(ஜவஹர்லால் நேரு ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும், அதற்கான அரசியலைக் கட்டமைப்பதற்கும் அடிக்கோடிட்டு இந்தியக் குடியரசை வடிவமைத்தார்.)
நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனாலும் ஜவஹர்லால் நேரு, இந்தியாவிற்கும் உலகத்துக்கும் ஒரு முத்திரையைப்பதித்துவிட்டுச் சென்றுள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க தலைவர் என்பதை உலகம் அங்கீகரித்திட ஒருபோதும் தயங்காது. நேரு, 1964 மே 27 அன்று மறைந்தபோது, ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று தி நியூயார்க் டைம்ஸ் இதழ் எழுதியது. நேரு இல்லாமல் உலகம் என்று தலைப்பிட்டு எகனாமிஸ் இதழ் கட்டுரை வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் அது, ‘அநேகமாக மந்திரத்தால் கட்டுப்பட்டுள்ளதுபோல் மக்கள் அவரிடம் கட்டுப்பட்டிருந்தார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தது.
நேருவைப்பற்றி மக்கள் மத்தியிலிருந்துவரும் கருத்துக்கள் கணிசமானமுறையில் மாற்றப்பட்டிருக்கின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் அவர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஆனால், அவரை மறக்கடிக்கும் விதத்தில் அல்லது அவரை இழிவுபடுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கு நேரு காரணம் அல்ல என்றும், அவ்வாறு காங்கிரஸ் நம்மை நம்பச் சொல்கிறது என்றும் கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநில எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேரு குறித்து இருந்த பாடம் அகற்றப்பட்டுவிட்டது. தேசிய ஆவணக் காப்பகத்தில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடர்பான கண்காட்சியில் அவர் இடம்பெறவில்லை. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், நேருவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இயங்கிவந்த நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை, அனைத்து இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கைகளைக் காட்டும் வளாகமாக மாற்றத் தீர்மானித்திருக்கிறது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறோம் என்ற விதத்தில் மர்மமான முறையில் இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நேருவை இவர்கள் குறிவைத்திருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபின்னர், தங்கள் இயக்கத்தைத் தடை செய்ததால், ஆர்எஸ்எஸ் அவரை வெகுகாலமாகவே வெறுத்து வந்தது. அரசின் நடைமுறைக் கொள்கையாக மதச்சார்பின்மை என்கிற வடிவத்தை அவர் கொண்டுவந்ததை ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்த்துவந்தது. 1962 சீனாவுக்கு எதிரான யுத்தத்தின்போத இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியைப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு எதிராக மக்களின் உணர்வினைத் தட்டி எழுப்புவதற்கு அவர்களுக்கு எளிதாக இருந்தது. நேருவின் அணிசேரா அயல்துறைக் கொள்கை மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள் மீது அவருக்கிருந்த நம்பிக்கை ஆகியவற்றையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்கினர். மேலும் காங்கிரஸ் கட்சி அவருக்குப் பலவிதங்களிலும் முக்கியத்தவம் அளித்துவந்ததையும் அவர்கள் எதிர்த்தனர்.
நேரு உன்னதமான தலைவராக உயர்ந்தார்

நேருவின் வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கதாகும். நேரு குறித்து குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சரிதைகள் சில உண்டு. அதிலும் மிகவும் சிறந்த ஒன்றாக வரலாற்றாசிரியர் ஜுடித் எம்.பிரௌன் எழுதிய 2003 வரலாறு, நேரு:ஓர் அரசியல் வாழ்க்கை (Nehru:A political Life) என்பதாகும்.
