இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? – நூல் அறிமுகம்
‘ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தைக்கும் பின்னால்
ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கும்’
-மாசேதுங்
இந்த மேற்கோளை பொருத்திப்பார்த்து, இன்றைய பாஜக தலைவர்களின் அணுகுமுறையை புரிந்து கொள்ள முடியும். அதானி – அம்பானி போன்றவர்கள்தான் செல்வத்தை உருவாக்குகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கூச்சநாச்சமின்றி அறிவித்தார்கள். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பொருள் என்ன? பாஜக தலைமையிலான அரசு நவதாராளமய பொருளாதாரக் கொள்கையை அமலாக்குவதுடன், முதலாளித்துவத்தை முழுமையாக பாதுகாப்பதும், வளர்ப்பதும் தான் அவர்களுடைய கொள்கை என்பது புரிகிறது.
மாவோ குறிப்பிட்டபடி ஒருவருடைய வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்பாட்டுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் சித்தாந்தத்தைக் கண்டறிய முடியும்.
நமது நாட்டில், பாஜக – காங்கிரஸ் இரண்டும் அகில இந்திய அளவில் செயல்படும் ஆளும் வர்க்கக் கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொருளாதாரக் கொள்கையில் வேறுபாடு கிடையாது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைத்தான் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது அமலாக்கியது. 2014ஆம் ஆண்டில், தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக நவீன தாராளமயக் கொள்கைகளை அதிவேகமாக அமலாக்கி வருகிறது. நவீனதாராளமயக் கொள்கை குறித்த அணுகுமுறையில் ஒற்றுமை உள்ள, பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரு பிரச்சனையில் வேறுபாடு உள்ளது. பாஜக ஒரு வகுப்புவாதக் கட்சி. காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி. இதுவே அந்த வேறுபாடு. வகுப்புவாத பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகளின் நடவடிக்கைகள் மக்கள் ஒற்றுமைக்கும், தேசக் கட்டமைப்புக்கும் ஆபத்து விளைவிக்கிறது.
1948ஆம் ஆண்டில் கோட்சே கும்பலால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டது. அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலுக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இனி அரசியலில் ஈடுபடாது, கலாச்சார அமைப்பாக செயல்படும் என ஆர்எஸ்எஸ் எழுதிய கடிதத்தை தொடர்ந்து அதன் மீதான தடை நீக்கப்பட்டது. தமது அமைப்பால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாது என்ற நிலையில் 1951ஆம் ஆண்டு ஜனசங்கம் என்ற கட்சியை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது. அதுமட்டுமன்றி, அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் ஏராளமான இந்துத்துவ/சங் பரிவார அமைப்புகளை உருவாக்கியது. அவை இன்றும் செயல்பட்டுவருகின்றன. உதாரணமாக கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 சங் பரிவார அமைப்புகள் இன்றைக்கு இயங்கி வருகின்றன.
ஜனசங்கம் ஒரு கட்டத்தில் ஜனதா கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டது. அதன் பின்னர், 1980ஆம் ஆண்டு ஜனதாவில் இருந்து உடைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. பாஜகவிற்கு அத்வானி தலைமையேற்றார். மூன்று பிரச்சனைகளை மையமாக வைத்து பாஜக-வினர் தங்கள் செயல்பாட்டை அகில இந்திய அளவில் முன்னெடுத்தனர். பாபர் மசூதியை அகற்றுவது, அரசமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்பதை முன்னிறுத்தி அவர்கள் இயங்கினர். பல மாநிலங்களிலும் மதக் கலவரங்களை உருவாக்கி, மக்களை பிளவுபடுத்தும் அடிப்படையில் பாஜக செயல்பட்டது. அதன் தலைவர் அத்வானி தலைமையில் – நாடு தழுவிய ரத யாத்திரையை பாஜக முன்னெடுத்தது. ராமரின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட அந்த யாத்திரை சென்ற பகுதிகளிலெல்லாம் கலவரங்கள் வெடித்தன. மிகுந்த உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1992 டிசம்பர் 6 அன்று, சங் பரிவாரத்தினர் பாபர் மசூதியை தரைமட்டமாக்கினர். அப்போது 4 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக இந்த நோக்கத்துக்காக உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் வகுப்புவாத அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்து வந்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். பாஜக-வின் தோற்றத்திற்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் வகுப்புவாத வன்முறைப் போக்குகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, அதற்கு எதிரான போராட்டங்களை நாடு தழுவிய அளவில் முன்னெடுத்து வருகிறது. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இந்தக் களத்தில் இணைந்து நின்றன. சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு அறிக்கைகள், அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானங்களில் பாஜக, சங் பரிவாரங்கள் குறித்த மதிப்பீடுகளைக் காணலாம். மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள், பாஜகவின் சித்தாந்த அடிப்படைகள் குறித்து ஆழமான ஆய்வினை மேற்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில் பாஜக அதன் அரசியல் பிரிவாக செயல்படுகிறது. இவற்றின் நீட்சிகளாக ஏராளமான சங்பரிவார அமைப்புகளும் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இந்த காவிக் கும்பல்களின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் சித்தாந்தம் என்ன? மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி நாட்டை ரணகளமாக மாற்றுகிற கொடூரமான வேலையை சங் பரிவார அமைப்புகள் ஏன் செய்கின்றன? அவர்களுடைய நோக்கம் தான் என்ன என்பதை அறிய ஆர்.எஸ்.எஸ். துவங்கிய காலத்திலிருந்து அவர்களுடைய நூல்கள், அறிக்கைகளைத் தேடி கண்டுபிடித்து, அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் தோழர் சீத்தாராம் ஆழமாக பரிசீலித்தார்.
