புத்தகத்தை வாசித்து முடித்ததும் உடம்பு ஒரு நிலைக்குள் நிற்க முடியாமல் இருதயம் துடித்துக் கொண்டே.. ஆண்டு கொண்டிருக்கும் ஃபாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை எப்போதிருந்து குயுக்தியோடு துவக்கி இருக்கிறார்கள் இந்தியாவிற்குள் என்பதை யோசிக்கும் போதினில் நம்முடையை திட்ட மிட்ட வேலைகளின் போதமயை உணர வைக்கிறது. கைபர் போலன் வழியாக வந்தவர்கள் மூளையாக இருந்து, இந்தியப் பண்பாட்டிற்குள், கலாச்சாரத்திற்குள் தம் ஆளுமையை செலுத்தி எதிர்க் கட்சிகளும் கூட மன உறுதியோடு எதிர்க மனமில்லாமல் அவர்களின் வாலாக மாறிய நிஜங்களை
கண்கூடாகப் பார்த்தோம்.. பாப்ரி மஸ்ஜித் உள்ளிட்ட பல மசூதிகளும், மாதாகோயில் மணிகளும் சிதைக்கப்பட்ட போதும்.. தீர்ப்புகள் பல எழுதப் பட்ட பொழுதிலும்.
இந்தியாவின் எதிர்க் கட்சிகள் பலதும் எதிர் நிலை எடுத்து சவாலாக நிற்க முடியாமல் அவர்கள் செயல்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் சூழல் என்பது ஏதேச்சையாக
நடைபெறவில்லையென்பதை, அவர்கள் இந்தியாவிற்குள், இந்திய மக்கள் புழங்கும் இடமெங்கிலும் தங்களின் பிடிமானத்தை எப்படியெல்லாம் நிகழ்த்திக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்பதை முற்போக்காளர்களோ.. இடதுசாரி சித்தாந்தத்தின் வழி வந்தவர்களோ பெரும் குரலெடுத்துச் சொன்னாலும், “இவிங்களுக்கு இதே வேலைதான்” என்கிற பிரச்சாரத்தையும் நடத்துவதற்கும் ஆட்களை நியமித்திருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.
இவைகளை தனது சொந்த அனுபவங்களோடும், பலத் தரவுகளோடும் பொதுவெளியில் கொடுத்திருப்பவர், தன்னுடைய 13 வயது முதல் RSSல் இருந்து சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பல அவதூறுப் பிரச்சாரத்தை மேற்கொண்டும்.. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பொழுது தன் சொந்த கிராமத்தில் இருந்து அயோத்திக் கலவரத்திற்கு செங்கல்லோடும்… கூர் தீட்டிய வாளோடும் சென்று; இன்று இந்திய மக்களுக்கு.. இந்துக்களுக்கு.. தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு வேலைகளை நடத்திவரும் இந்துத்துவா வெறியர்களுக்கு எதிராக கருத்துச் செறிவான சமரசமில்லாதொரு பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் “பன்வார் மெக்வன்ஷி” . இவர் ஆர்.எஸ்.எஸ். சங் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். RSS அமைப்பினால் துரோகி என அறிவித்து இவரின் தலைக்கு பலமுறை விலை வைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நிஜங்களை அப்படியே எந்த சேதாரமுமின்றி அரசியல் கருத்தாழமுள்ள,
இந்துத்துவாவிற்கு எதிரான சாட்சியாக இதைத் தமிழ் மொழியாக்கம் செய்து அளித்திருக்கிறார் தோழர் செ.நடேசன் அவர்கள். தமிழ் மண்ணில் இந்துத்துவாவிற்கு எதிராக கருத்துப் போர் செய்பவர்கள் வைத்திருக்க வேண்டிய “நூல் ஆயுதமாக” வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் எதிர் வெளியீடு நிறுவனம். இருவருக்கும் நன்றிகளும்.. பாராட்டுதல்களும்.