மிகவும் வசதியான குடும்பத்தில், ஒரு செல்வாதாரமிக்க வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியான மோதிலால் நேருவின் மகனான ஜவஹர்லால் நேரு, வளர்ந்த சமயத்தில் இந்தியாவில் காலனிய ஆதிக்கம் உச்சத்தில் இருந்துவந்தது. பிரௌனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்த சமயத்தில் படித்த இந்தியர்களுக்குத்தான் பொருளீட்டல் வாய்ப்புகளும், அரசியல் வாய்ப்புகளும் கிடைத்தன. நேருவின் அரசியல் கருத்துக்கள் அவர் ஹாரோவிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களிலும் படித்தபோது உருப்பெற்றன. அங்கே அவருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கடும் வெறுப்பினை வளர்த்துக்கொண்டிருந்தார். இந்தியா திரும்பியபின் சிறிது காலம் நிலையற்றும் ஒழுங்கற்றும் கடந்தபின்பு, நேரு, காந்தி மற்றும் அவரது கிளர்ச்சி இயக்கங்களால் உத்வேகம்பெற்று 1919-20இல் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டார். அப்போது தேசிய இயக்கத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் (moderates and liberals) இடையே போர்த்தந்திரம் மற்றும் நடைமுறை உத்திகள் (strategy and tactics), ஒத்துழையாமை இயக்கத்தின் பயன்பாடு, ‘முழுமையான சுதந்திரமா அல்லது படிப்படியான உரிமைகளாகக் கோருவதா’ என்பவைகள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட முரண்பட்ட காலநிலையில், நேரு, காந்தியின் பக்கம் நின்றார். மகாத்மா காந்தியின் அரசியல் அணுகுமுறைகளில் நேருவுக்கு பல சமயங்களில் விரக்தி ஏற்பட்டதுண்டு என்றபோதிலும்கூட, அவர்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கான பாதைக்கு மையமாக இருப்பதாக நேரு பார்த்தார். நேருவின் கண்ணோட்டம் மேலும் பல காரணிகளாலும் உருவானது. அவர் வளர்ச்சி இந்து-முஸ்லீம் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாக இருந்தது.
மோதிலாலின் ஆரம்பகாலக் கல்வி

மோதிலால் தன் ஆரம்பக் கல்வியை ஒரு முஸ்லீம் ஆசிரியரிடம் அரபி மற்றும் பாரசீக மொழிகளில் மட்டுமே கற்றார். அவர் அலாகாபாத்திலிருந்த காஷ்மீரிக் குடும்பத்தினர் என்பதால், நேருவின் குடும்பத்தினர் உள்ளூர் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. மேலும் அதன்காரணமாக அவர்களிடம் குறுகிய மாநில அளவிலான பாசம் என்பதெல்லாம் இல்லை. நேரு எப்போதுமே ஒரு கடுமையான தேசியவாதியாகத்தான் இருந்தார். அவர் பிரிட்டிஷார் கலாச்சாரத்தை ரசித்தார். அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருப்பது குறித்து ஆழ்ந்து கவலைப்பட்டபோதிலும், இந்தியாவிலிருந்த பழக்க வழக்கங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நேரு விரைவில் தன்னை அரசியலுடனும் காங்கிரசுடனும் இணைத்துக்கொண்டார். நிறைய படித்தார். அவர் சிறையிலிருந்த காலம் அதற்கு மிகவும் உதவியது. அவர் 23 ஆண்டுகளில் ஒன்பது தடவை சிறைக்கு அனுப்பப்பட்டார். அதில் 12 நாட்களிலிருந்து 1041 நாட்கள் வரை – மொத்த 3259 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் சிறை வாழ்க்கையுடன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார். அவருடைய மிகப்பெறிய ஆறுதல் புத்தகங்கள் படிப்பதுதான் என்று பிரௌன் எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம் மற்றும் நடப்பு விவகாரங்கள் என அனைத்து குறித்தும் படித்தார். “திடமான படிப்பு சிறையில் எப்போதும் அவசியம். அதில்லையென்றால் மனசு தேக்கமடைந்துவிடும்,” என்று அவர் அடிக்கடி கூறுவார். 1934 பிப்ரவரிக்கும் 1935 செப்டம்பருக்கும் இடையே அவர் 188 புத்தகங்கள் படித்தார். சராசரியாக ஒரு மாதத்திற்கு 15-20 தொகுதிகள் படித்தார்.
