நூல் அறிமுகம்: இந்திய அறிஞர்களின் வாழ்வில் – ஆ.முத்துக்குமார்

நாம் படித்து மகிழ வேண்டிய பல சுவையான சம்பவங்கள் இந்திய அறிஞர்களின் வாழ்வில் நடந்தேறி உள்ளன. அதைப்பற்றி இந்நூல் விளக்குகின்றது. பொறுப்புணர்ச்சி, நிறம், கூலிவேண்டாம், தமிழின் அருமை,ஓய்வூதியம், ராமன்விளைவு, உப்புமா, ஆடை, கொய்யாப்பழம், தீர்ப்பு, மீசை நரைத்தது ஏன்? படி படி,தீபாவளிச்சீர், தமிழ்த்தாய் வீடு என 53 சுவையான நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
1.மீசை நரைத்தது ஏன்?               
சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் மேடைப் பேச்சில் வல்லவர்.ஒருமுறை சபையோர் மெய்மறந்து அவரது சிலப்பதிகார சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவருக்குப் பின் வந்த திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்கள் ம.பொ.சியின் மீசை ஏன் நரைத்து இருக்கிறது என்று இன்றைக்குத் தான் எனக்குப் புரிகிறது.”இப்படி தேனொழுகப் பேசினால் அந்தத் தேன்பட்டு மீசை நரைக்கத்தானே செய்யும்”என்று கூறினாராம்.
2.தீர்ப்பு                                                       
ராமன் வீரனா?ராவணன் வீரனா? இது பட்டிமன்றத்தலைப்பு. எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் நடுவராக இருந்ததார்.’ராமனே வீரன்’ என்று பேசியவர்களை விட ‘ராவணனே வீரன்’ என்று பேசியவர்கள் மிக நன்றாக வாதாடினர். வாதத்தை வைத்துப் பார்த்தால் ராவணனே வீரன் என்று தீர்ப்புச் சொல்லும் நிலை.ஆனால் நடுவராக இருந்த சாண்டில்யன் எழுந்து,”இது ஜனநாயக நாடு. அதனால் தீர்ப்பு கூறுவதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஒருவரின் அன்பான மனைவியை அவர் இல்லாத நேரத்தில் தூக்கிக்கொண்டு ஓடுபவன் வீரன் என்றால் ராவணனுக்கு ஆதரவாக கை தூக்குங்கள்” என்றார். ஒருவர் கூட கையை உயர்த்தவில்லை தீர்ப்பு  ராமனுக்குச் சாதகமாக கிடைத்தது.
3.கூலி வேண்டாம்                           
ஏ.கே.செட்டியார் அவர்கள் மகாத்மா காந்தி பற்றி ஒரு டாக்குமென்டரி திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படச்சுருள் பெட்டியுடன் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இறங்கினார். பெட்டியைச் சுமந்து கொண்டு வந்து காரில் ஏற்றிய கூலியாள் “கூலி வேணாம் ஐயா” என்றார். ஏன் எனக் கேட்டதற்கு ஐயா நீங்கள் பேசிக் கொண்டதிலிருந்து இது மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் என்பதை தெரிந்து கொண்டேன் என்றால் அவரைப் பற்றி படம் எடுக்க முடியாது. பெட்டியையாவது இலவசமாக சுமந்து வரலாம் அல்லவா! என்றார். மனம் நெகிழ்ந்து போனார் ஏ.கே. செட்டியார்.
4.உப்புமா
வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் சிறுவனாக இருந்தபோதே சிலேடையாக பேசுவதில் வல்லவராக விளங்கினார். ஒருநாள் அவளுடைய தாய் முந்தைய தினம் செய்து மீதமாகி இருந்த உப்புமாவை கொடுத்து அதை உண்ணும்படி வற்புறுத்தினார். அவர் சாப்பிடாமல் அடம் பிடித்தால் உடனே அவரது தாய் கோபமாக உப்புமாவை தின்ன முடியாதோ அது என்ன தொண்டையில் குத்துகிறதோ?என்று கோபமாகக் கேட்டானர்.அதற்கு கி.வா.ஜ, “ஆமாம்,தொண்டையில் குத்துகிறது. ஏனெனில் உப்புமா ஊசியிருக்கிறது” என்றாராம்.                    5.காதுக்கு அழகு
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது மாணவரான உ.வே.சா.விற்கு தொண்டை கட்டி இருந்த சமயம் அவரை பாடச் சொன்னார்.அதற்கு ‘தொண்டைக்கம்மலாக’ உள்ளது பிறகு பாடுகிறேன் ஐயா என்றார் உ.வே.சா.உடனே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் “கம்மலாக இருந்தால் காதுக்கு அழகாகத்தான் இருக்கும்.அதனால் பாடு” என்றாராம். இத்தகைய சுவையான நிகழ்வுகளை அறிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நூல் : இந்திய அறிஞர்களின் வாழ்வில்.   
நூலாசிரியர்:பத்மப்பிரியா.     
பதிப்பகம்:அநுராகம்               
பக்கங்கள்: 32.
விலை: ரூ.12. 
ஆ.முத்துக்குமார்,
முதுகலைஆசிரியர்,
செயலாளர்,
திருக்குறள் பண்பாட்டு இயக்கம்,
சின்னமனூர்,
தேனி மாவட்டம்.