இலை தெரிகிறது, கிளை தெரிகிறது, மரம் தெரிகிறது, ஆனால் அதன் வேர் தெரியவில்லை. அந்த வேரை ஆய்வு செய்யும் பணியை தன்னுடைய பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தோழர் சீத்தாராம் யெச்சூரி தொடர்ந்து விடாது முன்னெடுத்தார். மாவோ குறிப்பிட்டதுபோல, ஒருவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் மறைந்திருக்கும் சித்தாந்தத்தைக் கண்டறிய வேண்டும் என்கிற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்/சங் பரிவாரங்கள் குறித்த சீத்தாராம் யெச்சூரியின் ஆய்வுகள் திகழ்கின்றன.
ஏராளமான ஆவணங்கள், நூல்களை வாசித்து தரவுகளை சேகரித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தினார். மறைந்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா
1974 ஆம் ஆண்டு ‘இன்று இந்தியா எதிர்கொள்ளும் தத்துவார்த்தப் போராட்டம்’ என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் ஆற்றிய உரை பல ஆண்டுகளாக வெளிச்சத்திற்கு வராமல் இருந்தது. அந்த உரையை 2018ல் ஆங்கில மார்க்சிஸ்ட் இதழில் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டார். “நமக்கு முந்தைய சீரழிவு தத்துவங்களுடன் நாம் கணக்குத் தீர்க்க வேண்டும்” (We should settle accounts with our erstwhile philosophy) என்ற மார்க்ஸின் மேற்கோளை பேராசிரியர் தேவிபிரசாத் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில், தோழர் சீத்தாராம் தனது தேடலை தொடர்ந்தார்.
‘இந்துத்துவாவின் அடிப்படை அம்சங்கள்’ என்ற தலைப்பில் சாவர்க்கர் எழுதிய நூல் ஒன்று 1923ஆம் ஆண்டு வெளியானது. 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டபோது, அந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக, சித்தாந்தமாக சாவர்க்கர் எழுதிய நூலை சங் பரிவாரங்கள் பயன்படுத்தின. பிற்காலத்தில் ‘இந்து என்பவர் யார்? என்ற தலைப்பில் இந்த நூல் மறுபதிப்பாக வெளியானது.
இந்துத்துவாவும் இந்து மதமும் ஒன்றல்ல என சாவர்க்கர் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். மதத்தை அடிப்படையாக வைத்து இந்த நூலை எழுதினாலும், ‘இந்துத்துவா’ என்பது மதம் பற்றியது அல்ல, அது ஒரு அரசியல் திட்டம் (Political Project) என்பது தான் சாவர்க்கர் குறிப்பிடுவது. இன்று வரையில் ஆர்.எஸ்.எஸ். பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகள் இந்துத்துவா என்பதை அரசியல் திட்டமாக அமலாக்கிடத்தான் இந்தியாவை ‘இந்துத்துவ தேசமாக’, ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றிட முயற்சிக்கிறார்கள். 2014-ல் மோடி தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு ‘இந்துத்துவா’ என்ற தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமலாக்கிட சங் பரிவாரங்கள் வெகுதூரம் சென்றுவிட்டன.
சாவர்க்கர் அடிக்கோடிட்ட இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை கோல்வால்கர் தனது நூலில் வெளிப்படையாக விளக்கியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘குருஜி’ என அழைக்கப்படும் கோல்வால்கரால் 1939ஆம் ஆண்டு எழுதப்பட்ட “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்”. நூலின் முதல் பதிப்புப் பிரதியை சீத்தாராம் யெச்சூரி தன்னுடைய தேடலின் வாயிலாகக் கண்டறிந்தார். இந்த நூலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாசிச செயல்திட்டம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை தனது கட்டுரைகள் மற்றும் உரைகளின் வழியாக அம்பலப்படுத்தி வந்தார் தோழர் சீத்தாராம். இந்தக் கட்டுரைகளை கண்டு அதிர்ச்சியடைந்த சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அந்த நூல் கோல்வால்கரால் எழுதப்படவில்லை என்று முதலில் மறுத்தார்கள். சிலர் நாங்கள் அந்த நூலை மறுபதிப்பு செய்யவில்லை என்று விளக்கம் தந்தார்கள். ஆனால், யாரும் அந்த நூலில் இடம்பெற்றிருந்த கருத்துகளை மறுக்கவில்லை.
கோல்வால்கரின் மேற்கண்ட நூலைப்பற்றி சீத்தாராம் யெச்சூரியின் கட்டுரைகளைப் படித்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஏன் அதிர்ச்சியானார்கள்? கோல்வால்கர் எழுதவில்லை என ஏன் முதலில் மறுத்தார்கள்? 1942ஆம் ஆண்டுக்கு பின் அந்த நூல் ஏன் மறுபதிப்பு செய்யப்படவில்லை என்பதற்கான பதிலை தோழர் சீத்தாராம் யெச்சூரியின் கட்டுரையை படித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். கோல்வால்கர் முன்வைத்த சித்தாந்தம் பாசிசத் தன்மையிலானது என்பதை அம்பலப்படுத்தி சீத்தாராம் யெச்சூரி எழுதிய கட்டுரையை ‘பிரண்ட் லைன்’ பத்திரிகை 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது. பிற்காலத்தில் அந்தக் கட்டுரையை சிறு நூலாக பிரண்ட்லைனே வெளியிட்டது. அன்று அதன் ஆசிரியராக இருந்த பத்திரிகையாளர் என்.ராம் இந்த நூலுக்கு முன்னுரை எழுதினார்.
இந்த நூலை கோல்வால்கர் எழுதிய காலம் முக்கியமானது. ஜெர்மனியில் பாசிச `ஹிட்லர் ஆட்சியைப் பிடித்ததோடு ஜெர்மனியிலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்களை கொன்றுகுவித்து வந்த காலம் அது. `ஹிட்லரின் பாசிச நடவடிக்கையைக்கண்ட கோல்வால்கர் உற்சாகமடைந்து இந்தியாவிற்கும் அந்த அணுகுமுறைதான் உகந்தது என தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் ஜெர்மனி உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்”. இவ்வாறு கோல்வால்கர் அந்த நூலில் குறிப்பிடுகிறார். அதாவது, யூதர்களை கொன்றுகுவிக்கும் `ஹிட்லரின் பாசிச சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து இங்குள்ள இஸ்லாமியர், கிறித்துவர்களை அழித்திட வேண்டுமென்பதை வெளிப்படையாகவே கோல்வால்கர் தனது நூலில் குறிப்பிடுகிறார். கோல்வால்கரின் கருத்தியல் அடிப்படையில்தான் மோடி அரசாங்கம் இந்திய குடியுரிமைச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்தது.
யூதர்களை தனது எதிரியாக `ஹிட்லர் பாவித்ததுபோல், இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறித்துவர்களை தங்களது எதிரியாக கட்டமைத்து அவர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்திட வேண்டும்; இதன் வாயிலாக மத மோதலையும், மதக் கலவரங்களையும் உருவாக்கி மதரீதியில் மக்களை பிளவுபடுத்திட வேண்டும்; இதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உத்தி. அதைத்தான் பாஜக உள்ளிட்டு அனைத்து சங்-பரிவாரங்களும் கடைப்பிடிக்கின்றன. இந்த உத்தியைப் பயன்படுத்தி மதவெறி அரசியலின் மூலம் அதிகாரத்திற்கு வந்து இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்பது
ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் நோக்கம்.
“நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை அவர்கள் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) தேசிய வாழ்வில் இடம் பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்கள் எனில் அவர்கள் அந்நியர்களாக கருதப்படுவதை வேறெப்படியும் இருக்க முடியாது”. இவ்வாறு பச்சையாக, வெளிப்படையாக கோல்வால்கர் தனது நூலில் சிறுபான்மை மக்களை ‘அந்நியர்கள்’ என்று குறிப்பிட்டார். அந்த சித்தாந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி சிறுபான்மை மக்களை அந்நியர்களாக்கி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிட ஒன்றிய மோடி அரசு முயற்சித்து வருகிறது என்பதை உணர முடியும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை கொள்கைக்கு முரணாக இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என்பதால்தான் கோல்வால்கர் மனுநீதி அடிப்படையில் அரசியல் சட்டம் அமைய வேண்டுமென 1949ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரப்பூர்வமான நாளேடு அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை ஒட்டி எழுதிய தலையங்கத்தில் மனுதர்ம சாஸ்திரம் அரசியல் சாசனம் ஆக்கப்படாததைக் கண்டித்தது. 1950ல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆட்சேபித்தது; ஏற்க மறுத்தது. தற்போது, கோல்வால்கர் மொழியில் மோடி பேசவில்லை என்றாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக இருக்கக் கூடிய மதச்சார்பின்மையை அவர் தகர்த்து வருகிறார்.
மூன்றாவது முறையாக மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கிறது. தனது கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் அவர் பிரதமராகி இருக்கிறார். இருப்பினும், கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கையோடு தங்களது நீண்ட கால நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா – இந்துராஷ்டிராவை நிர்மாணிக்கும் நோக்கத்தோடு மதரீதியில் மக்களை பிளவுபடுத்தக் கூடிய நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அசாம் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நில விற்பனை செய்வதை நில ஜிஹாத் என்று கூறி அதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்துக்கள் முஸ்லிம்களுக்கு நில விற்பனை செய்தால் மாநில முதலமைச்சர் அனுமதியின் பேரில்தான் நில விற்பனைப் பத்திரம் பதிவு செய்ய முடியும். இத்தகைய பரிவர்த்தனைகள் முதல்வரின் அனுமதி பெற்றுத்தான் மேற்கொள்ள முடியும் என்றால் எவ்வளவு கொடூரமான சட்டம்?
உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு, முஸ்லிம் – இந்து ஆகிய இரு சமூகங்களுக்கு இடையிலான திருமணங்களை லவ் ஜிஹாத் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து திருமணம் செய்து கொள்பவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கக்கூடிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இத்தகைய சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அசாம் மாநில முதல்வரும் அறிவித்திருக்கிறார்.
சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சங் பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் தாக்கி வருகின்றனர்.
மூன்றாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு வகுப்புவாத முனைப்பை மேலும் கூர்மைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முஸ்லிம்களை வன்முறைக்குத் தூண்டிவிடும் செயல்களிலும் பாஜக – ஆர்எஸ்எஸ் இறங்கியுள்ளன.
ஒன்றிய பாஜக அரசின் மதவெறி அரசியலை விமர்சிப்பவர்களை விசாரணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கும் கொள்கையை 2014ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசு கடைப்பிடித்து வருகிறது. சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA), சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டம் (PMLA ACT), மத்திய புலனாய்வுத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற சட்டங்கள் நிறுவனங்கள் மோடி அரசை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை மேலும் பலப்படுத்திட எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட 3 கிரிமினல் சட்டங்கள் ஜூலை மாதத்திலிருந்து அமலாக்கப்பட்டு வருகிறது. இத்தகையை நடவடிக்கைகள் எல்லாம் தங்களது நோக்கத்தை அமலாக்கிடத்தான்.
ஒன்றிய பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் தங்களது 100 ஆண்டு கால நிகழ்ச்சி நிரல் – இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றிடும் தங்களது அடிப்படை நோக்கத்தை விளக்குவதுதான் கோல்வால்கர் எழுதிய ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’ என்ற நூல். இந்த நூலின் நோக்கத்தை அம்பலப்படுத்தி தோழர் சீத்தாராம் எழுதிய ‘இந்துராஷ்டிரம் என்றால் என்ன?’ என்ற கட்டுரை உள்ளிட்டு அவரின் வேறு பல முக்கிய கட்டுரைகளையும் தொகுத்து “மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை” என்ற நூலை ஏற்கெனவே பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. தற்போது ‘இந்துராஷ்டிரம் என்றால் என்ன?’ என்ற தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுடைய கட்டுரையை பாரதி புத்தகாலயம் தனி நூலாக வெளியிடுவது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.
– ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
சிபிஐ(எம்)
7.11.2024
சென்னை.
நூலின் தகவல்கள் :
நூல் : இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?
ஆசிரியர் : சீத்தாராம் யெச்சூரி
தமிழில் : ச.வீரமணி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 56 பக்கங்கள்
விலை : ரூ.50
தொடர்பு எண் : +91 94449 60935
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.