1946 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்ற கப்பற்படை புரட்சியின் தாக்கம் பற்றி பி. ஆர். பரமேஸ்வரன் அவர்கள் அற்புதமான ஒரு வரலாற்று ஆய்வு நூலை (இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்) தந்திருக்கிறார்.
ஆறு நாட்கள் நடைபெற்ற புரட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மெய்சிலிர்க்கும் சம்பவங்களை இந்த நூல் முழுவதும் கோடித்து காட்டியிருக்கிறார். நல்ல உணவுக்காகவும் சில சலுகைகளுக்காகவும் இப்போராட்டம் நடந்ததாக சிலர் சித்தரித்ததை வன்மையாக மறுக்கிறார்.
இந்திய போர் வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் விடுப்பு வசதி வைத்திய வசதி போன்றவற்றிற்காகவும், இந்திய போர் வீரர்களை மிக கேவலமாக நடத்தியதற்காகவும் வெள்ளை ஏகாதிபத்திய எதிரான போராட்ட உணர்வு தான் அப்படை புரட்சியின் தொடக்கமாக இருந்தது என்றும் பி. ஆர். பி. அவர்கள் கூறுகிறார்.
பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி பம்பாய் கடற்கரையில் இருந்த தல்வார் கப்பற்படை பயிற்சி முகாம் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் முதன் முதலில் புரட்சி முழக்கங்களோடு கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை கீழே இறக்கி காங்கிரஸின் மூவண்ணக் கொடி, முஸ்லிம் லீக் இன் பச்சை நிற கொடி, தொழிலாளி வர்க்கத்தின் செங்கொடி ஆகியவை அந்த கம்பத்தில் பட்டொளி வீசி பறக்க செய்தனர்.
இரண்டாவது உலகப் போர் காலத்தில் நேதாஜி அவர்கள் மலேசியாவிலும் பர்மாவிலும் இருந்த இந்தியர்களை திரட்டி ஐ. என். ஏ படையை உருவாக்கி இந்தியாவை விடுவிக்க ஜப்பான் உடன் கூட்டு சேர்ந்து போராடினார்.
முடிவில் ஜப்பான் தோற்ற பிறகு ஐ. என். ஏ வீரர்கள் கைது செய்யப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையில் அடைத்து கொடுமையாக அவர்களை நடத்தியது. இதுவும் கப்பற்படை எழுச்சிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
எட்டு அம்ச கோரிக்கைகளை உருவாக்கி பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றமென்று வற்புறுத்தினர். இந்த கோரிக்கைகள் அனைத்து பகுதி போர் வீரர்களையும் கவர்ந்து ஒருங்கிணைத்தது.
பம்பாய் துறைமுகத்தில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த போர்க்கப்பல்களில் இருந்த இந்திய மாலுமிகள் இந்த போராட்டத்தை இன்னும் விரிவாக்கி களத்தில் இறங்கினர்.
பிரிட்டிஷ் அரசின் எச்சரிக்கையை அடுத்து இந்திய போர் வீரர்களின் தலைமை பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. எல்லோரும் அவரவர் முகாம்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்றும் அறிவித்தது.
இருப்பினும் கப்பற்படை வீரர்கள் தற்காப்புக்காக வெடி மருந்துகளையும் ஆயுதங்களையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.
அன்றிரவு நடைபெற்ற பேச்சு வார்த்தை முறிந்து போனது. உடனடியாக பிரிட்டிஷ் படை இந்திய வீரர்கள் மீது தாக்குதலை தொடங்கியது.
ஆனாலும் இந்திய மாலுமிகள் கடுமையான எதிர்ப்புகளை சமாளித்தனர். இப்படி ஒரு தாக்குதல் நடைபெறுகிறது என்று மற்ற பகுதியில் உள்ள இந்திய வீரர்களுக்கு தகவல் உடனடியாக சேராததால் இந்த போர் 30 நிமிட நேரம் மட்டுமே நீடித்தது.
பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் நிறையவே வைத்திருந்தது பிரிட்டிஷ் ராணுவம். தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் படையினரிடம் அடி பணிந்தார்கள்.
ஆனாலும் இந்த செய்தி கிடைக்கப் பெறாத பல கப்பல்களில் இருந்த இந்திய போர் வீரர்கள் ஆங்காங்கு புரட்சிகர முழக்கங்களை இட்டவாறு தங்களுடைய எதிர்ப்புகளை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஓரிரு நாளில் அந்த முழக்கங்களும் அப்படியே அடங்கி போயின.
ஆனால் இந்த கலகம் உண்டாக்கிய அதிர்வுகள் இந்திய முழுமைக்கும் பரவி விட்டது. மக்கள் முன்பை விட இன்னும் அதிகமாக சுதந்திரத்தின் மீது அக்கறை காட்டினார்கள் போராடினார்கள்.
பல அடக்குமுறைகளுக்கு ஆளாகி சிறை சென்றும் ரத்தம் சிந்தியும் உயிரையும் விட்டார்கள். ஐ என் ஏ வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என போர்க் குரல் எழுப்பினார்கள்.
கப்பற்படை எழுச்சிக்கு தலைமை தாங்கிய படைத்தளபதிகள் பிரிட்டிஷ் ராணுவத்தால் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல பேர் நாடு கடத்தப்பட்டும் சில பேர் கொல்லப்பட்டும் விட்டார்கள்.
கத்தி இன்றி ரத்தம் இன்றி அகிம்சை முறையில் நடத்திய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக இன்றும் அதைப்பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படித்தான் சுதந்திரத்தை பெற்றோமா? இல்லை இல்லை என்கிறார் பி .ஆர் .பி.
நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய சிறு நூல் இது. ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய நூல்.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்
(Indhiya Suthanthira Porum Kapparpadai Ezhuchium)
நூல் ஆசிரியர்: பி.ஆர். பரமேஸ்வரன்
வகைமை : வரலாற்றாய்வு நூல்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 54/
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.