தலித் மக்களுக்கு எதிரான, சூத்திர மக்களுக்கு எதிரான ஒரு சித்தாந்தம் எப்படி அவர்களின் ஆதரவோடு பொதுவெளிக்குள் ஒரு கருத்தை வெளியிட்டு தங்களின் செயல்பாட்டைத் திட்டமிடமுடிகிறது.. திட்டமிட்டதை அவர்களைக் கொண்டே செயல்படுத்தும் மன உளவியலை எத்தனை ஆண்டுகாலமாக அவர்களுக்குள் பழக்கப்படுத்தி வந்தார்கள்.. அதற்கு ஆதராவாக இதிகாசங்களையும், புராணங்களையும் எப்படி வலுவான ஒரு கத்தியாக கையிலெடுத்து மனித மனங்களுக்குள் அறுவை சிகிச்சை சரியான இடைவெளியில் இடைவிடாது தொடர்ச்சியாக மேற்கொண்டார்கள், மேற்கொண்டும் வருகிறார்கள்.. உழைக்கும் எளிய மக்களின் துடிக்கும் இருதயத்தின் ஓசை “லப்டப்” என்பதற்கு பதிலாக “ஜெய் ஸ்ரீராம்” என எப்படி ஒலித்ததுவென இப்புத்தகத்தில் கொண்டுவந்திருக்கிறார் மெக்வன்ஷி.
பொதுவெளிக்கு வரக் கூடாதவர்கள் பெண்கள்.. ஆளுமைக்குத் தகுதியற்றவர்கள் பெண்கள்.. அவர்கள் படைக்கப் பட்டது என்பதுவே ஆண்களின் இச்சைகளை தீர்ப்பதற்கும், அவனின் விந்தைச் சுமந்து அவனுடைய வாரிசுகளை சுமப்பதற்குத் தான்.. ஆண்களின் அடிமைகளே பெண்கள் என்கிற சித்தாந்தத்தை அந்தப் பெண்களே கேள்விகள் ஏதும் எழுப்பாமல் அப்படியே ஏற்று ஏற்று சேவகம் செய்திடும் குயுகத்தியான.. வலுவானதொரு சிந்தனையை அவர்களால் எப்படி இந்த விஞ்ஞான உலகத்திலும் திட்டமிடப்பட்டு வருகிறது.. இந்துத்துவா வெறியர்களால் வடிவமைக்கப்பட்ட இக் கருத்திற்கு பிரச்சாரத் தூதுவர்களாக வரலாற்றின் நிஜ மனிதர்களும்.. இதிகாசங்களின், புராணங்களின் கதாநாயகர்களும் எப்படி கைபிடுத்து ஒவ்வொரு நாளும் அழைத்து வரப்படுகிறார்கள் அவர்களின் “ஷாகாக்களில்” என்பதை வலுவான சாட்சியாக பல இடங்களில் பதிவாக்கி இருக்கிறார் மெக்வன்ஷி.
பொதுவெளியிலாகட்டும்…குடும்ப உறவுகளிலாகட்டும்.. இந்துத்துவாவினை எப்படி தந்திரத்தோடு முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.. கேள்வி கேட்பதுவே ஆத்மாவுக்கு.. கடவுளுக்கு எதிரானது என்கிற கருத்தாக்கத்தை விஷமேற்றிய சிரஞ்சியை மனித இருதயத்திற்குள்.. மனித சிந்தனைக்குள் வலி தெரியாமல் ஏற்றிடும் வித்தைகளுக்கு ஒவ்வொரு சங் எப்படி சுயமாக.. கூட்டாக செயல்பட செய்தனுப்பப் படுகிறான் பல ஆண்டுகளாக “ஷாகாக்களில்” என்பதை அவர் சொல்லிடும் பொழுதினில் நடந்த நடக்கும், பலதை நாம் யோசித்திட வேண்டி இருக்கு. இந்தியாவின் அரசு பள்ளிகளும் கூட ஷாகாக்களின் கூடமாக மாறி வருகிறது. யோகா மையங்களாக மாற்றப் படுகிறது.
