இந்து தேசியம் (Indhu Desiyam) – நூல் அறிமுகம்
இந்த நூலுக்கான விமர்சனம் பல சர்ச்சைகளை உள்ளடக்கியது என்றாலும், அதனை முன் வைக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். ஏனென்றால் இதுவரை இதுதான் இது..? என்று நம் சிற்றறிவுக்கு எட்டியதை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் தடம் அழித்து புதுக் கண்ணோட்டத்தை எனக்கு தந்துள்ளது இந்நூல் வாசிப்பு. வாசிக்கும் உங்களுக்கும் ஏற்படுத்தலாம்.
முதலில் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் இந்து மதமாக இருப்பின் நீங்கள் இந்துவா..? . நானும் ஓர் ‘இந்து’ என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் . ஆனால் நான் இந்துவல்ல என்று என் முகத்தை காட்டியது . எனில் நீங்கள் என்ன என்று வாசித்து தெரிந்து கொள்ளவும்.
தலைப்புகள்
———————–
1.நான் இந்துவல்ல.. நீங்கள்!
2.சங்கர மடம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
3.இந்து தேசியம்
4.இதுதான் பார்ப்பனியம்
5.புனா ஒப்பந்தம் : ஒரு சோகக் கதை
என்ற ஐந்து தலைப்புகளில் விரிவான அலசல்களை தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர் தொ. பரமசிவன் அவர்கள்.
முதல் தலைப்பு பற்றி:
இந்தியாவிலேயே பிறந்த வேதங்களிலோ , உபநிஷதங்களிலோ , ஆரண்யங்களிலோ இல்லை வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ ‘இந்து’ என்ற சொல்லே இல்லை.
நம்முடைய நாட்டிலே இந்து என்ற சொல் சிந்து நதிக்கு இந்தப்புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் தானாம். ஆரியம் திராவிடம் என்ற சொல்லுக்கு ஒரு வரலாறு உண்டு . ஆனால் அப்படி ஒரு வரலாறு இந்து என்று சொல்லுக்கு இல்லை என்கிறார்.
இந்து என்ற சொல் இந்திய அரசியல் சட்ட அங்கீகாரத்தை பெற்ற சொல் தான் . ஆனால் அது ஒரு சமயச் சார்புடைய சொல் அல்ல. “கிறிஸ்துவரல்லாத ,இஸ்லாமியரல்லாத , பார்சி அல்லாத மக்களெல்லாம் “இந்துக்கள்” என்று எதிர்மறையான வரைவிலக்கணம் தான் உண்டு எனில் முதல் தலைப்புக்கான கேள்விக்கு விடை கண்டு கொள்ளுங்கள்.
அதேபோல சைவ , வைணவ மதங்கள் பற்றிய விரிவான விளக்கம் கூடுதலாக ஸ்மார்த்தர்கள் பற்றிய விளக்கமும் தந்துள்ளார். ஸ்மார்த்தர்கள் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறதா.. ஆனால் காஞ்சிமடம் , சங்கராச்சாரியார் இந்த வார்த்தைகள் நாம் கேள்விப்பட்டது தானே. அவர்கள் தான் ஸ்மார்த்தர்கள் . அதாவது அவர்களுக்கும் ஆகமவிதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
இரண்டாவது தலைப்பு பற்றி:
2500 ஆண்டு பழமை வாய்ந்த மடம் என்று குறிப்பிடப்படும் இதன் வரலாற்றை நமக்கு விளக்குகிறார். சிருங்கேரி மடத்தினுடைய ஒரு கிளை கும்பகோணத்திலிருந்தது . அதனை காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்தார்கள். காஞ்சிபுரத்திற்கு இவர்கள் வந்த நேரத்தில் காமாட்சி அம்மன் கோயிலில் குழுக்களுக்கிடையே ஒரு தகராறு . ஒரு தற்காலிக ஏற்பாடாக கம்பெனி அரசாங்கத்தால் காமாட்சி அம்மன் கோவில் இவர்களின் கையில் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் 2500 ஆண்டு பழமை என்றால் காஞ்சியை ஆண்ட பல்லவன் உட்பட சேர, சோழ , பாண்டிய மன்னர்கள் இம்மடத்திற்கு ஏதேனும் செய்திருக்கிறார்களா? அதற்குரிய சான்று இருக்கிறதா என்று கேட்கின்றார்.
மந்திரம் என்றால் மறைவானது . அதனால்தான் வேதத்திற்கு ‘எழுதாக் கிளவி’ என்று பெயர் . பார்ப்பனர் அல்லாதவரின் கண்ணுக்கும் காதுக்கும் மறைக்கப்பட்டதால் தான் தமிழில் அதற்கு “மறை” என்ற பெயர் . ‘கிருத்துவ திருமுறை’ , ‘இஸ்லாமியத் திருமறை’ என்று சொல்வதெல்லாம் தவறு . இவை எல்லாம் மறைக்கப்பட்டவை அல்ல வெளிப்படையானவை.( ப.எ: 26)
மூன்றாவது தலைப்பு பற்றி:
வங்காளத்தில் நீதித்துறையை ஒழுங்குபடுத்த முயற்சியில் சர் வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார் . உள்நாட்டு நீதி முறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்து சட்டம் (Hindu Law) என்று பெயரிட்டார் . முன்னதாக சொன்னது போலவே கிருத்துவரல்லாத இஸ்லாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய ‘இந்து’ என்னும் சொல் முதல் முதலாக அதிகார அங்கீகாரம் பெறுகிறது.
இந்த தேசியம் என்ற தலைப்பில் இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு என்று பல ஆதாரப்பூர்வமான தகவல்களை அடுக்குகிறார்.