இவை அவருடைய எழுத்தாற்றலையும் வளர்த்தெடுத்தது என்பதில் சந்தேகமில்லை. இவற்றை அவருடைய சுயசரிதை மற்றும் கண்டுணர் இந்தியா (Discovery of India) ஆகியவற்றிலிருந்தும் மற்றும் அவர் எழுதிய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஏராளமான கடிதங்கள் மற்றும் உரைகளிலிருந்தும் நன்கு அறியலாம்.

அவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் இருந்த காலங்களில் ஐரோப்பாவிலும் இதர நாடுகளிலும் உள்ள பல தலைவர்களுடனும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொண்டிருக்கிறார். நேரு, காலனிய ஆட்சி குறித்து கடும் கசப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். நாடுகளுக்கு இடையே சமத்துவம் நிலவ வேண்டும், நாட்டிற்குள்ளும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும், நிலச்சீர்திருத்தங்கள் தேவை, பொருளாதாரத்திலும், சமூகத்திலும் அரசுத் தலையீடு தேவை, நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் அவசியம், (இந்தியாவில் இருக்கின்ற மூட நம்பிக்கைகளை அவர் அறவே வெறுத்தார்), நாட்டைக் கட்டி எழுப்புவதில் பெண்களின் மகத்தான பங்களிப்பின் தேவை மற்றும் உலகில் இந்தியாவிற்கு என்று ஒரு கண்ணியமான இடம் உருவாக்கப்பட வேண்டும் என விரும்பினார்.
இத்தகைய அவருடைய அறிவார்ந்த வளர்ச்சி வடிவம், இந்தியாவின் எதிர்காலம் குறித்த கொள்கைகளை வடிவமைப்பதில் 1930களிலிருந்த காங்கிரசில் முக்கியத்துவம் பெற்றது. இதன்மூலம் அவர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கும், தேசிய இயக்கப் போராட்டங்களில் முன்னணித் தலைவராகவும் உயர்ந்தார். 1936இல் காந்தி, நேருவே என்னுடைய வாரிசு என்று மக்கள் மத்தியில் பிரகடனம் செய்தார். அந்த சமயத்தில் நேரு, கட்சியின் விவாதங்களில் ஒரு முக்கிய பங்கினைச் செலுத்திவந்தார் என்பது மட்டுமல்ல, மக்களை அணிதிரட்டுவதிலும் மகத்தான தலைவராக உயர்ந்திருந்தார்.
1946இல் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கு நேர தலைமை வகித்தார். நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மௌண்ட் பேட்டன் பிரபு மற்றும் எம்.ஏ.ஜின்னா ஆகியோருடன் முக்கிய நபராக இடம் பெற்றார். அப்போது மௌண்ட்பேட்டன் சுதந்திரத்திற்கு முன் அதிகாரங்களைப் பிரித்துக் கொடுப்பதைக் கடுமையாக எதிர்த்தார். மௌண்ட் பேட்டன் அவற்றைத் திரும்பப் பெற்றபோதிலும், அதன்பின்னர் சுதந்திரம் அடையும்வரை நேருவும் அவருடைய சகாக்களும் வகுப்புவாத வன்முறை, மாகாணங்களைப் பிரித்து பாகிஸ்தான் அல்லது இந்தியாவுடன் இணைப்பது, மன்னர் சமஸ்தானங்களின் எதிர்காலம் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் முதலான எண்ணற் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுதந்திரம் பெற்ற பின்னரும் காஷ்மீர் நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருந்தது. மற்றும் சுதந்திரம் பெற்ற ஆறு மாத காலத்திற்குள்ளாகவே மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாட்டின் நிலைமையைச் சமாளிக்க வேண்டி இருந்தது.
நேருவின் மூன்று முக்கியப் பண்புகள்

1946க்குப்பின் நேருவின் புகழ் வேகமாக வளர்ந்தது. இந்தியாவை ஒரு குடியரசாக மாற்றுவதற்கு நேரு மூன்று முக்கியமான தீர்மானகரமான தலையீடுகளைச் செய்தார்.