வரலாற்று ஆய்வுகளுக்கு எதிராக திரித்து எழுதவொரு வரலாற்று அறிஞர்ககாக ஒரு கூட்டம்.. அறிவியல் ஆய்வுக்கு எதிராக அறிவுக்கு புறம்பானதை பேசி அமல்படுத்த வொரு அறிவியலாளர்கள் என ஒரு கூட்டம்.. கல்விப் புலத்தை நவீனப்படுத்தி மேம்படுத்துகிறோமென அடிபடைக் கல்வி உரிமைக்கு எதிரான கல்வியாளர்கள் முகமுடியில் ஒரு இயக்கம்.. வலுவான எதிர் கருத்துக்கள் பொது வெளியில் வந்து விழும் பொழுதினில் அதை கழுத்தறுக்கவும் கொலை செய்யவும் ஒரு கருத்துரிமையாளர்கள், நம்பிக்கையாளர்களென ஒரு கூட்டம்.. கருத்துரிமைக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு எதிராக கருத்து பேசுபவர்களின் உரிமைக்கான ஒரு கருத்தை வடிவமைப்பாளர்களின் ஒரு கூட்டம்..
வன மக்களின் வாழ் உரிமைகளை பேசிக் கொண்டே நாகரீகத்தின் பெயரால் வனத்தை, வன மக்களை அழிப்பதற்கான வனமக்களைக் கொண்டே ஒரு கூட்டம்.. மலை மக்களின் உரிமைகளை பேசிக் கொண்டே மலைகளில் இருந்து அம்மக்களை அம்மக்களாகவே வெளியேற வைத்திடும் வஞ்சகம் மிகுந்த செயல்களை நியாப்படுத்திட மலை மக்களைக் கொண்டே ஒரு கூட்டம்.. நான்கு வர்ணங்களை காத்திட ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் ஒரு கூட்டம்.. வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்களை அப்பக்கமே வைத்து கொண்டுபோக ஒரு பெருங்கூட்டம்.. தொழிலாளர்களை அணி திரட்ட ஒரு கூட்டம்..
தொழிற் முனைவர்கள், தொழிலதிபர்களை திரட்டி நிற்க ஒரு கூட்டம்.. இப்படி இந்தியாவின் பொது வெளியெங்கிலும் பிரச்சனைகளை.. கலவரங்களை உருவாக்கிக் கொண்டே ஒன்றுக் கெதிராக இன்னொன்று.. இன்னொன்றுக்கு ஆதரவாக மற்றொன்று என் மக்களை யோசிக்க விடாமல்.. பிரச்சனைகளோடவே வாழ வைத்திடும் வஞ்சனை மிகுந்த இந்த ஃபாசிச ஆட்சியை உருவாக்கிட திட்ட மிட்ட கருத்துப் பிரச்சாரங்கள் எப்படி வடிவமைத்துக் கொடுக்கப் பட்டது.. கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த நூலின் பல அத்தியாயங்களில் கொண்டு வந்திருக்கிறார் மெக்வன்ஷி.
இந்திய அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு; ஜனநாயக பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு இன்று எல்லாவித ஜனநாயக உரிமைகளையும்
நசுக்கிக் கொண்டு பாராளு மன்றத்தையும் முற்றாக முடக்கக் கூடிய வேலைகளை
எந்தவித கூச்ச நாச்சமுமுன்றி அறிவித்துவிட்டும்.. அறிவிக்காமலும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது..
இதற்கெல்லாம் இவர்களை தயார் செய்து அனுப்பிய அமைப்பு என்பது ஆர்.எஸ்.எஸ். என்பதை வடமாநிலங்களில் தனக்கான சுய அனுபவங்களில் இருந்தும்.. தன்னிடம் உள்ள ஆதாரங்களில் இருந்தும் பேசுகிறார் . இந்துக்களுக்கு எதிராக இந்துக்களையே கூர் தீட்டி கைகளில் கொலை ஆயுதம் கொடுத்திடும் ஒரு அதிகார வெறிகொண்ட “பார்ப்பனிய பானியாக்களின்” அமைப்பு என்பதை அவர் பல்வேறு போராட்டங்களிலும்.. நீதிமன்றங்களிலும்.. காவல் நிலையத்திலும்.. பொதுவெளியிலும்
அம்பேத்கர் அளித்த சட்ட உரிமையில் நின்று வாதாடி இருக்கிறார்.
“இந்துவாக நான் இருக்க முடியாது’ என்கிற இந்த நூலில்;
திரும்பும் திசையெங்கிலும் சங்கிக் கூட்டம் ரெளடிகளாக.. கொலையாட்களாக.. அதுவும் கூட அவர் ஆர்.எஸ் எஸ்.ஸால் துரோகி என அழைக்கப்பட்டு அவரின் தலைக்கு விலை வைத்தபிறகும் கூட தமது இடையறாத போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டே..
இந்து மக்களின் முதல் எதிரியே ஆர்.எஸ்.எஸ். என பல இடங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அம்பேத்கர் எழுதி வைத்த சட்ட உரிமைகளை முன்வைத்து சாதி வெறித் தூண்டலுக்கு எதிராக நுட்பமாய் திட்டமிட்டு பல ஆயிரக் கணக்கான தலித்துகள்.. மலைவாழ் மக்களைஅணிதிரட்டி பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி இருக்கிறார் ராஜஸ்தான் மண்ணிற்குள்ளேயே.!
இந்துக்களை இந்துக்களுக்கு எதிராக எப்படி ஆர்.எஸ்.எஸ்..கூர் தீட்டி பழக்குகிறது.. சீழ் நாற்றமெடுக்கும் இந்துத்துவாவின் அத்தனை அசிங்கங்களையும் அம்பலப்படுத்துகிறார்..
கருத்தால் மோத வருபவர்களுக்கு கருத்தாலும்.. கட்டையால் மோத வருபவர்களுக்கு கட்டையாளும்.. துப்பாக்கித் தோட்டாக்கள் கொண்டு வருபவர்களுக்கு துப்பாக்கியாலும் பதில் சொல்கிறார் பல நெருக்கடியான் சூழலில்.
எது இவரை இப்படி நடந்திட சாத்தியப் படுத்தியது..? இவருக்கு பின்புலமாக இருந்து இவரின் அப்பா, அம்மா, மனைவி , குழந்தைகள் உறுதுணையாக வைத்திருந்த போராட்ட குணத்தின் மூல வேர், அனுபவம் என்னவெல்லாம் என்பதை நம்மையும் யோசித்திட வைத்திருக்கிறார் இந்த நூலினை வாசித்திடும் பொழுதினில்.
ஆர்.எஸ்.எஸ்.சால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த மனிதரால்…ஆர்.எஸ்.எஸ்.சுக்கு
எதிராகவே செயல்பட எது இவரை முன்தள்ளியது.. அது இன்னும் இங்கே எப்படி உயிரோட்டமுள்ளதாக நிலப்பரப்பு முழுதும் நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் எப்படியெல்லாம் ஊடுறுவி வருகிறது பல அமைப்புகளை ஊடறுத்து வந்திருக்கிறது. அதற்கு சவாலாக எழுந்து நிற்கவேண்டிய நாம் சக்தியற்று இன்னும் எழவே முயற்சிக்க வில்லையோ என்கிற எண்ணமும் .. நமது கூட்டுச் செயல்பாட்டின் போதாமையை நமக்கு கோடிட்டு சொல்லிச் செல்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் அத்தனை முகத்திறையையும், தில்லாலங்கடித தனத்தையும் கிழித்துத் தொங்க விடுகிறார் புத்தகம் முழுவதிலும் மெக்வன்ஷி.
நம் தமிழ் நாடு கல்வி அறிவுள்ள மாநிலம்.. பகுத்தறிவாளர்களின் மண்.. ஆனால்
திமிரெடுத்துப் பேசும் இந்துத்துவா வெறியர்களுக்கு எதிராக..
அம்பேத்கர், பெரியார் சிலைகளை தொடர்ந்து சேதப்படுத்தியும்…அவமரியாதை செய்துவரும் தமிழக சங்கிக் கூட்டத்திற்கு எதிராக அவர்கள் பாணியில் பதில் சொல்லவிடாமல் எவரின் நூல் கயிறு கட்டி வைத்திருக்கிறது. நம் கைகளையும்… வாய்களையும். சிந்தனைகளையும்..?