1801- ல் திருப்பத்தூரில் தூக்கிடப்பட்ட பெரிய மருது தன்னுடைய மரண வாக்கமூலத்தில் கம்பெனி அதிகாரிகளுக்கு முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்று , நான் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் வழங்கிய சொத்துக்களை கம்பெனியார் பறிக்கக் கூடாது என்பதுதான் . ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க எண்ணிக் கொண்டிருந்த கம்பெனி அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்நாட்டு மக்களின் மத உணர்வுகளை சீண்டி விடக்கூடாது என்பதில் முன் எச்சரிக்கை உணர்வுடன் 1817 வரை நடந்து கொள்கிறது. ஆக கோயில் சார்ந்த அனைத்தும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
பிற்பாடு ஆங்கிலேய கல்விமுறையான மெக்காலே கல்விமுறை வரும்பொழுதும் புதிய அதிகாரத்தைத் தேடி ஆங்கில கல்விக்குள் நுழைந்து கொள்கிறார்கள்.
இந்திய தேசியமும் திராவிட தேசியமும் என்ற தலைப்பில் இவ்விரு தேசியங்களுக்கும் இடையே உள்ள உறவுகளையும் முரண்களையும் விளாவாரியாக பேசுகிறது இப்புத்தகம்.
நான்காவது தலைப்பு பற்றி :
பார்ப்பனர் என்பவர் யார் ..? அவர்களுள் உள்ள பிரிவுகளை அவர்களது வழக்கங்களை தெளிவுப்படுத்துகிறது.
ஸ்ரீ வைணவர்கள் , அர்ச்சகர் , ஸ்மார்த்தர் என்பது முப்பெரும் பிரிவுகள்.
பார்ப்பனர் மேலாதிக்கம் ஒரு வரலாற்று பார்வை என்ற தலைப்பில் (ப.எ 69)
கோயில் சார்ந்த பார்ப்பனர்களின் உணவு, உடை உறைவிடம் , வேதக்கல்வி ஆகிய அனைத்து தேவைகளும் சேர , சோழ , பாண்டிய , பல்லவ , விஜய நகர அரசர்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன . ஏறத்தாழ 18 நூற்றாண்டு காலம் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டு அரசுகளின் சலுகை அளிக்கப்பட்ட குடிமக்களாக வாழ்ந்தனர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
கிபி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழக பண்பாட்டை அறிய சங்க இலக்கியங்கள் தெளிவான சான்றுகளாகும். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் ஒரு பேரலையாக இருந்தது . தனி ஒரு கடவுளை ஏற்றுக்கொள்ளாத சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக அனைத்து சாதிகளும் பார்ப்பனர்களால் ஒன்று திரட்டப்பட்டுள்ளது.
மெக்காலே கல்வியின் அடிப்படையில் நன்றாக மனப்பாடம் செய்யும் மாணவனே நிறைய மதிப்பெண் பெற்று சிறந்த மாணவனாகிவிடுவான் எனில் , அனைத்து துறைகளும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. இசை வேளாளர் வகுப்புச் சகோதரிகள் ஆடிவந்த ‘சதிர்’ என்னும் தமிழர் நடனத்தை காலனி ஆட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் மேடை ஏறி ஆடத் தொடங்கிய போது அதற்கு ‘பரதநாட்டியம்’ என்று புது பெயர் சூட்டப்படுகிறது.(ப.எ-73)
ராஜாஜி அவர்களை பற்றிய மிக விரிவான தெளிவான வரலாறும் , இந்தியாவில் கட்சி தாவல் நாடகத்தை முதன் முதலாக அரங்கேற்றியவர் யார் என்ற தகவலும்..
பெரியார் குறித்த விளக்கங்களும் நிதானமாக வாசிக்கப்பட வேண்டியவை.
இறுதியாக இறுதி தலைப்பு:
ஒரு சோகக் கதை என புனா ஒப்பந்தம் பற்றி பேசுகிறார் தொ.ப அவர்கள். இதில் மகாத்மா காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணம் , அம்பேத்கருக்கும் எம்.சி.ராசா இவர்களுக்கு இடையேயான பிரிவுகளுக்கு காரணம் பற்றிய செய்திகளை விளக்குகிறார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த இரட்டை வாக்குரிமையை , அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் போராடி பெற்ற உரிமையை இந்த சமூகத்தின் நன்மைக்காக அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே காந்தியடிகளின் நோக்கம் ஆகும்.
ஜவகர்லால் நேரு அவர்கள் தன் சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார் . “அரசியல் பிரச்சனை ஒன்றிற்கு மதம் தொடர்பான உணர்வுபூர்வமான அவரது முறை எனக்கு கோபத்தை உண்டாக்குகிறது . அது தொடர்பாக கடவுளை அடிக்கடி குறிப்பிடுவதும் எனக்கு பிடிக்கவில்லை . உண்ணாவிரதம் இருப்பதற்கான நாளையும் கடவுளே குறிப்பிட்டார் என்கிறது போல அவர் கூறியிருந்தார் . இப்படித்தான் பிறருக்கு முன் உதாரணமாய் இருப்பதா” என்கிறார்.(ப.எ:127)
இறுதியாக வீரத்தன்மையை இழந்து இரக்கத்தை தேட வேண்டியவரானார் என்பதை கண்டு என் மனம் இறங்கி புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன் என்கிறார் ரோஜாவின் ராஜா.
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் எது உண்மை பொய் என்று தக்க ஆதாரங்களோடு அவரவர் வாசிக்கும் போது சரி பார்த்துக் கொள்ளலாம். எனினும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்…
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : இந்து தேசியம்
ஆசிரியர் : தொ.பரமசிவன்
தலைப்பு : ஆன்மீகம்
பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்:128
விலை: 50
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.