முதலாவதாக, இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்தினார். அதனை வரைவுசெய்து, குறிக்கோள்களுடன் அரசியல் நிர்ணயசபையில் ஒரு தீர்மானமாக முன்மொழிந்தார். இது, இந்தியா ஒரு சுதந்திரக் குடியரசாகத் திகழும் என்றும், அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்றும் பிரகடனம் செய்தது. ஒவ்வொருவருக்கும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி உத்தரவாதப்படுத்தப்படும் என்றது. எல்லோருக்கும் சம அந்தஸ்து, சம வாய்ப்பு, மற்றும் சிந்தனைச் சுதந்திரம், மதச் சுதந்திரம் மற்றும் கூட்டம் கூடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றது. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றது. 1937இல் நடைபெற்ற தேர்தலின்போது பட்டதாரிகளும், பட்டாதாரர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப்பின் இதற்கு நேரெதிராக, நாட்டின் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டிலிருந்த 17 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் 1951 தேர்தலில் வாக்களித்தார்கள். இதுதொடர்பாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தன்னுடைய தேசபக்தர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் (Patriots and Partisans) என்னும் நூலில் நேரு, “நம் ஜனநாயகத்தின் தலைமைச் சிற்பி என்பதில் எவ்விதக் கேள்விக்கும் இடமில்லை. நம் நாட்டின் மற்ற தலைவர்கள் அனைவரைக்காட்டிலுழம் அவர்தான் நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பதற்கும், பல கட்சி அமைப்பு கொண்ட நாட்டை உருவாக்குவதற்கும் காரணமாக இருந்தார்,” என்று எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் மேலும் பி.ஆர்.அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், மௌலானா ஆசாத் மற்றும் சி.ராசகோபாலாச்சாரியார் போன்ற தலைவர்களும் இருந்து, அனைத்து மக்களும் சமமான அளவில் தங்கள் சொந்த அடையாளங்களுடன் வாழ்ந்திடும் விதத்தில், இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கி அளித்தார்கள்.

இரண்டாவதாக, உலக அரசியலில் நேருவின் தாக்கம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. நிறவெறி, ஏகாதிபத்தியம் மற்றும் ஆசியாவின் ஒற்றுமை, ஆப்பிரிக்க-ஆசிய ஒருமைப்பாடு மற்றும் உலக அமைதி முதலானவற்றில் அவர் குரல் ஓங்கி ஒலித்தது. அவர் உருவாக்கிய அணிசேராக்கொள்கை மூலமாக உலகின் வல்லரசு நாடுகள் எதனுடனும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் அதே சமயத்தில் அனைத்து நாடுகளின் நட்பினையும் பெறக்கூடியவிதத்திலும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும்போது ஒரு மத்தியஸ்தராகச் செயல்படும் விதத்தில் நாட்டை உருவாக்கி இருந்தார். சர்வதேச விவகாரங்களில் நேருவின் நடத்தை, “நாட்டிற்கு ஒரு தனித்துவமிக்க, சுதந்திர சர்வதேச அடையாளத்தை உருவாக்கியது,” என்று பிரௌன் குறிப்பிட்டார்.
மூன்றாவதாக, நேரு உள்நாட்டில் சமூக மாற்றத்திற்கும் கவனம் செலுத்தினார். சமத்துவமின்மையைச் சரிசெய்வதற்கு ஐந்தாண்டுத் திட்டங்களின் அவசியத்தை உணர்ந்தார். இத்தகைய சோசலிசப் பாதையின் ஆட்சியை முன்னெடுத்தச்செல்ல கலப்புப் பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தினார். இப்போது அதற்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் அவர் இதனைத் தொடங்கிய சமயத்தில் இந்தியத் தொழில் அதிபர்கள் இதனை ஆதரித்தனர். அவர்களுக்கு தங்கள் வளர்ச்சிக்கு எதிராகப் போட்டியிலிருந்து பாதுகாப்பு அப்போது தேவைப்பட்டது. நேரு, அப்போது சோவியத் யூனியனில் நடைபெற்றுவந்த தொழில்மயத்தால் வெகுவாகக் கவரப்பட்டிருந்தார். அதேபோன்று இந்தியாவிலும் அமைத்திட விரும்பினார். அந்த சமயத்தில் இந்தியாவின் எழுத்தறிவு என்பது 14 சதவீதம் மட்டுமேயாகும். வறுமையின் அளவு உச்சத்தில் இருந்தது. எனவே பல துறைகளுக்கு அரசின் தலையீடு அவசியமாக இருந்தது. இவ்வாறு பல துறைகளிலும் அவர் முன்னேற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தது, குறிப்பிடத்தக்க அளவிற்கு பலனையும் அளித்தன. உதாரணமாக அணுசக்தி மற்றும் விண்வெளித் திட்டங்களிலும் இந்தியா சாதனை படைத்தது.
தவறுகளும் தோல்விகளும் உண்டு

நேரு பல்வேறு தவறுகளையும் செய்திருக்கிறார், தோல்விகளும் அடைந்திருக்கிறார். 1962இல் சீனப் படையெடுப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் ராணுவப் பாதுகாப்புக்கு அதுவரையிலும் அவர் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது, இந்தியாவின் தரப்பில் பெரிய அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் கொண்டுவந்த நிலச் சீர்திருத்தங்கள் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களுடன் நெருக்கமான உறவுகளைக்கொண்ட பல மாநில அளவிலான தலைவர்களால் நாசம் செய்யப்பட்டன. அவரால் கட்டி எழுப்பப்பட்ட பெரிய அணைகளின் காரணமாக ஏராளமான மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. ஷேக் அப்துல்லா நீண்ட காலம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது, காஷ்மீர் மக்கள் மத்தியில் அந்நியப்பட வைத்தது.
நாட்டில் புரையோடிப்போயிருந்த குறுகிய பிராந்திய உணர்வு, சாதியக் கண்ணோட்டம், மதவெறி முதலானவையும், அவரது நிர்வாக அமைப்பு வல்லமையற்றிருந்ததும், கட்சிக்குள்ளிருந்த பணத்தாசை கொண்ட தலைவர்களும் அவரிடம் விரக்தி நிலைமையை மிக விரைவாகவே கொண்டுவந்தது. இவற்றின் விளைவாக அவர் கனவு கண்ட இந்தியாவை அவரால் அவர் காலத்தில் உருவாக்க முடியவில்லை.
எனினும் அவர் சாதனைகள் இன்றளவும் உயர்ந்து நிற்கின்றன என்பதில் ஐயமில்லை.
ஒட்டுமொத்தத்தில் நேரு, தன் நாட்டு மக்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவிட மட்டுமே விரும்பினார். தனக்கு என்று எதுவும் விரும்பவில்லை. இந்தியாவுக்கான ஒரு முழு வாழ்க்கையை அவர் உண்மையில் வாழ்ந்தார். அவர் செல்வாக்கிற்கு உட்படாத பொதுத்துறை நிறுவனம் என்று எதுவும் இல்லை. அவருடைய பாரம்பர்யப் பண்புகளில் ஏராளமானவை இன்றளவும் கொண்டாடப்படக்கூடியவைகளாகவே இருக்கின்றன. அவற்றைக் குறைத்து மதிப்பிடுவதோ, அல்லது அவற்றை மறப்பதோ, இந்தியாவின் வரலாற்றில் நேருவின் இடத்தை அவற்றால் மாற்ற முடியாது என்றபோதிலும், இந்தியாவிற்குச் சீரழிவையே கொண்டுவரும்.
(ஜவஹர்லால் நேருவின் நினைவுதினத்தை ஒட்டி மீண்டும் தி ஒயர் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை, நன்றியுடன் பிரசுரிக்கப்படுகிறது.)