தனியொரு நபராக.. நண்பர்கள் துணையோடு ஒரு சித்தாந்ததிற்கு எதிரான
போராட்டத்தை எல்லாத் தளங்களில் ஆழத்தோடும்.. ஆவேசத்தோடும் நிகழ்த்தி இருக்கிறார் மெக்வன்ஷி.. ஆனால் தமிழகத்தில் அமைப்பாகத் திரண்டிருக்கும் நம்மால் நமது ஊழியர்களை எதிர் சித்தாந்தத்திற்கு எதிராக வேண்டாம்.. நம் சித்தாந்தத்திற்கு ஆதரவாக சரியான, சுய லாப நோக்கு பார்க்காத ஊழியனாகக் கூட தயார்ப் படுத்தி தேர்தல் கால போராட்டக் களத்தில் கூட இறக்கிட முடியாத நிலையில் இருக்கிறோம் என்கிற அவல நிலையில்தான் தமிழக பகுத்தறிவாளர் மண் இருக்கிறதோ என்கிற பயம் மேலோங்கி நிற்கிறது..
சரியான அடியினை சரியான நேரத்த்தில் கூட்டாக ஓங்கிக் கொடுக்க தவறியதன்
விளைவே இன்று நாராயண்களும். கல்யான்களும்..சேகர்களும்.. முருகன்களும், வானதிகளும் திமிரெடுத்து பொது வெளியில் பெரும் சமூகத்திற்கு எதிராக பேசுவது.
ஒவ்வொரு நாளிளும் ஆர்.எஸ்.எஸ். என்கிற விஷப் பாம்பு வித்யாசமான.. பிரபலமன ஆண், பெண், அறிவு ஜீவி, விஞ்ஞானி, கல்வியாளர், ஊடகவியலாளர், சமூக விஞ்ஞானி, அரசியல் ஆர்வலர், மாணவர், இளைஞர் இப்படி ஒவ்வொரு தலைகளை பூட்டி முன்பை விட வேகமாக.. வியூகமைத்து வருகிறார்கள் மநு தர்ம ஆட்சிக்காக தனக்கு வாய்ப்பு கிடைக்கும் மாநிலமெங்கும்.
இனி சவால் மிகுந்த காலம்தான் இந்திய மக்களுக்கும்…சித்தாந்த அரசியலுக்கும்..
வாழ்வதற்கான போராட்டத்தையும்.. சித்தாந்தத்திற்கான போராட்டத்தையும்
தொடர்ந்து வலுவாக.. கூட்டாக இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி
நடத்திட வேண்டிய தேவையிருக்கிறது அனைவரும் உயிர் பிடித்து வாழ வாழ்ந்திட.. இந்துத்துவா சித்தாந்தந்திற்கெதிரான எல்லாப் புள்ளிகளையும் இணைத்து படை நடத்த வேண்டிய அவசியத்தை அரசியல் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் சக்திகள்
உணர்ந்து முன் கை எடுத்திடனும். இணையும் சக்திகளுல் அண்ணன்-தம்பி சச்சரவில்லாமல் அவரவர் நிலை.. இருப்பு..புரிந்து..உணர்ந்து.. செயல்பாட்டை விரிவுபடுத்திடக் காலம் நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது.. “பந்து நம் கையில் இப்போதும்’.. வாய்ப்பை உணரத் தவறினால் இழப்பு பெரும் சமூகத்திற்கே..
எப்படி..எங்கெல்லாம் நம்முடைய எல்லைகளை விரிவுபடுத்தி செயல்பட வேண்டும் என்பதைக் காத்திரமாக பதிவாக்கி இருக்கும் “பன்வர் மெக்வன்ஷி” அவர்களுக்கும்.. தமிழாக்கிய தோழர் செ.நடேசன் அவர்களுக்கும்.. எதிர் வெளியீட்டு நிறுவனத்திற்கும்
மீண்டும் அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்திக் கொள்வோம்.
தமிழகமெங்கும் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் செயல்படுபவர்களால் வாசிக்கப் படவேண்டிய நூல்.. “இந்துவாக நான் இருக்க முடியாது.”
வாசிப்போம்..
வாசிப்பவர்களை வாசிக்கச் சொல்வோம்.
#இந்துவாக_நான்_இருக்கமுடியாது
#RSSல்_ஒரு_தலித்தின்கதை
#பன்வர்_மெக்வன்ஷி
தமிழில்
#செ_நடேசன்
கருப்பு அன்பரசன்