறது. எனவே பிளவுவாத அரசியலை முன்னெடுக்கத் துடிக்கும் சக்திகளை எதிர்கொள்வதற்கு இந்நூல் பயன்படும் மதிப்பு கொண்டது.

சு. அழகேஸ்வரன்
அலைபேசி – 9443701812

நூல்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
விலை: 190
பக்கங்கள்: 214

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *